Friday, October 26, 2007

எங்கள் தேசம்










அந்த மலைகளைத் தாண்டிப்
பெரும் சமுத்திரத்துக்கப்பால்,
எங்களுக்கென்றொரு
அழகிய தேசம் இருந்தது ;
அது எங்கள்
அழகிய தேசம் !
பூலோகத்தின் சொர்க்காபுரி !!

சலசலத்தோடும்
நதிக்கரைகளில்
பட்டாம் பூச்சி துரத்தியும்,
வசந்தகால மரங்களில்
பூக்கள் பறித்தும்,
பாடப் புத்தகங்களுக்கிடையில்
மயிலிறகைப்
பொத்தி வளர்த்தும் - என்
தங்கை தோழிகளுடன்
விளையாடினாள் !

சூரியக் கதிர்கள்
பயிர்களைத் தொடமுன்பு,
எம் மக்கள் - அவர்களது
விவசாய நிலங்களைப்
பார்வையிடப் புறப்படுவர் !

அன்பையும்,
ஆரோக்கியத்தையும்,
ஒற்றுமையையும் ,
உயர் குணத்தையும்
மழலைகளுக்கு - எம் மாந்தர்
உணவுடன் ஊட்டி வளர்த்தனர் !

மழை பொய்க்கவில்லை ,
வெயில் வாட்டவில்லை ;
பஞ்சம்,பிணி,பட்டினியென
எம் மக்கள் வாடவில்லை !
எனினும் - ஓர்
இருண்ட அமாவாசை இரவு
எங்களுக்கு மட்டும் விடியவேயில்லை !

அன்றுதான்
அந்த அந்நியதேசத்து
ஆக்கிரமிப்பாளர்கள் வந்தனர் ;
எனது அழகிய தேசம்
ஆயிரம் துண்டங்களாக ,
நாமெல்லாம் ஒரே இரவில்
அடிமைகளாக மாறிப் போனோம் !

அதன் பிறகு வந்த
பௌர்ணமி நிலவும்
தீப்பிடித்தெரிந்தது ;
அழகிய தேசம்,
அழுகிய தேசமாகவும்,
அழவைத்த தேசமாகவும்
மாறிவிட்டதைக் கண்டு !


-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Tuesday, October 16, 2007

ஒரு வண்ணத்துப் பூச்சியின் பாடல்














ஒரு அழகிய தேசத்துக்
குருதி வண்ணக்
கதவு திறந்து - பெரும் சோகத்துடன்
கொட்டும் மழைதனிலே
இத் தேசத்தின்
இறுதி மனிதனாக நீ
கதிகலங்கப் போவதைப்
பார்த்திருந்தேன் !

இது
பசும் மலைகள் போர்த்திய
வனாந்தரமல்ல
முன்னொரு காலத்தில்
குடிமக்கள் கூடிக்
குதூகலித்ததோர் அழகிய தேசம் !

எவ்வாறெனினுமின்றிங்கு
புலியின் வேட்டைக்கும்,
சிங்கத்தினுறுமலுக்கும் - நரிகளின்
ஊளைகளுக்கும் தடையேதுமில்லை ;
கட்டுப்பாடு, தடைகளெல்லாம்
மனிதத்தோடு வாழும்
மனிதர்களுக்கே...!

என்ன தேசமிது
சீரழிந்து போய்...!
என்னழகில் மயங்கிச்
செட்டை பிடிக்கத் துரத்தியலையும்
சிறார் எவருமில்லாமல்
என்ன வாழ்க்கையிது
சீரழிந்து போய்...!

எனக்கே கேட்காமல்
சத்தமின்றி
மெல்லப் பாடுகின்றேன்
எனதான பாடலை !

காற்று - என் பாடலை
அதன் காதுகளுக்கு
மெல்லக் கொண்டு போகுமெனின்,
நாளையென்
செட்டைக்கண்களில்
குத்தப்பட்டு,
என்னுடலும் உலரக்கூடும்
இம் முட்கம்பிகளில் !


-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Friday, October 12, 2007

மழை











மழை!
ஒரு வரி
ஹைக்கூ கவிதை!

பெருவிருட்சங் கொண்ட
வனாந்தரங்கள்
ஜீவராசிக்கனுப்பும்
வான்வெளிக் கடிதம்!

நீலக்கடல்,
நீர் வீழ்ச்சி,
நீர் நிலைகளனைத்தினதும்
உதடுகள் முணுமுணுக்கும்
தாய் மொழி!

மேகத் துணி மூட்டையை
யாரோ இறுக்கிப் பிழிந்து விட்டு
சூரியனின் மேலே
காயப் போட்டார்களோ;
இப்படி இருண்டு கிடக்கிறதே!

மழைச் சாரல்
சற்று அதிகரித்துவிடின் - நம்
மானிடர் விழிகளில்
தொடர்ச்சியாய் தூறல்;
ஒன்று காய்ச்சலால்,
மற்றது வெள்ளப் பாய்ச்சலால்!

ஒரு நாழிப் பொழுதில்
ஒரு கோடிப் பிரசவங்கள்
ஆகாயத்திற்கு;
ஒரு ஊழிப் பொழுதின்
வேதனைகளை வெளிப்படுத்தும்
இடி மின்னல் வார்த்தைகள்
புரிகிறதா உனக்கு....?

- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.