Tuesday, September 18, 2007

நான்கு மூலைகளிலும் சபிக்கப்பட்ட வாழ்க்கை...!


















கருணை வழிந்தோடும்
இடுங்கிய விழிகளினூடு
எதுவும் இயலாதவளாக
என்னைப் பார்க்கிறாய்!

காலம் சுழற்றியடித்துச்
சுருங்கிய உடலோடு,
விபத்துக்குள்ளான - உன்
பேரனைப் பார்த்துப்போக
கடன்வாங்கித் துரிதகதியில்
தலைநகர் வந்ததாக
காவல்துறையிடம் கெஞ்சுகிறாய்!

அழகாயிருந்த வாழ்க்கையின்
நான்கு மூலைகளும் சபிக்கப்பட்டு
நாறடிக்கப்பட்டிருக்கும் போது
மன்றாடியென்ன பயன்...?
மன்னித்துக்கொள் தாயே...!

உன் பனையோலைப்பையின்
ஒவ்வொரு இடுக்காய்த் தேடியும்
கைக்குட்டைச் சில்லறைகளையும்
பனங்கிழங்குகளையும் தவிர
வேறெந்த ஆயுதத்தையும்
இவர்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை...!

காவல்துறை வாகனத்தில்
கைப்பிடித்து ஏற்றப்படுகின்றாய்...
என்ன செய்ய...?
நீ மூதாட்டிதானெனினும்
அடையாளஅட்டையில்லையெனில்
உன்னை வதைப்படுத்தி விசாரிக்காமல்
விடமாட்டார்கள் - உன்
நெற்றியில் பொட்டிருக்கும் காரணத்தால்...!

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை

4 comments:

Anonymous said...

((கருணை வழிந்தோடும்
இடுங்கிய விழிகளினூடு
எதுவும் இயலாதவளாக
என்னைப் பார்க்கிறாய்

அழகாயிருந்த வாழ்க்கையின்
நான்கு மூலைகளும் சபிக்கப்பட்டு
நாறடிக்கப்பட்டிருக்கும் போது
மன்றாடியென்ன பயன்...?
மன்னித்துக்கொள் தாயே...!

உன் பனையோலைப்பையின்
ஒவ்வொரு இடுக்காய்த் தேடியும்
கைக்குட்டைச் சில்லறைகளையும்
பனங்கிழங்குகளையும் தவிர
வேறெந்த ஆயுதத்தையும்
இவர்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை...))

கவிதையின் காட்சி கண்முன்னே வருகிறது.

M.Rishan Shareef said...

யுத்த தேசத்தில் ஒவ்வொரு பாதச்சுவடுகளும் பல வலிகளைத் தாங்கியபடியே பதிந்து செல்கின்றன.
இயலாமையின் பெருமூச்சு இதில் கவிதையாய் வெளிப்பட்டிரூக்கிறது.
மிக நன்றி சகோதரி பஹீமாஜஹான்.

MSK / Saravana said...

//உன் பனையோலைப்பையின்
ஒவ்வொரு இடுக்காய்த் தேடியும்
கைக்குட்டைச் சில்லறைகளையும்
பனங்கிழங்குகளையும் தவிர
வேறெந்த ஆயுதத்தையும்
இவர்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை...!

காவல்துறை வாகனத்தில்
கைப்பிடித்து ஏற்றப்படுகின்றாய்...
என்ன செய்ய...?
நீ மூதாட்டிதானெனினும்
அடையாளஅட்டையில்லையெனில்
உன்னை வதைப்படுத்தி விசாரிக்காமல்
விடமாட்டார்கள் - உன்
நெற்றியில் பொட்டிருக்கும் காரணத்தால்...!//

அப்பப்பா.. படித்து முடிப்பதற்குள் மூர்ச்சடைத்துபோய்விட்டேன்..

M.Rishan Shareef said...

அன்பின் சரவணகுமார்,

இதுதான் இலங்கையில் இப்பொழுது நிதர்சனம் நண்பரே.
ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் இது போன்றவற்றைப் பார்க்கலாம். :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)