Thursday, January 5, 2017

ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு


கறுத்த கழுகின் இறகென இருள்
சிறகை அகல விரித்திருக்குமிரவில்
ஆலமரத்தடிக் கொட்டகை மேடையில்
ரட்சகனின் மந்திரங்கள் விசிறி
கிராமத்தை உசுப்பும்


சிக்குப் பிடித்துத் தொங்கும் நீண்ட கூந்தல்
ஒருபோதும் இமைத்திராப் பேய் விழிகள்
குருதிச் சிவப்பு வழியப் பரந்த உதடுகள்
முன் தள்ளிய வேட்டைப் பற்கள்
விடைத்து அகன்ற நாசியென
நெற்றியில் மாட்டப்பட்ட முகமூடியினூடு
கூத்துக்காரனின் முன்ஜென்மப் பெருந் துன்பம்
சனம் விழித்திருக்கும் அவ்விரவில்
பேரோலமெனப் பாயும்


பச்சைப் பொய்கை நீரின் ரேகைகள்
ஊழிக் காற்றின் வீச்சுக்கேற்ப
மாறி மாறியசையும் அக் காரிருளில்
அவளது உடல்விட்டகழ மறுக்கும்
யட்சியின் பிடியையும் துர்வார்த்தைகளையும்
மந்திரவாதியின் கசையும்
ஆட்டக்காரர்களின் பறையும்
மட்டுப்படுத்தும்


பேரிளம்கன்னியைப் பீடித்துள்ள பிசாசினை
அன்றைய தினம்
குறுத்தோலைப் பின்னல் அலங்காரங்களில்
எரியும் களிமண் விளக்குகளின் பின்னணியில்
அடித்தும் அச்சுறுத்தியும் வதைத்தும் திட்டியும்
துரத்திவிட எத்தனிக்கும் பேயோட்டியைப் பார்த்தவாறு
ஆல விழுதுகளைப் பற்றியபடி காத்துக் கிடக்கும்
பீதியோடு உறங்கச் செல்லவிருப்பவர்களுக்கான
துர்சொப்பனங்கள்


அந்தகாரத்தினூடே
அவர்களோடும் அவைகளோடும்
சுவர்க்கத்துக்கோ அன்றி நரகத்துக்கோ
இழுத்துச் செல்லும் தேவதூதர்கள்
அவளது ஆன்மாவைக் காத்திருக்கிறார்கள்

- எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி - அம்ருதாநவீன விருட்சம், வல்லமை, பதிவுகள், வார்ப்பு, காற்றுவெளி, தமிழ் எழுத்தாளர்கள் இதழ்
Painting - Kalasuri Jayasiri Semage