Tuesday, November 18, 2008

தொடர்பு எல்லைக்கும் அப்பால்...!

தனிமை
ஓர் ஆலமரத்தைப் போலப்
பெருநிழல் தந்துகொண்டிருந்தவேளை
நீயழைத்தாய்

கைபேசியின் கண்ணாடிச்சதுரம்
மின்னி மின்னி உன் பெயருரைத்தது
ஏதோ ஒரு பாடலின் இசையை
நினைவுருத்திச் சோரும் தருணம்
மனச்சலனங்களேதுமற்று
உன் குரலை அனுமதித்தேன்

மிகுந்த ஆதூரமும் அன்பும் வழியும் குரலில்
எப்படியிருக்கிறாய் அன்பேயென்றாய்

உன்னையும்
தனிமையெனும் பெரும்பட்சி
கொத்திக் கொண்டிருந்தவேளையது
உன் சதையில் வலிக்கத் தொடங்கிய கணம்
என் நினைவு கிளர்ந்திருக்க வேண்டும்

இந்தத் தனிமையும் பேய்ப் பொறுமையும்
நீ தந்து சென்றதுதானே
நான் பதிலுரைக்க
என்ன எஞ்சியிருக்கிறதின்னும்

இப்போதைய
எனதெழுத்துக்கள் மட்டும் பாவம்
என் துயரத்தின் சுமைகளைச்
சுமந்தவாறு நாற்திசைகளிலும்
அலைந்து கொண்டேயிருக்கின்றன

எழுத்துக்களும் சோரும் காலம்,
உன் தொடர்பு எல்லைக்குமப்பால்
பாலைநிலம் தாண்டி- எனதான தேசம்
பாதங்களைச் சேர்க்குமென்
தூய இல்லத்தில் நானிருப்பேன்

அன்றுன் குளிர்காய்தலுக்கும்
தவிக்கும் தாகத்திற்கும்
ஆதியின் மூலமறுக்கும்
அத்தனை சந்தோஷங்களுக்கும்
என்ன செய்யப் போகிறாய்

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

13 comments:

கோகுலன் said...

//அன்றுன் குளிர்காய்தலுக்கும்
தவிக்கும் தாகத்திற்கும்
ஆதியின் மூலமறுக்கும்
அத்தனை சந்தோஷங்களுக்கும்
என்ன செய்யப் போகிறாய் //

தீர்வேயில்லை என நாம் நினைக்கும் ஒவ்வொன்றிற்கும் ஒன்றுக்கு மேற்பட்ட தீர்வுகள் உண்டு.. இது என் அனுபவம்.

நல்ல கவிதை

Kavinaya said...

//இப்போதைய
எனதெழுத்துக்கள் மட்டும் பாவம்
என் துயரத்தின் சுமைகளைச்
சுமந்தவாறு நாற்திசைகளிலும்
அலைந்து கொண்டேயிருக்கின்றன //

அழகான பிரயோகம். துயரத்தைச் சுமக்க எழுத்துகளும் இல்லையென்றால் துயரம் பெரும் சுமையாகத்தான் போய்விடும்.

//அன்றுன் குளிர்காய்தலுக்கும்
தவிக்கும் தாகத்திற்கும்
ஆதியின் மூலமறுக்கும்
அத்தனை சந்தோஷங்களுக்கும்
என்ன செய்யப் போகிறாய்//

ஹ்ம்.. நல்ல கேள்வி..

pudugaithendral said...

அருமையான கவிதை.

பாரட்டுக்கள்

M.Rishan Shareef said...

அன்பின் கோகுலன்,

//தீர்வேயில்லை என நாம் நினைக்கும் ஒவ்வொன்றிற்கும் ஒன்றுக்கு மேற்பட்ட தீர்வுகள் உண்டு.. இது என் அனுபவம்.

நல்ல கவிதை//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் கவிநயா,

//அழகான பிரயோகம். துயரத்தைச் சுமக்க எழுத்துகளும் இல்லையென்றால் துயரம் பெரும் சுமையாகத்தான் போய்விடும். //

ஆமாம்..அதுவும் தனித்திருந்து துயரம் சுமக்க விதிக்கப்பட்டவனுக்கு எழுத்துக்களும் இல்லையெனில்....?
நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் புதுகைத் தென்றல்,

//அருமையான கவிதை.

பாரட்டுக்கள்//

வருகைக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி சகோதரி :)

Anonymous said...

"என் துயரத்தின் சுமைகளைச்
சுமந்தவாறு நாற்திசைகளிலும்
அலைந்து கொண்டேயிருக்கின்றன"

துயரச்சுமை கனக்கும் வார்த்தைகள். அருமையான கவிதை. சொற்களின் கலவை நேர்த்தியாகவும் நிதானமாகவும் ஒரு நதியின் நகர்வு போல அமைந்துள்ளது.

வாழ்த்துக்கள்.

சாந்தி

Sakthy said...

எதோ ஒரு வகையில் படிப்பவர்கள் ஒரு தடவையேனும் இது என் வாழ்விலும் நடந்ததே என எண்ண வைப்பது உங்கள் கவிதையின் பலம்....நிகழ்கால பாதிப்புக்களை ,வலியோடு வருடிச் செல்வது உங்களுக்கு மட்டுமே சாத்தியமாகிறது ரிஷான் ...
வாழ்த்துக்கள தோழரே ...
ஒவ்வொரு வரியும் அருமை ...நல்ல கவிதை

MSK / Saravana said...

ஐயோ.. அழகான கவிதை..எத்தனையோ விஷயங்களை நினைவுபடுத்தி போகிறது..

MSK / Saravana said...

//உன்னையும்
தனிமையெனும் பெரும்பட்சி
கொத்திக் கொண்டிருந்தவேளையது
உன் சதையில் வலிக்கத் தொடங்கிய கணம்
என் நினைவு கிளர்ந்திருக்க வேண்டும் //

//அன்றுன் குளிர்காய்தலுக்கும்
தவிக்கும் தாகத்திற்கும்
ஆதியின் மூலமறுக்கும்
அத்தனை சந்தோஷங்களுக்கும்
என்ன செய்யப் போகிறாய் //

வெகு அருமை..

M.Rishan Shareef said...

அன்பின் சாந்தி,

//துயரச்சுமை கனக்கும் வார்த்தைகள். அருமையான கவிதை. சொற்களின் கலவை நேர்த்தியாகவும் நிதானமாகவும் ஒரு நதியின் நகர்வு போல அமைந்துள்ளது.

வாழ்த்துக்கள்.//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் சக்தி,

//எதோ ஒரு வகையில் படிப்பவர்கள் ஒரு தடவையேனும் இது என் வாழ்விலும் நடந்ததே என எண்ண வைப்பது உங்கள் கவிதையின் பலம்....நிகழ்கால பாதிப்புக்களை ,வலியோடு வருடிச் செல்வது உங்களுக்கு மட்டுமே சாத்தியமாகிறது ரிஷான் ...
வாழ்த்துக்கள தோழரே ...
ஒவ்வொரு வரியும் அருமை ...நல்ல கவிதை//

வாழ்வின் கணங்கள் தோறும் அடுத்தவர் சம்பந்தப்படாமல் இல்லை.. புன்னகையைப் போல வருத்தங்களையும் பகிர்ந்துகொள்ள விதிக்கப்பட்டிருக்கிறோம். :)

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஸ்னேகிதி :)

M.Rishan Shareef said...

அன்பின் சரவணகுமார்,

//ஐயோ.. அழகான கவிதை..எத்தனையோ விஷயங்களை நினைவுபடுத்தி போகிறது.. //

உங்கள் நினைவுகளையும் கிளறிவிட்டதா? எல்லாம் என்றுமே இறந்துபோகாத காலத்தின் நிகழ்வுகள், நினைவுகள் தான்.. :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)