Sunday, March 22, 2009

பெண் மனது மற்றும் ஆட்சிகள் உனதாக...

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியான 'விகடன் மகளிர் சக்தி' மற்றும் 'மனிதம்' இதழ்களில் பிரசுரிக்கப்பட்ட எனது இரு கவிதைகள்.

பெண் மனது

அவர்கள் வரட்டும்
எது கொண்டோ உடைத்துப் போன
ஓர் ஆழ்துயர் மனதை
எப்படிச் சரிப்படுத்துகிறார்களென
வேடிக்கை பார்க்கலாம்

அது ஒரு பெண் மனது
பால்யம் முதலாய்ப் பலர் சேர்ந்து
பருவங்கள் தோறும்
பல எல்லைகளையும் அணைகளையும்
வளையங்களையுமிட்டு
இன்னும் பல இடர்களை ஒன்றாய்ப் பின்னி
இறுக இறுகச் சேர்த்துக்
கட்டிய மனது

முன்பும் அது சிதைந்தது
சிறுகச் சிறுகச் சிதைந்து வருகையில்
திரும்பவும் வந்து
பெருந்துயரொன்று கொண்டு
அவர்கள்
அதனை மீளச் செப்பனிட்டார்கள்

காலத்திற்கு என்ன தெரியும் - அவளது
கண்ணீர் பிசைந்து
அவர்கள் சீர்படுத்தப் படுத்த
மீண்டும் சிதிலமாகவே செய்தது
இப்பொழுதைப் போல

அவர்களும் வந்தனர்
ஓட்டைகள் வழியே நழுவிய துயர்களை
நினைவுகள் கொண்டு மீள அடைத்தனர்
மறதியில் உதிர்ந்து
காணாமல் போனவற்றை
மீளப் பெறமுடியாமல் போக
அவதூறுகள் கொண்டும்
கடுஞ்சொற்கள் கொண்டும்
அவளுக்கு வலிக்க வலிக்க
மகிழ்வோடும் அலுப்பில்லாமலும்
இதயம் நிறைந்த குரூரத்தோடும்
மீளவும் மெருகேற்றினர்

அவர்கள் பார்வையில் இக்கணத்தில்
அழகு பெற்றதாகி விட்டது அது

அது ஒரு பெண்மனது
ஆம் அவள் ஒரு பெண்

நன்றி
# விகடன் மகளிர் சக்தி
# பெண்ணியம்



ஆட்சிகள் உனதாக

அநிச்ச நிலவதனைப் பிடித்து
அவளது வதனத்தில் இடுகிறாய்
மீன்களைப் பிடித்து அவளது விழிகளிலிட்டுத்
துள்ளத் துடிக்க நீர் சிந்தப் பார்த்து ரசிக்கிறாய்

உன்னுடையது போன்றதேதானே
அவளுடையதும்
எனினும்
கழுத்தைச் சங்கென்கிறாய்
பற்களை முத்தென்கிறாய்
கன்னங்களைக் கனிகளென்கிறாய்
உதிர்ந்த ஒற்றை முடியை
உயிர்த்தோகை என்கிறாய்
உன் முன்னால்
வெட்டி எறிந்த நகத்துணுக்கைக் கூடப்
பிறைநிலவென வர்ணிக்கிறாய்
இன்னுமின்னும்...

அஃறினைகளுக்காளாக்கி
அவளை வதைத்தது போதும்
எப்போதவளைச் சக மனுஷியென்பாய் ?


நன்றி - மனிதம் இதழ்

 -எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.


Monday, March 2, 2009

எம் மண்



நடந்து நடந்து பாதங்கள் வெடித்தன
வாழ்விடம் குறித்த கனவுகள் பெருகி
ஏக்கங்கள்
தாண்டும் பொழுதுகளிலெல்லாம் வழியலாயிற்று
சொந்தத் தரை மண்ணிட்டுப்
போற்றி வளர்க்கும் செடியொன்றின்
கிளைப் பூக்களுக்கு அவாவி
எல்லா இடர்களுக்குள்ளும்
எம் சுவடுகள் திரிகின்றன

நிலவும் பார்த்திற்று சூரியன் கொண்டுபோன
நீர்த்துகளும் பார்த்திற்று
இன்னும் அனைத்தும் பார்த்திட
வாழ்வின் அறுவடைக்கு முன்னர்
விடியலைத்தான் காணவில்லை

' வரிசை வரிசையாய் மனிதர்கள்
ஆயுதங்கள் கொண்டு
இடையில் கோடுகிழித்துச் சலனங்களை
ஏற்படுத்து
சுமைகளை அந்தரத்தில் விட்டு
திசைக்கொன்றாய்ச் சிதறி ஓடிப்போகட்டும்
மனிதர்கள் எறும்பல்லவே
ஒன்றுகூடுதல் ஆபத்து
அவர்களுக்குள் மொழி இருக்க
தேசம் பற்றிய இலட்சியங்கள் இருக்க
தாய்மண் தந்த வீரம் வழிநடத்துகிறது '
எனக் குறிப்புகளெடுத்து
அப்பாவி ஜீவன்களின் உயிரெடுத்தல் குறித்துப்
பாடங்கள் நடத்து

தாய்மண் குறித்த
நம்பிக்கைகள் வழிநடத்த
சாவுக்கொன்றும் பயந்தவர்களில்லை நாங்கள்
உன்னைப் போல

- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.


நன்றி - யுகமாயினி ( பெப்ரவரி, 2009 )