Thursday, November 1, 2007
எனது துயரங்களை எழுதவிடு...!
பொன்மஞ்சளின் தீற்றலோடு
இளஞ்சிவப்பு மலருரசிச்செல்லும்
மெல்லிய வாடை சுமந்த காற்று
உன் தேநீர்க்கோப்பையின்
ஆவிகலைத்துச் செல்லும்
இக்கணப்பொழுதில்
எனது கவிதைகளில்
சோகம் அழித்து,
காதலையும்,கனவுகளையும்
அழகாய்ப் பதித்திட
அன்பாய்க் கட்டளையிடுகின்றாய் !
ஐரோப்பாவின் குளிர்ந்த தெருக்களில்
உலாவி நடக்கவும்,
சோம்பிப்போய்ப் படுக்கையில்
குலாவிக்கிடக்கவும்,
தேவதைகளின் தாலாட்டில்
உலகம் மறக்கவும்
உனக்கு வாய்த்திருக்கிறது !
நாளைக்கே
நானும் கொல்லப்படலாம் ;
சோகம் தவித்துக்கனக்குமெனது
மெல்லிய மேனியில்
மரணம் தன் குரூரத்தை - மிக
ஆழமாக வரையவும் கூடுமான
அக்கணத்திலும்...
உனது கோப்பைகளில் திரவங்கள்
ஊற்றி வழிந்திட,
தேவதைகள் இதழ்ரேகை
தீர்க்கமாய்ப் பதிந்திட,
மாலை வேளைகளுனக்குச்
சொர்க்கத்தை நினைவுறுத்தும் !
வாழ்க்கை
வளர்ப்பு நாய்க்குட்டி போல்
வசப்பட்டிருக்கிறதுனக்கு !
உலகச்சோகங்களனைத்தும்
கரைத்தூற்றப்பட்டு
நான் மட்டும் வளர்ந்தேனோ...?
ஒரு கோடித்துயரங்கள்
தீப்பாறைக் குழம்புகளாயென்
உள்ளே கிடக்கையில்
எனது விரல்களிலிருந்து மட்டுமென்ன
செந்தேனா வடியும் ?
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
//மெல்லிய வாடை சுமந்த காற்று
உன் தேநீர்க்கோப்பையின்
ஆவிகலைத்துச் செல்லும்
இக்கணப்பொழுதில்//
வித்தியாசமான கற்பனை ரிஷான்.இன்னும் எழுதுங்க...
அன்பின் நிர்ஷன்,
உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்
என் மகிழ்ச்சி கலந்த நன்றிகள் நண்பரே...!
அன்பு ரிஷான்,
//உலகச்சோகங்களனைத்தும்
கரைத்தூற்றப்பட்டு
நான் மட்டும் வளர்ந்தேனோ...?
ஒரு கோடித்துயரங்கள்
தீப்பாறைக் குழம்புகளாயென்
உள்ளே கிடக்கையில்
எனது விரல்களிலிருந்து மட்டுமென்ன
செந்தேனா வடியும் ?//
படிக்கையிலேயே கண்களில் ரத்தம் வடிகிறது, தம்பி. அப்படியெனில் அனுபவிக்கும் உங்களுக்கு கேட்கவே வேண்டாம். தீப்பாறைக் குழம்புகள் விரைவில் குளிர்ந்து பூப்பந்தல்களாக வேண்டும் என்பதே என்னுடைய மனம் கனிந்த வேண்டுதல்.
அன்புடன்,
கவிநயா.
"எனது துயரங்களை எழுதவிடு"
தலைப்பே படிக்க தூண்டுது ரிஷான்...:)
///எனது கவிதைகளில்
சோகம் அழித்து,
காதலையும்,கனவுகளையும்
அழகாய்ப் பதித்திட
அன்பாய்க் கட்டளையிடுகின்றாய் ! ///
அன்புக் கட்டளைன்னா ஒழுங்கா கேக்க வேண்டியதுதானே?...;)
///வாழ்க்கை
வளர்ப்பு நாய்க்குட்டி போல்
வசப்பட்டிருக்கிறதுனக்கு ! ///
அழகிய உவமை...
