Thursday, January 5, 2017

ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு


கறுத்த கழுகின் இறகென இருள்
சிறகை அகல விரித்திருக்குமிரவில்
ஆலமரத்தடிக் கொட்டகை மேடையில்
ரட்சகனின் மந்திரங்கள் விசிறி
கிராமத்தை உசுப்பும்


சிக்குப் பிடித்துத் தொங்கும் நீண்ட கூந்தல்
ஒருபோதும் இமைத்திராப் பேய் விழிகள்
குருதிச் சிவப்பு வழியப் பரந்த உதடுகள்
முன் தள்ளிய வேட்டைப் பற்கள்
விடைத்து அகன்ற நாசியென
நெற்றியில் மாட்டப்பட்ட முகமூடியினூடு
கூத்துக்காரனின் முன்ஜென்மப் பெருந் துன்பம்
சனம் விழித்திருக்கும் அவ்விரவில்
பேரோலமெனப் பாயும்


பச்சைப் பொய்கை நீரின் ரேகைகள்
ஊழிக் காற்றின் வீச்சுக்கேற்ப
மாறி மாறியசையும் அக் காரிருளில்
அவளது உடல்விட்டகழ மறுக்கும்
யட்சியின் பிடியையும் துர்வார்த்தைகளையும்
மந்திரவாதியின் கசையும்
ஆட்டக்காரர்களின் பறையும்
மட்டுப்படுத்தும்


பேரிளம்கன்னியைப் பீடித்துள்ள பிசாசினை
அன்றைய தினம்
குறுத்தோலைப் பின்னல் அலங்காரங்களில்
எரியும் களிமண் விளக்குகளின் பின்னணியில்
அடித்தும் அச்சுறுத்தியும் வதைத்தும் திட்டியும்
துரத்திவிட எத்தனிக்கும் பேயோட்டியைப் பார்த்தவாறு
ஆல விழுதுகளைப் பற்றியபடி காத்துக் கிடக்கும்
பீதியோடு உறங்கச் செல்லவிருப்பவர்களுக்கான
துர்சொப்பனங்கள்


அந்தகாரத்தினூடே
அவர்களோடும் அவைகளோடும்
சுவர்க்கத்துக்கோ அன்றி நரகத்துக்கோ
இழுத்துச் செல்லும் தேவதூதர்கள்
அவளது ஆன்மாவைக் காத்திருக்கிறார்கள்

- எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி - அம்ருதாநவீன விருட்சம், வல்லமை, பதிவுகள், வார்ப்பு, காற்றுவெளி, தமிழ் எழுத்தாளர்கள் இதழ்
Painting - Kalasuri Jayasiri Semage

Friday, January 1, 2016

பிறகும் தொடரும் தீவின் மழை
மழை வெளி நிலத்தின் பட்சிகள்
ஈர இறகை  உலர்த்தும் புற்பாதையில்
மீதமிருக்கும்  நம் பாதச்சுவடுகள் இன்னும்

எப்பொழுதும் மழைபெய்யும் ஊரின் பகல்வேளை
மென்குளிரைப் பரப்பியிருக்க
நனைந்திடாதபடி முழுவதுமாக மறைத்த நாம்
நடந்து வந்த பாதையது

தீவின் எல்லாத் திசைகளிலும்
கடலை நோக்கி நதிகள் வழிந்தோடும்
அவ் வழியே பிரம்பு கொண்டு பின்னப்பட்ட
கூடைத் தொப்பியை அணிந்து வந்த முதியவள்
கருமேகக் கூட்டங்களற்ற வானை
ஒருபோதும் கண்டதில்லை’ என்றதும்
சிரட்டைகளால் செதுக்கப்பட்ட
அவளது சிற்பங்களை முழுவதுமாக வாங்கிக் கொண்டாய்
இவ்வாறாக
கரிய முகில் கூட்டம் நிரம்பிய வானின் துண்டு
உன் சேமிப்பில் வந்தது
மழை உனக்கு அவ்வளவு பிடிக்கும்

புனித ஸ்தல மரமொன்றில்
கடவுளுக்காகத் தொங்க விடப்பட்டிருந்த ஏவல் பொம்மைகள்
வெயிலை வேண்டும் அவர்களது பிரார்த்தனைகளை
பொய்ப்பித்தே வந்தன

சூரியனையும் நிலவையும் நட்சத்திரங்களையும்
நேரில் பார்த்திரா அந்த ஊர்வாசிகள்
நம்மிடம் அவை பற்றிக் கேட்டார்கள் இல்லையா
ஆனாலும் அப் பிரதேசத்துக்கும்
அவை தினந்தோறும் வந்தன
மழைத் திரை ஒரு நீர்க்கோடாய்
அவற்றை அவர்களிடமிருந்து மறைத்தது

விதியில் எழுதப்பட்டவர்கள்,
சமுத்திரத்தில் வழி தவறி
திசைகாட்டி நட்சத்திரத்தைத் தேடித் தொலைந்தவர்கள்
முன்பெல்லாம் அத் தனித் தீவில் கரையொதுங்கினர்
என்றவர்கள் கூறியதை
நீ குறித்து வைத்துக் கொண்டாய்

