
அதுவொரு பெருமழைக்காலம் !
வனாந்தரங்களின் பசுமையை,
பனிக்கால நீரோடைகளின் குளிர்ச்சியை,
பூஞ்சோலைகளின் பேரழகை,
ஆலப்பெரு மரங்களின் நிழல்களை
அவள் கொண்டிருந்ததாக
நீ எண்ணி எண்ணித் திளைத்த காலம் !
ஒரு துர்தேவதையின் பாடல்கள் மட்டுமுன்
செவிகளை நிரப்பிய காலம் ,
அவளுக்கான சாபங்களனைத்தும்
உன்னைப் பீடித்தலையத்
தருணம் பார்த்துக் காத்திருந்த காலம் ;
அத்தனையையும் அறியாது - நீ
அவளுக்கு நேசனானாய் !
அவளது அழகிய மாயநதியில்
நீ மூழ்கிச் சுவாசம் மறந்தாய் ;
உன் இமைகளைப் பிடுங்கி
அது கொண்டவளை
ஓவியங்கள் வரைந்திட்டாய் !
அவளது ஆன்மாவின் சலனங்கள்
நாணத்தைத் தொலைத்தன,
பாதங்களை முக்காடுகள்
போர்த்திக் கொண்டன ;
அன்றுதான் நண்பனே - நீ
பைத்தியமானாய் !
பறவையொன்று சத்தமிட்டுச் சிரித்ததென
அவள் சொல்லிப் போனாலும்
நம்பிப் புருவமுயர்த்தி ரசித்து மகிழ்ந்தாய் !
முகவரியற்ற சுவர்களையுன்
இருப்பிடமாக்கிக் காலம் பார்த்தது ;
அவளது காலடிச் சுவடுகளிலுன்
உயிரினைத் தேடிய நீ
காலத்தைப் பார்க்கமறந்திட்டாய் !
அந்தக் காலம்தான்
உன்னைக் கல்லறையிலும்,
அவளை மணவறையிலும்
இருத்தி அழகுபார்க்கிறதின்று !
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.