Wednesday, October 9, 2013

வேப்பம்பூக்களுக்காகக் காத்திருக்குமொருத்தி


மழையுமற்ற கோடையுமற்ற மயானப் பொழுது
இலைகளை உதிர்த்துப் பரிகசிக்கிறது
வேனிற்காலத்தைப் பின்னிக் கிடக்குமொரு
மலட்டு வேப்ப மரத்திடம்

நீவியழித்திடவியலா
நினைவுச் சுருக்கங்கள் படர்ந்திருக்கும்
நீயொரு மண்பொம்மை
உனது கண் பூச்சி
செவி நத்தை

கொல்லை வேலியொட்டிப் புறக்கணிக்கப்பட்டிருக்கும்
உன்னிடமும் வேம்பிடமும்
இவையிரண்டும் என்ன உரையாடுகின்றன

திசைகளின் காற்று
விருட்சத்துக்குள் சுழல்கிறது

தன் மூதாதையர் நட்ட மரத்தில் இதுவரை
ஆசைக்கேனுமொரு பூப் பூக்கவில்லையென
தொலைவிலிருந்து வந்த புதுப் பேத்தியிடம்
கதை பகர்கிறாள் மூதாட்டி

வேப்பமரத்தடி வீடெனத் தன் வீட்டிற்கேவோர்
அடையாளம் தந்திருக்கும் மரத்தை
வெட்டியகற்ற மறுக்கிறாள் கிழவியென
மருமகளொருத்தி முணுமுணுக்குமோசையை
சமையலறை ஜன்னல் காற்று
உன்னிடம் சேர்க்கிறது

மனித ஓசைகள் கேட்டிடக் கூடாதென
காதுகளை மீண்டும்
நத்தைகளால் அடைத்துக் கொள்கிறாய் - பிறகும்
கண்களை மூடும் பூச்சிகள் தாண்டி
வேப்பம்பூக்களுக்காகக் காத்திருக்கிறாய்

- எம்.ரிஷான் ஷெரீப் 
நன்றி
# அம்ருதா இதழ், சொல்வனம் இதழ், உயிர்மை, நவீன விருட்சம், பதிவுகள், திண்ணை