Monday, February 18, 2008

தடங்களழியும் பொழுதிலுன் நேசம் ...!


வெப்பக்கணப்பொழுதின்
ஆவியேற்றப்பட்ட மேகப்பொதியை
மண்டைக்குள் பிதுக்கியடைத்ததாய்
பேய்க்கனம் கனக்கும்
இருவிழியும் மிகக்கலங்கி
தலைக்குள் வலியெடுக்கும்
மரணத்தின் எல்லையில்
ஆரம்பிக்கும் பாடலெனது !

எந்தப்பொழுதொன்றில்
என் பெயர் சொல்லியழைக்கின்றாய் ?
ஒரு கோடிக்கீற்றுக்களும்
எனக்கு மட்டுமேயான
அந்தகாரத்திலொரு பகுதிக்கேனும்
ஒளியினை வழங்கமுடியாப்பட்சத்தில்
எந்த நம்பிக்கையிலெனை
வழி தொடருகிறாய்...?

ஒப்பாரிக்கவி மட்டுமே பாடும்
ஒரு குயிலின் ராகத்தை
எந்தக்காற்றின் தேசத்திற்குள்
சிறையடைக்கப் பார்க்கின்றாய்?
அல்லது
எந்தக்காலத்தினறைகளுக்குள்
ஒளித்து வைக்கப்போகின்றாய்...?

உலகத்திலெனதிருப்பு
இந்நாள் வரை மட்டும்தானென
முடிவானதன் பிற்பாடுமதனை
மாற்றமுடியுமெனில் மட்டுமிங்குனக்கு
இருதுளிக் கண்ணீர் விடலாம் !

எனினும்,
கரையானாய்க் குடிபுகுந்து
மூளைக்குள் அரித்தெடுக்கும்
வலியுணர்ந்தவன்(ள்) நீயல்ல !


-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

2 comments:

Anonymous said...

ரிஷான்

"கரையானாய்க் குடிபுகுந்து
மூளைக்குள் அரித்தெடுக்கும் வலி"

இந்த வலியை உணர்ந்திருப்போருக்கு இந்தக் கவிதை சொல்லும் துயர் நன்கு விளங்கும்.

"ஒப்பாரிக்கவி மட்டுமே பாடும்
ஒரு குயிலின் ராகத்தை"

உங்கள் தாயகத்தில் குயிலின் பாடல் தான் வசந்தத்தையும் அழைத்து வருகிறது என்பதையும் நினைவு
படுத்தவிரும்புகிறேன்.

M.Rishan Shareef said...

அன்பின் சகோதரி பஹீமா,

//இந்த வலியை உணர்ந்திருப்போருக்கு இந்தக் கவிதை சொல்லும் துயர் நன்கு விளங்கும்.///

எனது வாசகி ஒருவர் சமீபத்தில் மூளைப்புற்று நோயால் இறந்துவிட்டார்.
அந்த வலிகளத்தனையையும் அவர் சொல்வதுண்டு.கேட்பதற்கே கவலையாக இருக்கும்.அந்த அனுபவங்களிலேயே 22 வருடங்கள் வாழ்ந்த அவருக்கு எப்படியிரூந்திருக்கும்?


//உங்கள் தாயகத்தில் குயிலின் பாடல் தான் வசந்தத்தையும் அழைத்து வருகிறது //

எங்கள் தாயகம் இப்பொழுது சாபங்கள் சுமந்தலைகிறது.வருடத்துக்கொருமுறை வசந்தம் வருகையில் மட்டுமே கூவும் குயிலும் வருடம் முழுதும் கேட்கும் யுத்தப் பேரதிர்வுகளைத்தான் கூவுகின்றதோ?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் சகோதரி.. :)