Wednesday, November 14, 2007

செல்வி.ஸ்ரீஜான்சி செந்தில்குமார், இறப்பு : 12/11/2007













முள்ளில் உறைந்த
விடிகாலைப் பனித்தூய்மை நீ ;
ஆவியாகும் கணம் வரையில்
எந்த தேவதையும் தலைகோதிடாப்
பெருவலி சுமந்தாய் !

கருணை நிறைந்த உலகிலொரு
தேவதையாய் வலம்வந்தாய்,
இறப்பின் வலியதனை
அனுதினமும் அனுபவித்தாய்,
விழிகளிரண்டின் மூலமிரு
உயிர்க்கு ஒளியூட்டி
விண்நோக்கியுன் பயணம்
இன்று நீ ஆரம்பித்தாய் !

நீ காட்டிய பேரன்பு
நெஞ்சம் முழுதும் அலைமோத
பத்திரமாய்ப் போய்வரும்படி
சொல்லிச்சொல்லியனுப்பினேன் - அதனை
எந்தக்காதில் வாங்கி - உன்
உயிரோடு விட்டுவிட்டாய் ?

இத்தனை துயரங்களையும்
எனை மட்டும் தாங்கச்செய்து,
எவராலும் மீட்சி வழங்கமுடியாப்
பெருவெள்ளத்தில் எனை மட்டும்
நீந்தச்செய்து நீங்கிச்செல்ல
உன்னால் எப்படி முடிந்தது தோழி ?

மௌனமாய் வலிபொறுக்கும்,
விழிநீர் அத்தனையையும்
நெஞ்சுக்குள் விழுங்கி விழுங்கி
ஆழப்பெருமூச்சு விடுமொரு
அப்பாவி ஜீவனென்பதாலா
அத்தனை தூரமெனை நேசித்தாய் ?

எந்த வனாந்தரங்களுக்குள்ளும்
வசப்படாத இயற்கையை,
எந்தப் பனிமலையும்
தந்திடாத குளிர்மையை,
எந்தச் சோலைகளும்
கண்டிராத எழிற்பொலிவை,
எந்தப் பட்சிகளும்
இசைத்திடாத இனிய கீதமதை
உன்னில் கொண்டிருந்த நீ
எந்த மேகத்தின்
துளிகளுக்குள்ளூடுருவி
மழையாய்ப் பொழியக்காத்திருக்கிறாய் ?

கருவிழியிரண்டையும் - ஒளியற்ற
இருவர் வதனங்களில்
விதைத்துச்சென்றாய் ;
அவர்கள் வெளிச்சம் பார்த்துத்
திளைக்கும் கணந்தோறும்
அப்பூஞ்சிரிப்பில் நீயிருப்பாய் - என்
நிரந்தரப் பிரார்த்தனைகளிலும்
நீ வந்து தங்கிவிட்டாய் !

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

6 comments:

துளசி கோபால் said...

(-:

Osai Chella said...

kankalin muulam uyirvaazhukiraal ungkal thozhi! kalangaathe nanba!

Unknown said...

இது கவிதை வழியாக அவள் அத்மாவிற்கு செலுத்தும் கண்ணீர் அஞ்சலி தோழரே

M.Rishan Shareef said...

துளசி கோபால்,ஓசை செல்லா,வினிதா...
மயிலிறகாய் வருடிவிடும் அன்பான உங்கள் ஆறுதல் வார்த்தைகளுக்கும்,வருகைக்கும் நன்றிகள் நண்பர்களே...!

MSK / Saravana said...

கண்ணீர் அஞ்சலி..

M.Rishan Shareef said...

அன்பின் சரவணகுமார்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)