Wednesday, December 26, 2007

சுனாமியழித்த சினேகிதனுக்கு...!


எங்கிருக்கிறாய்
எனதினிய நண்ப?

கறுப்பு,வெள்ளை ஓவியங்களாய்க்
காட்சிகள் மறைய
நிலவின் சாட்சியாக
நீ வாழ்ந்த ஊருக்கு
நிவாரணப் பொருட்களோடு
நாமனைவரும்
நள்ளிரவில் வந்தடைந்தோம் !

உனது சுவடு பதித்த
கடற்கரை,
உனது சுவடு அழித்த
கடல்
அனைத்தையும் பார்த்து
விக்கித்து நின்றோம் !

என்றாவதொருநாளில்
என்னையும் - உனதூருக்கு
அழைத்துச் சென்று,
கடல் அழகு காட்டி,
நடுநிசியில் - சுடச்சுட
மீன் வறுத்த
நிலாச்சோறுண்ணும் ஆசையை
இறுதியாக என்னிடம்
சொல்லிச் சென்றிருந்தாய் !

புன்னகை தவறிய முகங்களையும்,
விரக்தி தேங்கிய கண்களையும்
பார்க்க நேரிட்டபோதெல்லாம்
உன்னையும் உயிருடன்
சந்திக்க வேண்டுமென
இதயம் - ஏங்கித் தவித்திற்று !

உனது இறுதி மூச்சை
ஏந்திய காற்று,
உனது சுவாசப்பைகளை
நிரப்பிய சமுத்திரம்,
உனது தேகத்தை
விழுங்கியிருக்கும் பூமி
அனைத்தும்,
உனது ஞாபகங்களைத் திரட்டி
என்னிடம் தந்தன !

கொடிய கனவொன்றினால்
திடுக்கிட்டெழுதல் போல
கொடியில் உலரும்
உனதாடைகளைக் காண
நேரிடும் கணங்களிலெல்லாம்
நெஞ்சு நடுங்கி,
விம்மித் தடுமாறுகின்றேன்
உனது வெறுமையுணர்ந்து
திகைத்து நிற்கின்றேன் !

உனது தொழுகைகளும்,
நோற்ற நோன்புகளும்,
வாய்மொழிந்த திக்ருகளும்
ஓதிய ஒவ்வொரு ஆயத்களும்
நீ பற்றிக்கொள்ள
பெரும் தூணாக அமைந்திருக்குமென
உறுதியாக நம்புகிறேன் !

எனது அறையில்
என்னுடன் வசித்த
என்னினிய நண்பனே;
மஹ்ஷரில்
மறுபடியும் கரம் கோர்ப்போம்,
நீண்ட நடை பயில்வோம் - அங்கே
சுனாமி வராது !

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

7 comments:

LakshmanaRaja said...

மிக வலி மிகுந்த கவிதை நண்பா. உணர்கிறேன்.

M.Rishan Shareef said...

வருகைக்கும் பதிவுக்கும் நன்றிகள் நண்பர் இலக்குமண ராசா.

MSK / Saravana said...

வலி மிகுந்த கவிதை..

M.Rishan Shareef said...

அன்பின் சரவணகுமார்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

கோகுலன் said...

வலி மிகுந்ததொரு கவிதை..

//உனது இறுதி மூச்சை
ஏந்திய காற்று,
உனது சுவாசப்பைகளை
நிரப்பிய சமுத்திரம்,
உனது தேகத்தை
விழுங்கியிருக்கும் பூமி
அனைத்தும்,
உனது ஞாபகங்களைத் திரட்டி
என்னிடம் தந்தன !//

மிக ரசித்தேன் வரிகளை.. வலிகளுடனே..

கோகுலன் said...

மஹ்ஷரில் ன்னா?

M.Rishan Shareef said...

அன்பின் கோகுலன்,

//மஹ்ஷரில் ன்னா?//

இறப்புக்குப் பின்னரான வாழ்க்கையில் மனிதர்கள் அனைவரும் கூடுமிடத்தை அறபிமொழியில் மஹ்ஷர் என்போம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)