Wednesday, July 1, 2009

வதந்தி


உதிர்ந்த இலைச்சருகுகளுக்குள்
ஊர்ந்தொளிகிறது பாம்பு
கசந்த அசைவொன்றைக்
காற்றுக்குக் கொடுத்தபடி
ஆடியசையும் வனவிருட்சங்கள்
விஷப்பாம்பினைப் போர்த்த
மேலும் மேலும் உதிர்க்கின்றன
இலைகளையும் காட்டுப்பூக்களையும்

குஞ்சுகளின் பசியாற்றிய பட்சி
உள்ளே அதிர்ந்து நிற்க
பசித்த பாம்பு தன் வாடை பரப்பி
மரமொன்றின் கிளிப்பொந்தில்
இரைதேடி ஏறுகிறது

பீதியில் நடுநடுங்கிய
தாய்க்கிளியின் ஓசை
வனமெங்கும் அதிர
ஏதுமறியாக் குஞ்சுகளும்
உண்ட இரை கக்கத் தம்
மென்குரலில் அலற
சர்ப்பம் ஒரு குஞ்சை விழுங்கிற்று

எஞ்சிய குஞ்சுகள்
விஷ உடலின் கீழ் நசுங்கி
இடையறாது கதற
நிஷ்டை கலைந்த வனமும்
மற்றவையும்
பட்சிகளைச் சாடியபடி கிடக்கையில்

எப்பொழுதும் போலக்
குஞ்சுகளின் குரலெடுத்து
அவற்றின் உயிரெடுத்துக்
காற்றே போ
கிளிச்சொண்டு சொல்லுதிர்த்ததால்தான்
காட்டில் பெருங்கலகம் விளைந்ததெனப்
போய்ச் சொல்

-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.


நன்றி - உன்னதம் ( மே-2009) இதழ்

42 comments:

ச.முத்துவேல் said...

அபாரம் நண்பரே! வாழ்த்துகள்.

Athikkadayan said...

மிக அழகாக காட்சிபடுத்தியிருக்கிறீர்கள் ரிஷான். தொடரட்டும் தங்கள் கவிதை. நீங்கள் காட்சிபடுத்தியிருக்கும் பாம்புகளை போல மனித உருவிலும் பலர் இருக்கின்றனர். அவர்களில் சிலர் ஆட்சியாளர்களாகவும் இருக்கின்றனர். அத்தகைய பாம்புகளின் விஷப்பல்லை பிடுங்கும் மக்கள் திரள் போராட்டங்களின் எழுசிப்பாடலாக இந்த கவிதை அமையட்டும்.

ஒளியவன் said...

இறுதி வரிகள் வெகு உண்மை!

தமிழன் வேணு said...

ஒரு பாவமும் அறியாத கிளியின் மீது பழியா? ஆனால், இது தான் நிஜம்; எவ்வளவு மெனக்கெட்டாலும் பழி ஓரிடம்; பாவம் ஓரிடம் என்பது மட்டும் நீங்கள் குறிப்பிட்ட பாம்பைப் போலவே துரத்தித் துரத்தி விழுங்கிக்கொண்டிருக்கிறது.

தமிழன் வேணு

துரை said...

அன்பு ரிஷான்
ஒவ்வொரு வரியும் திகைக்க வைக்கிறது

சிவகுருநாதன் said...

இந்தக் கவிதையில் வார்த்தைகள், உட்கருத்து இரண்டுமே படிக்கிறவர்க்கு ஒரு விதமான பதற்றத்தை ஏற்படுத்துகின்றன. முடிவில் பாம்புக்கு இரையான அந்தக் குஞ்சை எண்ணி மனம் கதறுகிறது. பாராட்ட வார்த்தைகளே இல்லை.

நேசமித்ரன் said...

அபாரம் ரிஷான் !
கவிதை வெகு உண்மை
வாழ்த்துகள்

கவிநயா said...

அழகான கவிதை ரிஷு. படமும் வெகு அழகு. உங்க கைவண்ணமா? :)

இளசு said...

பழி ஓரிடம்
பாவம் ஓரிடம்..

உண்மைகள் வீட்டுமுற்றம் தாண்டுமுன்
வதந்திகள் வலமே வந்துவிடும்!

குணவதியைவிட விலைமகளுக்குக்
கிடைக்கும் வரவேற்பு அதீதம்..

