Saturday, December 22, 2007

எனதூருக்கு வருவாயா...?


அன்புடன் சினேகிதனுக்கு ...,
பனை மரங்களையும்
பவளப் பாறைகளையும்
பார்த்திடும் ஆவலில் நீ
எனதூர் வரப்போவதாக
மூன்று வாரங்களுக்கு
முன் அனுப்பிய
அஞ்சலட்டை
இன்றென் கரம் சேர்ந்தது !

என்ன செய்ய ?
உள்நாடு தானெனினும் - அதுவும்
பல சாவடிகளில் தரித்தே
வரவேண்டியிருக்கிறது !

யுத்தம் தின்று துப்பி
எச்சிலான எனதூரில்,
சமுத்திரம் உறிஞ்சிக் குடித்து,
வாந்தியெடுத்துயிர் பிழைத்த
மக்களுடன் முகாமினில்
எனது இருப்பு !

நண்பா ,
பனை மரங்களை விட
மீஸான் கட்டைகளே
தற்போது '
எனதூரெங்கும் நடப்பட்டுள்ளன.

ஆழிப்பேரலை
தாண்டவமாடிப் போன
பவளப் பாறைகளினிடையில்
மனித எலும்புகளே -
மக்கிப் போய்க் கொண்டிருக்கின்றன !

எனதூரைத் தாண்டிச் செல்லும்
நிலவும்
தவித்து அழும்;
நட்சத்திரங்களும் நடுநடுங்கித்
திசைமாறித் துடிக்கும் !


நடுநிசி இருளில்
வெடியோசைகளோடு
அப்பாவி ஆன்மாக்களின்
அலறல் கேட்டு
ஒரு பொழுதேனும் -இதயம்
அதிர்ந்த அனுபவம்
உண்டா உன்னிடத்தில் ...?

பௌர்ணமி நிலவெரிந்து ,
உறக்கம் தொலைத்த
கறுப்பு இரவுகளில் ,
தொலைதூர சப்பாத்துக்
காலடிச் சத்தங்கள்
நெஞ்சினில் மிதித்துப் போகும்
வலியை என்றேனும்
உணர்ந்ததுண்டா நீ?


நீ பாதம் பதிக்குமிடமெல்லாம்
கண்ணிவெடி புதைக்கப்பட்டிருக்கும் ;
கவனமாக வா !
உன் மூச்சுக் காற்றோடு
விஷவாயு சங்கமிக்கும் ;
சுவாசிக்க முன் யோசி !

நீ வந்து சேர வசதியாக
எனதூரின் அடையாளம்
கேட்டிருந்தாய் ;
துப்பாக்கி சல்லடையாக்கிய
சுவர்களுடையதும் ,
நிலையுடன் சேர்த்து
கதவுகளும் , யன்னல்களும்
களவாடப்பட்டதுமான
பாழடைந்த வீடுகள் ,
இரத்தக் கறை படிந்து
கறுத்துப் போன வேலிகள்
பாதையோரத்திலிருந்து
மயானத்தை ஞாபகப்படுத்துமெனில்,
அது எனதூர் !

இன்னும் ஒரு புராதனகால
இரும்புத் தகடு
" இந்த அழகிய கிராமம்
இனிதே உங்களை வரவேற்கிறது !"
என்ற வாசகங்களுடன்
எஞ்சியிருக்கும்
ஒன்றை ஆணியில் சரிந்து தொங்கும் !


- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

9 comments:

Anonymous said...

you may need thamizmaNam pathivu toolbar to be embedded to get your comments updated in thamizmaNam.

Nowadays thamizmaNam does not expect to moderate the comments. Hence it won't be an issue

Mahalingam Nireshkumar said...

ரிஸான்....
நிஜங்கள் சுடுமென நான் அறிவேன்.அதை இவ்வளவு தூரம் சுட்டெரிக்கும் விதத்தில் சொல்வது உங்கள் திறன்.....

"பனை மரங்களை விட
மீஸான் கட்டைகளே
தற்போது '
எனதூரெங்கும் நடப்பட்டுள்ளன."

அனுபவத்தில் நான் உணர்ந்த உண்மை இது.... நீண்ட காலம் கழித்து 2002 ல் யாழ்ப்பாணம் சென்றபோது என்னை கலக்கியது சூழல்.ஆனாலும் இன்றும் நான் அங்கு செல்ல துடிக்கிறேன்..

வாழ்த்துக்கள்

M.Rishan Shareef said...

அன்பின் சுரேஷ்,
நாம் எந்த நாடு சென்றாலும் நம் பாதங்கள் பதிந்து வேர்விடத் தொடங்கிய தாய் மண்ணை மறக்கமுடியாது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

Anonymous said...

rishan, vali adhikam. kalam marum.

M.Rishan Shareef said...

// Anonymous said...
rishan, vali adhikam. kalam marum.//

நிச்சயமாக அனானி நண்பரே.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)

MSK / Saravana said...

நண்பரே..
இக்கவிதை..
தொண்டைகுழியில் பாரங்கல் இறக்கியது போல்..
தாளாமுடியாமல்..

M.Rishan Shareef said...

அன்பின் சரவணகுமார்,

//நண்பரே..
இக்கவிதை..
தொண்டைகுழியில் பாரங்கல் இறக்கியது போல்..
தாளாமுடியாமல்..//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

கோகுலன் said...

//இன்னும் ஒரு புராதனகால
இரும்புத் தகடு
" இந்த அழகிய கிராமம்
இனிதே உங்களை வரவேற்கிறது !"
என்ற வாசகங்களுடன்
எஞ்சியிருக்கும்
ஒன்றை ஆணியில் சரிந்து தொங்கும் !//

வழமையாக வலிகள் நிறைந்த கவிதை..

கவிதையின் நடை அழகு!

M.Rishan Shareef said...

அன்பின் கோகுலன்,

//வழமையாக வலிகள் நிறைந்த கவிதை..

கவிதையின் நடை அழகு!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)