Thursday, May 1, 2008
எனக்கே எனக்கானதாக மட்டும்..!
உடைந்த வானத்தின் கீழ்
நிலவு சலித்தனுப்பிய
வெளிச்சத்தினூடு,
உறுதியற்ற தேசத்தினொரு மூலையில்
உடையாத வெட்கத்தை
உறுதியான இறகுகளால் போர்த்தியபடி
முன் காலமொன்றில்
அழகிய வண்ணத்துப்பூச்சிகள் சூழ
தேவதையாக நான் நின்றிருந்தேன் !
வேட்டைக்காரனாக நீ வந்தாய் ;
என்னையும்,வெட்கத்தையும்
மூடியிருந்த சிறகதனைக்
கத்தரித்துக் காதில் சொன்னாய்-இனிக்
காலம் முழுதும்
உன் சிறகுகள் மட்டுமே
போதுமெனைச் சுமக்கவென
அழகிய வாக்குறுதிகள் தந்தாய் !
அன்றிலிருந்துதான்
உனது வலிமை மேலோங்கிய
வேட்டைக்கரங்கள்,
எனது சுவாசங்களையும்
சிறிதுசிறிதாகக் கொடுக்கத்தொடங்கின !
எனக்குப் பல்முளைத்த அன்றின் இரவில்
தனியாக மெல்ல முடியுமினியென்றேன்,
உனது அத்தனை அகோரங்களும்
ஒன்றாய்ச் சேர்ந்து
அன்றுதான் என் உதடுகளைத்
தைக்க ஆரம்பித்தாய் !
எழுதவேண்டுமென்ற பொழுதில்
பேனாமுனை ஒடித்துச் சிரித்தாய்,
வரைவதற்கான வண்ணங்களைக்
கலந்த விரல்களை
வளைத்துச் சிதைத்தாய்,
பாடலுக்கான எண்ணமெழும் முன்னமே
நானூமை என
சொல்லிச் சொல்லி ரசித்தாய் !
இனிக் காலங்கள்
எனக்கே எனக்கானதாக மட்டும் இருக்கட்டும் !
இந்த வெடிப்புற்று வரண்டு,
கதிர்களேதுமற்ற வயல்வெளியில்
நேற்றிலிருந்து புதிதாக முளைக்க
ஆரம்பித்திருக்கும் பற்களால்
என் தீய கனவுகளை மென்று விழுங்கியபடி,
உச்சரிப்புப் பிழைகளோ,சுருதி விலகலோ
சுட்டிக்காட்ட யாருமின்றி...
ஒரு பக்கம் எனது கவிதைகள்,
மறு பக்கம் எனது வண்ணங்கள்
எனத் துணையாய்க் கொண்டு
பாடிக்கொண்டிருக்கிறேன் ;
ஆனாலும்,
என்னை விதவையென்கிறீர்கள் நீங்கள் !
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Subscribe to:
Post Comments (Atom)
54 comments:
சொல்ல வரும் கருத்தை அழகாகவும், வித்தியாசமாகவும் சொல்வதில் வல்லவராய் இருக்கிறீர்கள், ரிஷான் :)
//உடைந்த வானத்தின் கீழ்
நிலவு சலித்தனுப்பிய
வெளிச்சத்தினூடு,//
நல்ல கற்பனை.
//எழுதவேண்டுமென்ற பொழுதில்
பேனாமுனை ஒடித்துச் சிரித்தாய்,
வரைவதற்கான வண்ணங்களைக்
கலந்த விரல்களை
வளைத்துச் சிதைத்தாய்,
பாடலுக்கான எண்ணமெழும் முன்னமே
நானூமை என
சொல்லிச் சொல்லி ரசித்தாய் !//
மனதைத் தைத்த வரிகள்.
//இந்த வெடிப்புற்று வரண்டு,
கதிர்களேதுமற்ற வயல்வெளியில்
நேற்றிலிருந்து புதிதாக முளைக்க
ஆரம்பித்திருக்கும் பற்களால்
என் தீய கனவுகளை மென்று விழுங்கியபடி,//
அழகுற சொல்லியிருக்கிறீர்கள்.
இந்தக் கவிதை பட்ட மரத்திலிருந்து தொடங்கி விதவையிடம் போய் முடிகிறது.
பூத்துக் காய்த்து ஓய்ந்த மரமாகப் பெண் மாறிப் போவது இயற்கையின் விதிதான்.
அதற்கு அப்பாலும் பெண்ணை வழிமறிக்கும் துயர்களையும் சொல்லியுள்ளீர்கள்.
பயன்படத்தியுள்ள படம்
கவிதையை விடவும் அதிகமாகப் பேசுகிறது.
//
ஒரு பக்கம் எனது கவிதைகள்,
மறு பக்கம் எனது வண்ணங்கள்
எனத் துணையாய்க் கொண்டு
பாடிக்கொண்டிருக்கிறேன் ;
ஆனாலும்,
என்னை விதவையென்கிறீர்கள் நீங்கள் !//
அருமை.. வாழ்த்துக்கள்:)
சலித்த நிலவொளிக்குக் கீழே சலிக்காத கவிதையை எழுதியிருக்கின்றீர்கள் ரிஷான். அருமை.
excellent kavithai.keep it up
ரசித்தேன், அருமையான/ஆழமான கவி வரிகள் ரிஷான்
//ரசித்தேன், அருமையான/ஆழமான கவி வரிகள் ரிஷான்//
ரீப்பீட்டே!!!
Rishaan..
Fantastic Poem.. Keep it up..
Jayakumar
ரிசான் உங்கள் பண்புடன் நண்பன் நான், எனக்கு கவிதைகள் பிடிக்காது அதுவும் காதல் கவிதைகள் என்றால் விஷம் எனக்கு. இதை தவிர்த்து சமுதாய கவிதைகள் எழுதுங்கள். இது எனது வேண்டுகோள்
வால்பையன்
இன்னும் நிறையப்படிக்க வேண்டும் உங்கள் பதிவுகளில் இருந்து.... இந்தக்கவிதையின் வார்த்தைப்பிரயோகங்கள் நன்றாயிருக்கிறது...
ரிஷான், என்ன ஒரு ஆழமாக கருத்து.. வார்த்தை பிரயோகம்..
எல்லாவற்றித்கும் மேலே அந்த படம்..
அட்டகாசமான கவிதை..
அன்பின் கவிநயா,
அழகான உங்கள் பெயரைப் போலவே அழகாகக் கருத்து சொல்லியிருக்கிறீர்கள். :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !
ஆளமான கருத்துக்கு அழகான படம் .....
உங்கள் வரிகள் அவ்வளவு அழகு ரிஷான்..
அன்பின் சகோதரி பஹீமா ஜஹான்,
//பூத்துக் காய்த்து ஓய்ந்த மரமாகப் பெண் மாறிப் போவது இயற்கையின் விதிதான்.
அதற்கு அப்பாலும் பெண்ணை வழிமறிக்கும் துயர்களையும் சொல்லியுள்ளீர்கள். //
எல்லா மனிதர்களுக்கும் இது போலச் சொல்லொணாத் துயர் வாட்டிக்கொண்டுதானிருக்கிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)
அன்பின் ரசிகன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)
அன்பின் ஜிரா,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனானி நண்பரே :)
அன்பின் கானா பிரபா,
மிக நீண்ட நாளைக்குப் பிறகான உங்கள் வருகை மகிழ்வினைத் தருகிறது.அடிக்கடி வந்துபோங்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் மதுரையம்பதி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் ஜெயக்குமார்,
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் வால்பையன்,
'பண்புடனில்' உங்களைப் பார்த்திருக்கிறேன்.
நான் காதல் கவிதைகள் எழுதுவதில்லையே.
இந்தக் கவிதை கூட துயருறுத்தும் மணவாழ்விலிருந்து விடுதலை கிடைத்த ஒரு பெண்ணின் பார்வையிலேயே அமைந்துள்ளது.
உங்கள் அன்பான ஆலோசனை மகிழ்வைத் தருகிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் தமிழன்,
உங்கள் முதல் வருகை என நினைக்கிறேன்.
