Friday, January 16, 2009

பொம்மை நேசம்

எனைச் சிலகாலம் உன் மனதிற்குத்
தத்தெடுத்திருந்தாய்
விழிகளை உருட்டி விழித்துக்
கன்னங்களை உப்பவைத்து ஓசையெழுப்பி
மகிழ்வூட்டிக் கொண்டேயிருந்தாய்

தத்தெடுக்கப்பட்டதன் களிப்பு
என்றென்றும் நிலைத்திருக்க
பிரார்த்திருக்கத் தெரியாதவனாகி
உன் மனதில் நானிருந்தேன்

சில காலம் ஆயிற்று - எனக்கு
வேடிக்கை காட்டி நீ மகிழ்ந்து கிடப்பது
உனக்கே சலித்திருக்கக் கூடும்

மனம் முழுதும் வியாபித்துக் கிடந்த என்னை
சிறப்பேதுமற்ற நாளொன்றில்
விழி பறித்துக் கை முறித்து
உன் மாளிகையிலிருந்து உதறியெறிந்து
எனை வலிக்கச் செய்தாய்

இப்பொழுதும்
காக்கைக் கூடெனத் தெரிந்தே
கருங்குயில்கள் முட்டையிடுகின்றன

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Thursday, January 1, 2009

உன்னால் வீண்பழி சுமந்தவனின் அறை

காதல் வானத்திலேறி
இதய வானவில்லில் குதித்து அதன்
நிறமிழந்த பகுதிகளுக்கு நீ
சாயமடித்த பொழுதில்தான்
என்னறைக்கு உதிர்ந்திருக்கவேண்டும்

சூழ விழுந்தவற்றை
எனதிருப்பிடம் வந்த பாதங்கள்
வஞ்சகமாய்க் கொண்டுவந்து சேர்த்தன
அந்தரத்தில் நின்றவற்றை
அவதூறு சுமந்த காற்று
அள்ளி வந்து தெறித்தது

உன் தவறால்
பெரும்பாரமாய் அழுத்தும்
வண்ணங்களால் நிறைந்ததென்னறை

என் தவறேதுமில்லையென மெய்யுரைக்க
பட்சிகளையும் வண்ணாத்திகளையுமழைத்து
செட்டைகளில் வண்ணங்களை
வழிய வழிய நிறைத்து
பூமிதோறும் வனங்கள் தோறும்
காணும் பூக்களுக்கெல்லாம்
கொடுத்து வரும்படியனுப்பியும்
இன்னும் வண்ணங்கள் குறைவதாயில்லை

அறை முழுதும்
சிதறிக்கிடக்கின்றன
நீ தெறித்த வண்ணங்கள்
மௌனத்தின் வண்ணத்தை மட்டும்
நான் முழுதும் பூசிக்கொள்கிறேன்
எஞ்சிய வண்ணங்களை
நீயேயள்ளிக் கொண்டுபோ

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.