Sunday, February 15, 2009

கோபங்களின் நிமித்தம்

வழமை போலவே
உனது அளவிடமுடியாக் கோபங்களையும்
எல்லாப்பழிகளையும் என்னிலேற்று
வழியிறங்கிப்போகிறேன்

ஒவ்வொரு துணிக்கையிலும்
அன்பைக் கொண்டு
எனக்காய்ச் செய்ததான சுவர்களுக்குள்
உன் சகாப்பிசாசுகளை ஏவுகிறாய்
மிகுந்த அச்சம் கொண்ட பார்வையினை
மீண்டும் மீண்டும் உன்னிலெறிகையில்
அலட்சியத்தின் சலனமற்ற மொழி
உன் முகத்தில் உறைகிறது

நாற்திசைகளிலும் ஊசலாடும்
நூலாம்படைகளினிடையில்
சிதறும் மனதின் சூனியங்களுக்குள்
நிரம்பி வழிகிறது
நிராகரிப்பின் பெருவலி

நான் அகல்கிறேன்
உனது இப்பெருங்கோட்டையை விட்டும்
நீயுன் வழித்துணைகளை
மூலைக்கொன்றாய்க் குடியமர்த்திப்
பாடச் சொல்லி ரசி

இறுதியாக வழமை போலவே
உனது அளவிடமுடியாக் கோபங்களையும்
எல்லாப்பழிகளையும் என்னிலேற்று
வழியிறங்கிப்போகிறேன்

வாழ்க்கை
அது மீண்டும் அழகாயிற்று

- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.


நன்றி - வார்ப்பு, நவீன விருட்சம்

Thursday, February 5, 2009

உதிர்ந்த பூவின் வெயில்

கொழுத்த வெயில் பரவிய தார்வீதியின்
மேலுதிர்ந்த ஒற்றைப் பூவினை
ஏழை யாசகனொருவனின் மெலிந்த பாதமொன்று
மிதித்து நகர்கிறது

மிதிபடாவிடினும்
தாரோடு சேர்ந்து இதழ்கள் கறுக்க
இன்னும் பொசுங்கியிருக்கக்கூடும்

உதிர்த்த விருட்சத்துக்குத் தெரியவில்லை
பூவின் வலி
விருட்சத்தின் வேர்களும் கானகமொன்றிலிருந்து
எப்பொழுதோ அகற்றப்பட்டிருக்க
கொடும் நகரத்துக்குள் பூக்கள் உதிர்க்க
நிழல் சருகுகளையா தேடமுடியும்

மரத்திலிருந்து உதிர்ந்த
ஒற்றைக் காகத்தின் நிழல் மட்டும்
கறுப்பாகப் பறந்தவாறே
அடுத்த தெருவுக்குச் செல்கிறது

அத்தனையும் பார்த்தவாறு
கொடிய வெயில் அப்படியே இருக்கிறது
இப்பொழுது என்ன செய்தபடி இருக்கிறாயென
உன்னைக் கேட்கவிழையும் என்னையும் பார்த்தபடி

- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,

இலங்கை

( நன்றி - யாத்ரா - இலங்கையிலிருந்து வெளிவரும் கவிதைகளுக்கான இதழில் பிரசுரமான கவிதை )