Friday, August 1, 2008
நேசத்தை விழிநீரில் அழித்து...!
வீடு முழுவதிற்குமான
மகிழ்ச்சியின் ஆரவாரத்தினை
ஒரு புகைப்படம் கொண்டுவந்தது ;
இதைப் போலப்
பேருவகையொன்றைத் தவிர்த்து
நிராகரிப்பின் பெருவலியை
அவள் அவனுக்குத் தரவிரும்பவில்லை !
அவளது வீடு வளர்கிறதா என்ன ?
அவனது காதலை ஏற்க மறுத்து
உள்ளுக்குள் புதைந்து
மனம் குறுகி நின்றவேளை
குறுகுறுப்பாகப் பார்த்து
குறுகிச் சிறுத்த அதே வீடு - இன்று
சொந்தங்களின் கிண்டல்களுக்குத்
துள்ளிக்குதித்து ஓடும் போதெல்லாம்
இத்தனை காலமும்
ஒளித்து வைத்திருந்த
நீண்ட புதுப்புதுப் பாதைகளை
அகன்று விரிக்கிறது !
சாஸ்திரங்கள்,சம்பிரதாயங்கள்,
வீட்டிற்கான பழம்பெரும் கலாச்சாரங்கள்
அவளது கரம்பிடித்து
இறுக்க நெருக்குகையில்,
வெட்கத்தைப் போர்த்திய சாலைவழியே
அவனது காதலைப் பாடிச்செல்வாளென
அவனெப்படி எண்ணலாம் ?
சமுத்திரங்கள் பிரித்த
பெருங்கண்டங்களிரண்டில்
நீந்தத் தெரியாமல் அவன்களும்
நீர் வற்றுமென அவள்களும்
பார்த்தவாறு காத்திருக்கையில் ,
காதலும் , நேசங்களும்
அவன்களுக்குள்ளேயே
புதையுண்டு போகட்டும் - அவ்வாறே
அவள்களது நிலவெரிந்த
நடுநிசிகள் கண்ணீரால் நனையட்டும் !
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Subscribe to:
Post Comments (Atom)
28 comments:
நல்லா இருக்கு.. ஆனா எனக்கு புரியல..
:(
உறைந்து கிடக்கும் பழைய பஞ்சாங்கம் நிறைந்திருக்கும் சமூகத்தில் காதல் என்பது வலி மட்டுமேன்னு எடுத்துச் சொல்ற அழகான கவிதை...
[இந்தக் கவிதை ஏனோ உங்க ரேஞ்சுக்கு இல்லன்னு தோனுது :((]
//சாஸ்திரங்கள்,சம்பிரதாயங்கள்,
வீட்டிற்கான பழம்பெரும் கலாச்சாரங்கள்
அவளது கரம்பிடித்து
இறுக்க நெருக்குகையில்,
வெட்கத்தைப் போர்த்திய சாலைவழியே
அவனது காதலைப் பாடிச்செல்வாளென
அவனெப்படி எண்ணலாம் ?//
சில கலாச்சாரங்கள், கட்டுப்பாடுகள், காதலைக் கட்டிப் போட்டு விடுவது உண்மைதான்.
//சமுத்திரங்கள் பிரித்த
பெருங்கண்டங்களிரண்டில்
நீந்தத் தெரியாமல் அவன்களும்
நீர் வற்றுமென அவள்களும்//
அடடா, அழகான வடிவமைப்பு!
ஒரு பெண் குடும்பத்துக்குக் கட்டுப்பட்டு காதலை நிராகரித்து பெற்றோர் பார்த்தவனை ஏற்றுக் கொள்தலை அழகுறச் சொல்லியிருக்கிறீர்கள்.
>>>>>>சமுத்திரங்கள் பிரித்த
பெருங்கண்டங்களிரண்டில்
நீந்தத் தெரியாமல் அவன்களும்
நீர் வற்றுமென அவள்களும்
பார்த்தவாறு காத்திருக்கையில் ,
காதலும் , நேசங்களும்
அவன்களுக்குள்ளேயே
புதையுண்டு போகட்டும் ...>>>>>>
புதைந்து ஏன் போகவேண்டும், நீந்திமட்டுமே செல்லுதல் வழியென்றில்லை பறக்கச் சிறகுகள் கிடைக்கட்டும் உண்மைக்காதலர்களுக்கு!
கவிதை வரிகள் ஒவ்வொன்றும் செதுக்கிய சிறபம் ரிஷான்!
வார்த்தைகளில் வலி தெரிகிறது!
காலம் ஆற்றட்டும்
//ஒரு பெண் குடும்பத்துக்குக் கட்டுப்பட்டு காதலை நிராகரித்து பெற்றோர் பார்த்தவனை ஏற்றுக் கொள்தலை அழகுறச் சொல்லியிருக்கிறீர்கள்.//
இப்போ புரிஞ்சிது..நானும் இததான் முதலில் GUESS பண்ணினேன்..
