Monday, November 12, 2007
கண்ணாடியின் வேர்கள் !
வானத்தினழகும் ,
வசந்தகால
வனாந்தரங்களின்
பசுமையும்,
வானவில் வர்ணங்களும்,
வண்ணத்துப் பூச்சிச்
செட்டையின்
மென்மையும் ;
இந்தக் கண்ணாடி விம்பத்திடம்
தோற்றுத்தான் போகுமென
சொல்லிக் கொண்டிருந்தேன் !
எங்கிருந்து வந்தாய்...?
என் கனவுகளில்
தீப்பிடிக்கச் செய்தாய் ;
எனது பாடல்களை
ஒப்பாரியாக்கி,
எனது தேடல்களை
விழிநீரில் கரைத்து
வழியனுப்பச் செய்யுமுன்
சந்தர்ப்பவாதத்தை
எந்தக் கரங்களில்
ஏந்தி வந்தாய்...?
என் தோழனா நீ...?
நட்பென்ற கண்ணாடியை
உடைத்துப் பார்த்ததன்
வேரைத் தேடினாய் ; - இன்று
கீறல்களையொட்டி
புதுமெருகு
பூசமுடியாதென்பதை
புரிந்துகொண்டாயா...?
என் எதிரியா நீ...?
எங்கிருந்து வந்தாய்...?
என் தலை கோதிக் கோதி
ஓங்கிக் குட்டுமுன்
சூட்சுமக் கரங்களோடு
எங்கிருந்து வந்தாய் நீ...?
போதுமுன் சுயநலத்தை
இத்தோடு
நிறுத்திக்கொள் ;
தலைகோதுமுன்
துரோகத்தை
கொத்தோடு
தூக்கியெறி !
ஓர்
அந்தகாரக் காரிருளில்
என் நிழல்தேடி
நான் சோர்ந்த வேளை,
உன் விரல் தீண்டித்
திரை அகன்று,
புதுவெளிச்சம்
பாய்ந்தென்
பூஞ்சோலை
பூத்ததென்பேனோ
இனிமேலும்...?
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
கண்ணாடி வேர்கள்-- வித்தியாசமாய்
துரோகம்.. இவ்வுலகில் அழிக்கப்பட வேண்டிய ஒன்று..
அன்பின் சரவணகுமார்,
நிச்சயமாக நண்பரே. துரோகங்கள் அழிக்கப்படவே வேண்டும் :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
துரோகம்.. சபிக்கப்பட வேண்டிய ஒன்றுதான்..
இருந்தும் இருதரப்பு நியாயங்கள் கவனிக்கப்படவும் வேண்டும்..
நல்ல கவிதை.. கோபம் அத்தனையும் கவிதையாக வந்து விழுந்துள்ளாது.....
அன்பின் கோகுலன்,
//நல்ல கவிதை.. கோபம் அத்தனையும் கவிதையாக வந்து விழுந்துள்ளது.....//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
Post a Comment