Wednesday, September 15, 2010

வனச்சிறுவனின் அந்தகன்

சூழ்ந்த நீருக்குள் மீனென அறியப்பட்டதை
செவிட்டூமை அந்தகனுக்குணர்த்திடும் படி
மிகக்கடின பணியொன்று
வனச்சிறுவனுக்கிடப்பட்டது

எந்தக் கொம்பிலும்
ஏறித் தேனெடுப்பவன்
கொடிய விலங்கினையும் தனியே வேட்டையாடி
ராசாவுக்குத் தோல்/ள் கொடுப்பவன்
வனாந்தரத்தின் அத்தனை மூலைகளுக்கும்
அமாவாசை நிசியிலும்
அச்சமின்றிப் போய்வருபவன்
முதன்முதலில் அயர்ந்து நின்றான்
கட்டளையை மறுக்க வழியற்றும்
மேற்கொண்டு ஏதும் செய்யும் நிலையற்றும்
விதிர்த்து நின்றான்

செய்வதறியாச் சிறுவன்
நடுங்குமந்தகனின் விரல்கள் பிடித்து
வனத்தின் மத்திக்கு வழிகூட்டிப் போனான்
அல்லிப் பெருங்குளத்தினுள்ளவன்
கரங்களை நுழையச் செய்திவன் 'தண்ணீர்' என்றான்
காலங்காலமாய்க் கடந்துவந்த வாழ்வின் சோர்வு தீரவெனவோ
வற்றாத் தேகத்தின் எல்லாத்தாகங்களுந் தீரவெனவோ
கரங்களைக் குழிவாக்கி உள்ளங்கையில் நீரேந்தி
அள்ளியள்ளிக் குடித்தான் அந்தகன்
சிறுவனின் பார்வைக்கு மட்டுமென
நீரின் எல்லாச் சுழிகளிலும் நழுவி நீந்தின
வண்ண வண்ண மீன்கள்

கற்றுக் கொடுக்கவேண்டிய
கால எல்லை முடிந்ததெனச் சொல்லி
அரச பரிவாரங்கள் சேதியனுப்பிய நாளில்
விடியலின் கீற்றுக்கள்
மலைகளின் கீழால் புதையுண்டு போக
விருட்ச இலைகள் நீரைச் சிதறிட
மழை தூவிற்று

வீற்றிருந்த அரசனை முன்னிருத்தி
செவிட்டூமைக் குருடனை
மீன்கள் பற்றிக் கேள்விகள் கேட்டான் மந்திரி
தாமரைக்குளத்துத் தண்ணீரில் எண்ணங்கள்
மிதக்குமவனது மொழிபெயர்ப்பாளனாகி
எல்லாக் கேள்விகளுக்கும்
மிகச் சரியாய்ப் பதில் சொன்னான் வனச்சிறுவன்

-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.


நன்றி

# உயிர்நிழல் - ஏப்ரல், ஜூன் இதழ் - 2010
# காற்றுவெளி - செப்டம்பர், 2010
# நவீன விருட்சம்
# உயிர்மை
# வார்ப்பு
# திண்ணை
# தமிழ் முரசு அவுஸ்திரேலியா

19 comments:

Anonymous said...

அருமையான கவிதை .... ஜங்கிள் புக் மௌகிலியை நினைவுபடுத்தியது எனக்கு ...

VELU.G said...

மிக அழகான வரிகளால் எடுத்தாளப்பட்டுள்ளது

மிக அருமை

M.Rishan Shareef said...

அன்பின் அங்கிதா வர்மா,

//அருமையான கவிதை .... ஜங்கிள் புக் மௌகிலியை நினைவுபடுத்தியது எனக்கு ...//

:-)
மௌகிலியைப் போலவே எல்லோருக்குள்ளும் ஒரு சிறுவனோ, சிறுமியோ வாழ்ந்துகொண்டேயிருக்கிறார்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :-)

M.Rishan Shareef said...

அன்பின் வேலு.ஜி,

//மிக அழகான வரிகளால் எடுத்தாளப்பட்டுள்ளது

மிக அருமை//

ஊக்கம் தரும் கருத்து.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :-)

Ashok D said...

கடைசி பத்தியில் சிறிது விழித்தேன்..

நல்லாயிருந்ததுங்க :)

rvelkannan said...

வனச்சிறுவன்// இந்த வார்த்தையே நிறைய சொல்கிறது நண்பரே
அருமை

ம.தி.சுதா said...

///...ராசாவுக்குத் தோல்/ள் கொடுப்பவன்
வனாந்தரத்தின் அத்தனை மூலைகளுக்கும்
அமாவாசை நிசியிலும்
அச்சமின்றிப் போய்வருபவன்...///
மனதைத் தொடும் வரிகள் அருமையாக இருக்கிறது...

hemikrish said...

////தாமரைக்குளத்துத் தண்ணீரில் எண்ணங்கள்
மிதக்குமவனது மொழிபெயர்ப்பாளனாகி
எல்லாக் கேள்விகளுக்கும்
மிகச் சரியாய்ப் பதில் சொன்னான்//

நெத்தி அடி.....

class ...:-)

M.Rishan Shareef said...

அன்பின் D.R அஷோக்,

//கடைசி பத்தியில் சிறிது விழித்தேன்..

நல்லாயிருந்ததுங்க :)//

:-)
தூங்கச் செய்து விட்டேனா? :-)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் வேல்கண்ணன்,

//வனச்சிறுவன்// இந்த வார்த்தையே நிறைய சொல்கிறது நண்பரே
அருமை//

நம் எல்லோருக்குள்ளும் ஒரு வனச் சிறுவன் இருந்துகொண்டே இருக்கிறான் அல்லவா?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :-)

M.Rishan Shareef said...

அன்பின் ம.தி.சுதா,

/////...ராசாவுக்குத் தோல்/ள் கொடுப்பவன்
வனாந்தரத்தின் அத்தனை மூலைகளுக்கும்
அமாவாசை நிசியிலும்
அச்சமின்றிப் போய்வருபவன்...///
மனதைத் தொடும் வரிகள் அருமையாக இருக்கிறது...//

:-)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் ஹேமிக்ரிஷ்,

//////தாமரைக்குளத்துத் தண்ணீரில் எண்ணங்கள்
மிதக்குமவனது மொழிபெயர்ப்பாளனாகி
எல்லாக் கேள்விகளுக்கும்
மிகச் சரியாய்ப் பதில் சொன்னான்//

நெத்தி அடி.....

class ...:-)//

:-)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :-)

ஆதவா said...

நன்றாக இருக்கிறது ரிஷான்.

மிகச் சரியாக உணர்த்துதல் என்பது எவ்வளவு கடினமான விஷயம். அதிலும் ஒலியின் பரிட்சயம் இல்லாத ஒன்றுக்கு.
தொடர்ந்து ஒட்டுதலில்லாதவர்களுக்காக அல்லது காது கேளாதவர்கள் மனிதர்களாகவும் இருக்கக் கூடும் அவர்களுக்காக இயற்கை எழுப்பும் எச்சரிக்கை. அதை மொழிபெயர்ப்பென்றும் சொல்லலாம்.
கவிதையின் படிமங்கள் எதைக் குறிப்பிடுகின்றன என்பது அறிய கடினமாக இருக்கிறது.
என்றாலும் ஏதோ ஒன்று குறைவதாக எண்ணுகிறேன்.

வண்ண வண்ண மீன்கள்???

செவிட்டூமைக் குருடனை
மீன்கள் பற்றிக் கேள்விகள் கேட்டான் மந்திரி

செவிட்டூமைக் குருடனிடம் என்று கொடுத்திருந்தால் கொஞ்சம் பலமாக இருக்கும்...

தொடருங்கள்........

பாரதி said...

மிகவும் அருமை நண்பரே!
பாராட்டுகிறேன்.

ஆதன் said...

இதை ஒரு முழுப்படிமக்கவிதையாக கொண்டால் கவிதை புரியும் ஆதவா..

செவிடன் = எதை சொன்னாலும் கேட்காதவன்

ஊமை = கர்வம் பிடித்தவன்

அந்தகன் = நல்லதை காணவிரும்பாதவன்

இப்படியும் எடுத்துக்கலாம் இல்லையா..

//எந்தக் கொம்பிலும்
ஏறித் தேனெடுப்பவன்
கொடிய விலங்கினையும் தனியே வேட்டையாடி
ராசாவுக்குத் தோல்/ள் கொடுப்பவன்
வனாந்தரத்தின் அத்தனை மூலைகளுக்கும்
அமாவாசை நிசியிலும்
அச்சமின்றிப் போய்வருபவன்
முதன்முதலில் அயர்ந்து நின்றான்
கட்டளையை மறுக்க வழியற்றும்
மேற்கொண்டு ஏதும் செய்யும் நிலையற்றும்
விதிர்த்து நின்றான்//

வனச்சிறுவன், வயதால் இளையவனாக இருக்கலாம், ஆனால் ஒரு அமைசனின் அறிவுடையவன், ஒரு தளபதியின் வீரம் கொண்டவன் இப்படி, ஒரு ராஜ தந்திரியும் கூட என்று இந்த பத்தி விளக்கும்..

இன்னும் ஆராயலாம்..

வந்து செய்யுறேன்..

ஆதவா said...

இக்கவிதையைப் பொறுத்தவரையிலும் எனக்குத் தோணியது இதுதான் ஆதி
அந்தகன் என்பவன் வேண்டத்தகாதவன் இல்லையா? வேண்டத்தகாத செயலொன்று (பாடம்) நுழைக்க முடியாத கருவி கொண்டிருந்தால் எப்படி புகட்டுவது?

வனச்சிறுவன் எந்த செயலுக்கும் துணிந்தவன்... நுழைய மறுக்கும் துறையொன்றுக்குள் நுழைய துணிந்த கட்டளைகளே தேவை. ஆனால் அவைகளோ மொழிபெயர்ப்பாளனாக மாறி செயலை மாற்றிவிடுகின்றன.

ரிஷான் இக்கவிதையில் முதலில் செவிட்டூமை அந்தகன் என்கிறார். பின் முடிவில் செவிட்டூமை குருடன் என்கிறார்..... அகத்தில் உள்ள அழுக்கு நீரால் கழுவப்பட்டு குருட்டுமை ஆக்கப்படுவதாக எண்ணிக் கொண்டேன். அந்த இடமே நிறைவு இல்லாத ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது. மேலும் இதன் முழுப்படிமங்களும் என்னால் அர்த்தப்படுத்தி எண்ணங்களால் இழுத்து வரமுடியவில்லை. அதிலும் இன்னொரு விஷயம்...

அல்லிப் பெருங்குளத்தினுள்ளவன்
கரங்களை நுழையச் செய்திவன் 'தண்ணீர்' என்றான்

இந்த வரிகள் அவன் எனும் சுட்டுச் சொல் திரும்ப வருவதாகவோ அல்லது அர்த்தம் மாறி வருவதாகவோ எண்ணுகிறேன். இதுமாதிரி சிலச் சில வாசிப்பின் பிசிறுகள்....

M.Rishan Shareef said...

அன்பின் பாரதி,

//மிகவும் அருமை நண்பரே!
பாராட்டுகிறேன். //

கருத்துக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் ஆதவன்,

உங்கள் ஆழமான கருத்துக்களை வரவேற்கிறேன் நண்பா.

//அந்தகன் என்பவன் வேண்டத்தகாதவன் இல்லையா? //
இல்லை நண்பா.. பார்வையற்றவரைத் தான் அந்தகன் எனும் ஒற்றைச் சொல்லில் அழைக்கிறார்கள். இப்பொழுது கவிதை உங்களுக்குள் அர்த்தப்பட்டிருக்குமென நம்புகிறேன்.

//வண்ண வண்ண மீன்கள்???//

குளத்தினுள்ளிருக்கும் மீன்கள். சிறுவனின் பார்வையில் மட்டுமே அவை இங்கு தெரிகின்றன. ஆழத்திலிருக்கின்றன எனக் கொள்ளலாம் இல்லையா? ஆகவே அச் சிறுவனால் ஒருபோதும் பார்வையற்றவருக்கு மீனை உணர்த்திட இயலாது.

உங்கள் கருத்துக்களை ரசித்தேன். மிகவும் நன்றி நண்பா :-)

M.Rishan Shareef said...

அன்பின் ஆதன்,

உங்கள் விளக்கத்தை ரசித்தேன். ஆழமாகக் கவிதைக்குள் நுழைந்திருக்கிறீர்கள் ஆதவனைப் போல. மகிழ்வாக இருக்கிறது.

நன்றி அன்பு நண்பரே !