Tuesday, May 19, 2009

மீள்தலின் பாடல்


ஓய்வுகளின்றி ஓடித்திரிந்த உடல்
தொய்வுகளேதுமின்றி
எழுதிவந்த விரல்கள்
வெளியெங்கும் புன்னகையை விதைக்கும்
இதழ்களோடும் விழிகளோடும்
சேர்ந்தெப்பொழுதும் மூடியே இருந்தன
இரவு பகல் காலநிலையென
மாறும் காலக்கணக்குகளறியாது
ஆஸ்பத்திரிக்கட்டிலில் மயங்கிக்கிடந்தேன்
ஓயாத பேச்சுக்குள் சிக்கித்தவித்த நாவு
மௌனத்தைப் போர்த்தி உறங்கிப்போனது

கண்களில் பேரன்பு பொருத்தித் தலைகோதி
ஆரோக்கியத்தைச் சொட்டுச் சொட்டாக ஏற்றி
எனது புலம்பல்களைச் சகித்தபடி
நடமாடிய செவிலித்தாய்களில்
அக்கா உன்னைக் கண்டேன்

ஆறுதலும் அக்கறையும் மிகுந்த வார்த்தைகளை
உன்னழுகையில் குரல் இடராது
தொலைபேசி வழியே கசியவிட்டாய்
நகர்ந்த நொடிகளனைத்திலுமுன்
பிரார்த்தனைகளினதும்
நீ அதிர்ந்தெழும் கொடிய கனவுகளினதும்
மையப்பொருளாக
நானிருந்தேனெனப் பின்னரறிந்தேன்

நீ பார்த்துப்பார்த்துச் செதுக்கிய
கவிதையின் முகத்தினை
மீளப்பொருத்தியபடி
தம்பி வந்திருக்கிறேன்
எல்லாக்காயங்களையும்
முழுதாயாற்றிடக் காலத்துக்கும்
சிறிது காலமெடுக்கலாம்
எனினும்
'மீளவும் பழைய ஆரோக்கியத்திடம்
மீண்டுவிட்டேன்' என
இப்போதைக்கு உன் வரிகளைச்
சொல்வதன்றி வேறறியேன்

- எம்.ரிஷான் ஷெரீப்.

* அன்புச் சகோதரி ஃபஹீமா ஜஹானுக்கு...

29 comments:

Saravana Kumar MSK said...

வாங்க ரிஷான்.. வாங்க.. உங்களைதான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.. மகிழ்ச்சியாய் இருக்கிறது இப்போது..
உங்களை பற்றிய தகவல் ஏதும் இல்லாமல், கலங்கடித்து விட்டீர்கள்..

Saravana Kumar MSK said...

Welcome back..
and
Take Care..

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

"மீளவும் பழைய ஆரோக்கியத்திடம்
மீண்டுவிட்டேன்"
மிகவும் சந்தோசம். முழுமையாக நலம் பெற்று முழு வீச்சுடன் இயங்க வாழ்த்துக்க்ள்.

Muhammad Ismail .H, PHD, said...

@ அன்பின் ரிஷான்,

நீங்கள் மீண்டு வந்தமைக்கு வல்ல இறைவனுக்கு நன்றிகள். உங்களை நேரில் பார்த்தது இல்லையெனினும் உங்களின் எழுத்துக்கள் வாயிலாக உங்களை அறிந்தது அதிகம். உங்களின் உதவிக்கு நன்றி. நீங்கள் கேட்ட 'ஜீலை 22' நிகழ்வைப்பற்றி மின்னஞ்சல் வாயிலாக பதில் அனுப்பி உள்ளேன். அது பற்றிய எங்களின் ஆராய்ச்சி & தகவல்கள் இங்கேயும் உள்ளது.
http://jayabarathan.wordpress.com/2009/05/14/katturai-58/#comments

with care & love,
Muhammad Ismail .H, PHD,

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

:))))
Smile back on the face...
மீண்டும் சிரிப்பு முகத்தில்...
Welcome back Rishan! மீள் நல்வரவு!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

பஹீமா ஜஹானுக்கு இவ்வமயத்தில் எங்கள் நன்றியும் வாழ்த்தும் மிகவும் மிகவும்!

Gowripriya said...

"மீளவும் பழைய ஆரோக்கியத்திடம்
மீண்டுவிட்டேன்"


மகிழ்ச்சி ரிஷான்.. வேறொரு பதிவில் சகோதரி பஹீமா சொன்னது போல் நிறைய ஓய்வு எடுத்துவிட்டு வாருங்கள்.. அவசரமில்லை..

தமிழ்ப்பறவை said...

மீண்டு வந்ததற்கு வாழ்த்துக்கள் ரிஷான்...

T.V.Radhakrishnan said...

Welcome back..

த.ஜீவராஜ் said...

'மீளவும் பழைய ஆரோக்கியத்திடம்
மீண்டுவிட்டேன்' என
இப்போதைக்கு உன் வரிகளைச்
சொல்வதன்றி வேறறியேன்

நன்றி நண்பனே...
உங்களைப் பற்றிய தகவல் ஏதும் இல்லாமல் கலங்கி இருந்தோம்


மகிழ்ச்சியாய் இருக்கிறது இப்போது..

முழுமையாக நலம் பெற்று முழு வீச்சுடன் இயங்க வாழ்த்துக்கள்.

மதுவதனன் மௌ. said...

ரிஷான் நண்பா,

சாரலென சாறலை மாற்றியபோது
நண்பனொருவன் திருத்தினான் என
பின்னூட்டத்தை பிரசுரித்த உன்
பண்பு இன்னும் மனத்தில்,

நீண்ட நாள் வலையுலகம் மறந்திருந்தபோது
அனைவருக்கும் அறிமுகப்படுத்தி
கிழமைக்கொன்றாவது போடு என
அதட்டிய அந்த நல்ல நட்பை
நன்றே நானறிவேன்,

உங்கள் உடல் நிலைபற்றி கவலைகள்
நிறைந்து கிடந்தது இதயமெங்கும்
வாசித்த உங்கள் கவிதைகள்
கலைந்து கிடந்தன நினைவுகளில்,

பிளாக்கர் தவிர வேறெந்தத் தொடர்பும் இல்லை
ஆனாலும் ஒரு அன்னியோன்னியம்
மீண்டு(ம்) வந்ததில் மிக்க மகிழ்ச்சி.

இப்போது நானும் இடையிடையே பதிவிடுகிறேன் ரிஷான்.

மதுவதனன் மௌ. (aka) கௌபாய்மது

ஆதவா said...

நன்றாக இருக்கிறது மீள்தலின் பாடல். சிறப்பாகவும் எளிதில் புரியும்படியாகவும்!!!

உங்கள் மீள்வரவுக்கு வரவேற்புகள்!

மண்குதிரை said...

மகிழ்ச்சியாக இருக்கிறது ரிஷான். தொடர்பில் இருங்கள்,,,,,,,,,,,,

ஆதவன் said...

kavithai arumai.. pugaippadam miga sirandha thervu..

பிரவின்ஸ்கா said...

கவிதை அருமையாக இருக்கிறது.

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் சரவணகுமார் MSK,

//வாங்க ரிஷான்.. வாங்க.. உங்களைதான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.. மகிழ்ச்சியாய் இருக்கிறது இப்போது..
உங்களை பற்றிய தகவல் ஏதும் இல்லாமல், கலங்கடித்து விட்டீர்கள்..//

மீளவும் வந்துவிட்டேன்.
உங்கள் தனிமடலும் கண்டேன். :)

அன்பான விசாரிப்பிற்கும், வரவேற்புக்கும் நன்றி நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் டொக்டர் எம்.கே.முருகானந்தன்,

//"மீளவும் பழைய ஆரோக்கியத்திடம்
மீண்டுவிட்டேன்"
மிகவும் சந்தோசம். முழுமையாக நலம் பெற்று முழு வீச்சுடன் இயங்க வாழ்த்துக்க்ள்.//

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி டொக்டர் !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் முஹம்மத் இஸ்மாயில்,

//அன்பின் ரிஷான்,

நீங்கள் மீண்டு வந்தமைக்கு வல்ல இறைவனுக்கு நன்றிகள். உங்களை நேரில் பார்த்தது இல்லையெனினும் உங்களின் எழுத்துக்கள் வாயிலாக உங்களை அறிந்தது அதிகம். உங்களின் உதவிக்கு நன்றி. நீங்கள் கேட்ட 'ஜீலை 22' நிகழ்வைப்பற்றி மின்னஞ்சல் வாயிலாக பதில் அனுப்பி உள்ளேன். அது பற்றிய எங்களின் ஆராய்ச்சி & தகவல்கள் இங்கேயும் உள்ளது.
http://jayabarathan.wordpress.com/2009/05/14/katturai-58/#comments //

உங்களை இங்கு சந்தித்ததில் மகிழ்ச்சி. நாம் பேசிக்கொண்ட பிறகு இடையில் என்னவெல்லாமோ நடந்துவிட்டது இல்லையா?
நீங்கள் தந்த இணைப்பில் பார்த்தேன். நல்ல விளக்கம்.

நன்றி அன்பு நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் கண்ணபிரான் ரவிஷங்கர்,

//:))))
Smile back on the face...
மீண்டும் சிரிப்பு முகத்தில்...
Welcome back Rishan! மீள் நல்வரவு!//

:))))))))))))))) (போதுமா? :) )

அன்பான வரவேற்புக்கு நன்றி நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

//Blogger kannabiran, RAVI SHANKAR (KRS) said...

பஹீமா ஜஹானுக்கு இவ்வமயத்தில் எங்கள் நன்றியும் வாழ்த்தும் மிகவும் மிகவும்!//

எனதும் !!!

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் கௌரிப்ரியா,

//"மீளவும் பழைய ஆரோக்கியத்திடம்
மீண்டுவிட்டேன்"


மகிழ்ச்சி ரிஷான்.. வேறொரு பதிவில் சகோதரி பஹீமா சொன்னது போல் நிறைய ஓய்வு எடுத்துவிட்டு வாருங்கள்.. அவசரமில்லை..//

:)
ஓய்வெடுத்துக் கொண்டே இருப்பதுவும் போரடிக்கிறது..அதனால் மீண்டும் நதியுடன் கலந்துவிட்டேன் :)

நன்றி சகோதரி !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் தமிழ்ப்பறவை,

//மீண்டு வந்ததற்கு வாழ்த்துக்கள் ரிஷான்...//

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி அன்பு நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் T.V.Radhakrishnan,

// Welcome back..//

வருகைக்கும் வரவேற்புக்கும் நன்றி நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் த.ஜீவராஜ்,

//'மீளவும் பழைய ஆரோக்கியத்திடம்
மீண்டுவிட்டேன்' என
இப்போதைக்கு உன் வரிகளைச்
சொல்வதன்றி வேறறியேன்

நன்றி நண்பனே...
உங்களைப் பற்றிய தகவல் ஏதும் இல்லாமல் கலங்கி இருந்தோம்


மகிழ்ச்சியாய் இருக்கிறது இப்போது..

முழுமையாக நலம் பெற்று முழு வீச்சுடன் இயங்க வாழ்த்துக்கள்.//

உங்கள் அன்பான வரவேற்பில் மகிழ்கிறேன். தனிமடலும் கண்டேன்.

வருகைக்கும் வரவேற்புக்கும் நன்றி நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் மதுவதனன் மௌ.

//ரிஷான் நண்பா,

சாரலென சாறலை மாற்றியபோது
நண்பனொருவன் திருத்தினான் என
பின்னூட்டத்தை பிரசுரித்த உன்
பண்பு இன்னும் மனத்தில்,

நீண்ட நாள் வலையுலகம் மறந்திருந்தபோது
அனைவருக்கும் அறிமுகப்படுத்தி
கிழமைக்கொன்றாவது போடு என
அதட்டிய அந்த நல்ல நட்பை
நன்றே நானறிவேன் //

:)

//உங்கள் உடல் நிலைபற்றி கவலைகள்
நிறைந்து கிடந்தது இதயமெங்கும்
வாசித்த உங்கள் கவிதைகள்
கலைந்து கிடந்தன நினைவுகளில்,

பிளாக்கர் தவிர வேறெந்தத் தொடர்பும் இல்லை
ஆனாலும் ஒரு அன்னியோன்னியம்
மீண்டு(ம்) வந்ததில் மிக்க மகிழ்ச்சி. //

அழகான வரிகளில் வந்த உங்கள் பின்னூட்டம் என்னை மகிழ்விக்கின்றது நண்பா.

//இப்போது நானும் இடையிடையே பதிவிடுகிறேன் ரிஷான்.//

மிகவும் மகிழ்ச்சி.
நிச்சயம் உங்கள் பதிவுகளின் பக்கம் வருகிறேன். தொடருங்கள்.

வருகைக்கும் அன்பான வரவேற்புக்கும் நன்றி நண்பா !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் ஆதவா,

//நன்றாக இருக்கிறது மீள்தலின் பாடல். சிறப்பாகவும் எளிதில் புரியும்படியாகவும்!!! //

நோயுற்ற நிலையில் அவசரமாக எழுதியது. ஒழுங்காக வரவில்லையோ என வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். உங்கள் கருத்தினைப் பார்த்ததும்தான் நிம்மதியாக மூச்சு விட முடிகிறது.

//உங்கள் மீள்வரவுக்கு வரவேற்புகள்!//

வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வரவேற்புகளுக்கும் நன்றி நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் நண்பர் மண்குதிரை,

//மகிழ்ச்சியாக இருக்கிறது ரிஷான். தொடர்பில் இருங்கள்,,,,,,,,,,,,//

:)
நிச்சயம் தொடர்பில் இருப்போம்.
நன்றி அன்பு நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் ஆதவன்,

//kavithai arumai.. pugaippadam miga sirandha thervu..//

உங்கள் முதல்வருகை மகிழ்ச்சி தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

அந்தப் படம் எப்பொழுதோ எடுத்துவைத்தது. இப் பதிவுக்குப் பயன்பட்டது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் பிரவின்ஸ்கா,

//கவிதை அருமையாக இருக்கிறது.
//

மிக அழகான பெயர் உங்களது. பிடித்திருக்கிறது.

உங்களதும் முதல்வருகை என நினைக்கிறேன். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !