Tuesday, June 15, 2010

உஷ்ண வெளிக்காரன்

கொதித்துருகும் வெயிலினை
ஊடுருவிக் காற்றெங்கும்
பரந்திடா வெளி

வியாபித்து
ஊற்றுப் பெருக்கும் புழுக்கம்

வெப்பம் தின்று வளரும்
முள்மரங்கள்
நிலமெங்கிலும்
கனிகளைத் தூவுகின்றன

உச்சிச் சூரியனுக்கும்
வானுக்கும் வெற்றுடல் காட்டி
நிழலேதுமற்று கருகிய புல்வெளியில்
ஆயாசமாகப் படுத்திருக்கும்
சித்தம் பிசகியவன்
புழுதி மூடிய பழங்களைத் தின்று
கானல் நீரைக் குடிக்கிறான்

கோடை
இவனுக்காகத்தான் வருகிறது போலும்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.


நன்றி
# காலச்சுவடு இதழ் 123, மார்ச் - 2010
# எங்கள் தேசம், மே 15 - 31 இதழ் 
# உயிர்மை
# திண்ணை




Wednesday, June 2, 2010

நள்ளிரவின் பாடல்


நடுத்தெருவில் விளையாடும்
பூனைக்குட்டிகளைப் பார்த்திருக்கும்
இரவொன்றின் பாடலை
நான் கேட்டேன்

மோதிச் செல்லக் கூடிய நகர்வன பற்றிய
எந்தப் பதற்றமுமின்றி
துள்ளுமவற்றைத் தாங்கிக்
கூட விளையாடுகிறது
சலனமற்ற தெரு

யாருமற்ற வீட்டின் கதவைத் தாளிட்டு
அந்த நள்ளிரவில் தெருவிலிறங்கி
நடக்கத் தொடங்குகையில்
திசைக்கொன்றாகத் தெறித்தோடி
எங்கெங்கோ பதுங்கிக் கொள்கின்றன
மூன்று குட்டிகளும்

நான் நடக்கிறேன்
தெரு சபிக்கிறது
நிசி தன் பாடலை
வெறுப்போடு நிறுத்துகிறது

இந்தத் தனிமையும்
இருளும் தெருவும்
வன்மம் தேக்கி வைத்து
எப்பொழுதேனுமென்னை
வீழ்த்திவிடக் கூடும்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# வல்லினம் கலை இலக்கிய இதழ் - 15, மார்ச் - 2010
# உயிர்மை
# திண்ணை