///உலகச்சோகங்களனைத்தும்
கரைத்தூற்றப்பட்டு
நான் மட்டும் வளர்ந்தேனோ...?///
இது ரொம்ம்ம்ம்ப சோகமா இருக்கு...:(((
///ஒரு கோடித்துயரங்கள்
தீப்பாறைக் குழம்புகளாயென்
உள்ளே கிடக்கையில்
எனது விரல்களிலிருந்து மட்டுமென்ன
செந்தேனா வடியும் ? ///
உள்ளே இருக்கும் எல்லா தீப்பாறைக் குழம்புகளையும் கவிதையா
கொட்டிடுங்க ரிஷான்...அது உதவலாம்...
அன்புடன்...
வாணி
அன்பு நண்பா, நல்ல கவிதை.. வலியை சொல்லும் கவிதை.. வாழ்த்துக்கள்..
அனைத்து வரிகளையும் ரசித்தேன்..
உன் விரல்களில் பூக்கள் மட்டுமே பூப்பதாயும், பட்டாம்பூச்சிகள் மொய்ப்பதாயும் ஒரு காலம் விரைவில் வரும் :))
இளஞ்சிவப்பு மலருரசிச்செல்லும்
மெல்லிய வாடை சுமந்த காற்று
உன் தேநீர்க்கோப்பையின்
ஆவிகலைத்துச் செல்லும்
இந்த வர்ணனை அழகாக இருக்கிறது பின் தொடரும் வார்த்தைகளின் வலி அறியாமல்.
வாழ்க்கை
வளர்ப்பு நாய்க்குட்டி போல்
வசப்பட்டிருக்கிறதுனக்கு !
இந்த உவமையும் அழகு தான் .
ரிஷான்....
உன் விரல்களில் பூக்கள் மட்டுமே பூப்பதாயும், பட்டாம்பூச்சிகள்
மொய்ப்பதாயும்
ஒரு காலம் விரைவில் வரும் :))
இதுவே எனது பிரார்த்தனையும்....
சோகங்களையே இவ்வளவு உணர்வோட சொல்லுற நீ
சந்தோஷங்களை உட்கார்நத இடத்தில் இருந்து அள்ளி தருவாயே....
உன்னோட வலியும் வேதனையும் எனக்குள்ளே...
உனது கவிதையை படித்து உணர்ந்ததும்..
அன்புடனும், பிரார்த்தனைகளுடனும்
நட்சத்திரா....
அன்பின் கவிநயா,
போர்ச்சூழல் தான் துயரங்களைப் போர்த்தி வந்தது.
உங்கள் வேண்டுதல்கள் பலிக்கவேண்டும் சகோதரி.
கருத்துக்கு நன்றி :)
//உள்ளே இருக்கும் எல்லா தீப்பாறைக் குழம்புகளையும் கவிதையா
கொட்டிடுங்க ரிஷான்...அது உதவலாம்...//
கொட்டலாம் வாணி...ஆனா நம்ம நண்பர்களை அவ்வளவு கவலைப்பட வைக்க எண்ணமில்லை.எல்லோரும் எப்பொழுதும் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கணும். :)
அன்பின் கோகுலன்,
உங்கள் எதிர்பார்ப்புக்கள் கண்டிப்பாக ஒரு நாள் நிறைவேறும்.
அந்த நம்பிக்கையொன்றே உயிர்வாழ உத்வேகமளிக்கிறது.. :)
நன்றி கண்ணா..
நன்றி பூங்குழலி :)
அன்பு ரிஷான் புலம்பெயர்ந்து ஐரோப்பிய நகரங்களில் வாழும் தமிழீழ மக்களைப்பற்றிய கவிதையா இது?
