

அந்த மலைகளைத் தாண்டிப்
பெரும் சமுத்திரத்துக்கப்பால்,
எங்களுக்கென்றொரு
அழகிய தேசம் இருந்தது ;
அது எங்கள்
அழகிய தேசம் !
பூலோகத்தின் சொர்க்காபுரி !!
சலசலத்தோடும்
நதிக்கரைகளில்
பட்டாம் பூச்சி துரத்தியும்,
வசந்தகால மரங்களில்
பூக்கள் பறித்தும்,
பாடப் புத்தகங்களுக்கிடையில்
மயிலிறகைப்
பொத்தி வளர்த்தும் - என்
தங்கை தோழிகளுடன்
விளையாடினாள் !
சூரியக் கதிர்கள்
பயிர்களைத் தொடமுன்பு,
எம் மக்கள் - அவர்களது
விவசாய நிலங்களைப்
பார்வையிடப் புறப்படுவர் !
அன்பையும்,
ஆரோக்கியத்தையும்,
ஒற்றுமையையும் ,
உயர் குணத்தையும்
மழலைகளுக்கு - எம் மாந்தர்
உணவுடன் ஊட்டி வளர்த்தனர் !
மழை பொய்க்கவில்லை ,
வெயில் வாட்டவில்லை ;
பஞ்சம்,பிணி,பட்டினியென
எம் மக்கள் வாடவில்லை !
எனினும் - ஓர்
இருண்ட அமாவாசை இரவு
எங்களுக்கு மட்டும் விடியவேயில்லை !
அன்றுதான்
அந்த அந்நியதேசத்து
ஆக்கிரமிப்பாளர்கள் வந்தனர் ;
எனது அழகிய தேசம்
ஆயிரம் துண்டங்களாக ,
நாமெல்லாம் ஒரே இரவில்
அடிமைகளாக மாறிப் போனோம் !
அதன் பிறகு வந்த
பௌர்ணமி நிலவும்
தீப்பிடித்தெரிந்தது ;
அழகிய தேசம்,
அழுகிய தேசமாகவும்,
அழவைத்த தேசமாகவும்
மாறிவிட்டதைக் கண்டு !
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.