அவளது பிரயாணத்தின் குறுக்கீடான
அகன்ற வாயிலைத் திறந்தபோது
சுவாசத்திலடித்தது சாத்தானின் வாடை
வேட்டை நாயொன்றைப் போலவந்து
சதைகள் கவ்வமுயன்ற பொழுது
வேடிக்கை காட்டித்
தப்பிக்கத் தெரியவில்லை அவளுக்கு
தூக்கிப் போட்டு இரை நோக்கவைக்க
இறைச்சித் துண்டுகளும் கைவசம் இல்லை
அவளுடல் பாகங்கள் குறித்தே
சாத்தானுக்குக் குறியிருந்தது
சூழச் சூழ வந்து அவளைத்
தொட்டணைத்துத் தன்
பற்தடங்களைப் பதிக்கமுயன்றகணம்
தேவதூதனொருவனின் மெல்லிறகுக் காற்று
இருவருக்குமிடையே ஓர் அணையை எழுப்பிற்று
மாயக்கரமொன்று அவளதிர்ந்த நெஞ்சை
ஆறுதல்படுத்தி விழிநீர் துடைத்திற்று
கீறல்கள் மட்டும் சுமந்து
எப்படியோ சாத்தானைக் கூண்டொன்றிலடைத்திட்டாள்
எம்பி எம்பியது அவளிடம் வர
முயற்சித்தபடியேயிருக்க
அவளது பயணம் தேவதூதனை நோக்கித்
திசைமாறிற்று
இன்று
தூரத்து ஒளியொன்று பார்வையில் இடறிட
நெடுஞ்சோலைகள் தாண்டிப்
பசும்வெளிகள் தாண்டி
வற்றாத அழகிய நீர்வீழ்ச்சிகள் தாண்டி
நிலவற்ற நடுநிசிகளில் கூட
அவனது மெல்லிறகுகள் கொண்ட
அருட்கரங்களைத் தேடியே
அவள் பாதங்கள் தொலைந்தபடியிருக்க
அணையெழுப்பிய மெல்லிறகுக் காற்றே
நீயறியாயோ வெந்துருகும் அவள் சுடுமூச்சை ?
விழிநீரழித்த மாயக்கரமே
நீயறியாயோ பிரவகிக்கும்
அவள் துயரங்களின் மூர்க்கத்தை ?
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
12 comments:
"கீறல்கள் மட்டும் சுமந்து
எப்படியோ சாத்தானைக் கூண்டொன்றிலடைத்திட்டாள்
எம்பி எம்பியது அவளிடம் வர
முயற்சித்தபடியேயிருக்க
அவளது பயணம் தேவதூதனை நோக்கித்
திசைமாறிற்று"
அவள் எடுத்த முடிவைப் பாராட்டலாம் தான்..
ஆனாலும் தம்பி தேவதூதர்கள் ஒரு பொழுதும் மண்ணுக்கு வருவதில்லை.
தேவதூதர்களுக்கு எப்பொழுதும் கருணையின் வடிவம் மட்டும் தான்.
ஆனால் சாத்தான்களுக்கு ஆயிரம் வடிவங்கள் ஆயிரம் முகமூடிகள்.அந்த சாத்தான்களிடம் தேவர்களின் முகமூடிகள் கூட இருப்பதுதான் மிகவும் ஆபத்தானது.
//அணையெழுப்பிய மெல்லிறகுக் காற்றே
நீயறியாயோ வெந்துருகும் அவள் சுடுமூச்சை ?
விழிநீரழித்த மாயக்கரமே
நீயறியாயோ பிரவகிக்கும்
அவள் துயரங்களின் மூர்க்கத்தை ?//
நான் ரசித்த வரிகள். சீக்கிரமே அவள் தன் தேவனைச் சேரட்டும்...
மீண்டும் மீண்டும் படித்தேன்...என்னமோ போல் இருந்தது!! மனதை தொட்டுவிட்டது!!
//மாய ஒளிசிதறும் திசை நோக்கிய பயணம்//
கவிதையை அப்படியே பிரதிபலிக்கும் தலைப்பு.
