Tuesday, July 1, 2008

எரிக்கிறாய் ; எரிகிறேன் !


எனதுயிருருக்கும் பாடலைப்
பின்பற்றி வந்த உன் நேசம்
எனக்கென்றிருந்த
ஒரேயொரு கேடயத்தையும்
மூலைக்கொன்றாக உடைத்துப் போட்டதில்
வருத்தம்தான் எனக்கு..!

ஆதியின் மூலங்களறுத்து,
சார்ந்திருந்த அரண்களையுடைத்து
உனை நம்பி வந்த நான்
காணும் எல்லாவற்றிலும்
நீ மட்டுமே
காட்சிப் பொருளாக வேண்டுமென்கிறாய்

நட்சத்திரங்களை எனக்காக
வளைப்பதாகச் சொன்ன நீ
எனதழகு மின்னிடும் பொழுதுகளில்
பீதியுடன் முறைக்கிறாய்
எனது குரல்வளையினை நெரித்து
உனது நிம்மதிக்கான
பிரார்த்தனை கீதங்களைப்
பாடச் சொல்கிறாய்

என் நெற்றியில் தொடங்கியுன்
கூராயுதங்கள் கீறுகின்றன,
உயிருருகி வழியும் குருதியில்
தாகம் தணித்துக்கொள்கிறாய்
என் உயிரின் மூலங்களை
உன் வார்த்தைகளால் வேரறுக்கிறாய்
என் வாழ்வின் தீர்ப்பினை
இவ்வாறு நீயே எழுதுகிறாய் !

சிம்மாசனங்கள் வேண்டவில்லை
செங்கோலையும் தீண்டவில்லை
ஆட்சிகள்,ஆகிருதிகள் அத்தனையும்
உன்னுடையதாகவே இருக்கட்டும் ;
நானென்ன கேட்கிறேன் ?
பறவையின் உதிர்ந்த சிறு இறகினைப் போல
எடைகளற்றுத்தானே
இருக்கின்றன என் தேவைகள் !

இறுதியாக,
வாழ்வுக்கு ஒளியூட்டுவதாகச் சொல்லி
என் நெஞ்சின் ஓரத்தில்
தீச்சுடரை வைத்து - அது
பற்றி எரியும் போதினில் குளிர்காய்கிறாய்.
பரவாயில்லை.
உனது சந்தோஷங்களுக்காக நானெரிகிறேன்.
இப்படியே விட்டுவிடலாமென்னை !

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

29 comments:

Jackiesekar said...

இறுதியாக,
வாழ்வுக்கு ஒளியூட்டுவதாகச் சொல்லி
என் நெஞ்சின் ஓரத்தில்
தீச்சுடரை வைத்து - அது
பற்றி எரியும் போதினில் குளிர்காய்கிறாய்.
பரவாயில்லை.
உனது சந்தோஷங்களுக்காக நானெரிகிறேன்.
இப்படியே விட்டுவிடலாமென்னை\\

கடைசி வரிகள் நச்சன்னு இருக்கு

Kavinaya said...

சுயநலமே சுயமான துணையைப் பற்றி அருமையாய்க் கவிதை வடித்திருக்கிறீர்கள். தானே உள்ளிருந்து பார்த்தது போல் உணர்வின் ஆழங்களை உணர்ந்து கதறும் உங்கள் கவிதைகள் எப்போதுமே என்னை அதிசயிக்க வைக்கும்.

//பறவையின் உதிர்ந்த சிறு இறகினைப் போல
எடைகளற்றுத்தானே
இருக்கின்றன என் தேவைகள் !//

ஹும்...

//உனது சந்தோஷங்களுக்காக நானெரிகிறேன்.
இப்படியே விட்டுவிடலாமென்னை !//

அருமையான முத்தாய்ப்பு.

M.Rishan Shareef said...

அன்பின் ஜாக்கி சேகர்,

எனது கவிதைப்பக்கத்திற்கான உங்கள் முதல்வருகை எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.உங்கள் வரவு நல்வரவாக அமையட்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் கவிநயா,

//சுயநலமே சுயமான துணையைப் பற்றி அருமையாய்க் கவிதை வடித்திருக்கிறீர்கள். தானே உள்ளிருந்து பார்த்தது போல் உணர்வின் ஆழங்களை உணர்ந்து கதறும் உங்கள் கவிதைகள் எப்போதுமே என்னை அதிசயிக்க வைக்கும்.//

இதில் அதிசயிக்க ஏதுமில்லை சகோதரி.
நாம் நாளும் சந்திக்கும் நால்வரிலொருவர் இதுபோலச் சுயநலத்தைத்தான் அகத்தினில் சுமந்தலைந்து கொண்டிருப்பார்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

Sakthy said...

சுப்பர்வ்வ்வ் ரிஷான்..
ஒவ்வொரு வரியும் அற்புதமாய் உள்ளன. .
உங்கள் வலிகளை கூட எப்படி இவ்வளவு அழகான வரிகளில் சொல்லுகிறீர்கள்....

/நானென்ன கேட்கிறேன் ?
பறவையின் உதிர்ந்த சிறு இறகினைப் போல
எடைகளற்றுத்தானே
இருக்கின்றன என் தேவைகள் ! /

அழகான வரிகள்

வாழ்த்துக்கள் ரிஷான்

M.Rishan Shareef said...

அன்பின் சக்தி,

//அழகான வரிகள்

வாழ்த்துக்கள் ரிஷான் //

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஸ்னேகிதி :)

Aruna said...

//பறவையின் உதிர்ந்த சிறு இறகினைப் போல
எடைகளற்றுத்தானே
இருக்கின்றன என் தேவைகள் !//

மனது உதிர்ந்த சிறு இறகினைப் போல எடையற்று லேசாகிப் போனது படித்தவுடன்.....
அன்புடன் அருணா

M.Rishan Shareef said...

வாங்க அருணா:)

//மனது உதிர்ந்த சிறு இறகினைப் போல எடையற்று லேசாகிப் போனது படித்தவுடன்.....
அன்புடன் அருணா //

உங்கள் கருத்து மனதுக்கு மகிழ்வினைத் தருகிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

Anonymous said...

ரிஷி உன் கவிதைகள் ஒவ்வொன்றும் உன்னோடு சேர்த்து எங்களை எரிக்கிறது..
உன் துக்கம் நாங்களும் உணரும் வண்ணம் படைக்கிறாய்...

//உனது சந்தோஷங்களுக்காக நானெரிகிறேன்.
இப்படியே விட்டுவிடலாமென்னை//

நீ எரியாமல் உன் துக்கங்கள் மட்டும் எரிந்து
நீயும் சந்தோஷத்தை காண வாழ்த்துகள் சகோதரா....

அன்புடன்

நட்சத்திரா..

Anonymous said...

ஒருவர் மட்டுமே சந்தோஷத்தையும், முக்கியத்துவத்தையும் அனுபவிக்க வேண்டுமென்ற ஆதிக்கத் வெறி கொண்ட துணையும் அதற்கு மனதால் புளுங்கி , விருப்பமில்லாமல் ஆனால் இயலாமையுடன் விட்டுக் கொடுக்கும் மற்ற ஆத்மாவின் புலம்பலாய் இந்தக் கவிதையை நான் புரிந்து கொண்டது சரியானால்......
என்னைப் பொறுத்த கருத்து ....இப்படியொரு அடக்குமுறையையும் ஆதிக்கத்தையும் ஏற்று , தாங்கிக் கொண்டு வாழ வேண்டிய வாழ்கையில் என்ன பலன்? எதை சாதிக்க முடியும்?
சந்தோஷமா? இல்லை;
சமத்துவமா? இல்லவே இல்லை;
நிம்மதியா? அதற்கு வழியே இல்லை;
அன்பா? வீசை என்ன விலை?
பின்..... இந்த வாழ்கையின் அர்த்தம் என்ன?

இப்படியான ஒரு சகதி நிறைந்த வட்டத்தை விட்டு விலகிப் போய்விடுவது மேல்...


நட்சத்திரங்களை எனக்காக
வளைப்பதாகச் சொன்ன நீ
எனதழகு மின்னிடும் பொழுதுகளில்
பீதியுடன் முறைக்கிறாய்
எனது குரல்வளையினை நெரித்து
உனது நிம்மதிக்கான
பிரார்த்தனை கீதங்களைப்
பாடச் சொல்கிறாய்

இந்த வார்த்தைகள் மிகவும் ஆத்திரமூட்டுகின்றன... :)

அன்புடன்
சுவாதி

M.Rishan Shareef said...

அன்பின் நட்சத்திரா,


//நீ எரியாமல் உன் துக்கங்கள் மட்டும் எரிந்து
நீயும் சந்தோஷத்தை காண வாழ்த்துகள் சகோதரா....//


அன்பான கருத்து சகோதரி.. மகிழ்கிறேன்..
கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)

Anonymous said...

ரிஷான்,

இந்தக் கவிதையை ஒவ்வொரு முறை படிக்கும்போதும் பொருளும்
அழுத்தமும் கூடிட்டே போகுது...:)



///உனை நம்பி வந்த நான்
காணும் எல்லாவற்றிலும்
நீ மட்டுமே
காட்சிப் பொருளாக வேண்டுமென்கிறாய்/////


இது ஒருவித அன்பின் வெளிப்பாடாகவே கருதலாமே....



////சிம்மாசனங்கள் வேண்டவில்லை

செங்கோலையும் தீண்டவில்லை
ஆட்சிகள்,ஆகிருதிகள் அத்தனையும்
உன்னுடையதாகவே இருக்கட்டும்
நானென்ன கேட்கிறேன்
பறவையின் உதிர்ந்த சிறு இறகினைப் போல
எடைகளற்றுத்தானே
இருக்கின்றன என் தேவைகள் ////


வாவ்வ்...மிகவும் அழகிய வரிகள்...:)


////உனது சந்தோஷங்களுக்காக நானெரிகிறேன்.
இப்படியே விட்டுவிடலாமென்னை ////

மீட்பதற்கு யாரும் இல்லையா?? ;)


அன்புடன்...
வாணி

M.Rishan Shareef said...

அன்பின் சுவாதி அக்கா,


// ஒருவர் மட்டுமே சந்தோஷத்தையும், முக்கியத்துவத்தையும் அனுபவிக்க வேண்டுமென்ற ஆதிக்கத் வெறி கொண்ட துணையும் அதற்கு மனதால் புளுங்கி , விருப்பமில்லாமல் ஆனால் இயலாமையுடன் விட்டுக் கொடுக்கும் மற்ற ஆத்மாவின் புலம்பலாய் இந்தக் கவிதையை நான் புரிந்து கொண்டது சரியானால்......//


மிக மிகச் சரியான புரிதல் அக்கா..


// என்னைப் பொறுத்த கருத்து ....இப்படியொரு அடக்குமுறையையும் ஆதிக்கத்தையும் ஏற்று , தாங்கிக் கொண்டு வாழ வேண்டிய வாழ்கையில் என்ன பலன்? எதை சாதிக்க முடியும்?
சந்தோஷமா? இல்லை;
சமத்துவமா? இல்லவே இல்லை;
நிம்மதியா? அதற்கு வழியே இல்லை;
அன்பா? வீசை என்ன விலை?
பின்..... இந்த வாழ்கையின் அர்த்தம் என்ன?//



ஆதி தொட்டு வரும் காலத்தின் இப்போதைய நிமிடம் வரைக்கும் பல மனித ஜீவன்கள் முக்கியமாகப் பெண்கள் தன் துணையையே எல்லாவற்றுக்குமாகச் சார்ந்திருக்க நேர்கிறது. எவ்வளவுதான் உடல் அளவிலோ, மன அளவிலோ கொடுமைப்படுத்தப்பட நேரிடினும் அவள் அடங்கிப் போகவேண்டியவளாகிறாள். அவ்வாறு சிறுகாலம் தொட்டு தனது அன்னையை, சமூகப் பெண்களைப் பார்த்து அல்லது அவ்வாறு வளர்க்கப்படுபவள் தனது துணையின் கொடூரங்கள் தாங்கவியலா நிலையில் விட்டுப் போகநேரிடினும் சமூகம் கொடுக்கும் வசை மொழிகளையும், பலவிதமான இன்னல்களையும் அவள்தான் விரும்பாச் சுமையாய் இருப்பினும் தன்னில் சுமக்கவேண்டியவளாகிறாள். இந்நிலையில் கலாச்சாரங்கள் ஆதியில் விதித்த கட்டுப்பாடுகளை அவள் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொண்டு தன் சுயமிழந்து, விருப்பங்கள் துறந்து துயர் தரும் துணைக்கு ஏற்றபடி வாழத்துணிகிறாள். இதில் சந்தோஷமோ, நிம்மதியோ, சமத்துவமோ, அன்போ எள்ளளவும் இருக்காது.. ஒரு கூண்டுப் பறவை வாழ்க்கை....இறுதிவரையிலும்...


