Tuesday, May 19, 2009

மீள்தலின் பாடல்


ஓய்வுகளின்றி ஓடித்திரிந்த உடல்
தொய்வுகளேதுமின்றி
எழுதிவந்த விரல்கள்
வெளியெங்கும் புன்னகையை விதைக்கும்
இதழ்களோடும் விழிகளோடும்
சேர்ந்தெப்பொழுதும் மூடியே இருந்தன
இரவு பகல் காலநிலையென
மாறும் காலக்கணக்குகளறியாது
ஆஸ்பத்திரிக்கட்டிலில் மயங்கிக்கிடந்தேன்
ஓயாத பேச்சுக்குள் சிக்கித்தவித்த நாவு
மௌனத்தைப் போர்த்தி உறங்கிப்போனது

கண்களில் பேரன்பு பொருத்தித் தலைகோதி
ஆரோக்கியத்தைச் சொட்டுச் சொட்டாக ஏற்றி
எனது புலம்பல்களைச் சகித்தபடி
நடமாடிய செவிலித்தாய்களில்
அக்கா உன்னைக் கண்டேன்

ஆறுதலும் அக்கறையும் மிகுந்த வார்த்தைகளை
உன்னழுகையில் குரல் இடராது
தொலைபேசி வழியே கசியவிட்டாய்
நகர்ந்த நொடிகளனைத்திலுமுன்
பிரார்த்தனைகளினதும்
நீ அதிர்ந்தெழும் கொடிய கனவுகளினதும்
மையப்பொருளாக
நானிருந்தேனெனப் பின்னரறிந்தேன்

நீ பார்த்துப்பார்த்துச் செதுக்கிய
கவிதையின் முகத்தினை
மீளப்பொருத்தியபடி
தம்பி வந்திருக்கிறேன்
எல்லாக்காயங்களையும்
முழுதாயாற்றிடக் காலத்துக்கும்
சிறிது காலமெடுக்கலாம்
எனினும்
'மீளவும் பழைய ஆரோக்கியத்திடம்
மீண்டுவிட்டேன்' என
இப்போதைக்கு உன் வரிகளைச்
சொல்வதன்றி வேறறியேன்

- எம்.ரிஷான் ஷெரீப்.

* அன்புச் சகோதரி ஃபஹீமா ஜஹானுக்கு...