Monday, January 21, 2008

விதிக்கப்பட்ட மரணம் !


அது நீலமோ,சாம்பலோ
தெரியவில்லை
இரண்டும் கலந்தவோர்
அடர்நிறம் போர்த்திய அதிகாலை !

ஒரு பொழுதின் ஏக்கமும் ,
ஒரு பொழுதின் வசந்தங்களும்
பனியில் குழைக்கப்பட்டு
அந்நிறம் உருவாகியிருக்கக்கூடும் !

அடர்ந்த வனாந்தரத்துள்
மெல்லிய துயரத்தோடு
தனித்தாடும் ஆண்மயிலின்
இறகுகளின் முனையில்
அந்நிறத்தைக் காணலாம் !

அன்றியும் ,
மாலைவெயிலை
எதிர்கொண்டு நடக்கையில்
சட்டெனத் திரும்பிப்பார்ப்பீர்களாயின்
நிழலில் ஒரு கணம் - அந்
நிறம் தோன்றக்கூடும் !

வனம் கலைத்துச் செல்லும் பறவை
வான்வெளியில்
சிறகுதிர்த்துச் செல்வது போல
உங்கள் மனப்பரப்பில்
அந்நிறம் இப்பொழுது
கிளைபரப்பத் தொடங்கியிருக்கும் !

தொலைதூரப் பெருங்கடல்
தொடுவானுடன் சங்கமிக்கும்
புள்ளியொன்றில் தோன்றுமே...
அதே நிறம்தான் !

விடுங்கள் - உங்களுக்கு
ஆயிரம் வேலைகளிருக்கும் !
அன்றைய விடிகாலையில்
அவன் இறுதிமூச்சு விட்ட காற்றோடு
ஆயுதங்களால் விதிக்கப்பட்ட
அநீதியைப்பார்த்த சாட்சியாய்
அந்நிறம் மட்டுமேயிருந்தது !

- எம்.ரிஷான் ஷெரீப் ,
மாவனல்லை,
இலங்கை.

49 comments:

அசரீரி (Fatheek) said...

//ஒரு பொழுதின் ஏக்கமும் ,
ஒரு பொழுதின் வசந்தங்களும்
பனியில் குழைக்கப்பட்டு
அந்நிறம் உருவாகியிருக்கக்கூடும் !//

இவ்வரிகளை வாசிக்கும் போது..

"நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும் நேர்ப்பட வைத்தங்கே
குலாவும் அமுதக் குழம்பினைக் குடித்தொரு கோல வெறி படைத்தோம்"
என்ற பாரதியின் வரிகள்தான் ஞாபகம் வருகிறது.

வாழ்த்துக்கள் ரிஷான்

M.Rishan Shareef said...

ஒரு பெருங்கவிஞரின் வரிகளை நினைவூட்டுகின்றன எனது வரிகளெனப் பாராட்டியதில் மகிழ்கிறேன் அசரீரி.

வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் நன்றிகள் நண்பா.

முனைவர்.Dr.ஷங்கரநாராயணன் கவிதைகள். said...

நன்றாக இருக்கிறது.. :)

M.Rishan Shareef said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் நண்பர் ஷங்கரநாராயணன்.

Anonymous said...

ரிஷான்
இந்தக் கவிதையைப் படித்துக் கொண்டு அழகான காட்சிகளை மனச்சுவரில் எழுப்பியவாறு செல்லும் போது இறுதிவரிகளில் அதிர்ச்சி காத்திருக்கிறது.மீண்டும் முதலில் இருந்து படிக்க வைக்கிறது.

மொழியை அழகாகக் கையாள்கிறீர்கள்

-பஹீமாஜஹான்

M.Rishan Shareef said...

//இந்தக் கவிதையைப் படித்துக் கொண்டு அழகான காட்சிகளை மனச்சுவரில் எழுப்பியவாறு செல்லும் போது இறுதிவரிகளில் அதிர்ச்சி காத்திருக்கிறது.மீண்டும் முதலில் இருந்து படிக்க வைக்கிறது.

மொழியை அழகாகக் கையாள்கிறீர்கள்//

இன்னும் எனக்குரிய மொழியை என்னால் எழுதமுடியவில்லை.. :)
என் ஆதர்ஸக் கவிஞரிடமிருந்து பாராட்டு. மிக நன்றிகள் சகோதரி.

nazeeha manzoor said...

hey.....
ur poems wr so nice....
i realy lik it...
accdntly 2dy i found ur artcl it rely aftd me...
w@ a nic words ....!!
its esly undrstbl...
i wishng u 2 caryon ur wrtng...
bye......

M.Rishan Shareef said...

Dear Sister Nazeeha Manzoor,

Thanks a lot for the visit & comment :)

MSK / Saravana said...

//இந்தக் கவிதையைப் படித்துக் கொண்டு அழகான காட்சிகளை மனச்சுவரில் எழுப்பியவாறு செல்லும் போது இறுதிவரிகளில் அதிர்ச்சி காத்திருக்கிறது.மீண்டும் முதலில் இருந்து படிக்க வைக்கிறது.//

REPEATEEEEE..

M.Rishan Shareef said...

அன்பின் சரவணகுமார்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

Anonymous said...

ஒரு பொழுதின் ஏக்கமும் ,
ஒரு பொழுதின் வசந்தங்களும்
பனியில் குழைக்கப்பட்டு
அந்நிறம் உருவாகியிருக்கக்கூடும் !>>>>


நல்ல வர்ணனை



அடர்ந்த வனாந்தரத்துள்
மெல்லிய துயரத்தோடு
தனித்தாடும் ஆண்மயிலின்
இறகுகளின் முனையில்
அந்நிறத்தைக் காணலாம் !>>>>

நிறம் சேதி சொல்கிறது.



அன்றியும் ,
மாலைவெயிலை
எதிர்கொண்டு நடக்கையில்
சட்டெனத் திரும்பிப்பார்ப்பீர்களாயின்
நிழலில் ஒரு கணம் - அந்
நிறம் தோன்றக்கூடும் !>>>>

மெலிதானக்கருமை?



வனம் கலைத்துச் செல்லும் பறவை
வான்வெளியில்
சிறகுதிர்த்துச் செல்வது போல
உங்கள் மனப்பரப்பில்
அந்நிறம் இப்பொழுது
கிளைபரப்பத் தொடங்கியிருக்கும் !>>>>

மனப்பரப்பில் பறவையின் ்சிறகே ்தூரிகையாகி
துயரச்சித்திரம் தீட்டுகிறது



தொலைதூரப் பெருங்கடல்
தொடுவானுடன் சங்கமிக்கும்
புள்ளியொன்றில் தோன்றுமே...
அதே நிறம்தான் !>>>


புரிகிறது



விடுங்கள் - உங்களுக்கு
ஆயிரம் வேலைகளிருக்கும் !>>>

இருப்பினும் வலிகளை உணர்வோம்


அன்றைய விடிகாலையில்
அவன் இறுதிமூச்சு விட்ட காற்றோடு
ஆயுதங்களால் விதிக்கப்பட்ட
அநீதியைப்பார்த்த சாட்சியாய்
அந்நிறம் மட்டுமேயிருந்தது !>>>>


உள்ளுக்குள் சிவப்பு வண்ணமாய் மாறிய நிறம் அது....

வழக்கம்போல பலசெய்திகளைச்சொல்லும் கவிதை!
கவிதையைப்பாராட்டநினைக்கும்போது
எங்கும் பசுமை நிலவ மனம் வேண்டிக்
கொள்கிறது.

Anonymous said...

