Friday, October 26, 2007

எங்கள் தேசம்










அந்த மலைகளைத் தாண்டிப்
பெரும் சமுத்திரத்துக்கப்பால்,
எங்களுக்கென்றொரு
அழகிய தேசம் இருந்தது ;
அது எங்கள்
அழகிய தேசம் !
பூலோகத்தின் சொர்க்காபுரி !!

சலசலத்தோடும்
நதிக்கரைகளில்
பட்டாம் பூச்சி துரத்தியும்,
வசந்தகால மரங்களில்
பூக்கள் பறித்தும்,
பாடப் புத்தகங்களுக்கிடையில்
மயிலிறகைப்
பொத்தி வளர்த்தும் - என்
தங்கை தோழிகளுடன்
விளையாடினாள் !

சூரியக் கதிர்கள்
பயிர்களைத் தொடமுன்பு,
எம் மக்கள் - அவர்களது
விவசாய நிலங்களைப்
பார்வையிடப் புறப்படுவர் !

அன்பையும்,
ஆரோக்கியத்தையும்,
ஒற்றுமையையும் ,
உயர் குணத்தையும்
மழலைகளுக்கு - எம் மாந்தர்
உணவுடன் ஊட்டி வளர்த்தனர் !

மழை பொய்க்கவில்லை ,
வெயில் வாட்டவில்லை ;
பஞ்சம்,பிணி,பட்டினியென
எம் மக்கள் வாடவில்லை !
எனினும் - ஓர்
இருண்ட அமாவாசை இரவு
எங்களுக்கு மட்டும் விடியவேயில்லை !

அன்றுதான்
அந்த அந்நியதேசத்து
ஆக்கிரமிப்பாளர்கள் வந்தனர் ;
எனது அழகிய தேசம்
ஆயிரம் துண்டங்களாக ,
நாமெல்லாம் ஒரே இரவில்
அடிமைகளாக மாறிப் போனோம் !

அதன் பிறகு வந்த
பௌர்ணமி நிலவும்
தீப்பிடித்தெரிந்தது ;
அழகிய தேசம்,
அழுகிய தேசமாகவும்,
அழவைத்த தேசமாகவும்
மாறிவிட்டதைக் கண்டு !


-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

4 comments:

Anonymous said...

அன்பின் ரிஷான்

((சலசலத்தோடும்
நதிக்கரைகளில்
பட்டாம் பூச்சி துரத்தியும்,
வசந்தகால மரங்களில்
பூக்கள் பறித்தும்,
பாடப் புத்தகங்களுக்கிடையில்
மயிலிறகைப்
பொத்தி வளர்த்தும் - என்
தங்கை தோழிகளுடன்
விளையாடினாள் !))

இதே கருத்தைச் சொல்லும் வரிகள் மீண்டும் மீண்டும் பலராலும் பயன்படுத்தப் பட்ட நிலையில் உங்கள் கற்பனையும் அதே வழிதொடர்ந்து போயுள்ளதாக நினைக்கத் தோன்றுகின்றது

(சூரியக் கதிர்கள்
பயிர்களைத் தொடமுன்பு,
எம் மக்கள் - அவர்களது
விவசாய நிலங்களைப்
பார்வையிடப் புறப்படுவர் !)

இந்த வரிகளை இன்னும் கொஞ்சம் கவித்துவத்துடன் சொல்லியிருக்கலாம்.

(அதன் பிறகு வந்த
பௌர்ணமி நிலவும்
தீப்பிடித்தெரிந்தது ;
அழகிய தேசம்,
அழுகிய தேசமாகவும்,
அழவைத்த தேசமாகவும்
மாறிவிட்டதைக் கண்டு !)

இந்த வரிகள் கவிதையின் பூரணத்துவத்தைச் சரியாக வழங்கவில்லை.

அழகிய தேசம் என்ற சொல் பலதடவைகள் பயன்படுத்தப் பட்டுள்ளதும் கவிதையின் குறைபாடாகவே தென்படுகிறது.

இந்தக் கருத்துக்கள் உங்களை வீழ்த்த அல்ல.உங்களைச் செதுக்கவே

அன்புடன்
பஹீமாஜஹான்

M.Rishan Shareef said...

அன்பின் சகோதரி பஹீமா ஜஹான்,
இந்தக் கவிதைதான் முதன்முதலில் என்னால் எழுதப்பட்டு வெளியான கவிதை.எனவே இதனை ஒரு கவிதை என்றே என்னால் கூறவியலாது.ஒரு கன்னி முயற்சி என்று கொள்ளலாம்.
எனைச் செதுக்கும் இது போன்ற கருத்துக்களை எனது ஒவ்வொரு கவிதைகளுக்கும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் சகோதரி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் !

கோகுலன் said...

சோகம்.. மனது வலிக்கும் ஒரு கவிதை..

M.Rishan Shareef said...

அன்பின் கோகுலன்,

//சோகம்.. மனது வலிக்கும் ஒரு கவிதை..//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)