கூர்பார்வைக் காலம் சிலநேரம்
இத்தீக்களை அணைத்து அடியுண்மை காட்டலாம்...


கவிதைக்குப் பாராட்டுகள் ரிஷான்...

ஈழப்போர் நினைவு வந்து கசிந்தேன்!

பிரவின்ஸ்கா said...

ரொம்ப நல்லாருக்கு

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

விஜி said...

// உதிர்ந்த இலைச்சருகுகளுக்குள்
ஊர்ந்தொளிகிறது பாம்பு
கசந்த அசைவொன்றைக்
காற்றுக்குக் கொடுத்தபடி
ஆடியசையும் வனவிருட்சங்கள்
விஷப்பாம்பினைப் போர்த்த
மேலும் மேலும் உதிர்க்கின்றன
இலைகளையும் காட்டுப்பூக்களையும்//


ரிஷான், உங்கள் வார்த்தையாடல்கள் வெகுவாகப்பொருந்திப் போகின்றது ஈழத்தமிழரின் இன்றைய வாழ்வை....பாராட்டுக்கள்.
//குஞ்சுகளின் பசியாற்றிய பட்சி
உள்ளே அதிர்ந்து நிற்க
பசித்த பாம்பு தன் வாடை பரப்பி
மரமொன்றின் கிளிப்பொந்தில்
இரைதேடி ஏறுகிறது

பீதியில் நடுநடுங்கிய
தாய்க்கிளியின் ஓசை
வனமெங்கும் அதிர
ஏதுமறியாக் குஞ்சுகளும்
உண்ட இரை கக்கத் தம்
மென்குரலில் அலற
சர்ப்பம் ஒரு குஞ்சை விழுங்கிற்று//


ஒன்றையா? ஒரு இனத்தையே?//எஞ்சிய குஞ்சுகள்
விஷ உடலின் கீழ் நசுங்கி
இடையறாது கதற
நிஷ்டை கலைந்த வனமும்
மற்றவையும்
பட்சிகளைச் சாடியபடி கிடக்கையில்

எப்பொழுதும் போலக்
குஞ்சுகளின் குரலெடுத்து
அவற்றின் உயிரெடுத்துக்
காற்றே போ
கிளிச்சொண்டு சொல்லுதிர்த்ததால்தான்
காட்டில் பெருங்கலகம் விளைந்ததெனப்
போய்ச் சொல்//மிகவும் நல்ல சொல்லாடல்கள் ரிஷான்.

புரிபவர்களுக்கு நிறையவே புரியும்.

நன்றி.

தேனுஷா said...

வல்லவன் வகுத்ததே நீதின்னு ஆகிப்போச்சு ரிசான்

பூங்குழலி said...

//பீதியில் நடுநடுங்கிய
தாய்க்கிளியின் ஓசை
வனமெங்கும் அதிர
ஏதுமறியாக் குஞ்சுகளும்
உண்ட இரை கக்கத் தம்
மென்குரலில் அலற
சர்ப்பம் ஒரு குஞ்சை விழுங்கிற்று//

அருமையான வரிகள் ரிஷான்

சக்தி சக்திதாசன் said...

அன்பின் ரிஷான்,

உணர்வுகளின் புதையலாக திர்ந்திருக்கிறது கவிதையாக உங்கள் வாரிகள்.

பாராட்டுக்கள்

அன்புடன்
சக்தி

சீனா said...

அருமை அருமை அன்பின் ரிஷான்

வதந்தி எவ்வாறு தவறான கருத்துகளைப் பரப்புகிறாது என்பதனை விளக்கும் அருமைக் கவிதை.

விஷப் பாம்பு குஞ்சுகளை அழிக்கும் போதும் கூட - குஞ்சுகளின் தவறே அமைதியின்மைக்குக் காரணம் எனக் கதறும் வதந்திகள்.

நல்ல கருத்து ரிஷான்

நல்வாழ்த்துகள் ரிஷான்

நட்புடன் ..... சீனா

ஷைலஜா said...

கவிதை வரிகள் எனக்கும் புரிகிறது ரிஷான். கசந்த அசைவு என்னும் சொல் புதிது தமிழை அழகாக புதுமையாக கையாளுகிறீர்கள் சகோதரனே!

ராமலக்ஷ்மி said...

பொருள் பொதிந்த அற்புதமான கவிதை.

//கிளிச்சொண்டு சொல்லுதிர்த்ததால்தான்
காட்டில் பெருங்கலகம் விளைந்ததெனப்
போய்ச் சொல்//

இப்படித்தான் நடக்கின்றது:(!

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் ச.முத்துவேல்,

//அபாரம் நண்பரே! வாழ்த்துகள்.//

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் ஷேக் தாவூத்,

//மிக அழகாக காட்சிபடுத்தியிருக்கிறீர்கள் ரிஷான். தொடரட்டும் தங்கள் கவிதை. நீங்கள் காட்சிபடுத்தியிருக்கும் பாம்புகளை போல மனித உருவிலும் பலர் இருக்கின்றனர். அவர்களில் சிலர் ஆட்சியாளர்களாகவும் இருக்கின்றனர். அத்தகைய பாம்புகளின் விஷப்பல்லை பிடுங்கும் மக்கள் திரள் போராட்டங்களின் எழுசிப்பாடலாக இந்த கவிதை அமையட்டும்.//

ஆமாம்..நீங்கள் சொல்வதைப்போல கொடிய விஷத்துடன் அலையும் பாம்புகளையொத்த மனிதர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்தான். மிக்க வெளிப்பகட்டுடன் நடமாடித் திரியுமவை செய்யும் அத்தனை அநீதிகளுக்கான தண்டனையையும் அப்பாவிகளுக்கு விட்டுப் போகின்றன. :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் பாஸ்கர்,

//இறுதி வரிகள் வெகு உண்மை!//

புரிந்திருக்கிறீர்கள் :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் வேணு ,

//ஒரு பாவமும் அறியாத கிளியின் மீது பழியா? ஆனால், இது தான் நிஜம்; எவ்வளவு மெனக்கெட்டாலும் பழி ஓரிடம்; பாவம் ஓரிடம் என்பது மட்டும் நீங்கள் குறிப்பிட்ட பாம்பைப் போலவே துரத்தித் துரத்தி விழுங்கிக்கொண்டிருக்கிறது.//


மிகச் சரி. எல்லாம் அறிந்தும் அல்லது ஏதுமறியாது பழிகளைச் சுமத்துபவர்களால் அப்பாவிகள் பழி சுமக்க வேண்டியவர்களாகிறார்கள். :(

கருத்துக்கு நன்றி நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் துரை,

//அன்பு ரிஷான்
ஒவ்வொரு வரியும் திகைக்க வைக்கிறது//


:)

கருத்துக்கு நன்றி நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் சிவகுருநாதன்,

//இந்தக் கவிதையில் வார்த்தைகள், உட்கருத்து இரண்டுமே படிக்கிறவர்க்கு ஒரு விதமான பதற்றத்தை ஏற்படுத்துகின்றன. முடிவில் பாம்புக்கு இரையான அந்தக் குஞ்சை எண்ணி மனம் கதறுகிறது. பாராட்ட வார்த்தைகளே இல்லை.//

கவிதை குறித்த கருத்துக்கு நன்றி நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் நேசமித்ரன்,

//அபாரம் ரிஷான் !
கவிதை வெகு உண்மை
வாழ்த்துகள்//

உங்கள் முதல்வருகையும் கருத்தும் மகிழ்வைத் தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் கவிநயா,

//அழகான கவிதை ரிஷு. படமும் வெகு அழகு. உங்க கைவண்ணமா? :)//

இல்லை..இம்முறை வரைய நேரம் கிடைக்கவில்லை சகோதரி :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

அமரன் said...

கவிதையைப் படித்ததும் தாறுமாறான மனவோட்டம்.

அண்ணனுக்கு வந்த அதே நினைப்பு
கண்ணுக்குள் முள்ளானது.

என் அய்யா அடிக்கடி உச்சரிப்பது
"மதி முக்கால் விதி மீதிக்கால்"

வதந்தியில் முக்கால் தந்தி.....!!!!!!!
முன்னிற்கும் வகரம் பொட்டிழந்த வக்ரம்.

வதந்தியைப் பற்றி இனியும் சொல்ல வேண்டுமா?

தந்தி என்றாலே இருதயம் தந்தியடித்து மயங்குவது
இன்னும் பெரும(வ)லையாக இருக்கத்தான் செய்கிறது.

பாராட்டுகள் ரிஷான்.

நாகரா said...