ரிஷான்,

கவிதைகளில் மறைந்திருக்கும் மெல்லிய துயரம் மனதை என்னவோ செய்கிறது..
வர்ணங்களின் வர்ணனைகளில் விளையாடும் வார்த்தைகள் மெல்லிய சோகத்தை மட்டும் எடுத்தாள்வது கொஞ்சம் வருத்தத்தை தருகிறது.

அன்புடன்,
சுபைர்

Anonymous said...

Very nice kavithai.. Rishan...!

Nirangalukkul
ithanai
niram
olinthirukkumendru
enakku..
Inruthan
Therinthathu....!

Vazthukkal...
Rtn.VBM
Charter President
Rc of Tup TM Poondi

Anonymous said...

அருமையான கவிதை

Anonymous said...

அநீதியைப்பார்த்த சாட்சியாய்
அந்நிறம் மட்டுமேயிருந்தது !

ரிஷான் ...
என்னவென்று சொல்வதென்று தெரியவில்லை ..
அழகான காட்சிகளை கண்முன் நிறுத்தி ...வர்ணங்களை குழைத்துவிட்டு
அதை சாட்சியாய் வரித்து விட்டீர்கள் ....

Anonymous said...

சாட்சியங்கள் பேசினால் நலம்தான்.

Anonymous said...

அன்பின் ரிஷான்,

அற்புதமான கவிதை

>> ஒரு பொழுதின் ஏக்கமும் ,
ஒரு பொழுதின் வசந்தங்களும்
பனியில் குழைக்கப்பட்டு
அந்நிறம் உருவாகியிருக்கக்கூடும் ! >>

நெஞ்சத்தில் பதிந்து விட்ட வரிகள்

பாராட்டுகள்

அன்புடன்
சக்தி

Anonymous said...

அதிகாலை நேரம்...
அநீதியான மரணம்...
அதுவும் ஆயுதத்தால்...
கேள்வி கேட்க ஆளில்லை...
உணர்வுகளின் பிரதிநிதியான நிறமே சாட்சி...

கவிதையைப் படித்தபிறகு நினைவை ஆக்கிரமித்திருப்பது காட்சி மட்டுமே.

Anonymous said...

நல்ல கவிதை அன்பின் ரிஷான் நண்பரே ....
வாழ்த்துக்களுடன்

அன்புடன்
விஷ்ணு ..

Anonymous said...

நண்பா, நீ ஒரு நிகழ்வைக் கவிதையாக்கும் முறை வித்தியாசமாய் இருக்கிறது.. மிக அழகாக இருக்கிறது.. வாசிப்பவரின் சுவாரஸ்யம் தூண்டும் முறை நன்கு அறிந்திருக்கிறாய்.. வாழ்த்துக்கள்!!

கவிதை நன்று..

Anonymous said...

அன்பு ரிஷான் வண்ணங்களில் தோய்த்து வரைந்த கவிதை
முதலில் மகிழ்ச்சியைத் தந்து பின் மனத்தைக் கனக்க வைத்தது
அன்புடன் விசாலம்

Anonymous said...

வர்ணனைகள் அழகா இருக்கே படிக்க படிக்க என்று நினைப்பதற்குள்

விடுங்கள் - உங்களுக்கு
ஆயிரம் வேலைகளிருக்கும் !
அன்றைய விடிகாலையில்
அவன் இறுதிமூச்சு விட்ட காற்றோடு
ஆயுதங்களால் விதிக்கப்பட்ட
அநீதியைப்பார்த்த சாட்சியாய்
அந்நிறம் மட்டுமேயிருந்தது !

இப்படி முடித்து விட்டீர்களே? அதானே? உங்கள் கவிதைகள் சோகத்தில் தானே முடியும்? உங்கள் நாட்டவர் மேலுள்ள உங்கள் நேசம் இப்படி எழுத வைக்கிறதல்லவா?

Anonymous said...

மிக அருமை ரிஷான்...

கவிதை முடியும்போது மனசில் நிகழும் துயரப்பிரளயம் அடங்குவதற்கு நிறைய நேரம் எடுத்தது..