உங்கள் வரவு இனிய நல்வரவாக அமையட்டும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் கோகுலன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)
அன்பின் சக்தி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சினேகிதி :)
//ஒரு பக்கம் எனது கவிதைகள்,
மறு பக்கம் எனது வண்ணங்கள்
எனத் துணையாய்க் கொண்டு
பாடிக்கொண்டிருக்கிறேன் ;
ஆனாலும்,
என்னை விதவையென்கிறீர்கள் நீங்கள்//
கொஞ்சம் கனமாகியது மனது படித்தவுடன்.....
அன்புடன் அருணா
அன்பின் அருணா,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)
அன்புள்ள நண்பர் ஷெஈஃப்,
ஒங்க கவிதையைப் படிச்சேன். மனசு பாரமாயிட்டுது. காலங்கார்த்தால இந்த மாரி படிச்சா ஒரு மாரி சுஸ்த் ஆயிருது.
“கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே வேரிற்பழுத்த பலா” அப்படீன்னு பாரதிதாசன் சொன்னதுதான் ஞாபகம் வருது.
உண்ணி மேல் ராத்திரி 10 மணிக்கு மேலதான் ஒங்க கவிதைகளைப் படிக்கோணும் போல. அப்பத்தான் படிச்சுக் குடிச்சு முடிச்சுக் கட்டைய சாய்க்கலாம்னு நெனைக்கிறேன்.
ஒங்க ஈ மெயில் என்னங்க?
லதானந்த்
அன்பின் லதானந்த்,
உங்கள் முதல் வருகை நல்வரவாக அமையட்டும்.
உங்கள் வருகை எனக்கு மிக மகிழ்வைத் தருகிறது.
//உண்ணி மேல் ராத்திரி 10 மணிக்கு மேலதான் ஒங்க கவிதைகளைப் படிக்கோணும் போல. அப்பத்தான் படிச்சுக் குடிச்சு முடிச்சுக் கட்டைய சாய்க்கலாம்னு நெனைக்கிறேன்.//
அப்போ இரவுல தூக்கம் வராதே..அதுக்கு என்ன செய்வீங்க? :P
என் மின்னஞ்சல் முகவரி msmrishan@gmail.com
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
கடைசி வரிகளில் முழுக்கவிதையின் வலியும் தெரிகிறது ரிஷான்.
//உடைந்த வானத்தின் கீழ்
நிலவு சலித்தனுப்பிய
வெளிச்சத்தினூடு,
உறுதியற்ற தேசத்தினொரு மூலையில்
உடையாத வெட்கத்தை
உறுதியான இறகுகளால் போர்த்தியபடி
முன் காலமொன்றில்
அழகிய வண்ணத்துப்பூச்சிகள் சூழ
தேவதையாக நான் நின்றிருந்தேன் !
//
படத்துக்கேற்ற ஆரம்பம் தந்திருக்கிறீர்கள்.நான் நிறைய நேரம் அந்தப்படத்தைப் பார்த்துவிட்டுதான் கவிதையை வாசிக்கத் தொடங்கினேன்.
அருமை!!! அருமை!!!
அன்பின் நிர்ஷன்,
உங்கள் பின்னூட்டம் எனக்கு மகிழ்வைத் தருகிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)
ஒரு தேவதையின் கலைந்த கனவுகள் விதவையான பின் துளிர் விடத் தொடங்குவதை வித்தியாசமாகச் சொல்கிறது கவிதை.
சரியாகத்தான் புரிந்திருக்கிறேனா?
\\ஒரு பக்கம் எனது கவிதைகள்,
மறு பக்கம் எனது வண்ணங்கள்
எனத் துணையாய்க் கொண்டு
பாடிக்கொண்டிருக்கிறேன் \\
கவிதையைப்படித்ததும் மனசு கனமாயிருச்சு
சகோதரா, கவிதை நிச்சயம் படிப்பவரை சோகத்தில் ஆழ்த்தும்...
ரிஷான்
இப்போதான் ப்டிச்சேன் ....மனசை தொட்டுவிட்டதே.......வார்த்தை தேர்வு கச்சிதம் தம்பி.
அன்பின் ராமலக்ஷ்மி,
//ஒரு தேவதையின் கலைந்த கனவுகள் விதவையான பின் துளிர் விடத் தொடங்குவதை வித்தியாசமாகச் சொல்கிறது கவிதை.
