Saturday, March 1, 2008
மரணம் துரத்தும் தேசத்துக்குரியவனாக...!
எந்த தேவதைக்கதைகளும்
தேவையில்லை,
மெல்லிசைகளோ,சுகந்தங்களோ கூட
வேண்டவே வேண்டாம்,
பாவங்கள் சூழ்ந்த
இந்த யுத்தப்பிசாசினை மட்டும்
ஓட ஓட விரட்டி அதன்
ஓசைகளை நிறுத்தித் தாருங்கள் !
என் ஜன்னலில் தெரியும் வானம்
உங்களுடையதைப் போலவே
மேகம் தழுவும் மென் நீலமாயும்,
என் பாதங்கள் பயணிக்கும்
வயல்வெளி,வனாந்தரங்களத்தனையும்
உங்களுடையதைப் போலவே
அடர்பச்சை கலந்ததாயும்,
மழைநீரும்,நதியும்,நீர்வீழ்ச்சி,வாவிகளும்
நிறமற்றதாயும்,
வெயில் வெப்பம் சுமந்தலைவதாயுமே
இருக்கின்றதென்பதை மறுப்பீர்களாயினும்
உங்களைப் போலவே
காற்றைத்தான் நானும்
சுவாசித்துச் சீவிக்கிறேனென்பதை
மட்டுமாவது ஒத்துக்கொள்வீர்களா?
உங்களுக்கேயுரியதாக நீங்கள்
காவியங்களில் சொல்லிக்கொள்ளும்
சூரிய,சந்திர,நட்சத்திரங்கள்
எனக்கும் சில கிரணங்கள் மூலம்
வெளிச்சம் பாய்ச்சுவதோடு,
உங்கள் வியர்வையழிக்குமல்லது
மேனி சிலிர்க்கச் செய்யும் தென்றல்
எனக்காகவும் கொஞ்சம்
வீசத்தான் செய்கிறது !
உங்களுக்கேயுரியதான
இவ்வினிய பொழுதில்
எனதிப் புலம்பல் எதற்கெனில்
பசி,தாகம்,உறக்கமென
உங்களைப் போலவே
அத்தனை உணர்ச்சிகளும்
எனக்கும் வாய்த்திருக்கையில்...
பெரும் அடர்புற்றுப் போல்
என் தேசம் முழுதும்
வியாபித்துச் சூழ்ந்திருக்கும்
இந்த யுத்தப்பிசாசினை
ஓட ஓட விரட்டி அதன்
ஓசைகளை நிறுத்தித் தாருங்கள் !
உங்களைப் போலவே
எனக்கும்
எத்துயர் நிஜங்களோ,
தீய கனவுகளோ அற்றுக் கொஞ்சம்
நிம்மதியாக உறங்க ஆசை !
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
கவிதை நன்றாக இருக்கிறது என்று மட்டும் கூறிவிட்டு போவதில் எனக்கொரு உவப்புமில்லை ஷெரீப்.எனது சொற்கள் உங்கள் கவிதைக்குள் சிக்கிக்கொண்டு தவிக்கிறது...
அன்பின் ரௌத்ரன்:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...!
இது அனைவருக்குமான உலகம் என்பதை அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் ரிஷான். உண்மையில் ரசனை மிக்கதான கவிதை.
வாங்க நிர்ஷன் :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)
ரிஷான்
உங்கள் கவிதையின் கரு ஆழம் மட்டுமல்ல , எம் எல்லோரின் அடிமன ஆசையை கூட அழகாய் பிரதிபலிக்கிறது..
வாழ்த்துக்கள் நண்பரே உங்கள் தமிழுக்கு..
//உங்களைப் போலவே
காற்றைத்தான் நானும்
சுவாசித்துச் சீவிக்கிறேனென்பதை
மட்டுமாவது ஒத்துக்கொள்வீர்களா?
//
மாட்டேன்!
நீ சுவாசிக்கும் காற்றில் எங்களைப் போலக் கார்பன் மட்டுமா?
நெருப்பும் கந்தகமும் அதை விடத் தூக்கலா இருக்குதே! :-(
அந்தப் படம் உங்கள் கவிதை எழுதும் போது இருந்த மனநிலையைக் காட்டுது ரிஷான்!
கனவு மெய்ப்பட வேண்டும்!
கைவசமாவது விரைவினில் வேண்டும்!
அன்பின் கண்ணபிரான் ரவிசங்கர்,
//அந்தப் படம் உங்கள் கவிதை எழுதும் போது இருந்த மனநிலையைக் காட்டுது ரிஷான்!//
இப்போதைய மனநிலையையும் கூட :)
உங்கள் வாக்கு பலிக்க வேண்டும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)
அன்பின் சக்தி,
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)
புரியவில்லை என்ன சொல்வதென்று! எம்மவரின் மனநிலையை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளீர்கள்.
எம் ஒவ்வொருவரதும் கனவு இது...
அர்த்தமற்ற சண்டைகளால் நிறைந்திருக்கும் வலைவாசல்களுக்கு இடையில் எமக்கான ஒரு தளம்...
வாழ்த்துக்கள்
அன்பின் சுரேஷ்,
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)
//உங்களைப் போலவே
எனக்கும்
எத்துயர் நிஜங்களோ,
தீய கனவுகளோ அற்றுக் கொஞ்சம்
நிம்மதியாக உறங்க ஆசை !//
கண்ணீரை வரவழைத்த கவிதை :,-(
அன்பின் கவிநயா,
இதன் வரிகள் அத்தனையும் உண்மை. :(
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சகோதரி :)
//நிம்மதியாக உறங்க ஆசை !//
வாழ்வின் உண்மையான மகிழ்ச்சி நிம்மதியான உறக்கம் மட்டுமே..
அன்பின் சரவணகுமார்,
//வாழ்வின் உண்மையான மகிழ்ச்சி நிம்மதியான உறக்கம் மட்டுமே..//
உண்மைதான்.அதற்காகத்தானே எல்லோரும் பாடுபடுகிறோம். :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
Post a Comment