ரிஷான்,
கவிதை புரிய மூன்று தரம் வாசிக்கவேண்டியதாகி விட்டது.
புரிந்தபின் கவிதையின் வலிகளினாலான் நிஜம் மனதில் நிற்கிறது.
மேலும் ரிஷான், கலாச்சாரம் அல்ல கலாசாரம்.
பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
///ரிஷான்,
கவிதை புரிய மூன்று தரம் வாசிக்கவேண்டியதாகி விட்டது.
புரிந்தபின் கவிதையின் வலிகளினாலான் நிஜம் மனதில் நிற்கிறது.
//
Repeeeeeeeeeeeeeeeetai.....
அன்பின் ஜி,
//உறைந்து கிடக்கும் பழைய பஞ்சாங்கம் நிறைந்திருக்கும் சமூகத்தில் காதல் என்பது வலி மட்டுமேன்னு எடுத்துச் சொல்ற அழகான கவிதை...//
ஆமாம் நண்பரே. பெரும்வலி அது... :(
[இந்தக் கவிதை ஏனோ உங்க ரேஞ்சுக்கு இல்லன்னு தோனுது :((]
இன்னும் சிறப்பாக எழுத முயற்சிக்கிறேன் நண்பரே :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)
அன்பின் கவிநயா,
//அடடா, அழகான வடிவமைப்பு!
ஒரு பெண் குடும்பத்துக்குக் கட்டுப்பட்டு காதலை நிராகரித்து பெற்றோர் பார்த்தவனை ஏற்றுக் கொள்தலை அழகுறச் சொல்லியிருக்கிறீர்கள். //
மிகச் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள் சகோதரி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)
அன்பின் ஷைலஜா,
//கவிதை வரிகள் ஒவ்வொன்றும் செதுக்கிய சிறபம் ரிஷான்!
வார்த்தைகளில் வலி தெரிகிறது! //
நன்றி சகோதரி :)
//காலம் ஆற்றட்டும் //
இது கற்பனையில் உதித்த கவிதை மட்டுமே :)
அன்பின் மதுவதனன் மௌ.
//ரிஷான்,
கவிதை புரிய மூன்று தரம் வாசிக்கவேண்டியதாகி விட்டது. //
மூன்று முறை தளராமல் வாசித்தமைக்கு நன்றி நண்பரே :)
//புரிந்தபின் கவிதையின் வலிகளினாலான நிஜம் மனதில் நிற்கிறது.
மேலும் ரிஷான், கலாச்சாரம் அல்ல கலாசாரம். //
திருத்திவிடுகிறேன். ஒவ்வொரு முறையும் அன்பாக சொல்லித்தருகிறீர்கள்.
மீண்டும் நன்றி நண்பரே :)
அன்பின் மஹாராஜா,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
மிக அழகான வரிகள் ரிஷான்
பெண்ணின் காதல் எத்தனையோ பேரின், நம்பிக்கையை காப்பாற்ற போய் தொலைந்து போய், பிடித்தோ பிடிக்காமலோ ஒரு வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு வாழ வேண்டும்...
அழகாக சொல்லி இருக்கிறிர்கள்...
வாழ்த்துக்கள் !
அன்பின் சக்தி,
//மிக அழகான வரிகள் ரிஷான்
பெண்ணின் காதல் எத்தனையோ பேரின், நம்பிக்கையை காப்பாற்ற போய் தொலைந்து போய், பிடித்தோ பிடிக்காமலோ ஒரு வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு வாழ வேண்டும்...
அழகாக சொல்லி இருக்கிறிர்கள்...
வாழ்த்துக்கள் ! //
கவிதையை அழகாக உணர்ந்திருக்கிறீர்கள். வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஸ்னேகிதி :)
'நேசத்தை விழிநீரில்
அழித்து' விட்டு
வேறு வழியின்றி
யாருக்கோ வாழ்க்கைப்பட்டு
மனம் பட்டுப்போகும்
பாவையரின் கண்ணீரைப்
பாடுகிறது கவிதை
எம் நெஞ்சைத் தொட்டு!
Un Kavithai kalukku puthiyavea naan.
Un Varigalil kirangiyea poobavan naan. Pennin Kadhal Punitham Athai eduthu sonna nee oru punithan.
உங்கள் கவிதைகள் படிப்பதற்கு ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன வாழ்த்துக்கள்.தொடர்ந்தும் எதிர் பார்க்கிறேன்.
அன்பின் ராமலக்ஷ்மி,
//'நேசத்தை விழிநீரில்
அழித்து' விட்டு
வேறு வழியின்றி
யாருக்கோ வாழ்க்கைப்பட்டு
மனம் பட்டுப்போகும்
பாவையரின் கண்ணீரைப்
பாடுகிறது கவிதை
எம் நெஞ்சைத் தொட்டு!//
அழகான வரிகளில் உங்கள் கருத்தினைச் சொல்கிறீர்கள்.கவிதையை மிகவும் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)
அன்பின் புன்னகை,
//Un Kavithai kalukku puthiyavea naan.
Un Varigalil kirangiyea poobavan naan. Pennin Kadhal Punitham Athai eduthu sonna nee oru punithan.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் சித்தாந்தன்,
//உங்கள் கவிதைகள் படிப்பதற்கு ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன வாழ்த்துக்கள்.தொடர்ந்தும் எதிர் பார்க்கிறேன்.//
உங்கள் ஆதரவோடு தொடர்ந்து எழுதுவேன். வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)
//இன்னும் சிறப்பாக எழுத முயற்சிக்கிறேன் நண்பரே :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)
//
அய்யய்யோ அண்ணாச்சி... இந்த கவித ரெண்டாவது தடவையே புரிஞ்சிடிச்சு... மத்ததுலாம் இன்னும் அதிக நேரமோ... இல்லனா புரியவே புரியாது.. அதத்தான் அப்படி சொன்னேன்... :)))
அருமையான கவிதை ரிஷான்
காதலில் உயிர் உருகும் வேதனையில் துளி எடுத்து மலையின் மீது போட்டால்
மலை தூள் தூளாகி விடும்'ன்னு பார்சி'ல ஒரு கவிதை இருக்கு
அதை போன்றே காதலின் வேதனையின் துளிகளை உங்க கவிதை வரிகள் சிறப்பாக எடுத்து சொல்கின்றன
என்ன அதை புரிஞ்சிகிறதுக்கு குறைஞ்ச பட்ச தகுதியாக ஒரு காதல் தோல்வியேனும் தேவை படுகிறது ;)
அன்பின் ஜி,
//அய்யய்யோ அண்ணாச்சி... இந்த கவித ரெண்டாவது தடவையே புரிஞ்சிடிச்சு... மத்ததுலாம் இன்னும் அதிக நேரமோ... இல்லனா புரியவே புரியாது.. அதத்தான் அப்படி சொன்னேன்... :)))//
மீள்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் நாடோடி,
//அருமையான கவிதை ரிஷான்
காதலில் உயிர் உருகும் வேதனையில் துளி எடுத்து மலையின் மீது போட்டால்
மலை தூள் தூளாகி விடும்'ன்னு பார்சி'ல ஒரு கவிதை இருக்கு
அதை போன்றே காதலின் வேதனையின் துளிகளை உங்க கவிதை வரிகள் சிறப்பாக எடுத்து சொல்கின்றன
என்ன அதை புரிஞ்சிகிறதுக்கு குறைஞ்ச பட்ச தகுதியாக ஒரு காதல் தோல்வியேனும் தேவை படுகிறது ;)//
மிக அருமையான கருத்து நாடோடி...சரியாகச் சொன்னீர்கள்..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் ரிஷான்
இந்தக் கவிதைக்கு முன்னர் இடப்பட்டிருந்த படத்தைப் பார்த்தபோது இதற்குப் பின்னூட்ட
மிடாமல் இருப்பதே நல்லதென்று தோன்றியது.
இப்போது அருமையான படமொன்றைச் சேர்த்திருக்கிறீர்கள்.இந்தப் படத்தையே முன்னர் போட்டிருந்தால் பார்த்தவர்களுக்கு கவிதை சட்டென்று விளங்கியிருக்கும்.
"சமுத்திரங்கள் பிரித்த
பெருங்கண்டங்களிரண்டில்
நீந்தத் தெரியாமல் அவன்களும்
நீர் வற்றுமென அவள்களும்
பார்த்தவாறு காத்திருக்கையில் ,
காதலும் , நேசங்களும்
அவன்களுக்குள்ளேயே
புதையுண்டு போகட்டும்"
படம் சொல்லும் கதையுடன் இந்த வரிகளும் இணைந்து போகின்றன.
கொஞ்சம் சந்தோசமாக எழுதுங்களேன் ரிஷான்..அப்படி எழுத உங்களுக்கு ஒரு தடையும் இல்லையே
அன்பின் பஹீமா ஜஹான்,
//கொஞ்சம் சந்தோசமாக எழுதுங்களேன் ரிஷான்..அப்படி எழுத உங்களுக்கு ஒரு தடையும் இல்லையே//
முயற்சிக்கிறேன் சகோதரி :)
வருகைக்கும் உங்கள் நீண்ட கருத்துக்கும் நன்றி சகோதரி :)
பின்னூட்டத்தின் வழி வந்தேன்..தனித்த கவிதைக் குரல் உங்களுடையது..தொடர்ந்து எழுதுங்கள்..
அன்பின் ஸ்ரீராம்,
உங்கள் முதல்வருகை மகிழ்ச்சி தருகிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
Post a Comment