உயிர் போக்கும் சிங்கக் காரணத்தை எதிர்த்து
உயிர் காக்கப் போராடிப் பலியாகும் புலிக் காரியம்
காரியத்தைக் காரணமாக்கி
சிங்கத்தின் அவத்தை மறைத்துப்
புலியை ஓயாமல் பழிக்கும் வதந்தி!

ஈழ நிலவரத்தைக் குறியீடுகளால் உணர்த்தும் அருங்கவிதை, வாழ்த்துக்கள் ரிஷான்
__________________
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் இளசு,

//பழி ஓரிடம்
பாவம் ஓரிடம்..

உண்மைகள் வீட்டுமுற்றம் தாண்டுமுன்
வதந்திகள் வலமே வந்துவிடும்!

குணவதியைவிட விலைமகளுக்குக்
கிடைக்கும் வரவேற்பு அதீதம்..

கூர்பார்வைக் காலம் சிலநேரம்
இத்தீக்களை அணைத்து அடியுண்மை காட்டலாம்...


கவிதைக்குப் பாராட்டுகள் ரிஷான்...

ஈழப்போர் நினைவு வந்து கசிந்தேன்! //

அருமையான கருத்துக்கள்.
நன்றி நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் பிரவின்ஸ்கா,

//ரொம்ப நல்லாருக்கு //

நண்பர் ஷேக் தாவூத், 'யுகமாயினி' கலந்துரையாடலில் உங்களைச் சந்தித்ததையும் நீங்கள் என்னை விசாரித்ததையும் சொன்னதில் மிகவும் மகிழ்ந்தேன். :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் விஜி,

//பீதியில் நடுநடுங்கிய
தாய்க்கிளியின் ஓசை
வனமெங்கும் அதிர
ஏதுமறியாக் குஞ்சுகளும்
உண்ட இரை கக்கத் தம்
மென்குரலில் அலற
சர்ப்பம் ஒரு குஞ்சை விழுங்கிற்று


ஒன்றையா? ஒரு இனத்தையே?//


இனத்தைத்தான்.. அவ் விஷப்பாம்பின் அடுத்த இலக்கு மற்ற இனங்களாகத்தான் இருக்கும்.//எஞ்சிய குஞ்சுகள்
விஷ உடலின் கீழ் நசுங்கி
இடையறாது கதற
நிஷ்டை கலைந்த வனமும்
மற்றவையும்
பட்சிகளைச் சாடியபடி கிடக்கையில்

எப்பொழுதும் போலக்
குஞ்சுகளின் குரலெடுத்து
அவற்றின் உயிரெடுத்துக்
காற்றே போ
கிளிச்சொண்டு சொல்லுதிர்த்ததால்தான்
காட்டில் பெருங்கலகம் விளைந்ததெனப்
போய்ச் சொல்
<<<<மிகவும் நல்ல சொல்லாடல்கள் ரிஷான்.

புரிபவர்களுக்கு நிறையவே புரியும்.

நன்றி.//


கவிதையை அரசியலோடு நுட்பமாகப் பொருத்திப் பார்த்துப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள்..நன்றி தோழி !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் தேனுஷா,

//வல்லவன் வகுத்ததே நீதின்னு ஆகிப்போச்சு ரிசான் //


ஆமாம்..அதைத்தான் அனுபவித்துக் கொண்டுமிருக்கிறோம் :(

கருத்துக்கு நன்றி தோழி !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் பூங்குழலி,


பீதியில் நடுநடுங்கிய
தாய்க்கிளியின் ஓசை
வனமெங்கும் அதிர
ஏதுமறியாக் குஞ்சுகளும்
உண்ட இரை கக்கத் தம்
மென்குரலில் அலற
சர்ப்பம் ஒரு குஞ்சை விழுங்கிற்று

அருமையான வரிகள் ரிஷான்

கருத்துக்கு நன்றி சகோதரி !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் சக்தி சக்திதாசன் ஐயா,


//அன்பின் ரிஷான்,


உணர்வுகளின் புதையலாக திர்ந்திருக்கிறது கவிதையாக உங்கள் வாரிகள்.

பாராட்டுக்கள் //


உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்களுக்கும் மிகவும் நன்றி நண்பரே !!

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் சீனா ஐயா,


//அருமை அருமை அன்பின் ரிஷான்


வதந்தி எவ்வாறு தவறான கருத்துகளைப் பரப்புகிறாது என்பதனை விளக்கும் அருமைக் கவிதை.

விஷப் பாம்பு குஞ்சுகளை அழிக்கும் போதும் கூட - குஞ்சுகளின் தவறே அமைதியின்மைக்குக் காரணம் எனக் கதறும் வதந்திகள்.

நல்ல கருத்து ரிஷான்

நல்வாழ்த்துகள் ரிஷான் //


கருத்துக்கும் அன்பான நல்வாழ்த்துக்களுக்கும் நன்றி ஐயா !!!

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் ஷைலஜா அக்கா,

கவிதை வரிகள் எனக்கும் புரிகிறது ரிஷான். கசந்த அசைவு என்னும் சொல் புதிது தமிழை அழகாக புதுமையாக கையாளுகிறீர்கள் சகோதரனே!

:))
கருத்துக்கு நன்றி அக்கா !!

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் அமரன்,

//கவிதையைப் படித்ததும் தாறுமாறான மனவோட்டம்.

அண்ணனுக்கு வந்த அதே நினைப்பு
கண்ணுக்குள் முள்ளானது.

என் அய்யா அடிக்கடி உச்சரிப்பது
"மதி முக்கால் விதி மீதிக்கால்"

வதந்தியில் முக்கால் தந்தி.....!!!!!!!
முன்னிற்கும் வகரம் பொட்டிழந்த வக்ரம்.

வதந்தியைப் பற்றி இனியும் சொல்ல வேண்டுமா?

தந்தி என்றாலே இருதயம் தந்தியடித்து மயங்குவது
இன்னும் பெரும(வ)லையாக இருக்கத்தான் செய்கிறது.

பாராட்டுகள் ரிஷான். //

உங்களது "வதந்தியில் முக்கால் தந்தி.....!!!!!!!
முன்னிற்கும் வகரம் பொட்டிழந்த வக்ரம்." இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்.
நன்றி நண்பரே !
Edit/Delete Message

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் நாகரா,

//உயிர் போக்கும் சிங்கக் காரணத்தை எதிர்த்து
உயிர் காக்கப் போராடிப் பலியாகும் புலிக் காரியம்
காரியத்தைக் காரணமாக்கி
சிங்கத்தின் அவத்தை மறைத்துப்
புலியை ஓயாமல் பழிக்கும் வதந்தி!

ஈழ நிலவரத்தைக் குறியீடுகளால் உணர்த்தும் அருங்கவிதை, வாழ்த்துக்கள் ரிஷான் //

கவிதையின் குறியீடு புரிந்ததில் மகிழ்ச்சி.
அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் ராமலக்ஷ்மி,

//பொருள் பொதிந்த அற்புதமான கவிதை.

//கிளிச்சொண்டு சொல்லுதிர்த்ததால்தான்
காட்டில் பெருங்கலகம் விளைந்ததெனப்
போய்ச் சொல்//

இப்படித்தான் நடக்கின்றது:(!//

ஆமாம்..எல்லா இடங்களிலும் இதே நிலைதான்.. ஆட்சிநிலைகளிலும்..அடிமட்டங்களிலும் :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

Karthikeyan G said...

//எப்பொழுதும் போலக்
குஞ்சுகளின் குரலெடுத்து
அவற்றின் உயிரெடுத்துக்
காற்றே போ
கிளிச்சொண்டு சொல்லுதிர்த்ததால்தான்
காட்டில் பெருங்கலகம் விளைந்ததெனப்
போய்ச் சொல்//

English media is doing the same here :(

கவிதை அபாரம்..

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் கார்த்திகேயன்,

////எப்பொழுதும் போலக்
குஞ்சுகளின் குரலெடுத்து
அவற்றின் உயிரெடுத்துக்
காற்றே போ
கிளிச்சொண்டு சொல்லுதிர்த்ததால்தான்
காட்டில் பெருங்கலகம் விளைந்ததெனப்
போய்ச் சொல்//

English media is doing the same here :(

கவிதை அபாரம்..//

ஆங்கிலம் மட்டுமல்ல நண்பரே..எல்லா ஊடகங்களும்தான் :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

மதுவதனன் மௌ. / cowboymathu said...

வழமை போலவே... அழகாக வடித்துள்ளீர்கள்..

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் மதுவதனன் மௌ.

//வழமை போலவே... அழகாக வடித்துள்ளீர்கள்..//

உங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி தருகிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !