Saturday, August 4, 2007

வெறுக்கப்படும் மழைப்பொழுதுகள்...!


















மழை
பிடித்திருந்தது !

வேர்த்துப் புழுங்கிச் செத்து,
மேற்சட்டை வெதும்பி
முதுகோடு ஒட்டும் கணங்களில்
நிலா மறைத்து,
வானிலிருந்து துளித்துளியாய்க்
கீழிறங்கும்
நீர்த்துளிகளைப் பிடித்திருந்தது!

நெஞ்சைக் குளிர்விக்கும்
ஈரச்சாரலோடு,
நாசியை வருடும்
தூசு மணத்தில்
வினாடி நேரம் - நான்
என்னை மறந்ததுமுண்டு!

வாய்திறந்து நா காட்டி,
மழைத்துளியை உள்வாங்க
மனம் விரும்பிச் சிறுபிள்ளையாய்ச்
செய்து பார்த்ததுமுண்டு!

முகாம் கூரை விரிந்து
மழைத்துளிமுக்காடு நனைத்த கதைகளை,
சுவர் இடிந்து விழுந்துயிர்கள்
நசுங்கிச் சக்காகிச் சாறாகிப்
பிரிந்த கதைகளை,
வெள்ளம்
அழையா விருந்தாளியாய்
வீட்டினுள் புகுந்து
குடியிருந்தவர்களையெல்லாம்
கூரையிலேற்றிக் குடித்தனம் செய்யச்
சொன்ன கதைகளையெல்லாம்
பேசப்பார்க்கக்
கேட்கும் கணங்களிலெல்லாம்
ஏனோ - மழையையும்
மழை சார்ந்த எதையுமே
பிடிக்காமல் போகிறது !

- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

18 comments:

தமிழ்நதி said...

கடைசிப் பகுதி மிக நன்றாக வந்திருக்கிறது. மழையை ரசிக்கும்பொழுது 'அந்த மணிக்கூண்டுக் கோபுரத்தின் கீழிருக்கும் குழந்தையுடனான பெண் இப்போது எங்கிருப்பாள்?'என்று நினைத்துக்கொண்டதுண்டு. வீட்டு வசதியுள்ளவர்களுக்கு மழை அழகு. தெருவோரவாசிகளுக்கு மழை அழிவைக் கொணர்வதாகவே தோன்றும். தமிழ்மணத்தில் புதிதாக இணைந்திருக்கிறீர்கள் போலிருக்கிறது வாழ்த்துக்கள்... ரிஷான்.

ஜமாலன் said...

தமிழ்நதியின் பின்னோட்டம் வழியாக இங்கு வந்து சேர்ந்தேன். நல்ல கவிதை.

இரண்ட கவிதைகளும் வேறு வேறு சூழல் வேறு வேறு உண்ர்வுகளைக் கொண்டது ஆணால் ஒரெ அமைப்பில் இருக்கிறது. இரண்டின் அரசியலும்கூட வேறு. உங்களது மழையின் குறியீடும் ஆழ்ந்நத அர்த்தமுள்ளதுதான். அருமை.

M.Rishan Shareef said...

மிக நன்றி தமிழ்நதி.
ஒவ்வொரு மழைத்துளியும் ஜன்னல் கண்ணாடியில் வரையும் நீர்க்கோலங்களைப் பார்க்க நேரிடும் போதும் அவை ஒவ்வொன்றும் பரிதவித்துக் கொண்டிருக்கும் ஏழைகளின் உள்நெஞ்சத்துடிப்பை எதிரொலிப்பதாகவே எனக்கும் தோன்றும்.
உங்கள் வலைப்பக்கமும் மிக அருமை சகோதரி.

M.Rishan Shareef said...

மிக நன்றி ஜமாலன்.
உங்கள் வருகையை நான் தொடர்ந்தும் மிகவும் எதிர்பார்க்கிறேன்.

MSK / Saravana said...

""குளிரும் கதகதப்பும் சேர்ந்த கலவையில்
உற்சாகம் பொங்க
"மழையே மழையே"
என்று நான் தொடங்கும் இக்கவிதையை
ஒழுகும் குடிசையில் நடுங்கும் தன் பிள்ளைகளை
கைகொண்டு பொத்திக் காக்கும்
எவளும் இரசிக்கப் போவதில்லை.""

கணேஷின் கவிதை ஞாபகம் வருகிறது..
http://kavidhai-pakkangal.blogspot.com/

M.Rishan Shareef said...

அன்பின் சரவணகுமார்,

நீங்கள் சொன்ன கவிதையைப் பார்த்தேன். அருமையாக எழுதியிருக்கிறார் கணேஷ்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

Anonymous said...

//முகாம் கூரை விரிந்து மழைத்துளி
முக்காடு நனைத்த கதைகளை
சுவர் இடிந்து விழுந்துயிர்கள் நசுங்கிச்
சக்காகிச் சாறாகிப் பிரிந்த கதைகளை
வெள்ளம்
அழையா விருந்தாளியாய் வீட்டினுள் புகுந்து
குடியிருந்தவர்களையெல்லாம்
கூரையிலேற்றிக் குடித்தனம் செய்யச்
சொன்ன... //

வாழவும் வைத்து வளர்ச்சிக்கும் உய்வித்து
வீழவும் வைக்கும் மழை. :((((((((((

பாராட்டுகள் ரிஷான்

M.Rishan Shareef said...

அன்பின் ஷாஜஹான்,



//வாழவும் வைத்து வளர்ச்சிக்கும் உய்வித்து
வீழவும் வைக்கும் மழை. :((((((((((

பாராட்டுகள் ரிஷான் //


நன்றி நண்பரே :)

Anonymous said...

// வாய்திறந்து நா காட்டி,
மழைத்துளியை உள்வாங்க
மனம் விரும்பிச் சிறுபிள்ளையாய்ச்
செய்து பார்த்ததுமுண்டு//


ஹம்ம்ம் மழையில் நனைந்த சுகம்...
எத்தனைப்பேர் இப்படி ரசித்திருப்பார்கள்...



// முகாம் கூரை விரிந்து மழைத்துளி
முக்காடு நனைத்த கதைகளை
சுவர் இடிந்து விழுந்துயிர்கள் நசுங்கிச்
சக்காகிச் சாறாகிப் பிரிந்த கதைகளை
வெள்ளம்
அழையா விருந்தாளியாய் வீட்டினுள் புகுந்து
குடியிருந்தவர்களையெல்லாம்
கூரையிலேற்றிக் குடித்தனம் செய்யச்
சொன்ன கதைகளையெல்லாம்
பேசப்பார்க்கக் கேட்கும்
கணங்களிலெல்லாம் ஏனோ
மழையையும்
மழை சார்ந்த எதையுமே
பிடிக்காமல் போகிறது //


உண்மைதான் சகோதரா... மழை சில நேரங்களில் பலரின் வாழ்கையினை திருப்பிதான் போடுகிறது....
சென்னையில் இன்று வரை சில இடங்களில் தண்ணீர் வீட்டுக்குள் இருக்கிறது....
தண்ணீரை வெளியேற்றப்போகிறோம் என்னும் போர்வையில் வீடுகள் இடிக்கப்பட காத்துக்கொண்டிருக்கின்றனர்....ஏழை மக்கள் எங்குதான் போவார்கள், அவர்கள் சிறுக சிறுக பணம் சேர்த்து கட்டிய வீட்டினை இடிக்கக்கொடுத்து விட்டு..... :( :( :(

அழகாக சொல்லப்பட்ட கவிதை ரிஷி......

Anonymous said...

// வாய்திறந்து நா காட்டி,
மழைத்துளியை உள்வாங்க
மனம் விரும்பிச் சிறுபிள்ளையாய்ச்
செய்து பார்த்ததுமுண்டு//


ம்ம்ம்... மழையை ரசிக்காதவரிகள் இருக்கக்கூடுமா?...மழையில் நனையும்போது
எல்லாரும் சின்ன குழந்தைகள்தான்...:)



// முகாம் கூரை விரிந்து மழைத்துளி
முக்காடு நனைத்த கதைகளை
சுவர் இடிந்து விழுந்துயிர்கள் நசுங்கிச்
சக்காகிச் சாறாகிப் பிரிந்த கதைகளை
வெள்ளம்
அழையா விருந்தாளியாய் வீட்டினுள் புகுந்து
குடியிருந்தவர்களையெல்லாம்
கூரையிலேற்றிக் குடித்தனம் செய்யச்
சொன்ன கதைகளையெல்லாம்
பேசப்பார்க்கக் கேட்கும்
கணங்களிலெல்லாம் ஏனோ
மழையையும்
மழை சார்ந்த எதையுமே
பிடிக்காமல் போகிறது //


கவிதையின் பாதையை எதிர் திசைக்கு மாற்றினால்தான் அதில்
உங்க 'டச்" இருக்கும் ரிஷான்...:)

உண்மைதான்,மழையில் ஏற்படும் சேதங்களைப் பார்த்தால் சில சமயம்
மழை மீது கோபம்தான் வருது...

அருமையான கவிதை!!

அன்புடன்...
வாணி

Anonymous said...

> வேர்த்துப் புழுங்கிச் செத்து
> மேற்சட்டை வெதும்பி முதுகோடு
> ஒட்டும் கணங்களில் நிலா மறைத்து
> வானிலிருந்து துளித்துளியாய்க்
> கீழிறங்கும்
> நீர்த்துளிகளைப் பிடித்திருந்தது

சில்லென்று வேர்வைக்கு பதிலாக மழை துளி பட்டால் சுகம் தானே

> நெஞ்சைக் குளிர்விக்கும்
> ஈரச்சாரலோடு நாசியை வருடும்
> தூசு மணத்தில் வினாடி நேரம்
> நான் என்னை மறந்ததுமுண்டு
ஈர மண் வாசம் ..இந்த மண்ணை தின்னலாமா என்று தோன்றும் எனக்கு சில நேரம்


> வாய்திறந்து நா காட்டி,
> மழைத்துளியை உள்வாங்க
> மனம் விரும்பிச் சிறுபிள்ளையாய்ச்
> செய்து பார்த்ததுமுண்டு
>அட நானும் தான்


> முகாம் கூரை விரிந்து மழைத்துளி
> முக்காடு நனைத்த கதைகளை
> சுவர் இடிந்து விழுந்துயிர்கள் நசுங்கிச்
> சக்காகிச் சாறாகிப் பிரிந்த கதைகளை
> வெள்ளம்
> அழையா விருந்தாளியாய் வீட்டினுள் புகுந்து
> குடியிருந்தவர்களையெல்லாம்
> கூரையிலேற்றிக் குடித்தனம் செய்யச்
> சொன்ன கதைகளையெல்லாம்
> பேசப்பார்க்கக் கேட்கும்
> கணங்களிலெல்லாம் ஏனோ
> மழையையும்
> மழை சார்ந்த எதையுமே
> பிடிக்காமல் போகிறது

மழையின் சேதங்கள் நினைக்கும் போது என்ன செய்ய ...மழை தேவைப்படும் அளவு
மட்டும் பெய்து விட்டு போக வேண்டும் என்று தோன்றும் பல நேரம் ...
அருமையான இயல்பான வர்ணனைகள் கூடிய கவிதை

பூங்குழலி

M.Rishan Shareef said...

அன்பின் நட்சத்திரா,


// உண்மைதான் சகோதரா... மழை சில நேரங்களில் பலரின் வாழ்கையினை திருப்பிதான் போடுகிறது....
சென்னையில் இன்று வரை சில இடங்களில் தண்ணீர் வீட்டுக்குள் இருக்கிறது....
தண்ணீரை வெளியேற்றப்போகிறோம் என்னும் போர்வையில் வீடுகள் இடிக்கப்பட காத்துக்கொண்டிருக்கின்றனர்....ஏழை மக்கள் எங்குதான் போவார்கள், அவர்கள் சிறுக சிறுக பணம் சேர்த்து கட்டிய வீட்டினை இடிக்கக்கொடுத்து விட்டு..... :( :( :(//


மிகவும் வருத்தத்திற்குரிய விடயம் சகோதரி. புகைப்படங்களில் வெள்ளத்தைப் பார்த்தேன். புகைப்படங்களில் பார்த்தே மனம் இவ்வளவு அதிர்ந்ததென்றால் நேரில் அனுபவிப்பவர்களுக்கு எப்படியிருக்கும்? :((



// அழகாக சொல்லப்பட்ட கவிதை ரிஷி......//


நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் வாணி,


// கவிதையின் பாதையை எதிர் திசைக்கு மாற்றினால்தான் அதில்
உங்க 'டச்" இருக்கும் ரிஷான்...:)//


:)))



// உண்மைதான்,மழையில் ஏற்படும் சேதங்களைப் பார்த்தால் சில சமயம்
மழை மீது கோபம்தான் வருது...//


ஆமாம்..தூறலாக இருக்கும்போது சாதுவாக இருப்பது துளித்துளியாய் நீர் சேகரித்து எவ்வளவு அழிச்சாட்டியங்கள் செய்துவிடுகிறது ? :((



//அருமையான கவிதை!!//


நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் பூங்குழலி,



//மழையின் சேதங்கள் நினைக்கும் போது என்ன செய்ய ...மழை தேவைப்படும் அளவு
மட்டும் பெய்து விட்டு போக வேண்டும் என்று தோன்றும் பல நேரம் ...//


ஆமாம்..மழையும், குளிர்ச்சியும் அது சுமந்துவரும் நீரும் தேவை தான். தேவைக்கும் அதிகமாக மிகைக்கும் போதில்தான் சேதங்கள் வருகின்றன.


//அருமையான இயல்பான வர்ணனைகள் கூடிய கவிதை//


நன்றி சகோதரி

Anonymous said...

>>> வேர்த்துப் புழுங்கிச் செத்து
> >>> மேற்சட்டை வெதும்பி முதுகோடு
> >>> ஒட்டும் கணங்களில் நிலா மறைத்து
> >>> வானிலிருந்து துளித்துளியாய்க்
> >
ரிஷான் நல்ல கவிதை .ஆனால் "நிலா மறைந்த" எனும் வரி சரியாக வருகிறதா
பிச்சுமணி

Anonymous said...

அன்பினிய தம்பி

விரும்புவதும் வெறுப்பதும் அனுபவத்தின் பாடங்கள் தான்.
வெறுக்கப்பட்டவைகளை நேசிக்கவும்
நேசிக்க்கப்படவைகளை வெறுகக்வும் வாழ்க்கை கற்றுத் தந்து கொண்டே
இருக்கிறது. சிலர் நல்ல
மாணவர்கள். மற்றவர்கள் பாடத்தை கவனிப்பதில்லை. நீங்கள் மழைத்துளியில்
கூட பாடம்
படித்திருக்கிறீர்கள்.

நான் கண்ணீரை மறைக்கத் துடித்த தருணஙகளையும், கவலையால் வரண்டுபோன என்
கண்ணீர்
தடாகத்திலிருந்து ஒரு சொட்டு ஆனந்த கண்ணீருக்காக துடித்த நொடிகளையும்
நினைத்துக்கொண்டிருந்த ஒரு மழைப்பொழுதில் உங்கள் கவிதை எனது உள்ளத்தை
மட்டுமல்ல கண்களையும் நனைத்தது.

நல்வாழ்த்துக்களுடன்
என் சுரேஷ்

M.Rishan Shareef said...

அன்பின் பிச்சுமணி,

ரிஷான் நல்ல கவிதை .ஆனால் "நிலா மறைந்த" எனும் வரி சரியாக வருகிறதா


இது மழை நேரத்தில் காயும்நிலா. அதாவது வானில் நிலவிருக்குமெனினும் அடர்த்தியான மழை பெய்கையில் நீர்த்துளிகள் நிலவை மறைக்கும். அதைத்தான் 'நிலா மறைத்த' எனக் குறிப்பிட்டிருக்கிறேன். நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் சுரேஷ் அண்ணா,



//விரும்புவதும் வெறுப்பதும் அனுபவத்தின் பாடங்கள் தான்.

வெறுக்கப்பட்டவைகளை நேசிக்கவும்
நேசிக்க்கப்படவைகளை வெறுகக்வும் வாழ்க்கை கற்றுத் தந்து கொண்டே
இருக்கிறது.//


மிக மிகச் சரி அண்ணா.


// சிலர் நல்ல
மாணவர்கள். மற்றவர்கள் பாடத்தை கவனிப்பதில்லை. நீங்கள் மழைத்துளியில்
கூட பாடம்
படித்திருக்கிறீர்கள்.//


:))))



// நான் கண்ணீரை மறைக்கத் துடித்த தருணஙகளையும், கவலையால் வரண்டுபோன என்
கண்ணீர்
தடாகத்திலிருந்து ஒரு சொட்டு ஆனந்த கண்ணீருக்காக துடித்த நொடிகளையும்
நினைத்துக்கொண்டிருந்த ஒரு மழைப்பொழுதில் உங்கள் கவிதை எனது உள்ளத்தை
மட்டுமல்ல கண்களையும் நனைத்தது.//


வாழ்வின் கணங்கள் தோறும் அனுபவங்களே மிகைத்திருக்கின்றன. நீங்கள் சோர்ந்திருந்த கணமொன்றில் என் கவிதை ஆறுதலாக அமைந்ததில் மகிழ்ச்சி. நன்றி அண்ணா :))