தொடருங்கள் இன்னும்

என்றும் வாழ்த்தும்

-ஷிப்லி-

Anonymous said...

மிக‌ நல்ல கவிதை ரிஷான் :)

Anonymous said...

அன்பு ரிஷான்,

கவிதை இதயத்தில் முழுமையாய் நிரம்பிக்கொள்கிறது
நல்ல கவிதை வாசிப்பதால் வரும் நிறைவை அர்ப்பணிக்கிறேன்
அன்புடன் புகாரி

Anonymous said...

அந்த சம்பல் பூத்த வானத்தில்
சிவப்பு பந்தாக சூரியன் வரும் அழகு
காண்பது சுகம்
நல்ல கவிதை ரிஷான்

M.Rishan Shareef said...

அன்பின் ஷைலஜா அக்கா,

//வழக்கம்போல பலசெய்திகளைச்சொல்லும் கவிதை!
கவிதையைப்பாராட்டநினைக்கும்போது
எங்கும் பசுமை நிலவ மனம் வேண்டிக்
கொள்கிறது.//


பிரார்த்தனைகளுடனான அழகிய பாராட்டுக்களுக்கு நன்றி சகோதரி.. :)

M.Rishan Shareef said...

அன்பின் சுபைர்,

//கவிதைகளில் மறைந்திருக்கும் மெல்லிய துயரம் மனதை என்னவோ செய்கிறது..
வர்ணங்களின் வர்ணனைகளில் விளையாடும் வார்த்தைகள் மெல்லிய சோகத்தை மட்டும் எடுத்தாள்வது கொஞ்சம் வருத்தத்தை தருகிறது.//


வாழ்வின் கணங்கள் அத்தனையும் வர்ணங்களாலும் மெல்லிய சோகங்களாலும் தீரா ஏக்கங்களாலும் நிறைந்ததாகவே கொள்கிறேன். அதிலொன்றே இங்கு எழுதப்பட்டிருக்கிறது.
அழகான கருத்துக்கு நன்றி நண்பா :)

M.Rishan Shareef said...

அன்பின் நண்பருக்கு,

2008/11/1 EURO ebfashions.6@gmail.com

Very nice kavithai.. Rishan...!

Nirangalukkul
ithanai
niram
olinthirukkumendru
enakku..
Inruthan
Therinthathu....!

Vazthukkal...
Rtn.VBM
Charter President
Rc of Tup TM Poondi


உங்கள் அன்பான கருத்துக்கள் கண்டு மனம் மகிழ்கிறேன்.
நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் கவிமதி,

//2008/11/1 kavi mathy kavimathy@yahoo.com

அருமையான கவிதை //

-

பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் பூங்குழலி,

//அநீதியைப்பார்த்த சாட்சியாய்

அந்நிறம் மட்டுமேயிருந்தது !

ரிஷான் ...
என்னவென்று சொல்வதென்று தெரியவில்லை ..
அழகான காட்சிகளை கண்முன் நிறுத்தி ...வர்ணங்களை குழைத்துவிட்டு
அதை சாட்சியாய் வரித்து விட்டீர்கள் ....//


ஒருவன் தனித்திருக்கும் போது அவனுக்கிழைக்கப்படும் அநீதிகளைச் சூழலும் அதிலுள்ள வர்ணங்களுமே முழுவதுமாகப் பார்த்திருக்கின்றன..என்ன ஒன்று..அவை என்றுமே மௌன சாட்சி...இது போல..

அன்பான கருத்துக்கு நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் பாஸ்கர்,

//சாட்சியங்கள் பேசினால் நலம்தான்.//

அன்பான கருத்துக்கு நன்றி நண்பா :)

Anonymous said...

வர்ணங்கள் அதிகமாய் இருப்பதுதான் அனைவரும் விரும்பக்கூடியதாய் இருக்கிறதே ரிஷான்.

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் சக்தி சக்திதாசன்,



//நெஞ்சத்தில் பதிந்து விட்ட வரிகள்


பாராட்டுகள்//

அன்பான பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் குருமூர்த்தி ஐயா,

//அதிகாலை நேரம்...

அநீதியான மரணம்...
அதுவும் ஆயுதத்தால்...
கேள்வி கேட்க ஆளில்லை...
உணர்வுகளின் பிரதிநிதியான நிறமே சாட்சி...

கவிதையைப் படித்தபிறகு நினைவை ஆக்கிரமித்திருப்பது காட்சி மட்டுமே.//


சரியாகக் கணித்திருக்கிறீர்கள்.. வாழ்வில் பாதித்த காட்சிகள் தானே எழுத்துக்களில் வார்க்கப்படுகின்றன.

அன்பான கருத்துக்கு நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் குருமூர்த்தி ஐயா,

//அதிகாலை நேரம்...

அநீதியான மரணம்...
அதுவும் ஆயுதத்தால்...
கேள்வி கேட்க ஆளில்லை...
உணர்வுகளின் பிரதிநிதியான நிறமே சாட்சி...

கவிதையைப் படித்தபிறகு நினைவை ஆக்கிரமித்திருப்பது காட்சி மட்டுமே.//


சரியாகக் கணித்திருக்கிறீர்கள்.. வாழ்வில் பாதித்த காட்சிகள் தானே எழுத்துக்களில் வார்க்கப்படுகின்றன.

அன்பான கருத்துக்கு நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் விஷ்ணு,

கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் கோகுலன்,


//நண்பா, நீ ஒரு நிகழ்வைக் கவிதையாக்கும் முறை வித்தியாசமாய் இருக்கிறது.. மிக அழகாக இருக்கிறது.. வாசிப்பவரின் சுவாரஸ்யம் தூண்டும் முறை நன்கு அறிந்திருக்கிறாய்.. வாழ்த்துக்கள்!!



கவிதை நன்று..//


அன்பான கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா :)

M.Rishan Shareef said...

அன்பின் விசாலம் அம்மா,

//அன்பு ரிஷான் வண்ணங்களில் தோய்த்து வரைந்த கவிதை

முதலில் மகிழ்ச்சியைத் தந்து பின் மனத்தைக் கனக்க வைத்தது //


அன்பான கருத்துக்கு நன்றி அம்மா. :)

M.Rishan Shareef said...

அன்பின் காந்தி,

//வர்ணனைகள் அழகா இருக்கே படிக்க படிக்க என்று நினைப்பதற்குள்

விடுங்கள் - உங்களுக்கு
ஆயிரம் வேலைகளிருக்கும் !
அன்றைய விடிகாலையில்
அவன் இறுதிமூச்சு விட்ட காற்றோடு
ஆயுதங்களால் விதிக்கப்பட்ட
அநீதியைப்பார்த்த சாட்சியாய்
அந்நிறம் மட்டுமேயிருந்தது !

இப்படி முடித்து விட்டீர்களே? அதானே? உங்கள் கவிதைகள் சோகத்தில் தானே முடியும்? உங்கள் நாட்டவர் மேலுள்ள உங்கள் நேசம் இப்படி எழுத வைக்கிறதல்லவா? //


ஆமாம்..நிச்சயமாக...
வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் அநீதியிழைக்கப்படும் யுத்த தேசமது. ஒவ்வொருவரும் வாழும் மூச்சுக்கள் ஆயுதங்களால் எண்ணி எண்ணியே கொடுக்கப்படுகின்றன. அச் சோகம்தான் எனது கவிதைகளில் தாக்கும்.
அன்பான கருத்துக்கு நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் ஷிப்லி,

//மிக அருமை ரிஷான்...

கவிதை முடியும்போது மனசில் நிகழும் துயரப்பிரளயம் அடங்குவதற்கு நிறைய நேரம் எடுத்தது..