அருமையா எழுதறீங்க ரிஷான்.. நல்ல மொழி வழமை உங்களுக்கு.
அன்பின் பஹீமா ஜஹான்,
//அவள் எடுத்த முடிவைப் பாராட்டலாம் தான்..
ஆனாலும் தம்பி தேவதூதர்கள் ஒரு பொழுதும் மண்ணுக்கு வருவதில்லை.
தேவதூதர்களுக்கு எப்பொழுதும் கருணையின் வடிவம் மட்டும் தான்.
ஆனால் சாத்தான்களுக்கு ஆயிரம் வடிவங்கள் ஆயிரம் முகமூடிகள்.அந்த சாத்தான்களிடம் தேவர்களின் முகமூடிகள் கூட இருப்பதுதான் மிகவும் ஆபத்தானது.//
மிகவும் சரியாகச் சொல்கிறீர்கள். தேவர்களின் முகமூடி சாத்தானிடமிருப்பது போன்ற பேராபத்து வேறில்லை. எனினும் அநேக சாத்தான்கள் தேவர்களின் முகமுடிகளுடனேயே உலாவருகின்றன.எனினும் ஏதேனுமொரு தேவதூத மனதையொத்த தூயனும் இவைகளுக்கு மத்தியில் இருக்கலாமில்லையா ? :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி...!
அன்பின் கவிநயா,
//நான் ரசித்த வரிகள். சீக்கிரமே அவள் தன் தேவனைச் சேரட்டும்...//
அதுதான் என் பிரார்த்தனையும்.. :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !
அன்பின் இசக்கிமுத்து,
//மீண்டும் மீண்டும் படித்தேன்...என்னமோ போல் இருந்தது!! மனதை தொட்டுவிட்டது!!//
உங்கள் வருகையும் கருத்தும் என்னை மகிழ்விக்கின்றது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் சரவணகுமார்,
//கவிதையை அப்படியே பிரதிபலிக்கும் தலைப்பு.
அருமையா எழுதறீங்க ரிஷான்.. நல்ல மொழி வழமை உங்களுக்கு.//
வருகைக்கும் கருத்துக்கும் அன்பு கலந்த நன்றிகள் நண்பா :)
மிகவும் அழகு வரிகள் ரிஷான்.. உங்கள் வார்த்தைகளின் ஜாலம் எப்போதும் என்னை பிரமிப்பு அடைய வைக்கும் ஒன்று... வாழ்த்துக்கள் தோழரே ..
சாத்தான்கள் சூழ் இவ்வுலகத்தில் அவள் தன் தேவனை சென்றடைவாள் என நாமும் நம்புவோம் ..
அன்பின் சக்தி,
//மிகவும் அழகு வரிகள் ரிஷான்.. உங்கள் வார்த்தைகளின் ஜாலம் எப்போதும் என்னை பிரமிப்பு அடைய வைக்கும் ஒன்று... வாழ்த்துக்கள் தோழரே ..//
வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி ஸ்னேகிதி :)
ரிஷான்,
என்ன சொல்ல! என்றாவது இந்த மொழிவளத்தில் ஒரு சதவீதம் என்னிடம் வரும் என்ற ஆசையில் .... மிக அழகான கவிதை என்பதுடன் நிறுத்திக்கொள்கிறேன்.
பஹீமா ஜஹான் அவர்களின் பின்னூட்டமும் அருமை. வாழ்த்துக்கள் ரிஷான்.
அனுஜன்யா
அன்பின் அனுஜன்யா,
//ரிஷான்,
என்ன சொல்ல! என்றாவது இந்த மொழிவளத்தில் ஒரு சதவீதம் என்னிடம் வரும் என்ற ஆசையில் .... மிக அழகான கவிதை என்பதுடன் நிறுத்திக்கொள்கிறேன். //
உயிர்மையில் உங்கள் கவிதை கண்டேன். மொழியினைச் சிறப்பாகக் கையாளும் திறமை உங்களிடம் இருக்கிறது. தொடருங்கள். வாழ்த்துக்கள் !
வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)
Post a Comment