Wednesday, October 15, 2008

மாய ஒளிசிதறும் திசை நோக்கிய பயணம்

அவளது பிரயாணத்தின் குறுக்கீடான
அகன்ற வாயிலைத் திறந்தபோது
சுவாசத்திலடித்தது சாத்தானின் வாடை

வேட்டை நாயொன்றைப் போலவந்து
சதைகள் கவ்வமுயன்ற பொழுது
வேடிக்கை காட்டித்
தப்பிக்கத் தெரியவில்லை அவளுக்கு
தூக்கிப் போட்டு இரை நோக்கவைக்க
இறைச்சித் துண்டுகளும் கைவசம் இல்லை
அவளுடல் பாகங்கள் குறித்தே
சாத்தானுக்குக் குறியிருந்தது

சூழச் சூழ வந்து அவளைத்
தொட்டணைத்துத் தன்
பற்தடங்களைப் பதிக்கமுயன்றகணம்
தேவதூதனொருவனின் மெல்லிறகுக் காற்று
இருவருக்குமிடையே ஓர் அணையை எழுப்பிற்று
மாயக்கரமொன்று அவளதிர்ந்த நெஞ்சை
ஆறுதல்படுத்தி விழிநீர் துடைத்திற்று

கீறல்கள் மட்டும் சுமந்து
எப்படியோ சாத்தானைக் கூண்டொன்றிலடைத்திட்டாள்
எம்பி எம்பியது அவளிடம் வர
முயற்சித்தபடியேயிருக்க
அவளது பயணம் தேவதூதனை நோக்கித்
திசைமாறிற்று

இன்று
தூரத்து ஒளியொன்று பார்வையில் இடறிட
நெடுஞ்சோலைகள் தாண்டிப்
பசும்வெளிகள் தாண்டி
வற்றாத அழகிய நீர்வீழ்ச்சிகள் தாண்டி
நிலவற்ற நடுநிசிகளில் கூட
அவனது மெல்லிறகுகள் கொண்ட
அருட்கரங்களைத் தேடியே
அவள் பாதங்கள் தொலைந்தபடியிருக்க

அணையெழுப்பிய மெல்லிறகுக் காற்றே
நீயறியாயோ வெந்துருகும் அவள் சுடுமூச்சை ?
விழிநீரழித்த மாயக்கரமே
நீயறியாயோ பிரவகிக்கும்
அவள் துயரங்களின் மூர்க்கத்தை ?

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Wednesday, October 1, 2008

பசித்தலையும் சுயம்

நான் பசியிலிருக்கிறேன்
எந்தத் துதிபாடல்களும்
என் பசியினை ஆற்றா.

உனக்குத் தெரிந்த கல்நெஞ்சுக்காரன் நீ
எனது கூடாரங்களில் விளக்கெரித்தாய்
தீப்பற்றியது எனதெளிய இருப்பிடம்
சற்று நகர் - அனல் தெறிக்கும்
என் கண்களிலிருந்தும்

வாகை சூழ்ந்த பார்வை
வஞ்சனை சூழ்ந்த நெஞ்சு
நெஞ்சின் மேலொரு மழலை
யார் கண்டது
நாளை அதுவுமுனக்கு இரையாகலாம்
இப்பொழுதைப் போல அப்பொழுதும்
அப்பாவியாக நடித்தபடியிருப்பாய்

ஒவ்வொருவரிடத்திலும் ஒவ்வொன்றாயுனக்கு
ஆயிரத்தெட்டுப் பெயர்கள்
அதிலொன்றைத்தான் - என்னை
உருகி உருகி அழைக்கவைத்தாய்
எனதுருக்கத்தில் எனதிரக்கத்தில்
கானகங்கள் பூத்திருக்கும்
வானம் சடாரெனப் பொழிந்திருக்கும்
தேசாந்திரிகளைத் தேடிப் பாசங்கள் நகர்ந்திருக்கும்

கபடங்களைச் சுற்றிச் சுற்றி இப்பொழுது
யாருக்கெல்லாம் பகிர்ந்தபடியிருக்கின்றாய் ?
உன் மிதியடியாக மட்டும்
என் பூக்களை விரித்திருக்கிறாய்

நான் பசியிலிருக்கிறேன்
பூக்களை இழந்த செடியின் மௌனத்தோடு
உனது அல்லது உன்னைப்பற்றிய
எந்தத் துதிபாடல்களும்
என் பசியினை ஆற்றாப் பொழுதொன்றில்

ஆமாம்
தனித்திருக்கிறேன்..!

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.