தொடருங்கள் இன்னும்

என்றும் வாழ்த்தும்

-ஷிப்லி-//


கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா :)

M.Rishan Shareef said...

அன்பின் குட்டி செல்வன்,

//மிக‌ நல்ல கவிதை ரிஷான் :) //

பாராட்டுக்களுக்கு நன்றி நண்பா :)

M.Rishan Shareef said...

அன்பின் புகாரி அண்ணா,

//அன்பு ரிஷான்,

கவிதை இதயத்தில் முழுமையாய் நிரம்பிக்கொள்கிறது
நல்ல கவிதை வாசிப்பதால் வரும் நிறைவை அர்ப்பணிக்கிறேன்
அன்புடன் புகாரி//


அன்பான பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் மதுமிதா,


//அந்த சம்பல் பூத்த வானத்தில்

சிவப்பு பந்தாக சூரியன் வரும் அழகு
காண்பது சுகம்
நல்ல கவிதை ரிஷான்//

அன்பான கருத்துக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

வர்ணங்கள் அதிகமாய் இருப்பதுதான் அனைவரும் விரும்பக்கூடியதாய் இருக்கிறதே ரிஷான்.


நிச்சயமாக சுபைர்.

எல்லா வர்ணங்களும் மகிழ்ச்சியைத் தருமிடத்து இன்னும் நன்றாகவும் எல்லோராலும் விரும்பக் கூடியதாகவும் இருக்குமல்லவா ? :)

Anonymous said...

பிறகு ஏன் வர்ணங்களில் தோய்த்த வரிகளாக மட்டும் உன் கவிதைகள் இருந்துவிடுவதில்லை..??

உன் கவிதையின் வலி என் மனதினை என்னவோ செய்கிறது. அதுதான் கவிதை என்ற போதிலும், வலிகள் மட்டுமே ஏன் பாடுபொருளாய்க் கொள்கிறாய்??
அன்புடன்,
சுபைர்

M.Rishan Shareef said...

அன்பின் சுபைர்,

//பிறகு ஏன் வர்ணங்களில் தோய்த்த வரிகளாக மட்டும் உன் கவிதைகள் இருந்துவிடுவதில்லை..??//

மகிழ்ச்சியின் வர்ணங்களில் தோய்த்த வரிகள் ? :)



//உன் கவிதையின் வலி என் மனதினை என்னவோ செய்கிறது. அதுதான் கவிதை என்ற போதிலும், வலிகள் மட்டுமே ஏன் பாடுபொருளாய்க் கொள்கிறாய்??//


வலிகளை அதிகமாகப் பாடுபொருளாக்கவும் ,பாடுபொருளாகக் கொள்ளவும் காரணம் அது உலகிலுள்ள அனைவராலும் ஒற்றைக் கணத்துக்கேனும் உணரப்படக் கூடியதாய் இருப்பதனால் தான். சிரிக்காதவர் கூட இருக்க முடியும்.மனதின் ஆசையை,தனிமையை, ஏக்கத்தை, துயரத்தை,கண்ணீரை உணராதவர் எவராவது இவ்வுலகில் இருப்பார்களா? அவர்களில் ஒருவராவது எனது எழுத்துக்களை தன் நிலையோடு பொருத்திப் பார்க்கவேண்டும் என்பதற்காக எனது எழுத்துக்கள் சோகம் சுமந்துவருகின்றன நண்பா.
அதற்காக வலிகள் மட்டுமல்ல..நான் சந்தோஷம் பொங்கவும் எழுதுகிறேன்..
அக் காதல் கவிதைகள் கீற்றில் தொடராக வெளிவந்துகொண்டிருக்கின்றன.. :)

தேவகிமைந்தன் said...

மிகவும் நன்றாக இருக்கிறது.

M.Rishan Shareef said...

அன்பின் தேவகிமைந்தன்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)