
முள்ளில் உறைந்த
விடிகாலைப் பனித்தூய்மை நீ ;
ஆவியாகும் கணம் வரையில்
எந்த தேவதையும் தலைகோதிடாப்
பெருவலி சுமந்தாய் !
கருணை நிறைந்த உலகிலொரு
தேவதையாய் வலம்வந்தாய்,
இறப்பின் வலியதனை
அனுதினமும் அனுபவித்தாய்,
விழிகளிரண்டின் மூலமிரு
உயிர்க்கு ஒளியூட்டி
விண்நோக்கியுன் பயணம்
இன்று நீ ஆரம்பித்தாய் !
நீ காட்டிய பேரன்பு
நெஞ்சம் முழுதும் அலைமோத
பத்திரமாய்ப் போய்வரும்படி
சொல்லிச்சொல்லியனுப்பினேன் - அதனை
எந்தக்காதில் வாங்கி - உன்
உயிரோடு விட்டுவிட்டாய் ?
இத்தனை துயரங்களையும்
எனை மட்டும் தாங்கச்செய்து,
எவராலும் மீட்சி வழங்கமுடியாப்
பெருவெள்ளத்தில் எனை மட்டும்
நீந்தச்செய்து நீங்கிச்செல்ல
உன்னால் எப்படி முடிந்தது தோழி ?
மௌனமாய் வலிபொறுக்கும்,
விழிநீர் அத்தனையையும்
நெஞ்சுக்குள் விழுங்கி விழுங்கி
ஆழப்பெருமூச்சு விடுமொரு
அப்பாவி ஜீவனென்பதாலா
அத்தனை தூரமெனை நேசித்தாய் ?
எந்த வனாந்தரங்களுக்குள்ளும்
வசப்படாத இயற்கையை,
எந்தப் பனிமலையும்
தந்திடாத குளிர்மையை,
எந்தச் சோலைகளும்
கண்டிராத எழிற்பொலிவை,
எந்தப் பட்சிகளும்
இசைத்திடாத இனிய கீதமதை
உன்னில் கொண்டிருந்த நீ
எந்த மேகத்தின்
துளிகளுக்குள்ளூடுருவி
மழையாய்ப் பொழியக்காத்திருக்கிறாய் ?
கருவிழியிரண்டையும் - ஒளியற்ற
இருவர் வதனங்களில்
விதைத்துச்சென்றாய் ;
அவர்கள் வெளிச்சம் பார்த்துத்
திளைக்கும் கணந்தோறும்
அப்பூஞ்சிரிப்பில் நீயிருப்பாய் - என்
நிரந்தரப் பிரார்த்தனைகளிலும்
நீ வந்து தங்கிவிட்டாய் !
-
எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.