Thursday, December 10, 2009

நிச்சயமாக உனதென்றே சொல்
உன் வரண்ட தொண்டைக்குழிக்கு
தண்ணீரை எடுத்துச் செல்கையில்
ஈரலித்துக்கொள்கிறது
பின்னும்
இரையும் வயிற்றுக்கென நீ
உள்ளே தள்ளிடும்
எல்லாவற்றையும் சுவைத்துப்பார்க்கிறது
எதையும் தனக்கென வைத்துக்கொள்ளாமல்
தானும் உபயோகித்துக்கொண்டு
முழுதாக உனக்கே தருவதென்பது
ஆச்சரியம் தானென்ன

எல்லோரையும் தூற்றியபடியும்
எச்சிலில் குளித்தபடியும்
தினமொரு ஆளைத்தேடி
உன் கண்களால் செவிகளால் வார்த்தைகளால்
அலையுமது
ரோசா வண்ணத்திலல்லது இளஞ்சிவப்பில்
மிகவும் திமிர்பிடித்துக்
கொழுத்துப் போய்க்கிடக்கிறது
அதற்கு மெல்லவென நான் சிக்கியபொழுதில்
மேலண்ணத்துக்கும் கீழண்ணத்துக்குமிடையிலதனைத்
துடிதுடிக்கவைத்து
கட்டற்ற பொய்களை
அவதூறுகளை வசைமொழிகளை
வெளியெங்கும் இறைத்தது
தேளுக்கில்லை
அரவத்துடையது மிகவும்
மெல்லியது, பிளந்தது, கூரியது
இரண்டெனவும் கூறலாமெனினும்
அதனைப் போன்றதல்ல

உன்னுடையது
தீண்டப்பட்ட எல்லா மனங்களையும்
கொல்லும்
கொடிய விஷத்தினைக் கக்கியபடி
வழியெங்கும் தொடரும்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# வல்லினம் - மலேசிய கலை இலக்கிய இதழ் -10, அக்டோபர் 2009
# தமிழ் எழுத்தாளர்கள்
# தினகரன் வாரமஞ்சரி (27.12.2009)
28 comments:

ஷைலஜா said...

நல்லதொரு 'நா' கவிதை ரிஷான்! வார்த்தைப்பிரயோகங்கள் மிகவும் அற்புதம்!

சப்ராஸ் அபூ பக்கர் said...

///ரோசா வண்ணத்திலல்லது இளஞ்சிவப்பில்
மிகவும் திமிர்பிடித்துக்
கொழுத்துப் போய்க்கிடக்கிறது////

ரசித்த வரிகள்....

அருமையாக இருக்கிறது அண்ணா கவி வரிகள்..... வாழ்த்துக்கள்... உங்கள் கவிதைகளின் தீவிர ரசிகன் நான்...... தொடரட்டும் உங்கள் கவிப் பயணம்....

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அன்பு ரிஷான்,
கவிதை வரிகள் நன்றாக இருக்கின்றன. ஆனால் கவிதையின் வரிகள் எதைப் பற்றி பேசுகின்றன எனக்கு தெரியவில்லை. இதை விளக்குவீர்களாயின் நன்றாக இருக்கும்.

செல்வராஜ் ஜெகதீசன் said...

Interesting one.

Rasithen Rishan.

மஞ்சுபாஷிணி ஜெகந்நாதன் said...

"//தீண்டப்பட்ட எல்லா மனங்களையும்
கொல்லும்
கொடிய விஷத்தினைக் கக்கியபடி
வழியெங்கும் தொடரும்//

உண்மை தான் "நா"வினால் தீமைகளே கூட விளைகின்றன. நல்ல கவிதை , வாழ்த்துக்கள் ரிஷான்.

பூங்குழலி said...

//உன் வரண்ட தொண்டைக்குழிக்கு
தண்ணீரை எடுத்துச் செல்கையில்
ஈரலித்துக்கொள்கிறது
பின்னும்
இரையும் வயிற்றுக்கென நீ
உள்ளே தள்ளிடும்
எல்லாவற்றையும் சுவைத்துப்பார்க்கிறது
எதையும் தனக்கென வைத்துக்கொள்ளாமல்
தானும் உபயோகித்துக்கொண்டு
முழுதாக உனக்கே தருவதென்பது
ஆச்சரியம் தானென்ன//

என் நாக்கை பார்த்தால் எனக்கே பயம் வரும் போலிருக்கே ..அதை எத்தனை சுயநலமியாக சித்தரித்திருக்கிறீர்கள் ?

//எல்லோரையும் தூற்றியபடியும்
எச்சிலில் குளித்தபடியும்//
நன்றாக இருக்கிறது

//தினமொரு ஆளைத்தேடி
உன் கண்களால் செவிகளால் வார்த்தைகளால்
அலையுமது//

அருமை

//ரோசா வண்ணத்திலல்லது இளஞ்சிவப்பில்
மிகவும் திமிர்பிடித்துக்
கொழுத்துப் போய்க்கிடக்கிறது//
இதை வேறு மாதிரியாக சொல்லியிருக்கலாமோ ?

//இரண்டெனவும் கூறலாமெனினும்
அதனைப் போன்றதல்ல
உன்னுடையது
தீண்டப்பட்ட எல்லா மனங்களையும்
கொல்லும்
கொடிய விஷத்தினைக் கக்கியபடி
வழியெங்கும் தொடரும்//

யாருடையது இது ரிஷான் ?
ரொம்ப வதைப்பதாக இருக்கிறது .
கக்கியபடி வழியெங்கும் தொடரும் ......

அருமையான கவிதை ரிஷான் .உங்களின் பல கவிதைகளில் நாக்கு அதிகமாக சாடப்படுகிறது .....(முன்பு ஒரு கவிதையில் எவள் நாவையோ சுவரில் ?தேயுங்கள் என்று நீங்கள் எழுதியதாக நினைவு )

அன்புடன் புகாரி said...

ரிஷான் நாக்குக்கு இத்தனை அவதூறுகளா?

மொழி இலக்கியம் கலை அறிவு உணவுச் சுவை இசைச்சுவை என்று அத்தனை உன்னதமான மனிதவளர்ச்சியின் காரணமான ஒன்று நாக்குதான் :)

கலைமகன் said...

நண்ப ரிஷான்,
திருக்குறளுக்கு அழகாய் விளக்கம் தந்துள்ளீர்கள். வாழிய!
'யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு'
எனும் குறள் என் காதுகளுக்குள் ஒலிக்கிறது.
அன்புடன்
சகோதரன் கலைமகன் பைரூஸ்
இலங்கை

Tamilish Team said...

Hi Rishan,

Congrats!

Your story titled 'நிச்சயமாக உனதென்றே சொல்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 10th December 2009 08:00:02 PM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/150832

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

Siva said...

Rishan nanbare,
konjam terror'raga than irukku... thungina kanavula naaku than pa vandhu nikkudhu....

//ரோசா வண்ணத்திலல்லது இளஞ்சிவப்பில்
மிகவும் திமிர்பிடித்துக்
கொழுத்துப் போய்க்கிடக்கிறது//

//இரண்டெனவும் கூறலாமெனினும்
அதனைப் போன்றதல்ல
உன்னுடையது
தீண்டப்பட்ட எல்லா மனங்களையும்
கொல்லும்
கொடிய விஷத்தினைக் கக்கியபடி
வழியெங்கும் தொடரும்//

indha varigalai konjam unarvupoorvama padichuten'u ninaikaren... adhu en thappa illai unga thiramaiya??? :)

yen ungalukku idhu(naaku) mela ivvalavu kovam??? well adhai(naakai) aalravanai pathi ethavadhu kavidhai iruka???

கீதா குமாரி said...

மனதை தைத்தது.

ஃபஹீமாஜஹான் said...

நாவைப் பற்றிய நல்லதொரு கவிதை.உங்கள் தொகுப்பிலும் இந்தக் கவிதையைச் சேர்த்திருக்கலாம்.இப்போது காலம் கடந்து விட்டது :(
வருந்துகிறேன்.

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் ஷைலஜா அக்கா,

//நல்லதொரு’ நா கவிதை ரிஷான்! வார்த்தைப்பிரயோகங்கள் மிகவும் அற்புதம்!//


:)
நன்றி அக்கா :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் சப்ராஸ் அபூ பக்கர்,

/////ரோசா வண்ணத்திலல்லது இளஞ்சிவப்பில்
மிகவும் திமிர்பிடித்துக்
கொழுத்துப் போய்க்கிடக்கிறது////

ரசித்த வரிகள்....

அருமையாக இருக்கிறது அண்ணா கவி வரிகள்..... வாழ்த்துக்கள்... உங்கள் கவிதைகளின் தீவிர ரசிகன் நான்...... தொடரட்டும் உங்கள் கவிப் பயணம்....//

உங்கள் வருகையும் அன்பான வாழ்த்துக்களும் கருத்தும் மகிழ்ச்சி தருகிறது.

நன்றி நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் ஷேக் தாவூத்,

//அன்பு ரிஷான்,
கவிதை வரிகள் நன்றாக இருக்கின்றன. ஆனால் கவிதையின் வரிகள் எதைப் பற்றி பேசுகின்றன எனக்கு தெரியவில்லை. இதை விளக்குவீர்களாயின் நன்றாக இருக்கும்.//

:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் செல்வராஜ் ஜெகதீசன்,

//Interesting one.

Rasithen Rishan.//

உங்கள் முதல் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

நன்றி நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் மஞ்சுபாஷிணி ஜெகந்நாதன்,

//"//தீண்டப்பட்ட எல்லா மனங்களையும்
கொல்லும்
கொடிய விஷத்தினைக் கக்கியபடி
வழியெங்கும் தொடரும்//

உண்மை தான் "நா"வினால் தீமைகளே கூட விளைகின்றன. நல்ல கவிதை , வாழ்த்துக்கள் ரிஷான்.//

கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி தோழி !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் பூங்குழலி,


//உன் வரண்ட தொண்டைக்குழிக்கு
தண்ணீரை எடுத்துச் செல்கையில்
ஈரலித்துக்கொள்கிறது
பின்னும்
இரையும் வயிற்றுக்கென நீ
உள்ளே தள்ளிடும்
எல்லாவற்றையும் சுவைத்துப்பார்க்கிறது
எதையும் தனக்கென வைத்துக்கொள்ளாமல்
தானும் உபயோகித்துக்கொண்டு
முழுதாக உனக்கே தருவதென்பது
ஆச்சரியம் தானென்ன//

//என் நாக்கை பார்த்தால் எனக்கே பயம் வரும் போலிருக்கே ..அதை எத்தனை சுயநலமியாக சித்தரித்திருக்கிறீர்கள் ?//


:)))


//எல்லோரையும் தூற்றியபடியும்
எச்சிலில் குளித்தபடியும்
நன்றாக இருக்கிறது

தினமொரு ஆளைத்தேடி
உன் கண்களால் செவிகளால் வார்த்தைகளால்
அலையுமது//

//அருமை//

//ரோசா வண்ணத்திலல்லது இளஞ்சிவப்பில்
மிகவும் திமிர்பிடித்துக்
கொழுத்துப் போய்க்கிடக்கிறது
இதை வேறு மாதிரியாக சொல்லியிருக்கலாமோ ?

இரண்டெனவும் கூறலாமெனினும்
அதனைப் போன்றதல்ல
உன்னுடையது
தீண்டப்பட்ட எல்லா மனங்களையும்
கொல்லும்
கொடிய விஷத்தினைக் கக்கியபடி
வழியெங்கும் தொடரும்//

//யாருடையது இது ரிஷான் ?
ரொம்ப வதைப்பதாக இருக்கிறது .//


சுயநலவாதிகள் ஒவ்வொருவருடையதும் :)


//கக்கியபடி வழியெங்கும் தொடரும் ......//

//அருமையான கவிதை ரிஷான் .உங்களின் பல கவிதைகளில் நாக்கு அதிகமாக சாடப்படுகிறது .....(முன்பு ஒரு கவிதையில் எவள் நாவையோ சுவரில் ?தேயுங்கள் என்று நீங்கள் எழுதியதாக நினைவு )//


ஆமாம்..சாகசக்காரியின் வெளி கவிதையில். இன்னுமா நினைவில் வைத்திருக்கிறீர்கள்? :)

கருத்துக்கு நன்றி சகோதரி !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் நண்பர் புகாரி,

//ரிஷான் நாக்குக்கு இத்தனை அவதூறுகளா?

மொழி இலக்கியம் கலை அறிவு உணவுச் சுவை இசைச்சுவை என்று அத்தனை உன்னதமான மனிதவளர்ச்சியின் காரணமான ஒன்று நாக்குதான் :)//


ஆமாம்..அத்தோடு அவதூறுகளின் வளர்ச்சிக்கும்தானே :)
கருத்துக்கு நன்றி நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் கலைமகன் பைரூஸ்,

//நண்ப ரிஷான்,
திருக்குறளுக்கு அழகாய் விளக்கம் தந்துள்ளீர்கள். வாழிய!
'யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு'
எனும் குறள் என் காதுகளுக்குள் ஒலிக்கிறது.//

உங்கள் கருத்து மகிழ்வைத் தருகிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்பு நண்பரே :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் சிவா,

//Rishan nanbare,
konjam terror'raga than irukku... thungina kanavula naaku than pa vandhu nikkudhu....//

:)

//ரோசா வண்ணத்திலல்லது இளஞ்சிவப்பில்
மிகவும் திமிர்பிடித்துக்
கொழுத்துப் போய்க்கிடக்கிறது//

//இரண்டெனவும் கூறலாமெனினும்
அதனைப் போன்றதல்ல
உன்னுடையது
தீண்டப்பட்ட எல்லா மனங்களையும்
கொல்லும்
கொடிய விஷத்தினைக் கக்கியபடி
வழியெங்கும் தொடரும்//

//indha varigalai konjam unarvupoorvama padichuten'u ninaikaren... adhu en thappa illai unga thiramaiya??? :)

yen ungalukku idhu(naaku) mela ivvalavu kovam??? well adhai(naakai) aalravanai pathi ethavadhu kavidhai iruka???//

நாக்கை ஆள்கிறவனைப் பற்றிய கவிதையா? எனது அநேக கவிதைகள் அவனைப் பற்றித்தானே? :)
உங்களுக்காக ஒன்றும் எழுதிவிட்டால் சரி :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்பு நண்பா :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் கீதா குமாரி,

//மனதை தைத்தது.//

கருத்துக்கு நன்றி சகோதரி !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் ஃபஹீமாஜஹான்,

//நாவைப் பற்றிய நல்லதொரு கவிதை.உங்கள் தொகுப்பிலும் இந்தக் கவிதையைச் சேர்த்திருக்கலாம்.இப்போது காலம் கடந்து விட்டது :(
வருந்துகிறேன்.//

வருந்தத் தேவையில்லை சகோதரி.
இன்னுமொரு தொகுப்பில் (அட, ஆசையைப் பாரு என நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது :) ) சேர்த்துவிட்டால் சரி :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

சுகந்தப்ரீதன் said...

யாகாவராயினும் நாகாக்க.... இன்னும் ஆழமாய் சொல்லவேண்டுமென்றால் மனம்காக்க.. எனலாம்..!!

நாக்கு ஒரு கருவி.. அதை உபயோகிப்பது மனிதனின் மனமே... அதனால்தான் அது அடுத்தவரின் நாக்கை தாக்காமல் மனதை தாக்குகிறது..!!ஆகையால் மனதை பேணுவதன் மூலம் மட்டுமே மற்றவரின் நலம் காக்கப்படும்..!!

பாராட்டுக்கள் ரிஷான்..!!

ஆர்.ஈஸ்வரன் said...

பாராட்டுக்கள்

அக்னி said...

ஈரத்திற்குள்ளிருந்து எரிதழல்கள்...

ஈரமாயிருப்பதால்
உனக்குச் சுடவில்லை போலும்.

கருகிப்போகும் மனங்களை
ஒரு தடவை சுவைத்துப்பார்...
உனக்குத் தெரிந்திவிடும்
உன் கசப்பு...

சுகந்தப்ரீதன் சொல்லியதுபோல்,
விஷத்தைத் துப்ப வைப்பதும், பாசத்தைச் சொல்ல வைப்பதும்
மனம்தான்...

சுரப்பது எப்போதும் பாசமாய் மட்டும் இருக்கட்டும்.

பாராட்டுக்கள் ரிஷான் ஷெரீப்...

இளசு said...

ஹிட்லர் சுத்த சைவ உணவாளர்...

அதைப்போல்
நாவுக்கும் சில நல்ல அம்சங்கள் உண்டாம்..
ரிஷான் சொல்கிறார் -

சுவை மட்டும் பார்த்து
இரைப்பைக்கு அனுப்பும்
சுயநலமில்லா சேவகனாம் அது!!!

அம்மா, அப்பா, ஆசான் என அன்பொழுக மதித்து அழைப்பதும் அதுவே..
அன்பே கண்ணே கனியமுதே என இணையை, வாரிசை இழுத்துப் பிணைப்பதும் அதுவே...
இது விஷம், இது கெட்டுப்போனது எனத் துப்ப அறிந்து சொல்லும் துணையும் அது...
கல்லூரி, அலுவல், சமூகம் எங்கும் முன்னேற்றப் பாதை சமைக்கும் துரட்டியும் அதுவே...ஆனாலும் -

ரிஷான் சொல்லி, சுகந்தன், அக்னி, சிவா வழிமொழிந்ததுபோல்
விஷச்சூடிடும் பொல்லாத ஒரு குணம் வெளிப்படும் சிலபல கணங்களாலேலே....

நபிகள் தொடங்கி அய்யன் வரை
எத்தனை ஆன்றோரிடம்
அவமானப்பட்ட அபாக்கியசாலி அது..


என்ன சொல்ல?
ஆயிரம் நற்குணங்கள், திறன்கள் அமையப்பெற்றும்
சுயநலம், சர்வாதிகாரம், இனவெறி, மதபோதை
இதைப்போல ஏதோ ஒரு விஷம் கலந்த
பாற்குடத் தலைவர்களின் கதை போல்தான்
நாவும்.

ஆழ்ந்த அனுதாபங்கள் அதற்கு உரித்தாகுக!

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் சுகந்தப்ரீதன், ஆர்.ஈஸ்வரன், அக்னி, சிவாஜி, இளசு,

உங்கள் அனைவரினதும் ஆழமான கருத்துக்கள் மிகவும் அற்புதமானவையாக இருக்கின்றன. எல்லாமே அருமையான கருத்துக்கள்.

கருத்துக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றிகள் அன்பு நண்பர்களே !