Tuesday, July 15, 2008
உன்னைப் புலம்பும் எனது பாடல் !
அதுவொரு பெருமழைக்காலம் !
வனாந்தரங்களின் பசுமையை,
பனிக்கால நீரோடைகளின் குளிர்ச்சியை,
பூஞ்சோலைகளின் பேரழகை,
ஆலப்பெரு மரங்களின் நிழல்களை
அவள் கொண்டிருந்ததாக
நீ எண்ணி எண்ணித் திளைத்த காலம் !
ஒரு துர்தேவதையின் பாடல்கள் மட்டுமுன்
செவிகளை நிரப்பிய காலம் ,
அவளுக்கான சாபங்களனைத்தும்
உன்னைப் பீடித்தலையத்
தருணம் பார்த்துக் காத்திருந்த காலம் ;
அத்தனையையும் அறியாது - நீ
அவளுக்கு நேசனானாய் !
அவளது அழகிய மாயநதியில்
நீ மூழ்கிச் சுவாசம் மறந்தாய் ;
உன் இமைகளைப் பிடுங்கி
அது கொண்டவளை
ஓவியங்கள் வரைந்திட்டாய் !
அவளது ஆன்மாவின் சலனங்கள்
நாணத்தைத் தொலைத்தன,
பாதங்களை முக்காடுகள்
போர்த்திக் கொண்டன ;
அன்றுதான் நண்பனே - நீ
பைத்தியமானாய் !
பறவையொன்று சத்தமிட்டுச் சிரித்ததென
அவள் சொல்லிப் போனாலும்
நம்பிப் புருவமுயர்த்தி ரசித்து மகிழ்ந்தாய் !
முகவரியற்ற சுவர்களையுன்
இருப்பிடமாக்கிக் காலம் பார்த்தது ;
அவளது காலடிச் சுவடுகளிலுன்
உயிரினைத் தேடிய நீ
காலத்தைப் பார்க்கமறந்திட்டாய் !
அந்தக் காலம்தான்
உன்னைக் கல்லறையிலும்,
அவளை மணவறையிலும்
இருத்தி அழகுபார்க்கிறதின்று !
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Subscribe to:
Post Comments (Atom)
63 comments:
முன்னாள்''தமிழகத்தின் தலைவன்''
இப்போது "புதுகைச் சாரல் "
நம்பளும் .......வந்துட்டோம்ல
நான்தான் மொதல்ல!
///அந்தக் காலம்தான்
உன்னைக் கல்லறையிலும்,
அவளை மணவறையிலும்
இருத்தி அழகுபார்க்கிறதின்று ///
என்னப்பா இப்பிடி சோகமா முடிச்சிட்டே???
அன்புடன் அருணா
'நச்' எனப் பிடித்தவை..
முகவரியற்ற சுவர்களையுன்
இருப்பிடமாக்கிக் காலம் பார்த்தது ;
அவளது காலடிச் சுவடுகளிலுன்
உயிரினைத் தேடிய நீ
காலத்தைப் பார்க்கமறந்திட்டாய் !
//
மற்றவை பலமுறை கேட்டவை..//
//அவளது அழகிய மாயநதியில்
நீ மூழ்கிச் சுவாசம் மறந்தாய் ;
உன் இமைகளைப் பிடுங்கி
அது கொண்டவளை
ஓவியங்கள் வரைந்திட்டாய் !//
அழகான வரிகள் ரிஷான்..
//முகவரியற்ற சுவர்களையுன்
இருப்பிடமாக்கிக் காலம் பார்த்தது ;
அவளது காலடிச் சுவடுகளிலுன்
உயிரினைத் தேடிய நீ
காலத்தைப் பார்க்கமறந்திட்டாய் !//
காதலில் தோற்றவர்களுக்கு மட்டுமன்றி வாழ்க்கையில் தோற்றவர்களுக்கும் பொருந்தும் வரிகள்..
உண்மை.. நான் கூட அப்படியொருத்தியைத்தான் நம்பிக்கிடந்தேன், என் முட்டாள்தனம் புரிந்த பின்னும் கூட.. என்ன செய்வது.. காதல் கொடியது..
kalakkal
//Gokulan said...
உண்மை.. நான் கூட அப்படியொருத்தியைத்தான் நம்பிக்கிடந்தேன், என் முட்டாள்தனம் புரிந்த பின்னும் கூட.. என்ன செய்வது.. காதல் கொடியது..//
;-))
நண்பா ரொம்ப அருமை நண்பா.........
காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கு நல்லா புரியும் நண்பா .......
என்னோட வாழ்கையில் இதுவும் நடந்து இருக்கிறது ஆனால் முடிவு நீங்கள் சொல்லி இருப்பது போல் இல்லை.......
