Tuesday, July 15, 2008

உன்னைப் புலம்பும் எனது பாடல் !


அதுவொரு பெருமழைக்காலம் !
வனாந்தரங்களின் பசுமையை,
பனிக்கால நீரோடைகளின் குளிர்ச்சியை,
பூஞ்சோலைகளின் பேரழகை,
ஆலப்பெரு மரங்களின் நிழல்களை
அவள் கொண்டிருந்ததாக
நீ எண்ணி எண்ணித் திளைத்த காலம் !

ஒரு துர்தேவதையின் பாடல்கள் மட்டுமுன்
செவிகளை நிரப்பிய காலம் ,
அவளுக்கான சாபங்களனைத்தும்
உன்னைப் பீடித்தலையத்
தருணம் பார்த்துக் காத்திருந்த காலம் ;
அத்தனையையும் அறியாது - நீ
அவளுக்கு நேசனானாய் !

அவளது அழகிய மாயநதியில்
நீ மூழ்கிச் சுவாசம் மறந்தாய் ;
உன் இமைகளைப் பிடுங்கி
அது கொண்டவளை
ஓவியங்கள் வரைந்திட்டாய் !

அவளது ஆன்மாவின் சலனங்கள்
நாணத்தைத் தொலைத்தன,
பாதங்களை முக்காடுகள்
போர்த்திக் கொண்டன ;
அன்றுதான் நண்பனே - நீ
பைத்தியமானாய் !
பறவையொன்று சத்தமிட்டுச் சிரித்ததென
அவள் சொல்லிப் போனாலும்
நம்பிப் புருவமுயர்த்தி ரசித்து மகிழ்ந்தாய் !

முகவரியற்ற சுவர்களையுன்
இருப்பிடமாக்கிக் காலம் பார்த்தது ;
அவளது காலடிச் சுவடுகளிலுன்
உயிரினைத் தேடிய நீ
காலத்தைப் பார்க்கமறந்திட்டாய் !

அந்தக் காலம்தான்
உன்னைக் கல்லறையிலும்,
அவளை மணவறையிலும்
இருத்தி அழகுபார்க்கிறதின்று !

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Tuesday, July 1, 2008

எரிக்கிறாய் ; எரிகிறேன் !


எனதுயிருருக்கும் பாடலைப்
பின்பற்றி வந்த உன் நேசம்
எனக்கென்றிருந்த
ஒரேயொரு கேடயத்தையும்
மூலைக்கொன்றாக உடைத்துப் போட்டதில்
வருத்தம்தான் எனக்கு..!

ஆதியின் மூலங்களறுத்து,
சார்ந்திருந்த அரண்களையுடைத்து
உனை நம்பி வந்த நான்
காணும் எல்லாவற்றிலும்
நீ மட்டுமே
காட்சிப் பொருளாக வேண்டுமென்கிறாய்

நட்சத்திரங்களை எனக்காக
வளைப்பதாகச் சொன்ன நீ
எனதழகு மின்னிடும் பொழுதுகளில்
பீதியுடன் முறைக்கிறாய்
எனது குரல்வளையினை நெரித்து
உனது நிம்மதிக்கான
பிரார்த்தனை கீதங்களைப்
பாடச் சொல்கிறாய்

என் நெற்றியில் தொடங்கியுன்
கூராயுதங்கள் கீறுகின்றன,
உயிருருகி வழியும் குருதியில்
தாகம் தணித்துக்கொள்கிறாய்
என் உயிரின் மூலங்களை
உன் வார்த்தைகளால் வேரறுக்கிறாய்
என் வாழ்வின் தீர்ப்பினை
இவ்வாறு நீயே எழுதுகிறாய் !

சிம்மாசனங்கள் வேண்டவில்லை
செங்கோலையும் தீண்டவில்லை
ஆட்சிகள்,ஆகிருதிகள் அத்தனையும்
உன்னுடையதாகவே இருக்கட்டும் ;
நானென்ன கேட்கிறேன் ?
பறவையின் உதிர்ந்த சிறு இறகினைப் போல
எடைகளற்றுத்தானே
இருக்கின்றன என் தேவைகள் !

இறுதியாக,
வாழ்வுக்கு ஒளியூட்டுவதாகச் சொல்லி
என் நெஞ்சின் ஓரத்தில்
தீச்சுடரை வைத்து - அது
பற்றி எரியும் போதினில் குளிர்காய்கிறாய்.
பரவாயில்லை.
உனது சந்தோஷங்களுக்காக நானெரிகிறேன்.
இப்படியே விட்டுவிடலாமென்னை !

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.