Monday, December 1, 2008

நஞ்சூட்டியவள்

அவன் சோலைகள் பூத்த காலமொன்றில்
ஏகாந்தம் உலவி ஏழிசையும் இசைத்திற்று
காடுலாவி மணம் பூசித்தென்றலும்
கால்தொட்டுக் கெஞ்சிற்று

அப்பொழுதில்
சொல்லொணாப் பிரியத்தினைக் கொண்டு
சேமித்துப்பிதுங்கி வழிந்திடும் மன உண்டியலைப்
பலகாலங்களாகப் பத்திரப்படுத்திவந்தான்
எடுத்துச் செலவழிக்கவோ
எவர்க்கும் தானம் செய்திடவோ
உளமொப்பாமல் ஒரு துணைக்கு மட்டுமே
கொடுத்துக் களித்திடக் காத்திருந்தான்

சூழப் பெருவெளி,ஆழப்பெருங்கடலின்னும்
நீலவானெனப் பார்க்கும் அத்தனையிலும்
அதனையே நினைந்திருந்தான்
இராப்பொழுது தோறும்
விழிசோரும் கணம் தோறும்
முப்பொழுதும் ஒரு துணையே
தப்பாமல் கனாக் கண்டான்

இணையெனச் சொல்லிக் கொண்டு
நீ வந்தாய்
ஏழு வானங்கள், ஏழு கடல்கள்,
ஏழு மலைகளை விடப் பாரிய அன்பை
வழிய வழிய இரு கைகளில் ஏந்தி
உன்னிடம் தந்து பின் பார்த்து நின்றான்
பாழ்நதிக்கரையோரம் இரவுகளில்
கருங்கூந்தல் விரித்து ஓலமாய்ச் சிரிக்கும்
ஒரு பிடாரிக்கு ஒப்பாக
நீ சிரித்தாய் - பின்
அவனது அன்பையும் பிரியங்களையும் அள்ளியெடுத்து
ஊருக்கெல்லாம் விசிறியடித்தாய்

ஒரு கவளம் உணவெடுத்து
அதில் சிறிது நஞ்சூட்டிக்
கதறக் கதற அவன் தொண்டையில்
திணித்திடவெனத்துடித்தாய்
இன்று இடையறாது வீழும்
அவனிரு விழித்துளிகளில் உயிர் பெற்று
உனது ஆனந்தங்கள் தழைக்கட்டும்

- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

(அநங்கம் - மலேசியாவின் தீவிர இலக்கிய  இதழில் நவம்பர் மாதம் வெளியான கவிதை )

14 comments:

ராமலக்ஷ்மி said...

சிதைந்த கனவுகளால்
சிதறியே போயிற்றோ
அவன் இதயம்
மன உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பிரியமெனும் சில்லறைகளை அவள்
இரக்கம் இன்றி
சிதறடித்த மாதிரி!

ராமலக்ஷ்மி said...

//எடுத்துச் செலவழிக்கவோ
எவர்க்கும் தானம் செய்திடவோ
உளமொப்பாமல் ஒரு துணைக்கு மட்டுமே
கொடுத்துக் களித்திடக் காத்திருந்தான்//

இத்தகைய அன்பு அலட்சியப் படுத்தப்பட்ட அவலத்தை அருமையாக வடித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் ரிஷான்.

MSK / Saravana said...

யப்பா.. செம மொழி வழமை உங்களுக்கு..
கவிதை அருமை வழக்கம் போல்..

M.Rishan Shareef said...

அன்பின் ராமலக்ஷ்மி,

//சிதைந்த கனவுகளால்
சிதறியே போயிற்றோ
அவன் இதயம்
மன உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பிரியமெனும் சில்லறைகளை அவள்
இரக்கம் இன்றி
சிதறடித்த மாதிரி!//

ஆமாம்...அதே கருதான் :)
அழகிய கருத்து சகோதரி :)

M.Rishan Shareef said...

/////எடுத்துச் செலவழிக்கவோ
எவர்க்கும் தானம் செய்திடவோ
உளமொப்பாமல் ஒரு துணைக்கு மட்டுமே
கொடுத்துக் களித்திடக் காத்திருந்தான்//

இத்தகைய அன்பு அலட்சியப் படுத்தப்பட்ட அவலத்தை அருமையாக வடித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் ரிஷான்.///

ஆற்றொணாப் பெருந்துன்பமது எனது நண்பனுக்கு வாய்த்தது. :(

வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் சரவணகுமார்,

//யப்பா.. செம மொழி வழமை உங்களுக்கு..
கவிதை அருமை வழக்கம் போல்..//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

நளன் said...

:((((

Kavinaya said...

//யப்பா.. செம மொழி வழமை உங்களுக்கு..
கவிதை அருமை வழக்கம் போல்..//

அதேதான். வலிகளை ரொம்ப அழகாகச் சொல்ல உங்களால்தான் முடிகிறது.

ஒரு அகதியின் நாட்குறிப்பு !!! said...

மானிட வலிக்கவிதைகளை எழுதும் என் நண்பரே!
ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்.
தமிழ்சித்தன்

Venkata Ramanan S said...

அழகான கவிதை.. வாழ்த்துக்கள்

M.Rishan Shareef said...

அன்பின் குட்டி செல்வன்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)

M.Rishan Shareef said...

அன்பின் கவிநயா,

//அதேதான். வலிகளை ரொம்ப அழகாகச் சொல்ல உங்களால்தான் முடிகிறது.//

வலிகள் குறைய எழுத்துக்கள்தான் உதவுகின்றன. :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் தமிழ்சித்தன்,

//மானிட வலிக்கவிதைகளை எழுதும் என் நண்பரே!
ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்.
தமிழ்சித்தன்//

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் ரமணன்,

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)