மொத்தத்தில் ரொம்ப அருமையான உலகத்தின் உண்மை நண்பா!!
//புதுகைச் சாரல் said...
முன்னாள்''தமிழகத்தின் தலைவன்''
இப்போது "புதுகைச் சாரல் "
நம்பளும் .......வந்துட்டோம்ல //
வாங்க புதுகைச் சாரல் :)
//என்னப்பா இப்பிடி சோகமா முடிச்சிட்டே???
அன்புடன் அருணா //
வாங்க அருணா.
சில காதல்கள் துணையெனக் கருதும் ஜோடிகள் ஏமாற்றுகையில் சோகத்திலேயே முடிகின்றன. என்ன செய்ய ?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)
அன்பின் தமிழ்ப்பறவை,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் கவிநயா,
//காதலில் தோற்றவர்களுக்கு மட்டுமன்றி வாழ்க்கையில் தோற்றவர்களுக்கும் பொருந்தும் வரிகள்.. //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி:)
கோகுலன்,
//உண்மை.. நான் கூட அப்படியொருத்தியைத்தான் நம்பிக்கிடந்தேன், என் முட்டாள்தனம் புரிந்த பின்னும் கூட.. என்ன செய்வது.. காதல் கொடியது..//
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..!
வாங்க கானா பிரபா..
//kalakkal//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
வாங்க கலீல்,
உங்கள் முதல்வருகை என நினைக்கிறேன்.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
//நண்பா ரொம்ப அருமை நண்பா.........
காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கு நல்லா புரியும் நண்பா .......
என்னோட வாழ்கையில் இதுவும் நடந்து இருக்கிறது ஆனால் முடிவு நீங்கள் சொல்லி இருப்பது போல் இல்லை.......
மொத்தத்தில் ரொம்ப அருமையான உலகத்தின் உண்மை நண்பா!!//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)
உங்கள் கவிதை சுப்பர் ரிஷான்.
காதலில் தோற்பது இருபக்கத்திலும் தான்..ஆனாலும் கவிதை சொல்லா காதலின் வலியை அந்த படம் பாதி சொல்லுகிறது.. எங்கிருந்து தான் தேடிப் பிடிகிறீர்கள் ?
வாழ்த்துக்கள்
வணக்கம் ரிஷான்.
காதல் ரொம்ப படுத்தியிருக்கு போல. அதிகமா காதல் கவிதைகள்தான் எழுதியிருக்கீங்கன்னு நினைக்கிறேன்.
நல்லாயிருக்கு.
சமீபத்துல இலங்கை வந்திருந்தேன். கண்டி பொட்டானிக்கல் கார்டன்ல ஏகப்பட்ட லவ் ஜோடி. அங்க லவ் மட்டும் நடக்கலை.
உங்க ஏரியா எங்கன்னு தெரியலை. இன்னும் மூணு மாசத்துல வருவேன். நீங்க இப்ப இலங்கையிலதான் இருக்கீங்களா?
வாழ்த்துகள்.
அன்பின் ரிஷான்
"அந்தக் காலம்தான்
உன்னைக் கல்லறையிலும்,
அவளை மணவறையிலும்
இருத்தி அழகுபார்க்கிறதின்று !"
இரு தரப்புக்கும் இந்தவரிகள் சொந்தமானவை. அதிகம் அன்பை எதிர்பார்த்தவர்கள் மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.
உங்களுக்கு எங்கிருந்து இந்த அனுபவமெல்லாம் வந்து சேர்கின்றனவென்று தான் யோசிக்கிறேன்
நல்லாயிருக்கு..ஆனால் ஏன் சோகமா இருக்கு சகோதரா? :(
அன்பின் சக்தி,
//உங்கள் கவிதை சுப்பர் ரிஷான்.
காதலில் தோற்பது இருபக்கத்திலும் தான்..//
காதலில் தோற்பது இருபுறமும் என்றாலும் அன்பின் பாரம் கூடிய பக்கம் தோல்வியில் கீழிறங்கி வாடும் சாத்தியம் அதிகமல்லவா ஸ்னேகிதி ??
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி :)
//ஆடுமாடு said...
வணக்கம் ரிஷான்.
காதல் ரொம்ப படுத்தியிருக்கு போல. அதிகமா காதல் கவிதைகள்தான் எழுதியிருக்கீங்கன்னு நினைக்கிறேன்.
நல்லாயிருக்கு.//
அன்பின் நண்பருக்கு,
உங்கள் வருகை எனக்கு மகிழ்வினைத் தருகிறது. :)
நல்லவேளை காதலில் இன்னும் பட்டறியவில்லை. ஆனால் சில சினேகங்களின் துரோகத்தால் வதைப்பட்டு நொந்திருக்கிறேன்.
