
எந்த ஆரூடங்களாலும்
ஊகிக்கவே முடியாத
திடுக்கிடும் துயரங்களுடனானவொரு
காலத்தை நீ கொண்டிருக்கிறாய் !
இதிகாசத்திலிருந்து நீ வாழ்ந்துவரும்
புராதனக் குடியிலிருப்பிலின்னும்
பூதங்களின் ஆட்சி தொடர்வதை - நீ
சொல்லிச் சொல்லியழுத வேளை,
எதைக் கொண்டும் அணைக்கமுடியாத
சினக் கனலொன்று என்னுள்
மூண்டு பொங்கிப் பிரவகித்திற்று !
உனது விரல்கள் வடிக்கும்
உக்கிர ஓவியங்களைப்
பார்த்து,ரசித்து - உன்னை
உச்சத்தில் வைத்திடக் காலம்
பலபேரைக் கொண்டிருக்கையில் ;
எந்தச் சத்தியங்கள்
சகதிக்குள் புதைந்தனவோ...
எந்த வீரப்பிரதாபங்கள்
வெட்டவெளியிலலைந்தனவோ...
எந்த சுபவேளை கீதங்கள்
ஒப்பாரிகளாக மாறினவோ...
எந்தப் பிசாசுகள் உன்னில்
விலங்கு பூட்டிச் சிரித்தனவோ...
அத்தனையும் இன்னுமேன்
உன் நினைவுக்குள் இடறவேண்டும் ?
உன் விழி துடைக்க - பிற
தேவ தூதர்களின் சிறகுகளிலிருந்து
ஒற்றை இறகாவது நீளும் ;
உன்னை உறங்கச் செய்யும்
மந்திர வித்தையொன்றைக்
காற்றும் ஒருநாள் ஏகும் !
நம்பு !
அன்றைய தினமதில்
பூதங்களும் அவற்றின் அடிமைகளும்
பேரதிர்ச்சியில் பார்த்துநிற்க
சவால்களனைத்தையும் விழுங்கி
உன் மேனி சிலிர்த்து
ஆதிகாலந்தொட்டு வரும்
அத்தனை காயங்களையும்
ஒரு கணத்தில் உதறுவாய் !
வீழும் வலியனைத்தும் படபடத்துச்
செத்துமடியும் - பிசாசுகளின்
எல்லை தாண்டிப் பறந்த உன்னை
நண்பர்களின் உலகம்
கைகோர்த்து வரவேற்கும்
அப்பிரகாச நாளில்
என்னை மறந்திடுவாயா சினேகிதி?
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.