மிகுந்த அனலாய் வெளிப்பட்ட உங்கள் கருத்தினைக் கண்டு மிகவும் மகிழ்ந்தேன் அக்கா..எல்லாப் பெண்களும் இவ்வாறே இருந்துவிட்டால் இது போன்ற கவிதைக்கு தேவையே இருக்காது..ஆனால் இருப்பதில்லையே :(

கருத்துக்கு நன்றி அக்கா. :)

Anonymous said...

எரிக்கிறாய் ; எரிகிறேன் ! <<<


தலைப்பிற்கு வெகுபொருத்தமாய்த்தான் வார்த்தைகளைக் கையாண்டிருக்கின்றீர்கள் ரிஷான். ஆனால் எரிப்பது யாரோ?




எனதுயிருருக்கும் பாடலைப்
பின்பற்றி வந்த உன் நேசம்
எனக்கென்றிருந்த
ஒரேயொரு கேடயத்தையும்
மூலைக்கொன்றாக உடைத்துப் போட்டதில்
வருத்தம்தான் எனக்கு<<<


நேசம் எப்படி உடைத்துப்போடும் என்பது புரியவில்லை; ஆனால் நாம் நேசிப்பவர்கள் தான் நம்மை உடைத்துப்போட்டுவிடுகின்றார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை :)



ஆதியின் மூலங்களறுத்து,
சார்ந்திருந்த அரண்களையுடைத்து
உனை நம்பி வந்த நான்
காணும் எல்லாவற்றிலும்
நீ மட்டுமே
காட்சிப் பொருளாக வேண்டுமென்கிறாய்<<<

'இது அன்பை மீறிய சுயநலமோ" அது 'வெறியாக மாறினால் 'அபாயத்தின் கட்டம் தான்"...



நட்சத்திரங்களை எனக்காக
வளைப்பதாகச் சொன்ன நீ<<<

நட்சத்திரங்களை எதுக்காக வளைக்கணும்? வளைஞ்சிட்டிருக்கிற 'வானவில்லையே வளைப்போம்" என்று விடுகின்ற கதைகளைத்தான் கேட்டிருக்கின்றேன் :))


எனதழகு மின்னிடும் பொழுதுகளில்
பீதியுடன் முறைக்கிறாய்
எனது குரல்வளையினை நெரித்து
உனது நிம்மதிக்கான
பிரார்த்தனை கீதங்களைப்
பாடச் சொல்கிறாய்<<<

ரொம்பவும் கொடுமைங்க இது!!!



என் நெற்றியில் தொடங்கியுன்
கூராயுதங்கள் கீறுகின்றன
உயிருருகி வழியும் குருதியில்
தாகம் தணித்துக்கொள்கிறாய்
என் உயிரின் மூலங்களை
உன் வார்த்தைகளால் வேரறுக்கிறாய்
என் வாழ்வின் தீர்ப்பினை
இவ்வாறு நீயே எழுதுகிறாய் <<<

அத்தனை தூரம் உங்களை மீறி உங்களை ஆக்கிரமித்துக்கொள்ளும் உங்கள் எண்ணம் சரியல்லவே!!!



சிம்மாசனங்கள் வேண்டவில்லை
செங்கோலையும் தீண்டவில்லை
ஆட்சிகள்,ஆகிருதிகள் அத்தனையும்
உன்னுடையதாகவே இருக்கட்டும்
நானென்ன கேட்கிறேன்
பறவையின் உதிர்ந்த சிறு இறகினைப் போல
எடைகளற்றுத்தானே
இருக்கின்றன என் தேவைகள் << இந்த வரிகளை மிகவும் ரசித்தேன் ரிஷான். அழகான ஆழமான கருத்தை உதிர்த்திச் செல்லும் வரிகள்.






இறுதியாக
வாழ்வுக்கு ஒளியூட்டுவதாகச் சொல்லி
என் நெஞ்சின் ஓரத்தில்
தீச்சுடரை வைத்து - அது
பற்றி எரியும் போதினில் குளிர்காய்கிறாய்.
பரவாயில்லை.
உனது சந்தோஷங்களுக்காக நானெரிகிறேன்.
இப்படியே விட்டுவிடலாமென்னை <<<

அழுதுகொண்டே எரிவதில்லை சம்மதம் இல்லை எனக்கு;...

'






--
என்றென்றும்
சுதனின்விஜி

Anonymous said...