//சமீபத்துல இலங்கை வந்திருந்தேன். கண்டி பொட்டானிக்கல் கார்டன்ல ஏகப்பட்ட லவ் ஜோடி. அங்க லவ் மட்டும் நடக்கலை.
உங்க ஏரியா எங்கன்னு தெரியலை. இன்னும் மூணு மாசத்துல வருவேன். நீங்க இப்ப இலங்கையிலதான் இருக்கீங்களா?//
அந்த பொட்டானிக்கல் கார்டன் எங்கள் ஊருக்கு அருகாமையில் தான். அரை மணித்தியாலப்பயணம். பொதுவாக இந்தியாவிலிருந்து வந்து நிறையப் படப்பிடிப்புக்கள் நடக்கும் இடம்.
நான் இப்பொழுது கத்தாரில் இருக்கிறேன். உங்கள் மீள்வருகையின் போது சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தால் மகிழ்வேன்.
//வாழ்த்துகள்.//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் பஹீமா ஜஹான்,
//இரு தரப்புக்கும் இந்தவரிகள் சொந்தமானவை. அதிகம் அன்பை எதிர்பார்த்தவர்கள் மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள். //
சரியாகச் சொன்னீர்கள் சகோதரி. அதிகம் அன்பைக் காட்டியவர்களும் மிக மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள். நேசத்தை விளையாட்டாக எடுத்துக் கொண்டவர்கள் மிக இயல்பாக அன்பை உதறிவிட்டு வேறு நேசங்களைத் தேடிக் கொள்கிறார்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)
அன்பின் வரவனையான்,
உங்கள் முதல்வருகை என நினைக்கிறேன்..உங்கள் வரவு நல்வரவாக அமையட்டும்.
//நல்லாயிருக்கு..ஆனால் ஏன் சோகமா இருக்கு சகோதரா? :( //
சில வலிகளைச் சோகமாகத்தான் சொல்லமுடிகிறது. என்ன செய்ய ?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
உங்கள் கவிதைகள் படித்து கொண்டு இருக்கிறேன்.. அவை வலி மிக்கதாயும் வலிமையாயும் இருந்தது..
நண்பரே..
காட்சிகள் மாறும் நண்பரே..
இது விதி.. விதிகள் எப்போதும் வட்டவடிவானவை.. சுழன்றுகொண்டேயிருக்கும்..
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.. பிற்பகல் செய்யின் மறுநாளின் முற்பகலில் விளையும்..
அந்நாளின் இரவு மட்டுமே உண்மையறியும்..
விடியாது போனதாய் எங்கும் சரித்திரமில்லை..
உங்கள் மொத்த பதிவுகளையும் படித்துவிட்டேன்..
உங்கள் எல்லா கவிதைகளும் அற்புதம்.
இன்னும் நிறைய எழுதுங்கள்..
:)
//முகவரியற்ற சுவர்களையுன்
இருப்பிடமாக்கிக் காலம் பார்த்தது ;
அவளது காலடிச் சுவடுகளிலுன்
உயிரினைத் தேடிய நீ
காலத்தைப் பார்க்கமறந்திட்டாய் !//
இப்படித் தன்னைத் தொலைத்துக் காலத்தைப் பார்க்க மறந்து மறுத்தவர்களை எல்லாம் காலம் எங்கு கொண்டு நிறுத்தியது நிறுத்தும் என அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் ரிஷான்.
கவிநயா said...
//காதலில் தோற்றவர்களுக்கு மட்டுமன்றி வாழ்க்கையில் தோற்றவர்களுக்கும் பொருந்தும் வரிகள்..//
வழி மொழிகிறேன்.
அன்பின் சரவணகுமார்,
//உங்கள் மொத்த பதிவுகளையும் படித்துவிட்டேன்..
உங்கள் எல்லா கவிதைகளும் அற்புதம்.
இன்னும் நிறைய எழுதுங்கள்..
:)//
எனது எல்லாக் கவிதைகளையும் வாசித்ததோடு நின்றுவிடாமல் எல்லாவற்றுக்கும் கருத்துக்களெழுதியும் ஊக்கப்படுத்துகிறீர்கள். இன்னும் எழுதுவேன் நண்பரே :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் ராமலக்ஷ்மி,
//இப்படித் தன்னைத் தொலைத்துக் காலத்தைப் பார்க்க மறந்து மறுத்தவர்களை எல்லாம் காலம் எங்கு கொண்டு நிறுத்தியது நிறுத்தும் என அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் ரிஷான்.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)
Romba nalla irukku... anna(chi)..
super ah ezhuthureenga...?
antha uvamai vaithu thaan enakku ezhutha theriyala.. neenga ellam gr8... rishanu..
வாங்க மஹாராஜா,
//Romba nalla irukku... anna(chi)..
super ah ezhuthureenga...?
antha uvamai vaithu thaan enakku ezhutha theriyala.. neenga ellam gr8... rishanu.. //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மன்னா :P
Unnai pulambum unathu VARIGAL. Un pugal Ulagameangum pulamba naan kadaulidam pulambukindrean...
அன்பின் புன்னகை,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)
அதுவொரு பெருமழைக்காலம் !
வனாந்தரங்களின் பசுமையை,
பனிக்கால நீரோடைகளின் குளிர்ச்சியை,
பூஞ்சோலைகளின் பேரழகை,
ஆலப்பெரு மரங்களின் நிழல்களை
அவள் கொண்டிருந்ததாக
நீ எண்ணி எண்ணித் திளைத்த காலம>>>>>>//
பசுமை நினைவுகளை மழையோடு ஆரம்பித்திருப்பது அருமை.
கவிதை வரிகள் சகஜமாய் வந்து விழுகின்றன.
//அத்தனையையும் அறியாத - நீ
அவளுக்கு நேசனானாய் !//
புரிகிறது!
//
அவளது அழகிய மாயநதியில்
நீ மூழ்கிச் சுவாசம் மறந்தாய் ;
உன் இமைகளைப் பிடுங்கி
அது கொண்டவளை
ஓவியங்கள் வரைந்திட்டாய் !/!!!!!!
மாயநதி! எத்தனை ஆழ்ந்த பொருள் கொண்ட சொல் இது! ரிஷானின் கவிதையில் தான் முதன்முறையாய் காண்கிறேன்.அதற்கே முதல்பாராட்டு! இமைகளைப்பிடுங்கி அதில் ஓவியம்.....வார்த்தைகளில் வலி தெரிகிறது.
//
முகவரியற்ற சுவர்களையுன்
இருப்பிடமாக்கிக் காலம் பார்த்தது ;
அவளது காலடிச் சுவடுகளிலுன்
உயிரினைத் தேடிய நீ
காலத்தைப் பார்க்கமறந்திட்டாய் //
உயிர் தேடியதால் உலகமே
மறந்துதானேபோகும்?
//
அந்தக் காலம்தான்
உன்னைக் கல்லறையிலும்,
அவளை மணவறையிலும்
இருத்தி அழகுபார்க்கிறதின்று //
எத்தனை சோகம் இந்த வரிகளில்! மணவறையிலிருந்தாலும் அவளின் மனம் அவளிடம் இருக்கமுடியாது.
ஏனென்றால் அது பெண்மனம்!
சோகத்தை மெல்லியப்படலமாய் பரப்பும் சிறந்த கவிதை ரிஷான் பாராட்டுக்கள்!
அன்பின் ஷைலஜா,
கவிதையின் ஒவ்வொரு பத்தியையும் அழகாக விமர்சித்திருக்கிறீர்கள்.
//சோகத்தை மெல்லியப்படலமாய் பரப்பும் சிறந்த கவிதை ரிஷான் பாராட்டுக்கள்!//
வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி சகோதரி :)
நண்பனின் ஆழமான காதலை அழகாகவும்,
இறுதியில் காதல் தோல்வியினை வலியோடுவும்
சொல்லும் வரிகள்.....
வழக்கம் போல அருமையாகயிருக்கிறது ரிஷி...
வாழ்த்துகள் சகோதரா.....
> உன்னைப் புலம்பும் எனது பாடல் !
> அதுவொரு பெருமழைக்காலம்
> வனாந்தரங்களின் பசுமையை
> பனிக்கால நீரோடைகளின் குளிர்ச்சியை
> பூஞ்சோலைகளின் பேரழகை
> ஆலப்பெரு மரங்களின் நிழல்களை
> அவள் கொண்டிருந்ததாக
> நீ எண்ணி எண்ணித் திளைத்த காலம்
எல்லா காதலுமே ஆரம்பத்தில் இப்படித்தானே இருக்கிறது
>
> ஒரு துர்தேவதையின் பாடல்கள் மட்டுமுன்
> செவிகளை நிரப்பிய காலம்
> அவளுக்கான சாபங்களனைத்தும்
> உன்னைப் பீடித்தலையத்
> தருணம் பார்த்துக் காத்திருந்த காலம்
> அத்தனையையும் அறியாது - நீ
> அவளுக்கு நேசனானாய்
அவளுக்கான சாபங்கள் என்று சொன்னது நன்றாக பொருந்துகிறது .தகுதியில்லாத
இடத்தில் சேர்ந்த காதல் என்பதை சொல்லும் விதத்தில் ...
> அவளது அழகிய மாயநதியில்
> நீ மூழ்கிச் சுவாசம் மறந்தாய்
> உன் இமைகளைப் பிடுங்கி
> அது கொண்டவளை
> ஓவியங்கள் வரைந்திட்டாய்
காதலில் சகலமும் மறந்து ....சுயம் மறந்து ...
>
> அவளது ஆன்மாவின் சலனங்கள்
> நாணத்தைத் தொலைத்தன
> பாதங்களை முக்காடுகள்
> போர்த்திக் கொண்டன
> அன்றுதான் நண்பனே - நீ
> பைத்தியமானாய்
> பறவையொன்று சத்தமிட்டுச் சிரித்ததென
> அவள் சொல்லிப் போனாலும்
> நம்பிப் புருவமுயர்த்தி ரசித்து மகிழ்ந்தாய்
இது காதலில் பேசப்படும் "sweet nothings" என்று சொல்கிறார்களே அதை
சார்ந்தது என்று நினைக்கிறேன் .அடுத்தவர்களுக்கு இது
பைத்தியக்காரத்தானமாக தோன்றும் தானே ...
>
> முகவரியற்ற சுவர்களையுன்
> இருப்பிடமாக்கிக் காலம் பார்த்தது
> அவளது காலடிச் சுவடுகளிலுன்
> உயிரினைத் தேடிய நீ
> காலத்தைப் பார்க்கமறந்திட்டாய்
>
வலிமையான சொற்கள்
> அந்தக் காலம்தான்
> உன்னைக் கல்லறையிலும்
> அவளை மணவறையிலும்
> இருத்தி அழகுபார்க்கிறதின்று
வேதனையான முடிவு .அவளுடைய காலடியில் உயிரினை தேடிய போதே அவர் மரித்துப்
போனார் தானே ..எப்பொழுதும் போலவே உணர்ச்சிகளை உள்ளடக்கிய வலிமையான கவிதை
(இது உங்கள் நண்பரின் அனுபவமா ?)
காதலுக்கு கண் இல்லை..
காதலிக்கும் போது தான் கவிதை என்று
எதாவது எழுதுவார்கள்.. காதல் தோல்வியிலுமா??
மன்னியுங்கள் ரிஷான்..
நீங்களே புலம்பல் என்று சொல்லி விட்டீர்கள்..
கவிதையாய் எனக்கும் தெரியவில்லை.. அல்லது
எனக்கு தான் புதுக்கவிதை வடிவம் புரியவில்லையோ?
நட்பு நாடும்.. சரவணன்
> காலத்தைப் பார்க்கமறந்திட்டாய்
ரிஷான்,
வாட்சுல அலாரம் வெச்சுக்கவேண்டியதுதான :-)
கவிதை நல்லாருக்கு, ஆனா ஏன் இப்படி இளஞர்களெல்லாம் பண்புத்தொகையால கவிதைய
ஆக்கிரமிக்கணும்னு நெனைக்றீங்க.
அப்புறம்,
> பாதங்களை முக்காடுகள்
> போர்த்திக் கொண்டன
சரிதானா?
பாதங்கள எடுத்து முக்காடு தன்னைப் போர்த்திக்கிச்சா?
இல்ல
பாதங்களை முக்காடுகள் போர்த்தினவா?
இந்த
பெருமழைக்காலம்
பெருவெளி
மீயுணர்ச்சி
இதெல்லாம் இருந்தாத்தான் கவிதைன்னு நெனைக்றது தப்பு.
இதெல்லாம் இல்லாமலும் இதே கவிதைய எழுதலாம்.
ரிஷான்!
நான் கேட்க வேண்டுமென்று நினைத்ததை கேட்டு விடுகிறேன்.
உங்கள் கவிதைகளில் பெரும்பாலாக இப்படி துர்தேவதையாகவே ஏன் ஒருத்தி சாடப்படுகிறாள்?
குறைகள் இருப்பக்கமும் என்றும் உள்ளன அல்லவா? நம் வாய்நாற்றம் நமக்கு தெரியாதது போல நம் குறைகள் நமக்கு தெரியாது என்று நினைக்கிறேன்.
மனித காதலியை ஆரம்பத்தில் தேவதையாய் பார்ப்பதால்தான் பின்னாளில் அவள் துர்தேவதையாகவும் தெரிகிறாள்.
குறை நிறை சேர்ந்ததுதான் மனிதப்பிறவி.
குறைகள் உறுத்தினால் விட்டு விட்டு போகலாம். துர்தேவதையாக கருத வேண்டியதில்லையே. :)
காதலியே
காதலின் தொடக்கத்தில்
உனக்கு இறகுகளை சூட்டி அழகுப் பார்த்த மனம்
பின்னாளில் உனக்கு
இரு கொம்பை சூட்டி
தனக்குத் தானே
மந்திரித்து கொள்கிறது :))))))
அன்பின் நட்சத்திரா,
// நண்பனின் ஆழமான காதலை அழகாகவும்,
இறுதியில் காதல் தோல்வியினை வலியோடுவும்
சொல்லும் வரிகள்.....
வழக்கம் போல அருமையாகயிருக்கிறது ரிஷி...
வாழ்த்துகள் சகோதரா.....//
கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)
அன்பின் பூங்குழலி,
//வேதனையான முடிவு .அவளுடைய காலடியில் உயிரினை தேடிய போதே அவர் மரித்துப்
போனார் தானே ..எப்பொழுதும் போலவே உணர்ச்சிகளை உள்ளடக்கிய வலிமையான கவிதை//
நன்றி சகோதரி.
//(இது உங்கள் நண்பரின் அனுபவமா ?)//
ஆமாம்..அவன் ஒரு பொறியியலாளன்..பைத்தியமாக அலைகிறான்..உடலளவில் இறக்கவில்லை இன்னும்...
அவள் இன்னும் வாழ்கிறாள்...வெளிநாடொன்றில்... தன் கணவன், குழந்தைகளோடு... :((
அன்பின் சரவணன்,
//காதலுக்கு கண் இல்லை..
காதலிக்கும் போது தான் கவிதை என்று
எதாவது எழுதுவார்கள்.. காதல் தோல்வியிலுமா??
மன்னியுங்கள் ரிஷான்..//
மன்னிப்பெல்லாம் எதற்கு நண்பரே ? :))
பொதுவாகவே கலைத்துறையில் இருப்பவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள். அவர்களது உணர்ச்சிகளெல்லாம் அவரது கலைவடிவங்களிலேயே வெளிப்படும். ஆகவே காதலில் மட்டுமல்ல..காதல் தோல்விகளிலும் இவ்வாறான கிறுக்கல்கள் சாத்தியம் தானே நண்பரே ? :)))
அந்தக் காலம்தான்
உன்னைக் கல்லறையிலும்
அவளை மணவறையிலும்
இருத்தி அழகுபார்க்கிறதின்று .......................
காதலின் வலியை காட்டுகிறது.......அருமை..........
Regards
R.RaKesh
//கவிதை நல்லாருக்கு, ஆனா ஏன் இப்படி இளஞர்களெல்லாம் பண்புத்தொகையால கவிதைய
ஆக்கிரமிக்கணும்னு நெனைக்றீங்க.//
நன்றி ஆசாத் ஜி :)
பண்புத்தொகை? புரியவில்லை ஜி :(
//அப்புறம்,
> பாதங்களை முக்காடுகள்
> போர்த்திக் கொண்டன
சரிதானா?
பாதங்கள எடுத்து முக்காடு தன்னைப் போர்த்திக்கிச்சா?
இல்ல
பாதங்களை முக்காடுகள் போர்த்தினவா?//
இல்லை ஜி..இதில் இரண்டு அர்த்தங்கள் உள்ளன..
1. இலங்கைத் திருமணங்களில் மணப்பெண்ணின் தலை மீது போர்த்தப்படும் துணியானது பாதங்களையும் மூடி தரை வரை நீண்டு செல்லும்.. தமிழில் முக்காடு என்கிறோம். (ஆங்கிலேயத் திருமணங்களிலும் இது உண்டு. சிறுமிகள் இதைப் பின்னாலிருந்து தூக்கிக்கொண்டு மணப்பெண்ணுடன் நடப்பார்கள் ).
2. அடுத்ததாக, இஸ்லாமியப்பெண்ணின் முழு நீள உடையையும் இவ்வரிகள் குறிக்கின்றன. அதுவரை காலமும் தன்னைப் பார்த்துக் காதலித்தவனை திடீரென்று ஒரு நாள் அந்நிய ஆண் எனக் கருதி / சொல்லி தனது ஆடையால் மறைத்துக்கொண்டால் அவனது மனநிலை எப்படியிருக்கும்?
இரண்டையும்தான் சொல்லவிழைந்திருக்கிறேன் ஜி :))
இந்த
பெருமழைக்காலம்
பெருவெளி
மீயுணர்ச்சி
இதெல்லாம் இருந்தாத்தான் கவிதைன்னு நெனைக்றது தப்பு.
நிச்சயமாக..ஆனால் இங்கு பெருமழைக்காலம் எனும் இடத்தில் பயன்படுத்த எனக்கு அதைவிடவும் பொருத்தமான சொல் கிடைக்கவில்லை அல்லது தோணவில்லை ஜி.
பொதுவாகவே இதுபோன்ற சொற்கள் இலங்கையில் வழக்கிலுள்ளவைதான். பயன்படுத்துவதில் தவறில்லையே? :))
கவிதை நன்று ரிஷான்.. அவர்களின் பிடிப்பும் , பின் அவளின் விலகலும்...
// ஆமாம்..அவன் ஒரு பொறியியலாளன்..பைத்தியமாக அலைகிறான்..உடலளவில் இறக்கவில்லை இன்னும்...
அவள் இன்னும் வாழ்கிறாள்...வெளிநாடொன்றில்... தன் கணவன், குழந்தைகளோடு... :((//
எந்த ஒரு காதலிலும் பிரிவினை வந்தால் ஏன் பயித்தியமாகணும்னு தான் புரியலை...
உலகில் காதலிக்கப்படவேண்டிய விஷயம் எவ்வளவோ இருக்கே...
சமாதானத்துக்காக சொல்லவில்லை... காதல் உணர்ச்சி நம்மிடம்தானே இருக்கு, மீண்டும் துளிர்விட... ஏதாஒ காதலி அதையும் சேர்த்து கொண்டுபோனதுபோல புலம்புவது?..
ஆனா இந்த விஷயத்தில் பெண்களை பாராட்டணூம்... தைரியமானவர்கள்தான்.:)
அன்பின் எழில்,
//மனித காதலியை ஆரம்பத்தில் தேவதையாய் பார்ப்பதால்தான் பின்னாளில் அவள் துர்தேவதையாகவும் தெரிகிறாள்.
குறை நிறை சேர்ந்ததுதான் மனிதப்பிறவி.
குறைகள் உறுத்தினால் விட்டு விட்டு போகலாம். துர்தேவதையாக கருத வேண்டியதில்லையே. :) //
உங்கள் கருத்து சரிதான்.
ஆனால் சாதாரணமாக ஒருவனுக்கு தனது சிறுவயதிலிருந்து சொல்லப்படும் தேவதைக்கதைகளில் வரும் பெண் தேவதையின் அன்பைக் கொண்டவளாக ஒருத்தி கண்ணெதிரே தோன்றும்பொழுது அவளை தேவதையெனக் கொண்டாடுவது இயல்புதானே..? பின்னர் அவளே அவன் காலங்களைக் கொன்று ,வாழ்க்கையினைச் சாபமிட்டுச் சென்று, அவனுக்குத் துரோகமிழைத்தால் அவளைத் துரோகியென்றோ, துர்தேவதையென்றோ அழைப்பதில் தவறொன்றுமில்லை தானே நண்பரே ? :))
//காதலியே
காதலின் தொடக்கத்தில்
உனக்கு இறகுகளை சூட்டி அழகுப் பார்த்த மனம்
பின்னாளில் உனக்கு
இரு கொம்பை சூட்டி
தனக்குத் தானே
மந்திரித்து கொள்கிறது :))))))//
:)))))))))))))))))))))))))))
அன்பின் ராகேஷ்,
//அந்தக் காலம்தான்
உன்னைக் கல்லறையிலும்
அவளை மணவறையிலும்
இருத்தி அழகுபார்க்கிறதின்று .......................
காதலின் வலியை காட்டுகிறது.......அருமை..........//
கருத்துக்கு நன்றி நண்பரே :)
அன்பின் சாந்தி,
கவிதை நன்று ரிஷான்.. அவர்களின் பிடிப்பும் , பின் அவளின் விலகலும்...
நன்றி சகோதரி :)
//எந்த ஒரு காதலிலும் பிரிவினை வந்தால் ஏன் பயித்தியமாகணும்னு தான் புரியலை...//
அது காதலின் ஆழத்தையும் உண்மையையும் பொறுத்தது சகோதரி. ஒரு ஆண் தன் தாயினுடைய சுயநலமற்ற அன்பையும், துரோகம் நினைக்காத பாசத்தையும்தான் காதலியிடமும் எதிர்பார்க்கிறான். அதில் அவன் ஏமாற்றப்படும்பொழுது, துரோகமிழைக்கப்படும் பொழுது பெரிதும் வேதனையுருகிறான். மன உளைச்சலுக்கு ஆளாகிறான். தனிமையும், கண்ணீரும் மறுக்கப்பட்டது ஆண்களின் உலகம். அதனால் பைத்தியமாவதில் வியப்பொன்றுமில்லைதானே? :))
நிறைவேறாத காதலின் வலி உணரமுடிகிறது
அழகிய கவிதை
&&&&&&&& பிச்சுமணி
அன்பின் பிச்சுமணி,
// நிறைவேறாத காதலின் வலி உணரமுடிகிறது
அழகிய கவிதை
&&&&&&&& பிச்சுமணி//
கருத்துக்கு நன்றி நண்பரே :)))
அருமையான கவிதை நண்பரே .....
