Tuesday, April 1, 2008

பால்யம் நகரும் பொழுதை மிதி !


ஆலயங்களின் பெரும்பரப்பில்
அமைதி தேடிப் பாதங்கள் பதியும்
நாட்கள் நினைவில் இடற
ஒரு மலை போன்ற வேதனை,
ஒரு வனாந்தரப்பசுமை
அத்தனையும்
ஒருங்கே கொண்ட நெஞ்சுடன்
கனவாய்க் காற்றாய்
வாழ்க்கை தொலைத்தேன் ;
யாதுமாகி நின்ற உன்னையும்தான் !

பால்யத்துப் பள்ளிக்கூடங்களில்
ஒன்றாய்த் திரிந்தோம் ;
கூழாங்கற்கள்,ஓட்டுத் துண்டுகளைக்
கையால்,காலால் விளையாடிச் சோர்ந்துபின்
காட்டு இலைகளையும்,மணலையும்
சிரட்டையில் அள்ளிச் சோறாயெண்ணி உண்டோம் !

என் முழங்கால்ச் சிராய்ப்புக்கு
உன் எச்சில் தடவினாய்,
எவனோ உன் பட்டப்பெயர் சொல்லிக்கூவ
அவன் சட்டை கிழித்துச் சண்டை பிடித்தேன்
காதலில்லை,காமமில்லை
அறுவெறுக்கும் எந்த அசிங்கங்களும்
அதிலிருக்கவில்லை !

புது வயதுகள் பிறக்க,
பால்யம் பாதி கரைய,
வசந்தங்கள் உன் வாழ்வில் வர
நான் தனித்து வரண்டுபோனேன் ;
என் இரகசியச் சினங்களைத்
தூறலாய்ப்பொறுத்து
முக்காட்டுக்குள் நீ புகுந்தாய்,
நான் யாதாகித் திரிகிறேன்...?

நாடுதாண்டிக் கண்டம் தாண்டி,
செவியேற்க யாருமற்ற
பாழ்வீதியொன்றில்- நானின்று
நின்றுகொண்டேயிருக்கிறேன்
என் துயரங்களைப் பாடியபடி;
சாபங்கள் துரத்தித் துரத்தி விழுங்கி
பூமிக்குள் புதையுண்டிருக்குமெனது
பாதங்களை மீளப்பெறும் நாளில்
நாடேகுவேன் !

அன்று
வீதியில் உன் மழலைகள்
செம்மண் தூசு உடல் அப்ப
பால்யத்தில் திளைத்து விளையாடுவதைக்
காண நேரிடலாமெனக்கு..!

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

40 comments:

கவிநயா said...

//ஒரு மலை போன்ற வேதனை,
ஒரு வனாந்தரப்பசுமை
அத்தனையும்
ஒருங்கே கொண்ட நெஞ்சுடன்//

நான் ரசித்த வரிகள்.

//நாடுதாண்டிக் கண்டம் தாண்டி,
செவியேற்க யாருமற்ற
பாழ்வீதியொன்றில்- நானின்று
நின்றுகொண்டேயிருக்கிறேன்
என் துயரங்களைப் பாடியபடி;
சாபங்கள் துரத்தித் துரத்தி விழுங்கி
பூமிக்குள் புதையுண்டிருக்குமெனது
பாதங்களை மீளப்பெறும் நாளில்
நாடேகுவேன் !//

உணர்வுகளை அருமையாக படம் பிடிச்சுக் காட்டியிருக்கீங்க.

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் கவிநயா,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சினேகிதி :)

பஹீமாஜஹான் said...

இத்தகைய அனுபவங்கள் பலருக்கும் இருக்கவே செய்கின்றன.பால்ய வயதுப் பள்ளிக் கூடத்தை யாரும் மறக்க முடியாது.

உங்கள் கவிதைக்குள் மீண்டும் மீண்டும் எனது சிறு வயது நண்பனின் முகமே தெரிகிறது.

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் பஹீமா ஜஹான்,

பால்யங்கள் எவருக்கும் மறக்கவியலாதவையாகவே அமைந்துவிடுகின்றன.
நடுத்தர வயதுகளில் நாம் நினைக்க மறக்கும் பால்யநினைவுகள் வயது முதிர்ந்து,தள்ளாடும் காலங்களில் அலைக்கழிப்பதனைப் பார்த்திருக்கிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

Sakthy said...

நாம் இழந்து போன காலங்கள்..
உங்களை விட நான் மிகவும் ஏங்கியிருக்கிறேன் ரிஷான்..நீங்களாவது எம் நாட்டிலிருக்கிறீர்கள்.நாமோ அனைத்தையும் தொலைத்துவிட்டு....
அந்த நினைவுகள் கூட மங்கலாக..
உங்கள் வரிகளிலாவது நானும் வாழ்ந்து பார்க்கிறேன்

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் சக்தி,

பால்யங்கள் எப்பொழுதுமே மீட்டெடுக்கமுடியாக் காலத்துக்குரியவையாகவே இருக்கின்றன.
நினைவுகள் மட்டுமே மனதில் எப்பொழுதும் எஞ்சியிருக்கும்.

//ரிஷான்..நீங்களாவது எம் நாட்டிலிருக்கிறீர்கள்.நாமோ அனைத்தையும் தொலைத்துவிட்டு....//

இல்லை சக்தி.தற்பொழுது நானும் தாய்நாட்டில் இல்லை..இருப்பினும் உங்கள் வலியை என்னால் உணரமுடிகிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

அசரீரி said...

//அன்று வீதியில் உன் மழலைகள்
செம்மண் தூசு உடல் அப்ப
பால்யத்தில்
திளைத்து விளையாடுவதைக் காண நேரிடலாமெனக்கு..!//

மறுத்தோ வேறெதுவும் செய்தோ மீறிவிடமுடியாத ஏக்கமான யதார்த்தத்தை இவ்வரிகள் என்னை உணர வைக்கின்றன ரிஷான்.

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் அசரீரி,

//மறுத்தோ வேறெதுவும் செய்தோ மீறிவிடமுடியாத ஏக்கமான யதார்த்தம்//

மிகச் சரியான கணித்திருக்கிறீர்கள்.
அதனை அழகாகச் சுட்டியிருக்கிறீர்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

Gokulan said...

//பால்யத்துப் பள்ளிக்கூடங்களில்
ஒன்றாய்த் திரிந்தோம் ;
கூழாங்கற்கள்,ஓட்டுத் துண்டுகளைக்
கையால்,காலால் விளையாடிச் சோர்ந்துபின்
காட்டு இலைகளையும்,மணலையும்
சிரட்டையில் அள்ளிச் சோறாயெண்ணி உண்டோம் !

என் முழங்கால்ச் சிராய்ப்புக்கு
உன் எச்சில் தடவினாய்,
எவனோ உன் பட்டப்பெயர் சொல்லிக்கூவ
அவன் சட்டை கிழித்துச் சண்டை பிடித்தேன் //

எனக்கு என் பால்ய நினைவு வந்துவிட்டது ரிஷான்..

அந்த காலம் எவ்வளவு அருமையானது..

ஆனால் என் அனுபவத்தில் நிறைய சண்டைகலும் உண்டு :))

அதின் உன் இன்றைய கவலையையும் சேர்த்து சொன்னது நன்றாக உள்ளது..

முடிவு நன்று!

M.Saravana Kumar said...

நல்ல கவிதை நண்பரே.

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் சரவணகுமார்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் கோகுலன்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

ஜுனைத் ஹஸனி said...

www.junaid-hasani.blogspot.com

freeya irukumbodu inda site paathutu konjam comments pannuna risan. nanri.
wassalam

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் ஜுனைத் ஹஸனி ,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

Natchatra said...

ரிஷி இந்த கவிதைய படிக்கும் போது பருத்தி வீரன் படத்துல வர "அறியாத வயசு"
பாட்டுதான் கண்ணுக்குள்ள படமா ஓடுது... :-)
பிரிவு என்பது துயரமாக இருந்தாலும் சேர்ந்து விளையாடிய அந்த இனிமையான
நாட்களை பற்றிய வரிகள் மனதுக்கு இதமாக இருக்கு..

//அன்று
வீதியில் உன் மழலைகள்
செம்மண் தூசு உடல் அப்ப
பால்யத்தில் திளைத்து விளையாடுவதைக்
காண நேரிடலாமெனக்கு..! //

சீக்கிரம் காண வாழ்த்துகள் சகோதரா..

அன்புடன்

நட்சத்திரா..

சூர்யா said...

நண்பர் ரிஷான்,

உங்கள் கவிதை உயிரோசையில் (உயிர்மை) வெளியாகியுள்ளது.

கண்டீர்களா?
நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

அன்புடன்
-சூர்யா

பூங்குழலி said...

மனம் கனத்து போனது ரிஷான் ....நானும் என் தோழி ஒருத்தியை இப்படி தான்
தேடிக் கொண்டிருக்கிறேன் ...
சந்திக்கும் வேளையில் என்னென்ன பேச வேண்டும் என அடிக்கடி ஒத்திகை பார்ப்பதுண்டு ..

உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேற வாழ்த்துகள் .

சாந்தி said...

இளம் பிராயத்து பாசம் என்றுமே மாறாது ஏனெனில் அவை மிக தூய்மையானவை..

இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது என்னுடைய அண்ணாவின், அக்காவின் தோழ, தோழிகளும் , விளையாடியதும்....
அவர்களள மீண்டும் சந்தித்து அசைபோடும் நாட்கள் இன்னும் அழகானவை..

நல்ல கவி ரிஷான்..

சிவா... said...

ஹ்ம்ம்.. அருமையான பால்ய காலத்தை கண் முன்னாடி நிறுத்திட்டீங்க ரிஷான்.. போன மாசம் தான் ரொம்ப கஷ்ட பட்டு என் பால்ய நன்பனை கண்டு பிடிச்சேன்.. ஆனா இப்போ அவன் அமெரிக்கால இருக்கா.. அடுத்த மாசம் வரான்

ஷைலஜா said...

ஆலயங்களின் பெரும்பரப்பில்
அமைதி தேடிப் பாதங்கள் பதியும்
நாட்கள் நினைவில் இடற
ஒரு மலை போன்ற வேதனை,>>>>>..

மலைபோ்ல ------- இறுகிய அதேநேரம் வேதனையின் உச்சம் என்பதாலா?

ஒரு வனாந்தரப்பசுமை
அத்தனையும்
ஒருங்கே கொண்ட நெஞ்சுடன்
கனவாய்க் காற்றாய்
வாழ்க்கை தொலைத்தேன் ;
யாதுமாகி நின்ற உன்னையும்தான் !>>>>>>தொலைவதும் கிடைப்பதும் வாழ்க்கையில் சகஜமாகிவிட்டது.பால்யத்துப் பள்ளிக்கூடங்களில்
ஒன்றாய்த் திரிந்தோம் ;
கூழாங்கற்கள்,ஓட்டுத் துண்டுகளைக்
கையால்,காலால் விளையாடிச் சோர்ந்துபின்
காட்டு இலைகளையும்,மணலையும்
சிரட்டையில் அள்ளிச் சோறாயெண்ணி உண்டோம் !>>>>


எல்லாருடைய பால்யமும் ஏறத்தாழ இப்படித்தான்:)என் முழங்கால்ச் சிராய்ப்புக்கு
உன் எச்சில் தடவினாய்,
எவனோ உன் பட்டப்பெயர் சொல்லிக்கூவ
அவன் சட்டை கிழித்துச் சண்டை பிடித்தேன் >>>>அந்நாளிலேயே இளையதளபதி வீரரா இருந்திருக்கார்!!


காதலில்லை,காமமில்லை
அறுவெறுக்கும் எந்த அசிங்கங்களும்
அதிலிருக்கவில்லை !

புது வயதுகள் பிறக்க,
பால்யம் பாதி கரைய,
வசந்தங்கள் உன் வாழ்வில் வர
நான் தனித்து வரண்டுபோனேன் ;
என் இரகசியச் சினங்களைத்
தூறலாய்ப்பொறுத்து
முக்காட்டுக்குள் நீ புகுந்தாய்,
நான் யாதாகித் திரிகிறேன்...?>>>>>


ரகசியச்சினங்கள்!! எங்கப்பா பிடிக்கறீங்க இந்த மாதிரி வார்த்தைகளை? எங்க (என்)கவிதைகளீல் இவைகள் முரண்டு பிடிக்கின்றன!!நாடுதாண்டிக் கண்டம் தாண்டி,
செவியேற்க யாருமற்ற
பாழ்வீதியொன்றில்- நானின்று
நின்றுகொண்டேயிருக்கிறேன்
என் துயரங்களைப் பாடியபடி;>>>>


பாலைவனம் சோலையாகும் ! கானல்நீரெல்லாம் காவிரி நீராய் ஓடிவரும்!


சாபங்கள் துரத்தித் துரத்தி விழுங்கி
பூமிக்குள் புதையுண்டிருக்குமெனது
பாதங்களை மீளப்பெறும் நாளில்
நாடேகுவேன் !

அன்று
வீதியில் உன் மழலைகள்
செம்மண் தூசு உடல் அப்ப
பால்யத்தில் திளைத்து விளையாடுவதைக்
காண நேரிடலாமெனக்கு..!>>>>>


என்ன்ரிஷான் இப்படி முடிச்சிட்டீங்க?
ச்சே..கஷ்டமா இருக்கு...

நீங்களே இன்னும் பாலகன் தான்...:):)

.இளமை நினைவுகளும் அதன் தொடர்பின் எதிர்காலமும் கவிதைவரிகளில் எதார்த்தமாய் வந்துள்ளது!!!பாராட்டுக்கள்.

மதுமிதா said...

நீங்கள் நாடு ஏகும் நாள் உடன் வர வாழ்த்துக்கள்
நல்ல கவிதை ரிஷான் உங்கள் கவிதை ஓன்று உயிரோசையில் வந்துள்ளது
இன்னும் படிக்கவில்லை .படித்ததுடன் கூறுகிறேன் எப்படி என்று

Saharathendral said...

பால்யகால நினைவுகள் என்றுமே மறக்க முடியாதவை அண்ணா.
உங்கள் கவிதை இம்மாத 'உயிர்மை'யில் வெளியாகியிருக்கிறது. வாழ்த்துக்கள் :)

வேந்தன் அரசு said...

அறுவெறுக்கும் எந்த அசிங்கங்களும்
அதிலிருக்கவில்லை !

அருவருக்கும் என வரும் என நினைக்கிறேன்

மிதிலா said...

ஆமாம். அருவருக்கும் என்றுதான் வரும். அதுவே சரி.

ஆசாத் said...

இனிய ரிஷான்,

கவிதை நல்லா இருக்கு. நல்லா வந்திருக்கு.

ஒரு சின்ன பகிர்தல் என்னண்ணா, மேல சொல்லியிருக்ற அந்த 'யாதுமாகி
நின்றாய்'ன்ற வாசகம் பால்ய வயசுல கூட இருந்தவங்களுக்குப்
பொருந்துமான்றதுல எனக்கு மற்றுக் கருத்து இருக்கு.

பாலாவுது யாதுமாகி நின்றாய் விகடன்ல முத்திரைக்கதைல வந்துச்சு, 81லயோ
82லயோ, படிச்சிருக்கீங்களா? அதுதான் 'யாதுமாகி நின்றாய்'.

நான் சொல்றதுல ஒங்களுக்கு உடன்பாடில்லாமலும் போகலாம்.

என்னோட பார்வைல யாதுமாகி நின்றாய்ன்ற வரியத் தவிர்த்திருக்கலாம், ஏன்னா
அதுக்கான கனம் வேற.

அன்புடன்
ஆசாத்

மஞ்சூர் ராசா said...

மலரும் நினைவுகள்... அருமை.

கவிதை நன்று.

யாதுமாகி நின்றாய் - ஆசாத்துடன் உடன் படுகிறேன்

எம்.ரிஷான் ஷெரீப் said...

நன்றி நட்சத்திரா :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

பார்த்தேன் சூர்யா :)
வாழ்த்துக்களுக்கு இனிய நன்றி !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் பூங்குழலி,

பால்ய சினேகிதர்கள் அனைவருக்கும் இருக்கும்.
சிலருக்கு மட்டுமே இறுதிவரை நட்பைத் தொடரக் கூடுமாகிறது.
உங்கள் தோழியைச் சீக்கிரமே சந்திக்க வாழ்த்துக்கள் !

கருத்துக்கு நன்றி சகோதரி :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் சாந்தி,

பழைய காலங்கள் மறக்கமுடியாதவை தாம்.
மீண்டழுது புலம்பினாலும் திரும்ப வாராதவை.


கருத்துக்கு நன்றி சகோதரி :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் சிவா,

எப்படியோ பழைய நண்பரை கண்டுபிடிச்சிட்டீங்க. மிகவும் மகிழ்ச்சி.
அமெரிக்காவில் இருந்தால் என்ன? பக்கத்தில் இருந்தால் என்ன?
உண்மையான அன்பு பல தேசங்கள் கடந்தும், காலங்கள் கடந்தும் என்றென்றும் நிலைத்துநிற்கும்.
மீண்டும் பழைய நட்புக்கு வாழ்த்துக்கள் நண்பா.
கருத்துக்கு நன்றி :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் ஷைலஜா அக்கா,

அழகா முழுக்கவிதைக்கும் கருத்துச் சொல்லிவிட்டு கடைசியில என்னைப் பாலகன்னு சொல்லிட்டீங்களே..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
எத்தனை பேர் இனி என்னைக் கும்மப் போறாங்களோ?
நன்றி மை அக்கா :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் மதுமிதா,
உங்களிடமிருந்து பாராட்டுப் பெற்றதில் மகிழ்கிறேன்.
படித்துவிட்டு அந்தக் கவிதையின் விமர்சனத்தையும் தந்தால் மகிழ்வேன்.
நன்றி நண்பரே :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் சஹாராதென்றல்,

அன்பான கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் வேந்தன் அரசு,

//அருவருக்கும் என வரும் என நினைக்கிறேன்//

ஆமாம்..நானும் கவனிக்கவில்லை.
சுட்டிக் காட்டியமைக்கு நன்றி நண்பரே :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் மிதிலா,

//அருவருக்கும் என்றுதான் வரும். அதுவே சரி.//

ஆமாம். இதுதான் சரி.
நன்றி சகோதரி :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் ஆசாத்,

இந்தக் கவிதையில் 'யாதுமாகி நின்ற உன்னையும்தான்' எனக் குறிப்பிட்டிருப்பது பால்ய வயதுக்குரிய காலத்தைக் கொண்டு மட்டுமே.
அந்த வயதில் நமது தேவைகள் சிறுத்திருக்கும். அந்தப் பொழுதில் மனதில் எந்த ஆபாசங்களுமற்று நண்பர்களே நிறைந்திருப்பர். எல்லாத் தேவைகளுக்கும் நண்பர்களைப் போதுமாக்கிக் கொள்ளும் பருவம். அப்பொழுதில் மனதிற்கு மிகவும் நெருக்கமானவர்களை அப்படி அழைப்பதில் பிழையில்லைதானே?

நான் சொல்லியிருக்கிற 'யாதுமாகி நின்ற உன்னையும்தான்' எனும் வரிக்குள்

காதலில்லை,காமமில்லை
அறுவெறுக்கும் எந்த அசிங்கங்களும்
அதிலிருக்கவில்லை !

என அடுத்த வரிகளில் சொல்லியிருக்கிறேன்.
அன்பான கருத்துக்கு நன்றி நண்பரே :)
தொடர்ந்தும் இது போன்ற கருத்துக்களை,பகிர்தல்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

80 களில் வெளிவந்தவை என்னால் பார்க்க இயலவில்லை. அப்பொழுது நான் எங்கே இருந்தேன் என எனக்கே நினைவில்லை. :)
எனினும் இரு விடயங்கள் என்னை ஆச்சரியப்பட வைக்கின்றன.
ஒன்று உங்கள் ஞாபக சக்தி.
அடுத்தது நீங்கள் குறிப்பிடும் அந்தக் கதை.
ஏறத்தாழ 25 வருடங்கள் கடந்தும் இது போல நினைவில் நிற்கும் சிறுகதை என்றால் அந்தக் கதை எவ்வளவு காத்திரமாக இருக்கும்?
பார்க்க ஆசைப்படுகிறேன்.

ஆசாத் said...

ரிஷான்,

இப்ப இருக்ற காதல் தொடர்பான சிந்தனை ஓட்டத்தோட அந்தக் கதை
ஒத்துப்போகுமான்னு தெரியாது. அதனால ரொம்பவும் ஆர்வத்த வளத்துக்காதீங்க,
படிச்சப்புறம் பிடிக்காமப் போனாலும் போவும்.

எதிர்பார்ப்பு அதிகமானா ஏமாற்றம் அதிகமாவும், எதிர்பார்ப்புகளக்
கொறச்சுக்கிட்டோமுன்னா எல்லாம் நல்லாருக்கும்.

ஒரு சின்ன சமாசாரம் சொல்றேன் பாருங்க. அதுல அந்தப் பொண்ணு அவன் முடிவெட்ற
கடைக்குப் போவும், எந்த நாற்காலிப்பா உக்காருவேன்னு கேக்கும், அந்த
நாற்காலில இது உக்காந்து பாக்கும். யப்பா யப்பா அந்த நேரத்துல பாலாவுக்கு
இருந்த வேகம், நாங்க இருந்த பருவம், எல்லாமா சேந்து பைத்தியமால்ல
ஆக்கிவெச்சிருஞ்ச்சு.

பாலாவுது சிறுகதைத் தொகுதி எதுலயாவது கதை கெடைக்குமான்னு பாப்போம்.

ஆஹா நெனவு வந்துருச்சு பாரதி நூற்றாண்டு விழாவப்போ பாரதி கவிதைகளோட வரிகள
தலைப்பா வெச்சு விகடன்ல சிறுகதைங்க வந்துச்சு. பாலா எழுதுனது யாதுமாகி
நின்றாய், சுஜாதா எழுதுனது சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்.
தமீழமக்களோட நியாயமான கோரிக்கைகள் எப்படி நம்ம அரசியல் சுயநலத்தால
அமுக்கப்படுதுன்னு எழுதியிருப்பாரு.

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் ஆசாத்,

நிச்சயமாகத் தேடிப்பார்த்துப் படிக்கிறேன்.
உங்கள் வரிகளினால் மேலும் மேலும் ஆர்வத்தைத் தூண்டுகிறீர்கள்.
நன்றி இனிய நண்பரே :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் நண்பர் மஞ்சூர் ராசா,

ஊக்கம் தரும் கருத்துக்கு நன்றி நண்பரே :)