Saturday, August 25, 2007
விழிகளில் வழியும் ஏக்கம் !
உனது உயிர்
போகும் பாதையைப்
பார்த்த படியே
விழிகள் திறந்தபடி
உயிர்விட்டிருந்தாய் !
ஏழு வானங்களையுமது
எந்தத் தடைகளுமின்றித்
தாண்டிச்சென்றதுவா...?
திறந்திருந்த வாய்வழியே
இறுதியாக என்ன வார்த்தையை - நீ
உச்சரிக்க நினைத்திருந்தாய்...?
நீ
நிரபராதியோ...
தவறிழைத்தவனோ...
உயிர்விடும் கணம்வரை
எப்படித் தாங்கிக் கொண்டாய்
அவ்வலிகளை ?
உன் நகங்கள்
ஒவ்வொன்றாக பிடுங்கப்பட்டிருந்தன .
நீ பிறந்தவேளையில்
ஒரு மெல்லிய பூவிதழ்போல்
அவை இருந்திருக்கக்கூடும் !
உன் உடம்பு முழுக்க
வரி வரியாய்
காயங்கள்...வீக்கங்கள்...
சிறுவயதில் நீயும்
சிறு சிராய்ப்புக்கு அழுதபடியே
எச்சில் தடவியிருப்பாய் !
என்றபோதிலும்
எதுவுமே சொல்லாமல்
உயிர் விட்டிருந்த உனது
விழிகளில் மட்டும்
எஞ்சியிருக்கிறது இன்னும்
ஏதோ ஒரு ஏக்கம்...
ஏதோ ஒரு தாகம்...
- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
((நீ
நிரபராதியோ...
தவறிழைத்தவனோ...
உயிர்விடும் கணம்வரை
எப்படித் தாங்கிக் கொண்டாய்
அவ்வலிகளை ?
உன் உடம்பு முழுக்க
வரி வரியாய்
காயங்கள்...வீக்கங்கள்...
சிறுவயதில் நீயும்
சிறு சிராய்ப்புக்கு அழுதபடியே
எச்சில் தடவியிருப்பாய் !))
மனதில் வலியேற்றும் வரிகள்.
கவிதை நன்றாக உள்ளது
மிக நன்றிகள் சகோதரி பஹீமாஜஹான்.
அற்புதம்! அருமை! அழகான வரிகள் என்பதத விட நிதர்சனமான வார்த்தைகள் ; இராணுவ வதை முகாமில் இப்படித்தான் சித்திரவதைக்குட்பட்டு இளைஞர்கள் இறந்திருக்கிறார்கள்; இன்னமும் இறந்து கொண்டுமிருக்கிறார்கள்!.
உங்கள் மனதில் எழுந்த அதே கேள்விகள் தான் உயிரோடிருக்கும் ஒவ்வொரு தமிழனும் இறந்து போய் மண்ணுடன் உரமாகி, வித்தாகிப் போன சோதரர்களிடம் கேட்க வேண்டுமென்று துடித்துக் கொண்டிருக்கும் கேள்விகள்...பதிலறியா வினாக்கள்! அவர்களின் கடைசி நேர வலிகளையும், துடிப்புகளையும், ஏக்கங்களையும், ஓலங்களையும் எம்முடைய உண்மையான உணர்வுகளால் உணர்ந்தால் மட்டுமே அந்த பதில்கள் சாத்தியமாகும்.
//என்றபோதிலும்
எதுவுமே சொல்லாமல்
உயிர் விட்டிருந்த உனது
விழிகளில் மட்டும்
எஞ்சியிருக்கிறது இன்னும்
ஏதோ ஒரு ஏக்கம்...
ஏதோ ஒரு தாகம்... //
ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கும் தாகம் தான் அது!
தனி ஈழம் என்ற ஏக்கம் தான் அது!
வாழ்த்துக்கள்!
அன்புடன்
சுவாதி
உன் நகங்கள்
ஒவ்வொன்றாக பிடுங்கப்பட்டிருந்தன .
நீ பிறந்தவேளையில்
ஒரு மெல்லிய பூவிதழ்போல்
அவை இருந்திருக்கக்கூடும் !
ரிசான்
இது இதயத்தின் வலி
தாய் முத்தமிட்டு கடித்த அந்த பிஞ்சு விரல் நகங்கள்...
தாய் மனம் எவ்வளவு வேதனைப்படும்...
மணிவண்ணன்
நன்றிகள் சுவாதி.ஒவ்வொன்றும் விடையறியா வினாக்கள்.
நல்லா இருக்குங்க ரிஷான்
-சுரேஷ்பாபு
நிச்சயமாக மணிவண்ணன்.
வதைப்படும் உடல் சுமக்கும் உயிர்களின் தாய்கள் அறிவார்களெனில்,
அத்தனை துன்பங்களையும் தாய்மனமும் அனுபவிக்கும்.
மிகவும் நன்றிகள் சுரேஷ் பாபு
//நீ பிறந்தவேளையில்
ஒரு மெல்லிய பூவிதழ்போல்
அவை இருந்திருக்கக்கூடும் !//
மனது வலிக்கிறது நண்பரே
அன்பின் சரவணகுமார்,
என்ன செய்ய நண்பரே...?
ஆயுதங்கள் ஆட்சி செலுத்தத் தொடங்கும் போது நிரபராதிகளே அதிகம் தண்டிக்கப் படுகின்றனர் :(
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
Post a Comment