Saturday, September 20, 2008

என் நேசத்துக்குரிய எதிரிக்கு...!


ஒரு கோதுக்குள்
என் மௌனத்தைக் கருக்கொண்டுள்ளேன்
அதனை ஓட்டையிட்டு
வார்த்தைகளை உறிஞ்சத் துடிக்கிறாய்

மூங்கிலைத் துளையிட்டாய்
புல்லாங்குழலாகினேன்
வேரினைக் குழிதோண்டிப் புதைத்தாய்
பெருவிருட்சமானேன்
கையிலேந்திய மழைத்துளிகளை விசிறியடித்தாய்
ஓடையாய் நதியாய்க் கடலாய்ப் பெருக்கெடுத்தேன்

இவ்வாறாக
எனக்கெதிரான உனதொவ்வொரு அசைவிற்கும்
விஸ்வரூபம் எடுத்துத் தொலைக்கிறேன்
அதிர்ச்சியில் அகலத்திறந்தவுன் வாயினை
முதலில் மூடுவாயாக !

இந்த வெற்றிகளை எனக்குச் சூடத் தந்தது
என் நேசத்துக்குரிய எதிரியான
நீயன்றி வேறெவர் ?

ஆனாலும் எனை என்ன செய்யச் சொல்கிறாய் ?
அமைதி தவழும் ஒரு மரணத்தைப்போல
அழகிய மௌனத்துடன் நானிருக்கிறேன்
பூச்சொறிவதாய்ச் சொல்லி
எதையெதையோ வாரியிறைக்கிறாய்
நான் தவம் கலைக்கவேண்டுமா என்ன ?

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Wednesday, September 10, 2008

ஒரு தற்கொலைக் குறிப்பு !

துரோகத்தைப் போர்த்தி வந்தது
பொய்யானதொரு நேசம்,
அதனிசை மிகப் பிடித்தமானதாகவும்,
சாத்தியப்படாச் சுவைகளைப் பூசி வந்ததாகவும்
இருந்ததைக் கவனித்தபோதே
சுதாகரித்திருக்க வேண்டும் !

நீர்வீழ்ச்சிக்குள் தூண்டிலிட்டுக் காத்திருந்த
மடத்தனத்தை என்சொல்ல ?
நேசங்களின் மையப்புள்ளி
தொலைபேசித் துளைகள் வழியே கசிந்திட,
இணையமும் வாழ்க்கையும்
பேருவகையைத் தருவதாகத் தோன்றிட
எல்லைகளுக்குள்ளேயே சுழலச் செய்தது காலம் !

வார்த்தைகளால்
பார்த்துப் பார்த்துக் கட்டிய
அன்பின் மாளிகையை உடைக்க
கலவரத்தைக் காலத்தின் கரங்கள்
பொத்திவந்தன ;
ஒரு நெஞ்சம் ஏமாந்து நின்றநேரம்
பிளந்து உள்ளே எறிந்திட்டன !

மறு நெஞ்சம் சிரித்தவாறே
அதனைப்பார்த்து ரசித்திருந்தது
சிரித்த அதன் பற்களிடையே
முன்பு தின்றொழித்த நெஞ்சங்களின்
சதைத்துணுக்குகள் எஞ்சியிருந்தன !

செத்துப்போகிறேன் ;
நாளைய உதடுகளில் நல்லதாகவோ தீயதாகவோ
என் பெயர் உச்சரிக்கப்படக் கூடும்..
உடலைப் புதைகுழி
முற்றாகத் தின்றுமுடித்ததன் பிற்பாடு
அதுவும் மறக்கடிக்கப்படலாம் !

இனிமேலும்,
துரோகத்தைப் போர்த்திப்
பொய்யானதொரு நேசம் வரும்பொழுதின்
இசையில் மயங்காமலும்,
அதன் சுவைகளில் உறையாமலும்
கவனமாக இருப்பீராக !

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Monday, September 1, 2008

கனவு முகங்களில் தொலையும் இரவு !

வெள்ளைப் பூனையின் மென்மயிரென
இலகுவாக உதிர்ந்துவிடுகிறதா என்ன
என் நிராசைக் கனவுகளின் நீட்சி ?

ஒரு சவத்தைப் பின்பற்றுகின்றது
என் பாதங்களின் அடிச்சுவடு ;
பின்னால் வருகின்றாயென்பதை
உணர்ந்து நடந்து மண்டியிட்டு
பிணத்துக்காகப் பிரார்த்திக்கையில்
சவப்பெட்டியில் படுத்திருப்பதுவும்
நீதானெனக் கண்டதிர்ந்து
துயில் கலைகிறேன் !

கனவுகளுக்குள்ளான போலிமுகத்தின்
புருவத் தீற்றலைக் கண்டறியும்
சாஸ்திரங்களைக் கற்றவனல்ல நான் ;
எனவே சொல்...
பிணத்தின் முகம்தனை
எவ்வாறு சூடிக் கொண்டாய் ?
உடலசையா உறக்கத்தினை
எங்கிருந்து கற்றறிந்தாய் ?

உனது நினைவுகளைச் சேர்த்துக்
கொழுவி வைத்திருக்கிறேன்,
ஒவ்வொரு கண முகங்களிலும்
வித்தியாசமாகவே தெரிகிறாய் !

கண்ணாடி விம்பம்தனில்
கண்ணீர் மிதந்திருக்கும்
இரு விழிகளைக் காண்கிறேன் ;
நிராதரவாகிப் போன
நந்தவனத்து மான்குட்டியொன்றின்
மருண்ட பார்வைகளைத் தாங்கிக்
கண்ணீர் மிதந்திருக்கும்
இரு விழிகளைக் காண்கிறேன் !

அந்த விழிகளை மூடித் துயிலுறுமிரவினில்
இன்றெந்த முகத்தைத் தாங்கிக்
கனவினில் வருவாயோ ?

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.