தொலைதூரம் பறந்து சென்ற
வலசைப் பறவைகள் மட்டுமே கண்டிருந்த வெயிலை
ஒருபோதும் அறிந்திரா அத் தீவின் சிறார்கள்
அதன் நிறத்தைவாசனையை
அது நம்மைத் தொடும்போது எழும் உணர்வைப் பற்றி
மழை கண்டு ஆனந்தித்திருந்த நம்மிடம் வினவியதும்
எவ்வாறு உரைத்தல் இயலும்’ என்றாய்
சிறிதும் கருணையேயற்று

ஆவி பறக்கும் உஷ்ணப் பானங்களை அருந்தியபடி
பிரயாணிகள் அனைவரும் சுற்றிப் பார்த்த பின்
அத் தீவை மழையிடம் தனியே விட்டுவிட்டு
கப்பலில் நமது தேசம் வந்து சேர்ந்தோம்

ஆனாலும் அன்றிலிருந்து எப்போதும்
நமது மர வீட்டின் தாழ்வாரத்தில்
ஈரத் துளி விழும் சப்தம்
கேட்டுக் கொண்டேயிருக்கிறது இரவிரவாக

எம்.ரிஷான் ஷெரீப் 
நன்றி - அம்ருதா, வல்லமை, பதிவுகள், வார்ப்பு, காற்றுவெளி

Tuesday, April 21, 2015

செம்மஞ்சள் பொழுதின் வானம்


பூர்வீக வீட்டிலிருந்து சற்றுத் தொலைவுதான் எனினும்
நடந்தே செல்லத் தலைப்பட்டோம்
அரூப ஆவிகள் உலவும் தொன்ம பூமியென
வழி காட்டியவர்கள் சொன்ன கதை கேட்டு அச்சமுற்றாயா

எத்தனையெத்தனையோ தலைமுறைகளுக்கு ஊணிட்ட
வேலிகளற்ற தரிசு வயலது
பரந்து விரிந்த எம் பண்டைய பூமி
வண்டி கட்டிச் சென்று மூத்தோர் விவசாயம் பார்த்த
சருகுக் கோரைப் புற்கள் விரவிக் கிடக்கும் பயிர்நிலம்

என் ஞாபகத்திலொரு பூநெல்லிச் செடியிருக்கிறது
நிலா இரவுகளில் முற்றத்தில் பாய்விரித்து
தலைகோதிக் கதை சொன்ன அம்மா நட்ட செடி
பிஞ்சு விரல்கள் வலிக்க வலிக்க
மூக்கு நீண்ட பேணியொன்றில் நீரேந்தியூற்றி
நானதை வளர்த்து வந்தேன்
அந்நிய நகரத்தில் நீயும் நானும்
அலங்காரத்துக்காக வைத்திருக்கும் போலிச் செடி போலன்றி
அது நன்கு தளைத்திருந்தது
தேசம் விட்டகன்ற நாளில்

அக் காலத்தில் நிழலுக்கென்று வளர்த்திருக்கக் கூடிய
கொன்றையும் வேம்பும் இன்ன பிற மரங்களும்
குளிர்ச்சியைத் தந்திருக்கும்
கூடவே களைப்பறியாதிருக்க வாய்ப்பாடலும்
கூட்டுக் கதைகளும் வெற்றிலையும்
சிறு காயங்களுக்குச் சேற்று மண்ணுமென
உழுத பின் வாடிக் களைத்த மூத்தவர்கள்
அங்கமர்ந்து ஓய்வெடுத்திருப்பர்

இன்று
சட்டை கழற்றிச் சென்றிருந்ததொரு சர்ப்பம்
தூர்ந்துபோய் வான் பார்த்திருக்கும் பெருங்கிணறும்
பல பிரேதங்களைச் சுமந்திருக்கக் கூடும்

எம் மூதாதையரின் இதிகாச ரேகைகள் பரவிய நிலத்தை
பாதி விழுங்கிச் செரித்திருக்கின்றது கருவேலங்காடு
அநேகப் பெருவிருட்சங்கள் மரித்துவிட்டன இப்போது
வலிய துயர்களைக் கண்டு தளர்ந்து கிடக்கிறது பூமி
அதன் உடலிலின்னும்
சுருக்கங்களைத் தீட்டிக் கொண்டேயிருக்கிறது
கோடை காலத் தூரிகை

அத்தி மரத்தில் சாய்ந்து நின்றபடி
அந்திப் பேய் வெயில்
மஞ்சளாய் ஊடாடிய தரிசு வெளி பார்த்துச் சட்டென
''வான்கோ'வின் ஓவியமும் குரூர ஆயுதங்களும்
ஒருங்கே கலந்த நிலம்' என்றாய்
தங்க பூமியின் ஆகாயத்தில்
செஞ்சாயம் கலந்தது வேறெப்படியாம்

- எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி
# அம்ருதா இதழ், மலைகள் இதழ், வல்லமை இதழ், பதிவுகள் இதழ், காற்றுவெளி இதழ், நவீன விருட்சம் இதழ்
# ஓவியம் - Van gogh