Saturday, August 15, 2009

ஊழிக் காலம்


காய்ந்துபோன ஏரிகளில்
காலம் தன் முகம் பார்த்துக் கொண்டது
சுருக்கங்களின்றி
பருவம் பூரித்துச் செழித்த தன்
முன்பொரு யுகத்தின் யௌவனம் பற்றி
பார்த்திருந்த வானத்திடம்
தன் முறைப்பாட்டையும் நெடுமூச்சையும்
ஒருசேரக் கொடுத்தது

எதையும் கண்டுகொள்ளாச் சூரியன்
வழமைபோலவே
காற்றைச்சுட்டெரித்தது
இருக்கும் விருட்சங்களை வெட்டியபடியும்
பிளாஸ்டிக் குப்பைகளைப் புதைத்தபடியும்
எதுவுமே செய்யாதவன் போல
முகம்துடைத்துப் போகிறேன் நான்
உங்களைப் போலவே வெகு இயல்பாக

-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# பூவுலகு - ஜூன்,2009 இதழ்
# உயிர்மை

#திண்ணை

Saturday, August 1, 2009

ஒலி மிகைத்த மழை


மின்னலைப் பார்த்திருக்கும்
விழிகளுக்குச் சலனமேதுமில்லை
அநிச்சையாய் விரல்கள்
பின்னலை அவிழ்த்து மீண்டும் மீண்டும்
பின்னிக் கொண்டேயிருக்கின்றன

தவளைகள் கத்தும் சத்தம்
மழையை மீறிக் கேட்டபடியிருக்கிறது
இலைகள் கோப்பைகளாகி
நீரைத் தேக்குகின்றன
மழை ஓய்ந்த தென்றலுக்கு
பன்னீர் தெளிக்கக்கூடும் அவை

இப்பெருத்த மழைக்கு
கூட்டுக் குஞ்சுகள் நனையுமா
சாரலடிக்கும் போது
கூட்டின் ஜன்னல்களை மூடிவிட
இறக்கைகளுக்கு இயலுமா

மிகுந்த ஒலியினைத் திருத்த
இயந்திரக் கரங்களோடு எவனும் வரவில்லை
இரைச்சல்கள் அப்படியே கேட்டபடியிருக்கின்றன

நீயும்
எதனாலும் காவப்படமுடியாதவொரு
மனநிலையைக் கொண்டிருக்கிறாய்
இறுதிவரையிலும்
உன்னில் அமைதியை ஏற்படுத்த
என்னால் ஆக முடியாமல் போனதைப் போல

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# கலைமுகம் இலக்கிய இதழ் - 49 (ஜனவரி - ஜூன், 2009)
# நவீன விருட்சம்
# திண்ணை