Friday, March 21, 2008
மனவெடிப்பிலுன் தடம்பதித்து...!
ஒரு பெருவெளிப் போர்க்களத்தை
மனதுள் பரப்பிச்
சென்றதுன் வருகை
மீளவும் மீளவும்
சுடுகாடாய்ப் புகை கசிய
வெடித்துச் சிதறுகிறது மனம் !
அமைதி,அந்தஸ்து,
அத்தனை நிம்மதியும்
வாய்க்கப் பெற்றவன் நானென
இறுமாந்து நின்றவேளை
சலனமற்ற தூறலென
சப்தங்களை விழுங்கி,விழுங்கி
நீ வந்துநின்றாய்
உள்ளுக்குளென்ன வெள்ளமோ...
நானேதுமறியேன் !
வந்தாய் - விழியுரசிடச் சிலகணங்கள்
மௌனத்தை மொழியாக்கிப்
பார்த்தபடி நின்றாயதில்
சலனத்தையோ,சிவப்பையோ
நான் காணவில்லை !
கேள்விகளை மட்டுமே
வார்த்தைகளாக்கியுன்னிடம்
வருகையின் மூலத்தை - நான்
வினவிச் சோர்ந்தவேளையிலும்
என் நெஞ்சப்பரப்பில்
ஆழத்தடம் பதித்து,
மௌனத்தை மொழியாக்கி
ஓர் தென்றல் போல
நீ விலகிச்சென்றாய் !
உனது கருவிழிகள்
பயணிக்கும் திசையில்
மட்டுமே வாழ்ந்திடப்
பலர் காத்து நிற்கையில்...
எந்தக் கோலத்துக்கும்
வசப்படாப் புள்ளியொன்றிடம்
என்ன எதிர்பார்த்து நீ வந்தாய் ?
எந்தத்திசை நோக்கியும்
முடிவுறாப் பாதையொன்றில்
எங்கு பயணிக்கக் காத்திருந்தாய் ?
உன் வாசனை நிறுத்திச்சென்று
சிலபொழுது கடந்தவேளை,
தீயிடம் என் பெயரை - நீ
உச்சரித்து மாண்டதாக
வேதனை மிகும் செய்தியொன்று
காற்றோடு வந்தது !
ஒரு பெருஞ்சமுத்திரச்சோகத்தை
மனதில் ஓயாமல் அலையடிக்கச்
செய்ததுன்னிறப்பு.
மீளவும் மீளவும்
வசந்தங்களேதுமற்றவொரு
மயானத்து வனாந்தரமாய்
வெடித்துச் சிதறியும்
துடித்துக்கொண்டே
ஏனின்னும் இருக்கிறதுன்
நேசத்தை உணர்ந்திடா என் மனம் ?
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Subscribe to:
Post Comments (Atom)
32 comments:
கவிதையிலேயே ஒரு கதை சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
அன்பின் தமிழ்நதி,
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)
மென் சோகம் இழையோட, ஈரவரிகளோடு இதயத்தை தொடும் ரிஷானின் கவிதைகளுக்கு என் வாழ்த்துக்கள்
அன்பின் சக்தி,
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)
ரொம்ப அழகாக எழுதுகிறீர்கள், ரிஷான்..
//எந்தக் கோலத்துக்கும்
வசப்படாப் புள்ளியொன்றிடம்
என்ன எதிர்பார்த்து நீ வந்தாய் ?
எந்தத்திசை நோக்கியும்
முடிவுறாப் பாதையொன்றில்
எங்கு பயணிக்கக் காத்திருந்தாய் ?//
தமிழ் உங்களுக்குத் தலையாட்டுகிறது!
அன்பின் கவிநயா,
//தமிழ் உங்களுக்குத் தலையாட்டுகிறது!//
ஐயோ,நான் சாதாரணமானவன்.
தமிழ் எனது தாய்மொழி.அவ்வளவே :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)
ரிஷான்
அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்.
எந்தக் கோலத்துக்கும் வசப்படாப் புள்ளியாக இருந்த பொழுதும்
'ஏதோ ஒன்று' வசப்படுத்திப் போனதால் தான் இந்தக் கவிதை எழுதப் பட்டிருக்கிறது
அனுபவங்கள் அடுத்தவரை விரைவில் சென்றடையும்.அவரவர் அனுபவங்களின் வண்ணங்களோடு....
இந்தக் கவிதையும் அவ்வாறானதே
nantrayirukkirathu kavithai. anpaviththu eluthiyathu pola.
அன்பின் பஹீமா ஜஹான்,
//எந்தக் கோலத்துக்கும் வசப்படாப் புள்ளியாக இருந்த பொழுதும்
'ஏதோ ஒன்று' வசப்படுத்திப் போனதால் தான் இந்தக் கவிதை எழுதப் பட்டிருக்கிறது//
எனக்கு நிகழ்ந்ததல்லாவிடினும்,என்னைச் சூழ்ந்த சமூகத்தில் பார்த்துக் கேட்ட அனுபவங்களின் விளைவே இக்கவிதையன்றி வேறொன்றும் இல்லை ;)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)
அன்பின் சந்திரவதனா,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)
ரிஷான், நாலைந்து முறை கவிதையை வாசித்தேன். அழகான வரிகளால் அலங்கரித்து எழுதியிருக்கிறீர்கள்.ஏதாவது ஒரு வரியை குறிப்பிட்டுச்சொல்லலாம் எனத் தேடினால் எதைத் தெரிவது என்ற பிரச்சினை எழுந்தது.
தொடருங்கள் ரிஷான்.
அன்பின் நிர்ஷன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)
அற்புதமான கவிதைகள். பாரட்டுக்கள்.
அன்பின் ஜுனைத் ஹஸனி ,
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)
எபோதுமே ஒரு வேதனை ரிஷானின் கவிதைகளில்?!?!?!?
நான் இரசித்த வரிகள், ரிஷ்!
என் நெஞ்சப்பரப்பில்
ஆழத்தடம் பதித்து,
மௌனத்தை மொழியாக்கி
அன்பின் காந்தி,
வாழ்வின் கணங்களில் நானோ, எனது நண்பர்களோ அனுபவித்தவற்றை மட்டுமே கவிதையாகக் கொண்டுவருகிறேன். அதனால்தானோ என்னவோ ? :)
கருத்துக்கு நன்றி சகோதரி :)
எந்தக் கோலத்துக்கும்
வசப்படாப் புள்ளியொன்றிடம்
என்ன எதிர்பார்த்து நீ வந்தாய் ?
எந்தத்திசை நோக்கியும்
முடிவுறாப் பாதையொன்றில்
எங்கு பயணிக்கக் காத்திருந்தாய் ?
ம். கண் மூடும் காதலோ?
உன் வாசனை நிறுத்திச்சென்று
சிலபொழுது கடந்தவேளை,
தீயிடம் என் பெயரை - நீ
உச்சரித்து மாண்டதாக
வேதனை மிகும் செய்தியொன்று
காற்றோடு வந்தது !
அய்யோ.. கோழையாக்குதே..
ஒரு பெருஞ்சமுத்திரச்சோகத்தை
மனதில் ஓயாமல் அலையடிக்கச்
செய்ததுன்னிறப்பு.
மீளவும் மீளவும்
வசந்தங்களேதுமற்றவொரு
மயானத்து வனாந்தரமாய்
வெடித்துச் சிதறியும்
துடித்துக்கொண்டே
ஏனின்னும் இருக்கிறதுன்
நேசத்தை உணர்ந்திடா என் மனம் ?
நேசம் உணராமல் துடிக்குமா என்ன?..
ஆழமான , சோகமான கவிதை..
// ம். கண் மூடும் காதலோ?//
எவ்வளவு எடுத்துச் சொல்லியும் புரிந்துகொள்ளாத ஒருதலைக் காதல்கள் சாந்தி.
கருத்துக்கு நன்றி சகோதரி :)
எந்தக் கோலத்துக்கும்
வசப்படாப் புள்ளியொன்றிடம்
என்ன எதிர்பார்த்து நீ வந்தாய் ?
எந்தத்திசை நோக்கியும்
முடிவுறாப் பாதையொன்றில்
எங்கு பயணிக்கக் காத்திருந்தாய்
உங்கள் மனம் ஏன் போர்க்களம் ஆனது என்று புரிகிறது
தீயிடம் என் பெயரை - நீ
உச்சரித்து மாண்டதாக
மௌனத்தை மொழியாக்கியது தீயிடம் பேசத் தானோ ..
துடித்துக்கொண்டே
ஏனின்னும் இருக்கிறதுன்
நேசத்தை உணர்ந்திடா என் மனம் ?
உணர்ச்சி பிரவாகமாக ஒரு கவிதை ரிஷான் .இது நிஜமா ?
அன்பின் பூங்குழலி,
இது எனக்கு நேரவில்லை.
எனது நண்பனுக்கு நேர்ந்தது. :(
கருத்துக்கு நன்றி சகோதரி :)
உச்சத்தில் ஏற வேண்டியது பிறகு உருண்டு கீழே விழுந்து 'மூஞ்சி-முகறையை'
பெயர்த்துக் கொள்ள வேண்டியது. திருந்தவே மாட்டீர்களா ?
தமிழ்நாட்டில் முக்கால் வாசிப்பேர் கவிதை எழுதுகிறான். உருப்படாத 'காதல்'
கவிதை.
"புதைகுழி வீடு" என்ற ஓர் அற்புதத்தை படைத்து விட்டு, இந்தக் 'காதல்'
கழிசடையைக் கட்டியழும் தலை எழுத்து ரிஷானுக்கு ஏன் ஏற்பட்டது.?
Sorry ole' chap ! ரொம்ப எதிர்பார்த்தேன். நீங்கள் புறப்பட்ட இடத்திலேயே
வந்து நிற்கிறீர்கள்.
வருத்தத்துடன் - சாத்.அப்.ஜப்.
அன்பின் அப்துல் ஜப்பார் ஐயா,
என் மேல் கொண்ட அன்பினால் ஏற்பட்ட ஆதங்கத்தைக் கண்டு மகிழ்கிறேன்.
இந்தக் கவிதை இன்று எழுதப்பட்டதல்ல.
ஆறு மாதங்களுக்கு முன்பு என் வலைப்பூவில் இட்ட கவிதை.
http://mrishanshareef.blogspot.com/2008/03/blog-post_21.html
எப்பொழுதுமே யுத்தத்தையும், தாய்தேசத்தையும் பற்றி எழுதும் போது மட்டும் சில சங்கடங்கள் வருகின்றன ஐயா.
எனது கவிதைகளை வாசிக்கும் எல்லோருமே உங்களைப் போலவோ, குழும நண்பர்களைப் போலவோ அன்பானவர்கள் இல்லை ஐயா.
யுத்தம் பற்றியும், தாய்தேசம் பற்றியும் கவிதைகள் எழுதிய பிற்பாடு எனக்கு வரும் அனேக பின்னூட்டங்களும் , தனிப்பட்ட மின்னஞ்சல்களும் சில அச்சுறுத்தல்களோடு எனது தாய்தேசத்தைத் தாக்கியவாறே வருகின்றன.
உதாரணத்துக்கு 'புதைகுழி வீடு' கவிதைக்கு வந்த பின்னூட்டமொன்று.
//Anonymous has left a new comment on your post
யாழ் காள உறவுகளாம்!
விடோத்தி தனமாக ஏதோ இவர்கள்தான் உண்ண்மை தமிழர்கள் என்று சீன் காட்டுவதும்
மற்ற தமிழக தமிழர்களை இவர்கள் இணைய அனுமதி மறுப்பதும்..தொடர்கதை போல் உள்ளது.இவர்கள் வீரத்திற்கு பாரதியார்... மற்றும் பல தமிழக கவிஞர்களின் பாட்டு தேவை படுகிறது ஆனால் பெரியாரை ஏற்று கொள்ள முடியாதாம்..
இது மட்டுமல்ல இவர்கள் நடத்தும் தமிழ் தேசிய தொலைகாட்சியில் 150 வது நிலவரம் நிகழ்ச்சியில் தலைப்பு இதுகான் "இனத்துவ வாதத்தில் பிரிய போகும் உலகம்" அதில் இந்தியா விரைவில் சிதற போகிறது .. தமிழ் நாடு எங்களுக்கு தான் என்று ஒரு கிழவன் கொக்கரிக்கிறான்.
நாம் என்ன கிள்ளு கீரைகளா? போகிற போக்கில் ஈழத்தில் இருந்துதான் தமிழ்ர்கள் இந்தியாவிற்கு சென்றார்கள் என சொன்னால் வியப்பு ஒன்றும் இல்லை.இவர்கள் விடுதலை அடைய நாம் போராட வேண்டுமாம்.. ஆனால் தமிழ் நாட்டில் ஆயிரம் பிரச்சனை.. அட ஒரு தலைவரின் (MG.. யை) தவிர்த்து ஒரு இரங்கல் கூட்டம் இவர்கள் நடத்திய துண்டா? (ஈழத்திலும் சரி வெளி நாடுகளிலும் சரி)ஏதோ திருவள்ளுவர் இவர்கள் ஊரில் பிறந்தது மாதிரி இவர்கள் ஆட்டம் தாங்கமுடியால சாமி.. //
எனது தாய்த்தேசம் எனது தாய்.
எனது தாய்க்கு யாரிடமிருந்தும் சொல்லடிகள் வாங்கித்தர விரும்பவில்லை.
அதனால்தான் அது போன்ற கவிதைக்குச் சற்று இடைவெளி விட்டிருக்கிறேன்.
எனதன்பிற்குரிய அப்துல் ஜப்பார் ஐயா,
புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.
அன்பு ரிஷான் மனம் மிகவும் கனத்தது ,
அன்புடன் விசாலம்
அன்பின் விசாலம் அம்மா,
கருத்துக்கு நன்றி
உச்சத்தில் ஏற வேண்டியது பிறகு உருண்டு கீழே விழுந்து 'மூஞ்சி-முகறையை'
பெயர்த்துக் கொள்ள வேண்டியது. திருந்தவே மாட்டீர்களா ?
வழ்க்கமான காதல் கவிதைகளைப் போலில்லாமல் செறிவான கவிதையாகவே இதனை
நான் பார்க்கிறேன் இப்படி எழுதினால் மூஞ்சி முகறை யெல்லாம் பெயர்ந்து விடாது
தமிழ்நாட்டில் முக்கால் வாசிப்பேர் கவிதை எழுதுகிறான். உருப்படாத 'காதல்'
கவிதை.
ஒருக்காலும் ஒப்புக்கொள்ள்வே மாட்டேன்
முக்காலவாசிப் பேர் உருப்படாத காதல் கவிதை எழுதுகிறான் என்பது
100% உண்மையில்லை. 95% பேர் உருப்படாத காதல் கவிதை எழுதுகிறான்
என்பதே உண்மை. :-) இந்தக் கவிதை மீதி 5% அடங்கும்
"புதைகுழி வீடு" என்ற ஓர் அற்புதத்தை படைத்து விட்டு, இந்தக் 'காதல்'
கழிசடையைக் கட்டியழும் தலை எழுத்து ரிஷானுக்கு ஏன் ஏற்பட்டது.?
மிக வருத்தமாக இருக்கிறது
ஒரு கவிஞன் இந்தப் பிரபஞ்சத்தின் கீழிருக்கும் அத்தனையையும் படைப்பாக்க
தலைப்படுவது இயலபு. காதல் விதிவிலக்காக இருக்க முடியாது. காதலைப் பாடுவதால்
மட்டுமே கவிதை நீர்த்து விடாது - அது கவிதையாகப் படைக்கப்படும் பட்சத்தில்
Sorry ole' chap ! ரொம்ப எதிர்பார்த்தேன். நீங்கள் புறப்பட்ட இடத்திலேயே
வந்து நிற்கிறீர்கள்.
எனக்கு அப்படித் தோன்றவில்லை
ஒரு கவிஞன் தன் படைப்புகளை பன்முகத்தன்மை கொண்டதாக வழங்க வேண்டும்
தாய்நாட்டின் சோகத்தை மட்டுமில்லாமல் காதலியின் மனவோட்டங்களையும் பகிர்ந்து
கொள்வது பிழையொன்றுமில்லை. ஆனால் அப்படிப்பட்ட படைப்புகளை எழுதும்போது
சமரசம் செய்து கொள்ளக் கூடாது ரிஷான் அதைச் செய்யவில்லை என்பதே எனது எண்ணம்
நிலா ரசிகன் கவிதைப் புத்தகத்துக்கு ஆசிஃபின் இலக்கியம் சார்ந்த விமரிசனம்
கிடைக்கும் என்று சொல்லி இருந்தேன். ஆனால் உங்களுக்குக்
கிடைத்திருக்கிறது. என்னிடமிருந்து கிடைத்திருப்பது மோதிரக்கையால்
கிடைத்த குட்டு. கவலைப்பட வேண்டியதில்லை. மேலும் உங்கள் மடலில்
சொன்னவற்றைப் புரிந்து கொண்டேன். அந்த அனுபவம் எனக்கும் உண்டு
மனம் புண் பட்டிருப்பின் பொருத்தருள்க.
ஆசிஃபின் புகழுரைகளிலும் நீங்கள் மயங்கி விட வேண்டாம். கவிதை பற்றிய
ஆசிபின் பல கருத்துக்கள் எனக்கு உடன்பாடில்லாதவை. இன்னும் சற்று
நெருங்கி மகன் என்ற உரிமையோடு சொன்னால் "கிறுக்குத்தனமானவை"!!!!
மவனே, வார்த்தைக்கு வார்த்தையா என்னை விமர்சிக்கிறே ! எப்படி இருக்கு
குட்டு !!!!!
வாஞ்சையுடன் சாத்.அப்.ஜப்.
தங்களின் நடையை(வழக்கமான) இதிலும் பதிவு செய்துள்ளீர்கள்.
வாழ்த்துக்கள்
இதுதான் ரிஷான் அவர்களுடைய கவிதை என்று அடையாளம் காணமுடிகிறது
அன்பின் ஆசிப் அண்ணா,
எனது இக்கவிதைக்கான உங்கள் ஆழ்மனக் கருத்துக்களைக் கண்டு மிகவும் மகிழ்கிறேன். என் போன்ற எழுத்தின் ஆரம்பநிலையில் உள்ள ஒருவருக்கு உங்கள் கருத்துக்கள் மேலும் எழுதத் தூண்டும். கவிதையினை மேலும் மெருகேற்றும்.
நன்றி ஆசிப் அண்ணா.. :)
அன்பின் அப்துல் ஜப்பார் ஐயா,
உங்கள் மோதிரக்கையால் கிடைத்த குட்டு வருத்தத்துக்குப் பதில் பெரும் மகிழ்வைத்தான் தருகிறது. கவிதை அல்லது கதை எழுதுபவனின் நோக்கம் தமது எழுத்து முக்கியமானவர்களைப் போய்ச் சேர வேண்டும் என்பது தான்.
எனது கவிதையும் உங்களினதும், ஆசிப் அண்ணாவினதும் பார்வைக்குப் பட்டதுவும், விமர்சனத்துக்குள்ளானதுவும் மிகுந்த மகிழ்ச்சியையே தருகிறது. இதில் வருத்தப்பட எதுவுமில்லை ஐயா எனக்கு. :)
தொடர்ந்தும் எனது ஆக்கங்களுக்கான இது போன்ற ஆரோக்கியமான விமர்சனங்களையும், குட்டுக்களையும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். அவை மேலும் என்னை மெருகேற்றும்.
கல்லாக இருக்கிறேன். அன்பினால் உருவான உங்கள் உளிகள் என்னை செதுக்கட்டும். :)
அன்பின் பாலமுருகன்,
உங்கள் வாழ்த்துக்களுக்கும், கருத்துக்கும் மனம் மகிழ்ந்த நன்றி நண்பா :)
கவிதை ஒரு அழகான முத்துமாலை.மாலையில்
ஒவ்வொரு முத்தும் ஒளிர்கிறதை வலைமனையிலேயே ரசித்திருந்தேன்.
வாழ்த்துகள் ரிஷான்!
அன்பின் ஷைலஜா அக்கா,
வாழ்த்துக்களுக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா :)
Post a Comment