நன்றிகளுடன்
விஷ்ணு
அவனுக்குத் துரோகமிழைத்தால் அவளைத் துரோகியென்றோ, துர்தேவதையென்றோ அழைப்பதில் தவறொன்றுமில்லை தானே நண்பரே ? :))
துரோகமிழைக்காவிடடலும் கூட தப்பேயில்லை நண்பரே! :-))))))
தேவதை என்ற வாரத்தையே தவறு
துர்தேவதை என்ற வார்த்தையே சரி :-)))
எந்த துர்தேவதைக்குக் கோப்ம் வருகிறதென்று பார்க்கலாம் :-)
(அப்படிச் சொன்னாத்தான் யாரும் கண்டுக்க மாட்டாங்க)
தேவதைக்கு எதிர்ப்பதம் யட்சினி அல்லது பிடாரி
துர் தேவதை எல்லாம் சொல்லக்கூடாது..
-புதிதாய் தமிழ் கற்கும் பச்சபிள்ளைகள்
நன்றி நண்பர் விஷ்ணு :)))
// துரோகமிழைக்காவிடடலும் கூட தப்பேயில்லை நண்பரே! :-))))))//
:)))
ஆனா நான் துரோகமிழைத்தா மட்டும்தான் சொல்வேன் ஆசிப் அண்ணாச்சி :)))
// தேவதைக்கு எதிர்ப்பதம் யட்சினி அல்லது பிடாரி
துர் தேவதை எல்லாம் சொல்லக்கூடாது..//
சாத்தானியப் பெண், சாபமிடப்பட்ட தேவதைகள் என்றும் சொல்லலாமே :))
அன்பின் ரிஷான்,
அழகான வார்த்தைக்கோப்புக்களுடன்
அற்புதமான கவிதை யாத்திருக்கிறீர்கள்
>>முகவரியற்ற சுவர்களையுன்
இருப்பிடமாக்கிக் காலம் பார்த்தது
அவளது காலடிச் சுவடுகளிலுன்
உயிரினைத் தேடிய நீ
காலத்தைப் பார்க்கமறந்திட்டாய் >>
பாராட்டுக்கள்
அன்புடன்
சக்தி
-------------------
அவளுக்கான சாபங்களனைத்தும்
உன்னைப் பீடித்தலையத்
தருணம் பார்த்துக் காத்திருந்த காலம்
அவளது காலடிச் சுவடுகளிலுன்
உயிரினைத் தேடிய நீ
காலத்தைப் பார்க்கமறந்திட்டாய்
அந்தக் காலம்தான்
உன்னைக் கல்லறையிலும்
அவளை மணவறையிலும்
இருத்தி அழகுபார்க்கிறதின்று
---------------------
நல்ல கவிதை ரிஷான், ஒன்றி ரசித்தேன்
அன்பு நண்பர் சக்தி சக்திதாசன்,
//அழகான வார்த்தைக்கோப்புக்களுடன்
அற்புதமான கவிதை யாத்திருக்கிறீர்கள்
>>முகவரியற்ற சுவர்களையுன்
இருப்பிடமாக்கிக் காலம் பார்த்தது
அவளது காலடிச் சுவடுகளிலுன்
உயிரினைத் தேடிய நீ
காலத்தைப் பார்க்கமறந்திட்டாய் >>
பாராட்டுக்கள்//
கருத்திற்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் நண்பர் புகாரி,
-------------------
//அவளுக்கான சாபங்களனைத்தும்
உன்னைப் பீடித்தலையத்
தருணம் பார்த்துக் காத்திருந்த காலம்
அவளது காலடிச் சுவடுகளிலுன்
உயிரினைத் தேடிய நீ
காலத்தைப் பார்க்கமறந்திட்டாய்
அந்தக் காலம்தான்
உன்னைக் கல்லறையிலும்
அவளை மணவறையிலும்
இருத்தி அழகுபார்க்கிறதின்று
---------------------
நல்ல கவிதை ரிஷான், ஒன்றி ரசித்தேன்//
கருத்திற்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே :)
Hai friend...
Very nice poem
Keep it up..
//அவளது ஆன்மாவின் சலனங்கள்
நாணத்தைத் தொலைத்தன
பாதங்களை முக்காடுகள்
போர்த்திக் கொண்டன
அன்றுதான் நண்பனே - நீ
பைத்தியமானாய்
பறவையொன்று சத்தமிட்டுச் சிரித்ததென
அவள் சொல்லிப் போனாலும்
நம்பிப் புருவமுயர்த்தி ரசித்து மகிழ்ந்தாய்
//
அன்பின் ஷிப்லி,
கருத்துக்கு நன்றி நண்பரே :)
Post a Comment