Sunday, March 22, 2009

பெண் மனது மற்றும் ஆட்சிகள் உனதாக...

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியான 'விகடன் மகளிர் சக்தி' மற்றும் 'மனிதம்' இதழ்களில் பிரசுரிக்கப்பட்ட எனது இரு கவிதைகள்.

பெண் மனது

அவர்கள் வரட்டும்
எது கொண்டோ உடைத்துப் போன
ஓர் ஆழ்துயர் மனதை
எப்படிச் சரிப்படுத்துகிறார்களென
வேடிக்கை பார்க்கலாம்

அது ஒரு பெண் மனது
பால்யம் முதலாய்ப் பலர் சேர்ந்து
பருவங்கள் தோறும்
பல எல்லைகளையும் அணைகளையும்
வளையங்களையுமிட்டு
இன்னும் பல இடர்களை ஒன்றாய்ப் பின்னி
இறுக இறுகச் சேர்த்துக்
கட்டிய மனது

முன்பும் அது சிதைந்தது
சிறுகச் சிறுகச் சிதைந்து வருகையில்
திரும்பவும் வந்து
பெருந்துயரொன்று கொண்டு
அவர்கள்
அதனை மீளச் செப்பனிட்டார்கள்

காலத்திற்கு என்ன தெரியும் - அவளது
கண்ணீர் பிசைந்து
அவர்கள் சீர்படுத்தப் படுத்த
மீண்டும் சிதிலமாகவே செய்தது
இப்பொழுதைப் போல

அவர்களும் வந்தனர்
ஓட்டைகள் வழியே நழுவிய துயர்களை
நினைவுகள் கொண்டு மீள அடைத்தனர்
மறதியில் உதிர்ந்து
காணாமல் போனவற்றை
மீளப் பெறமுடியாமல் போக
அவதூறுகள் கொண்டும்
கடுஞ்சொற்கள் கொண்டும்
அவளுக்கு வலிக்க வலிக்க
மகிழ்வோடும் அலுப்பில்லாமலும்
இதயம் நிறைந்த குரூரத்தோடும்
மீளவும் மெருகேற்றினர்

அவர்கள் பார்வையில் இக்கணத்தில்
அழகு பெற்றதாகி விட்டது அது

அது ஒரு பெண்மனது
ஆம் அவள் ஒரு பெண்

நன்றி
# விகடன் மகளிர் சக்தி
# பெண்ணியம்ஆட்சிகள் உனதாக

அநிச்ச நிலவதனைப் பிடித்து
அவளது வதனத்தில் இடுகிறாய்
மீன்களைப் பிடித்து அவளது விழிகளிலிட்டுத்
துள்ளத் துடிக்க நீர் சிந்தப் பார்த்து ரசிக்கிறாய்

உன்னுடையது போன்றதேதானே
அவளுடையதும்
எனினும்
கழுத்தைச் சங்கென்கிறாய்
பற்களை முத்தென்கிறாய்
கன்னங்களைக் கனிகளென்கிறாய்
உதிர்ந்த ஒற்றை முடியை
உயிர்த்தோகை என்கிறாய்
உன் முன்னால்
வெட்டி எறிந்த நகத்துணுக்கைக் கூடப்
பிறைநிலவென வர்ணிக்கிறாய்
இன்னுமின்னும்...

அஃறினைகளுக்காளாக்கி
அவளை வதைத்தது போதும்
எப்போதவளைச் சக மனுஷியென்பாய் ?


நன்றி - மனிதம் இதழ்

 -எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.


14 comments:

கலை - இராகலை said...

//அது ஒரு பெண் மனது
பால்யம் முதலாய்ப் பலர் சேர்ந்து
பருவங்கள் தோறும்
பல எல்லைகளையும் அணைகளையும்
வளையங்களையுமிட்டு
இன்னும் பல இடர்களை ஒன்றாய்ப் பின்னி
இறுக இறுகச் சேர்த்துக்
கட்டிய மனது//

அழகான வரிகள்.

கலை - இராகலை said...

//அநிச்ச நிலவதனைப் பிடித்து
அவளது வதனத்தில் இடுகிறாய்
மீன்களைப் பிடித்து அவளது விழிகளிலிட்டுத்
துள்ளத் துடிக்க நீர் சிந்தப் பார்த்து ரசிக்கிறாய்//

இப்படி ஒரு கவிதையை இதுவே முதல் தடவை வாசித்தது. சூப்பர் சூப்பர்.

மாதவராஜ் said...

இரண்டு கவிதைகளும் அருமை.
முன்னது வலியையும், பின்னது சிதைவையும் சொல்கிறது. இரண்டுமே துயரின் சோபையோடு ஒலிக்கின்றன.

ஆமாம், ரொம்ப நாளாய் எழுதவில்லையே..?

yathra said...

மிக அற்புதமாயிருக்கிறது கவிதைகள்

கவிநயா said...

//அவதூறுகள் கொண்டும்
கடுஞ்சொற்கள் கொண்டும்
அவளுக்கு வலிக்க வலிக்க
மகிழ்வோடும் அலுப்பில்லாமலும்
இதயம் நிறைந்த குரூரத்தோடும்
மீளவும் மெருகேற்றினர்//

இப்படித்தான் இருக்கிறது உலகம். வார்த்தைகள் என்னமாய் வேலை செய்கின்றன, உங்களுக்கு...

//அஃறினைகளுக்காளாக்கி
அவளை வதைத்தது போதும்
எப்போதவளைச் சக மனுஷியென்பாய் ?//

இந்தக் கவிதை புன்னகையை வரவழைத்தது :) வித்தியாசமான சிந்தனை, ரிஷு.

சுகந்தப்ரீதன் said...

நானறிந்தவகையில் பெண்களின் பலமும் பலவீனமும் ஒன்றே ஒன்றுதான்... அது அவர்களின் மனது மட்டும்தான்..!! அதை பயன்படுத்தும் விதத்தில்தான் அவர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் அவர்களுக்கு அமைந்திருக்கிறது..!!

தியாகமென்றெண்ணி திரியாய் மாறி கரியாய்போகும் மனோபாவம் அவர்களுக்குள் இருக்கும்வரை இதுபோன்ற கவிதைகள் அவ்வப்போது அவர்களுக்காக உதித்துக்கொண்டுதானிருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து...!!

முதல்கவிதையில் சாந்தமாக சாடி.. மறுகவிதையில் சீற்றத்தை சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு... வாழ்த்துக்கள்..ரிஷான் ஷெரிப்..!!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ said...

//அது ஒரு பெண் மனது
பால்யம் முதலாய்ப் பலர் சேர்ந்து
பருவங்கள் தோறும்
பல எல்லைகளையும் அணைகளையும்
வளையங்களையுமிட்டு
இன்னும் பல இடர்களை ஒன்றாய்ப் பின்னி
இறுக இறுகச் சேர்த்துக்
கட்டிய மனது//

ஒவ்வொரு வயதுகளிலும் ஒவ்வொரு ஆசைகள் ஏற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அடைந்தவைகளை அழகாய் வழியனுப்பிவைத்தும் அடைய முடியாதவைகளை வலுக்கட்டாயமாய் இறக்கிவிட்டும் இப்படியாய் தொடரும் வயதின ஆசைகளை சுட்டிக்காட்டும் அற்புத வரிகள். பாராட்டுக்கள் ரிஸான்.

Suresh said...

அருமையாய இருந்தது உங்க பதிவு,
இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்
வோட்டும் போட்டாச்சு :-)
http://sureshstories.blogspot.com/
நானும் நல்ல பதிவுகள் போட்டு இருக்கான் வந்து பாருங்க
படிச்சு பிடிச்ச வோட்ட போடுங்க :-)

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் கலை,

நலம்தானே? நுவரெலியாவில் பனி விழுவதாகப் படங்கள் கிடைத்தன. எனது ஆங்கில வலைத்தளத்தில் இட்டிருக்கிறேன்..நேரம் கிடைக்கும்போது பாருங்கள்.

//இப்படி ஒரு கவிதையை இதுவே முதல் தடவை வாசித்தது. சூப்பர் சூப்பர்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் மாதவராஜ்,

தமிழ்மண நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே !

//இரண்டு கவிதைகளும் அருமை.
முன்னது வலியையும், பின்னது சிதைவையும் சொல்கிறது. இரண்டுமே துயரின் சோபையோடு ஒலிக்கின்றன.

ஆமாம், ரொம்ப நாளாய் எழுதவில்லையே..? //

இணையத்தொடர்பில் சிக்கலிருந்தது. எழுதுவதும் வாசிப்பதுவும் இன்றி சில நாட்கள் வாழவேண்டிச் செய்தது அது :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் யாத்ரா,

//மிக அற்புதமாயிருக்கிறது கவிதைகள்//

உங்கள் முதல் வருகை நல்வரவாகட்டும் !

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் கவிநயா,

////அவதூறுகள் கொண்டும்
கடுஞ்சொற்கள் கொண்டும்
அவளுக்கு வலிக்க வலிக்க
மகிழ்வோடும் அலுப்பில்லாமலும்
இதயம் நிறைந்த குரூரத்தோடும்
மீளவும் மெருகேற்றினர்//

இப்படித்தான் இருக்கிறது உலகம். வார்த்தைகள் என்னமாய் வேலை செய்கின்றன, உங்களுக்கு...//

இப்படியேதான் இருக்கின்றது உலகம்..எந்த மாற்றங்களுமற்று சகோதரி :(

//அஃறினைகளுக்காளாக்கி
அவளை வதைத்தது போதும்
எப்போதவளைச் சக மனுஷியென்பாய் ?//

இந்தக் கவிதை புன்னகையை வரவழைத்தது :) வித்தியாசமான சிந்தனை, ரிஷு.//

:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

எம்.ரிஷான் ஷெரீப் said...

ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்தினை முன்வைக்கிறீர்கள் சுகந்தப்ரீதன்.
அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

//ஒவ்வொரு வயதுகளிலும் ஒவ்வொரு ஆசைகள் ஏற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அடைந்தவைகளை அழகாய் வழியனுப்பிவைத்தும் அடைய முடியாதவைகளை வலுக்கட்டாயமாய் இறக்கிவிட்டும் இப்படியாய் தொடரும் வயதின ஆசைகளை சுட்டிக்காட்டும் அற்புத வரிகள். பாராட்டுக்கள் ரிஸான்.//

மிக அழகாகச் சொல்கிறீர்கள் சுனைத் ஹசனீ. ஆசைகள் ஏற்றப்படுவதும் வழியனுப்பி வைப்பதுவும் பெண்களுக்கு மட்டுமே அதிகளவில் நிகழ்கிறதுதானே ?
கருத்துக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே !