Friday, March 21, 2008

மனவெடிப்பிலுன் தடம்பதித்து...!


ஒரு பெருவெளிப் போர்க்களத்தை
மனதுள் பரப்பிச்
சென்றதுன் வருகை
மீளவும் மீளவும்
சுடுகாடாய்ப் புகை கசிய
வெடித்துச் சிதறுகிறது மனம் !

அமைதி,அந்தஸ்து,
அத்தனை நிம்மதியும்
வாய்க்கப் பெற்றவன் நானென
இறுமாந்து நின்றவேளை
சலனமற்ற தூறலென
சப்தங்களை விழுங்கி,விழுங்கி
நீ வந்துநின்றாய்
உள்ளுக்குளென்ன வெள்ளமோ...
நானேதுமறியேன் !

வந்தாய் - விழியுரசிடச் சிலகணங்கள்
மௌனத்தை மொழியாக்கிப்
பார்த்தபடி நின்றாயதில்
சலனத்தையோ,சிவப்பையோ
நான் காணவில்லை !

கேள்விகளை மட்டுமே
வார்த்தைகளாக்கியுன்னிடம்
வருகையின் மூலத்தை - நான்
வினவிச் சோர்ந்தவேளையிலும்
என் நெஞ்சப்பரப்பில்
ஆழத்தடம் பதித்து,
மௌனத்தை மொழியாக்கி
ஓர் தென்றல் போல
நீ விலகிச்சென்றாய் !

உனது கருவிழிகள்
பயணிக்கும் திசையில்
மட்டுமே வாழ்ந்திடப்
பலர் காத்து நிற்கையில்...

எந்தக் கோலத்துக்கும்
வசப்படாப் புள்ளியொன்றிடம்
என்ன எதிர்பார்த்து நீ வந்தாய் ?
எந்தத்திசை நோக்கியும்
முடிவுறாப் பாதையொன்றில்
எங்கு பயணிக்கக் காத்திருந்தாய் ?

உன் வாசனை நிறுத்திச்சென்று
சிலபொழுது கடந்தவேளை,
தீயிடம் என் பெயரை - நீ
உச்சரித்து மாண்டதாக
வேதனை மிகும் செய்தியொன்று
காற்றோடு வந்தது !

ஒரு பெருஞ்சமுத்திரச்சோகத்தை
மனதில் ஓயாமல் அலையடிக்கச்
செய்ததுன்னிறப்பு.
மீளவும் மீளவும்
வசந்தங்களேதுமற்றவொரு
மயானத்து வனாந்தரமாய்
வெடித்துச் சிதறியும்
துடித்துக்கொண்டே
ஏனின்னும் இருக்கிறதுன்
நேசத்தை உணர்ந்திடா என் மனம் ?

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Saturday, March 1, 2008

மரணம் துரத்தும் தேசத்துக்குரியவனாக...!


எந்த தேவதைக்கதைகளும்
தேவையில்லை,
மெல்லிசைகளோ,சுகந்தங்களோ கூட
வேண்டவே வேண்டாம்,
பாவங்கள் சூழ்ந்த
இந்த யுத்தப்பிசாசினை மட்டும்
ஓட ஓட விரட்டி அதன்
ஓசைகளை நிறுத்தித் தாருங்கள் !

என் ஜன்னலில் தெரியும் வானம்
உங்களுடையதைப் போலவே
மேகம் தழுவும் மென் நீலமாயும்,
என் பாதங்கள் பயணிக்கும்
வயல்வெளி,வனாந்தரங்களத்தனையும்
உங்களுடையதைப் போலவே
அடர்பச்சை கலந்ததாயும்,
மழைநீரும்,நதியும்,நீர்வீழ்ச்சி,வாவிகளும்
நிறமற்றதாயும்,
வெயில் வெப்பம் சுமந்தலைவதாயுமே
இருக்கின்றதென்பதை மறுப்பீர்களாயினும்
உங்களைப் போலவே
காற்றைத்தான் நானும்
சுவாசித்துச் சீவிக்கிறேனென்பதை
மட்டுமாவது ஒத்துக்கொள்வீர்களா?

உங்களுக்கேயுரியதாக நீங்கள்
காவியங்களில் சொல்லிக்கொள்ளும்
சூரிய,சந்திர,நட்சத்திரங்கள்
எனக்கும் சில கிரணங்கள் மூலம்
வெளிச்சம் பாய்ச்சுவதோடு,
உங்கள் வியர்வையழிக்குமல்லது
மேனி சிலிர்க்கச் செய்யும் தென்றல்
எனக்காகவும் கொஞ்சம்
வீசத்தான் செய்கிறது !

உங்களுக்கேயுரியதான
இவ்வினிய பொழுதில்
எனதிப் புலம்பல் எதற்கெனில்
பசி,தாகம்,உறக்கமென
உங்களைப் போலவே
அத்தனை உணர்ச்சிகளும்
எனக்கும் வாய்த்திருக்கையில்...

பெரும் அடர்புற்றுப் போல்
என் தேசம் முழுதும்
வியாபித்துச் சூழ்ந்திருக்கும்
இந்த யுத்தப்பிசாசினை
ஓட ஓட விரட்டி அதன்
ஓசைகளை நிறுத்தித் தாருங்கள் !

உங்களைப் போலவே
எனக்கும்
எத்துயர் நிஜங்களோ,
தீய கனவுகளோ அற்றுக் கொஞ்சம்
நிம்மதியாக உறங்க ஆசை !

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.