அன்பின் நட்சத்திரா,
உங்கள் அன்பும்,பிரார்த்தனைகளும் கூடவே வந்து என்னை மகிழ்விக்கின்றது.
நன்றி சகோதரி :)
உங்கள்
வலிகளை
கவிதையாக்கி
பகிர்ந்து
கொண்டீர்...
பகிர பகிர
வலிகள்
பாதியாகுமாம்..
இன்பங்கள்
இரட்டையாகுமாம்!..
வலிகள்
குறையட்டும்
அன்பு ரிஷான்...
//ஒரு கோடித்துயரங்கள்
தீப்பாறைக் குழம்புகளாயென்
உள்ளே கிடக்கையில்
எனது விரல்களிலிருந்து மட்டுமென்ன
செந்தேனா வடியும் ? //
கவிதையின் உள்ளடக்கம் அத்தனையும் இந்த வரிகளுக்குள்ளே அடங்கிவிட்டதே!!
நன்று அண்ணா.
இல்லை நண்பர் மஞ்சூர் ராசா :)
பொதுவாகவே இலங்கையிலிருந்து,ஈழத்தில் பிறந்தவர்கள் எழுதும் கவிதைகள் யுத்தம் சார்ந்ததாகவும்,அதன் துயரங்களை எடுத்துரைப்பதாகவே இருக்கும்.நேரில் நிறைய அகோரங்களையும்,அநீதிகளையும் பார்த்தும் கேட்டும் வளர்ந்தவர்களுக்கு இவ்வாறான எழுத்துக்களே வடிகால்.
ஐரோப்பிய நண்பரொருவர் ஈழத்துக் கவிஞர்கள் பற்றியும்,அவர்களது கவிதைகள் பற்றியும் காரசாரமாக வாதாடினார் ஒரு முறை...
காதலைப் பாடத்தான் நிறையக் கவிஞர்கள் இருக்கிறார்களே.
அதனால்தான் எங்கள் துயரை இப்படி வெளிப்படுத்துகிறோம்.
நண்பரே,
http://thesamnet.co.uk/?p=1216
இது இந்த மாதம் நடந்தது.
நீங்கள் ஒருமுறை படித்துப்பாருங்கள்.
அன்புத் தம்பி,
அழகிய வார்த்தைகள். ஆனால் கருத்துக்களில் கவலைகள் மட்டும்.
தம்பியின் இந்த உணர்வை பாராட்டுகிறேன்.
"இருப்பினும் மகிழ்வேன்'" - என்ற தலைப்பில் இந்த கவிதையின் அடுத்த பாகத்தை
வாசிக்க ஆர்வமுடன் காத்திருக்கும்
உன் அண்ணன்
என் சுரேஷ்
அன்பின் சுரேஷ் அண்ணா,
உங்கள் வார்த்தைகள் அத்தலைப்பில் எழுதத் தூண்டுகிறது.
முயற்சிக்கிறேன்.
நன்றி அண்ணா..
//நாளைக்கே
நானும் கொல்லப்படலாம் ;
சோகம் தவித்துக்கனக்குமெனது
மெல்லிய மேனியில்
மரணம் தன் குரூரத்தை - மிக
ஆழமாக வரையவும் கூடுமான
அக்கணத்திலும்...//
வலி மிக்க வரிகள்
அன்பின் சரவணகுமார்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அழகான கவிதை. மேலும், தங்களை கேட்காமல் இந்த பதிவின் அழகான படத்தை கீழே உள்ள உள்ள எனது சுட்டியில் தொடர்பு கொடுத்துள்ளேன் உங்கள் கவிதை பதிவையும் சேர்த்து கொடுத்துள்ளேன். நேரம் கிடைக்கும் போது வருகை தந்து எங்களை போன்ற ஆசிர்வதியுங்கள் அன்பரே. மீண்டும் நன்றி. http://paasaparavaikal.blogspot.com/2010/07/blog-post.html
கோவை ரவி
Post a Comment