சரியாகத்தான் புரிந்திருக்கிறேனா?//
மிகச் சரியாகப் புரிந்திருக்கிறீர்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)
அன்பின் முரளிகண்ணன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் தூயா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)
அன்பின் ஷைலஜா அக்கா,
//இப்போதான் ப்டிச்சேன் ....மனசை தொட்டுவிட்டதே.......வார்த்தை தேர்வு கச்சிதம் தம்பி.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)
ஆழ்ந்த விளக்கம்! அழகு.
எத்தனை அற்புதமாயிருக்கிறது என சொல்ல வார்த்தைகள் போதவில்லை ...
ஒவ்வொரு சொல்லும் பொருளேந்தி....விலகலோ சுட்டிக் காட்ட யாருமில்லாமல்
எத்தனை ஆழ்ந்த பொருள்.நிச்சயம் உங்கள் படைப்புகளை பதிப்பிக்க வேண்டும்
அன்பின் பாஸ்கர்,
நன்றி இனிய நண்பா :))
அன்பின் பூங்குழலி,
உங்கள் கருத்து என்னை மகிழ்விக்கிறது.
அன்பான பாராட்டுக்களுக்கு நன்றி சகோதரி :)
கவிதை மிக அழகாக இருக்கிறது ...நல்ல அர்த்தமுள்ள வரிகளோடு ....
அன்பின் ரிஷான் அவர்களே ..வாழ்த்துக்கள்
அன்புடன்
விஷ்ணு
நன்றாக் எழுதியுள்ளீர் தம்பி
அன்புடன்
என் சுரேஷ்
நன்றாகத் தான் இருக்கிறது.
என்றாலும் அதிகமான வரிகள், சொற்கள். தொடர்ந்து அடுக்கப்படும் அகோரங்கள்.
கவிதையை இன்னமும் சற்று இறுக்கமானதாக, அதிக வார்த்தைகளற்ற
தொகுப்பாக்குங்கள்.
இந்த கவிதையில் உள்ள வரிகளில் இருப்பது வெறும் வார்த்தைகளல்ல.. உணர்ச்சிகள்...அருமையான கவிதைகள் ரிஷான்.. வாழ்த்துகள்
அன்பின் விஷ்ணு,
கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிகவும் நன்றி நண்பரே :)
அன்பின் சுரேஷ் அண்ணா,
கருத்துக்கு மிகவும் நன்றி அண்ணா :)
அன்பின் நண்பன்,
மிக நீண்ட நாட்களின் பின்னர் உங்களை இங்கு காண்பதில் மகிழ்ச்சி.
அதிக வார்த்தைகளோ, காத்திரமான சொற்களோ அற்ற கவிதைகள் ஈழ இலக்கியத்தில் ஒதுக்கப்படும் அபாயங்கள் அதிகம் நண்பன். அதனால் தான்.
அன்பான கருத்துக்கு நன்றி :)
அன்பின் சிவா,
அன்பான பாராட்டுதலுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா :)
அழமான வார்த்தைகளில்
என்னை கலங்கவைத்தமைக்கு
என்ன சொல்ல
ஹய்ய்யா ரிஷான்ன்ன்ன்ன்ன்!! :)))))
எங்கப்பா போனீங்க?? :)
இது நான் முன்னாடியே படிச்ச கவிதைதான் என்றாலும், எப்போதும்போல்
படிக்க படிக்க கவிதையில் இருக்கும் இந்த வித்தியாசமான அனுகுமுறை
பாரட்டுக்குரியது...
////எழுதவேண்டுமென்ற பொழுதில்
பேனாமுனை ஒடித்துச் சிரித்தாய்
வரைவதற்கான வண்ணங்களைக்
கலந்த விரல்களை
வளைத்துச் சிதைத்தாய்,
பாடலுக்கான எண்ணமெழும் முன்னமே
நானூமை என
சொல்லிச் சொல்லி ரசித்தாய் /////
இந்தக் கவிதையில் எனக்கு ரொம்ம்பப் ப்டிச்ச வரிகள் இது..
அன்புடன்...
வாணி
அன்பின் தமிழன்,
கருத்துக்கு நன்றி நண்பரே :)
அன்பின் வாணி,
விடுமுறையில் இருந்தேன் :))
மீண்டும் படித்து பாராட்டியமைக்கு நன்றிப்பா :)))
Post a Comment