வழக்கம்போல வார்த்தைமுத்துக்களை சிரத்தையுடன் எடுத்து கவிதை நூலில்
தொடுத்த மாலை! ஆனால் எதற்கு கடைசியில்இப்படி ஒரு தியாகம்? நெஞ்சின் ஓரத்தில் தீ வைப்பவர்களின் சந்தோஷத்துக்காக நாமும் எரிவதா. எனக்கும்

இதில் சம்மதம் இல்லை ரிஷான் அது கவிதையாயினும்!

M.Rishan Shareef said...

அன்பின் விஜி சுதன்,

உங்கள் விரிவான விமர்சனத்தை ரசித்தேன் சகோதரி.


//நேசம் எப்படி உடைத்துப்போடும் என்பது புரியவில்லை; ஆனால் நாம் நேசிப்பவர்கள் தான் நம்மை உடைத்துப்போட்டுவிடுகின்றார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை :)//


நிச்சயமாக ..:)



//ஆதியின் மூலங்களறுத்து,

சார்ந்திருந்த அரண்களையுடைத்து
உனை நம்பி வந்த நான்
காணும் எல்லாவற்றிலும்
நீ மட்டுமே
காட்சிப் பொருளாக வேண்டுமென்கிறாய்<<<

'இது அன்பை மீறிய சுயநலமோ" அது 'வெறியாக மாறினால் 'அபாயத்தின் கட்டம் தான்"...//

அன்பை மீறிய சுயநலம் அல்லது ஆதிக்கவெறி..



// நட்சத்திரங்களை எனக்காக
வளைப்பதாகச் சொன்ன நீ<<<

நட்சத்திரங்களை எதுக்காக வளைக்கணும்? வளைஞ்சிட்டிருக்கிற 'வானவில்லையே வளைப்போம்" என்று விடுகின்ற கதைகளைத்தான் கேட்டிருக்கின்றேன் :))//


நட்சத்திரங்களைக் கொண்டுதான் திசைகளையும், காலங்களையும், சகுனங்களையும் பார்ப்பார்கள். இங்கு நட்சத்திரங்களை வளைப்பதாகச் சொன்னது மேற்கூறிய அனைத்தையும் வசப்படுத்தித்தருவதாக வாக்களித்து ஏமாற்றியதைத்தான் :))


//எனதழகு மின்னிடும் பொழுதுகளில்
பீதியுடன் முறைக்கிறாய்
எனது குரல்வளையினை நெரித்து
உனது நிம்மதிக்கான
பிரார்த்தனை கீதங்களைப்
பாடச் சொல்கிறாய்<<<

ரொம்பவும் கொடுமைங்க இது!!!//


நிறைய இடங்களில் நடக்கும் நிதர்சனமும் இதுவே :(



//சிம்மாசனங்கள் வேண்டவில்லை
செங்கோலையும் தீண்டவில்லை
ஆட்சிகள்,ஆகிருதிகள் அத்தனையும்
உன்னுடையதாகவே இருக்கட்டும்
நானென்ன கேட்கிறேன்
பறவையின் உதிர்ந்த சிறு இறகினைப் போல
எடைகளற்றுத்தானே
இருக்கின்றன என் தேவைகள் << இந்த வரிகளை மிகவும் ரசித்தேன் ரிஷான். அழகான ஆழமான கருத்தை உதிர்த்திச் செல்லும் வரிகள்.






இறுதியாக
வாழ்வுக்கு ஒளியூட்டுவதாகச் சொல்லி
என் நெஞ்சின் ஓரத்தில்
தீச்சுடரை வைத்து - அது
பற்றி எரியும் போதினில் குளிர்காய்கிறாய்.
பரவாயில்லை.
உனது சந்தோஷங்களுக்காக நானெரிகிறேன்.
இப்படியே விட்டுவிடலாமென்னை <<<

அழுதுகொண்டே எரிவதில்லை சம்மதம் இல்லை எனக்கு;...//


எனக்கும் சம்மதம் இல்லை.ஆனால் நிறையப் பேர் இன்னும் எரிகிறார்கள்.பலர் அதில் குளிர்காய்கிறார்கள். அதைத் தான் இங்கு எழுத்துக்களாகக் கொட்டியிருக்கிறேன்.

விரிவான கருத்துக்கு நன்றி சகோதரி.

M.Rishan Shareef said...

அன்பின் ஷைலஜா அக்கா,


// வழக்கம்போல வார்த்தைமுத்துக்களை சிரத்தையுடன் எடுத்து கவிதை நூலில்
தொடுத்த மாலை! //


நன்றி அக்கா :))

//ஆனால் எதற்கு கடைசியில்இப்படி ஒரு தியாகம்? நெஞ்சின் ஓரத்தில் தீ வைப்பவர்களின் சந்தோஷத்துக்காக நாமும் எரிவதா. எனக்கும்

இதில் சம்மதம் இல்லை ரிஷான் அது கவிதையாயினும்!//


நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இன்னும் பல நேசங்கள் பிரிவின் நூலிழையைத் தொட்டுவிடாமல் அரணாய் நிற்பது இந்த விட்டுக் கொடுத்தல் தானே அக்கா ?

Anonymous said...

ஆதியின் மூலங்களறுத்து,
> சார்ந்திருந்த அரண்களையுடைத்து
> உனை நம்பி வந்த நான்
> காணும் எல்லாவற்றிலும்
> நீ மட்டுமே
> காட்சிப் பொருளாக வேண்டுமென்கிறாய்

இத்தகைய பொஸஸிவ்னஸ் பல நேரங்களில் அன்பை முறித்துப் போடுகிறது .


> நட்சத்திரங்களை எனக்காக
> வளைப்பதாகச் சொன்ன நீ
> எனதழகு மின்னிடும் பொழுதுகளில்
> பீதியுடன் முறைக்கிறாய்

பாரியாள் ரூபவதி சத்ரு..... என்று எவரோ சொல்லி வைத்த விஷ வரிகள் ஏனோ
நினைவுக்கு வருகின்றன
>
எனது குரல்வளையினை நெரித்து
> உனது நிம்மதிக்கான
> பிரார்த்தனை கீதங்களைப்
> பாடச் சொல்கிறாய்
>
> என் நெற்றியில் தொடங்கியுன்
> கூராயுதங்கள் கீறுகின்றன
> உயிருருகி வழியும் குருதியில்
> தாகம் தணித்துக்கொள்கிறாய்
> என் உயிரின் மூலங்களை
> உன் வார்த்தைகளால் வேரறுக்கிறாய்
> என் வாழ்வின் தீர்ப்பினை
> இவ்வாறு நீயே எழுதுகிறாய்

>
> சிம்மாசனங்கள் வேண்டவில்லை
> செங்கோலையும் தீண்டவில்லை
> ஆட்சிகள்,ஆகிருதிகள் அத்தனையும்
> உன்னுடையதாகவே இருக்கட்டும்
> நானென்ன கேட்கிறேன்
> பறவையின் உதிர்ந்த சிறு இறகினைப் போல
> எடைகளற்றுத்தானே
> இருக்கின்றன என் தேவைகள்
அருமையான வரிகள்
>
> இறுதியாக
> வாழ்வுக்கு ஒளியூட்டுவதாகச் சொல்லி
> என் நெஞ்சின் ஓரத்தில்
> தீச்சுடரை வைத்து - அது
> பற்றி எரியும் போதினில் குளிர்காய்கிறாய்.
> பரவாயில்லை.
> உனது சந்தோஷங்களுக்காக நானெரிகிறேன்.
> இப்படியே விட்டுவிடலாமென்னை

இத்தனை உணர்வுகளை எப்படி வார்த்தைகளில் ஆட்கொள்கிறீர்கள் என்பதை பல நேரம்
நான் வியந்திருக்கிறேன் .
இத்தகைய வாழ்வைக் காட்டிலும் எரிவதே மேல் தான் .
அருமையான கவிதை ரிஷான் .

பூங்குழலி

Anonymous said...

அண்ணா,
மீண்டும் வ‌லிக‌ளைக் கிள‌றிய‌து இந்த‌ வ‌ரிக‌ள். இப்ப‌டியான
காய‌ங்க‌ளுக்கும், வ‌லிக‌ளுக்கும் ந‌ம்முடைய அதீத எதிர்பார்ப்புதான்
கார‌ண‌மோன்னு தோணுது.

M.Rishan Shareef said...

அன்பின் பூங்குழலி,


//இத்தனை உணர்வுகளை எப்படி வார்த்தைகளில் ஆட்கொள்கிறீர்கள் என்பதை பல நேரம்

நான் வியந்திருக்கிறேன் .
இத்தகைய வாழ்வைக் காட்டிலும் எரிவதே மேல் தான் .
அருமையான கவிதை ரிஷான் .//


உங்கள் கருத்து என்னை மகிழ்விக்கிறது. நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் சகோதரி,


அண்ணா,
மீண்டும் வ‌லிக‌ளைக் கிள‌றிய‌து இந்த‌ வ‌ரிக‌ள். இப்ப‌டியான
காய‌ங்க‌ளுக்கும், வ‌லிக‌ளுக்கும் ந‌ம்முடைய அதீத எதிர்பார்ப்புதான்
கார‌ண‌மோன்னு தோணுது.

அதீத எதிர்பார்ப்புக்கள் மட்டுமல்ல..அடுத்தவரை மனக்காயத்துக்குள்ளாக்கும் எதிர்பார்ப்புக்களும் கூட.. :(

கருத்துக்கு நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...
This comment has been removed by the author.
Anonymous said...

அன்பின் ரிஷான்,

உணர்ச்சிகுவியல்கள் ஒன்றாக ஒரே மலரின் மனம் கமழும் இதழ்களாக விரிவது
போன்று அற்புதமான கவிதையை வடித்துள்ளீர்கள்.

அழகான வார்த்தைகளை உணர்ச்சிகளின் அர்த்தம் ஜொலிக்கும் வகை கட்டி
கவிதையமைத்துள்ளீர்கள்.

பாராட்டுக்கள்

அன்புடன்
சக்தி

Anonymous said...

அன்பு ரிஷான் ஹிந்தி கவிதாயினி திருமதி மஹாதேவி வர்மா போல் பீடாவாதி
{peedavadhi kavi} எனக்கு உங்கள் கவிதைகள் தெரிகிறது ,இதயத்தில் ஊசி
குத்துவது போல் ஒரு உணர்வு வந்தாலும் கூடவே ஒரு மலரின் மென்மையும்
கிடைத்து விடுகிறது , அருமை அன்புடன் விசாலம்

Anonymous said...

விவரிக்க இயலவில்லை
வாழ்த்துக்கள்

M.Rishan Shareef said...

அன்பின் வாணி,



//ரிஷான்,

இந்தக் கவிதையை ஒவ்வொரு முறை படிக்கும்போதும் பொருளும்
அழுத்தமும் கூடிட்டே போகுது...:)



///உனை நம்பி வந்த நான்
காணும் எல்லாவற்றிலும்
நீ மட்டுமே
காட்சிப் பொருளாக வேண்டுமென்கிறாய்/////


இது ஒருவித அன்பின் வெளிப்பாடாகவே கருதலாமே.... ///


அன்பின் வெளிப்பாடு அடக்குமுறையோ, ஆதிக்கமோ அல்லவே சகோதரி...இரண்டையும் கொண்டு ஒருவரை வழிநடத்தலாம்..ஆனால் அன்பைத் தோற்றுவிக்க இயலாதே.. அன்பு ஒரு பூ என்றால் அதை மலரச் செய்ய இயந்திரங்கள் உதவாது.. :)

M.Rishan Shareef said...

அன்பு நண்பர் சக்தி சக்திதாசன்,



// உணர்ச்சிகுவியல்கள் ஒன்றாக ஒரே மலரின் மனம் கமழும் இதழ்களாக விரிவது
போன்று அற்புதமான கவிதையை வடித்துள்ளீர்கள்.

அழகான வார்த்தைகளை உணர்ச்சிகளின் அர்த்தம் ஜொலிக்கும் வகை கட்டி
கவிதையமைத்துள்ளீர்கள்.

பாராட்டுக்கள்//

அவ்வளவு வேலைப்பளுக்களுக்கு மத்தியிலுமான உங்கள் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் விசாலம் அம்மா,


///அன்பு ரிஷான் ஹிந்தி கவிதாயினி திருமதி மஹாதேவி வர்மா போல் பீடாவாதி

{peedavadhi kavi} எனக்கு உங்கள் கவிதைகள் தெரிகிறது ,இதயத்தில் ஊசி
குத்துவது போல் ஒரு உணர்வு வந்தாலும் கூடவே ஒரு மலரின் மென்மையும்
கிடைத்து விடுகிறது , அருமை அன்புடன் விசாலம்///


உங்கள் கருத்தில் மகிழ்கிறேன். பாராட்டுக்களுக்கு நன்றி அம்மா :)

M.Rishan Shareef said...

அன்பின் துரை,


//விவரிக்க இயலவில்லை
வாழ்த்துக்கள்//


வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே :)