Thursday, May 20, 2010

தொலைவானில் சஞ்சரிக்கும் ஒற்றைப் பறவை

வளைதலும்
வளைந்து கொடுத்தலுமான
நாணல்களின் துயர்களை
நதிகள் ஒருபோதும்
கண்டுகொள்வதில்லை

கூடு திரும்பும் ஆவல்
தன் காலூன்றிப் பறந்த
மலையளவு மிகைத்திருக்கிறது
நாடோடிப் பறவைக்கு

அது நதி நீரை நோக்கும் கணம்
காண நேரிடலாம்
நாணல்களின் துயரையும்

சிறகடித்து அவற்றைத் தடவிக்கொடுத்து
தான் கண்டுவந்த
இரயில்பாதையோர நாணல்களின் துயர்
இதைவிட அதிகமென
அது சொல்லும் ஆறுதல்களை
நாணல்களோடு நதியும் கேட்கும்
பின் வழமைபோலவே
சலசலத்தோடும்

எல்லாத்துயர்களையும்
சேகரித்த பறவை
தன் துயரிறக்கிவர
தொலைவானம் ஏகும்
அப்படியே தன் கூடிருந்த மரத்தினையும்
கண்டுவரக் கூடும்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# மறுபாதி - கவிதைகளுக்கான காலாண்டிதழ் - 02
# சிக்கிமுக்கி இதழ் - 4 பெப்ரவரி, 2010
# உயிர்மை
# நவீன விருட்சம்

29 comments:

கமலேஷ் said...

///அப்படியே தன் கூடிருந்த மரத்தினையும்
கண்டுவரக் கூடும்///

அற்புதமான கவிதை...
திரும்ப திரும்ப படிக்க தூண்டுகிறது...
வாழ்த்துக்கள்...

Ashok D said...

:)

Unknown said...

:(

Unknown said...

கூடிருந்த மரமும் தொலைந்துவிட்டதை அறியாமலே பறந்துகொண்டிருக்கிறது அந்த ஒற்றைப்பறவை. :(

sivastar said...

மிகவும் அற்புதமான வரிகள்! திரும்பத் திரும்ப படிக்க வைத்தது உங்களின் வார்த்தை ஜாலங்கள்! பாராட்டுக்கள் ரிஷான்!!

கவிநா...காயத்ரி said...

ஒற்றைப்பறவை கவலை மறக்கக் கற்ற பறவை...
ஆழ்ந்த துயரைத் தொட்டு வந்திருக்கும் அருமைக்கவிதை..

வாழ்த்துக்கள் சகோதரரே....

Anonymous said...

மிகவும் அருமை, ஆழமான வரிகள்

Sakthi sakthithasan said...

அன்பின் ரிஷான்,

//சிறகடித்து அவற்றைத் தடவிக்கொடுத்து
தான் கண்டுவந்த
இரயில்பாதையோர நாணல்களின் துயர்
இதைவிட அதிகமென
அது சொல்லும் ஆறுதல்களை
நாணல்களோடு நதியும் கேட்கும்
பின் வழமைபோலவே
சலசலத்தோடும் //

கவிதையின் கருத்தும், அவை சொல்லவந்த கருத்துக்களை பூடகமாகச் சொல்லும்
அழகும் உங்களுக்கேயுரிய பாணியில் அமைந்திருக்கின்றன.

பாராட்டுகள் நண்பரே !

அன்புடன்
சக்தி

ஆதன் said...

வரும் இன்னல்களில் இருந்து தப்பித்துக் கொள்ள பறவைகளுக்கு சிறகுகள் உண்டு நாணல்களுக்கு ??

ஆற்றோடு இருக்கும் நாணல்கள் வளைந்து கொடுத்து தப்பித்துக் கொள்கின்றன, ஆனால் ரயில் பாதையில் இருக்கும் நாணல்களின் நிலைமை நசுங்குவதை தவிர ஒன்றுமில்லை.. வளைந்தாளும் வெட்டுப்படும், நிமிர்ந்தாலும் வெட்டுப்படும்..

பெருந்துயர் வரும் போது நாணலாய் இரு என்பார்கள், ஆனால் நாணலாய் இருப்பதில் கூட இடம் உண்டு, இரயில் பாதையில் நாணலாய் இருத்தல் என்ன பிரையோசனம், நசிந்துபடுதலே கதி..

பெருவெள்ளமாய் நதி பாய்ந்து வந்தாலும் அது நாணலை நசிப்பதில்லை.. இரயிலோ தன் இறும்பு பாதங்களால் அவற்றை நசித்துப் போடும், வரும் போதும் போம் போதும்..

நதியோர நாணலின் துயருக்கு ஆறுதல் அறிந்த பறவைக்கு, தன் துயர் போக்கி கொள்ள வழியறியவில்லை..

பறவை - புலம்பெயர்ந்த பறவை

இரயில் பாதையில் உள்ள நாணல்கள் - சிக்கி கொண்ட உறவுகள்..

நதியில் உள்ள நாணல்கள் - மற்ற பிரதேசத்தில்/நாட்டில் உள்ள உறவுகள்/மனிதர்கள் வாழ்வின் ஏற்படும் துன்பங்கள் குறித்து வருந்துபவர்கள்..

இப்படி பொருள் கொள்கிறே ரிஷான் அண்ணா, சரியா தெரியவில்லை..

மீண்டும் அந்த பறவை தன் கூட்டை பார்த்துவரும் என்பதன் மூலம் பறவைக்கு தன் மண்ணில் நிரந்திரமாக தங்கும் சமயம் வரவில்லை என்பது புரிகிறது..

பாராட்டுக்கள் ரிஷான் அண்ணா..

பூங்குழலி said...

வளைதலும்
வளைந்து கொடுத்தலுமான
நாணல்களின் துயர்களை
நதிகள் ஒருபோதும்
கண்டுகொள்வதில்லை
வளைந்து கொடுப்பது நாணல்களின் பெருமையென பொதுவாக சொல்கையில் ...வேறு பார்வையில் நோக்கியிருக்கிறீர்கள் ரிஷான் ............

தன் காலூன்றிப் பறந்த
மலையளவு
ரசித்தேன் இதை

நாணல்களோடு நதியும் கேட்கும்
பின் வழமைபோலவே
சலசலத்தோடும்
ம்ம்ம்ம் ....மிக மிக அருமை

அப்படியே தன் கூடிருந்த மரத்தினையும் கண்டுவரக் கூடும்

உங்கள் கவிதைகள் அனைத்துமே மனதை லேசாகவேனும் கீறிப் போகின்றன

சிவகுமார் said...

மிகவும் அற்புதமான வரிகள்! திரும்பத் திரும்ப படிக்க வைத்தது உங்களின் வார்த்தை ஜாலங்கள்! பாராட்டுக்கள் ரிஷான்!!

சிவா.ஜி said...

நல்ல வரிகள் ரிஷான். உங்கள் கவிதைகளைக் குறித்து எப்போதுமிருக்கும் அதே ஆச்சர்யம் மற்றும் லேசான தடுமாற்றம்(விளங்கிக்கொள்வதில்தான்) இதிலும் இருக்கிறது.

இப்படிப்பட்ட குறியீட்டுக் கவிதைகள்...எனக்கு அதிகம் நெருக்கத்துக்கு வருவதில்லை.

ஆனாலும்...ரசிக்க முடிகிறது....ஆஹா என சிலாகிக்க முடிகிறது. வாழ்த்துக்கள் ரிஷான்.

jawid_raiz said...

மனிதன் மனிதனை மதிக்க மறந்தாலும், நாணல்களினதும்... விட்டில்களினதும் துயருக்காக அழுபவன் கவிஞன் மட்டும் தான்.

அருமையான கற்பனை... அருமையான வரிகள்... வாழ்த்துக்கள் சகோதரா!

அமரன் said...

சபாஷ் ஆதன்..

ஒரு சில விசயங்களில் நமக்குக் கீழே எத்தனைபேர் என எண்ணி ஆறுதலடைய வேணும். வேறு சிலதில் நமக்கு மேல் எத்தனை பேர் என எண்ணி உழைக்க வேணும். கவிஞர் கூட இதை அழகாக மக்கள் திலகம் ஊடாகச் சொல்லி இருப்பார். சொன்ன கவிஞருக்கு எத்தனை துயரோ..

நம்முடன் கூடவே வந்தாலும் ஒன்றாகி விடுவதில்லை நிழல். அது மாதிரித்தான் பறவையின் துயரமும்.. உனக்காவது சிறகிருக்கு.. சிறகறந்த பறவைகளுக்கு.. இப்படித்தான் சொல்ல வேண்டி இருக்குப் பறவைக்கு. இந்த மாதிரியான சங்கிலிச் சுமப்புகள், ஆறுதல் அணைப்புகளில்தான் பூவுலகு இன்றும் சுழன்றுகொண்டுள்ளது.

பாராட்டுகிறேன் ரிஷான்.

M.Rishan Shareef said...

அன்பின் கமலேஷ்,

/////அப்படியே தன் கூடிருந்த மரத்தினையும்
கண்டுவரக் கூடும்///

அற்புதமான கவிதை...
திரும்ப திரும்ப படிக்க தூண்டுகிறது...
வாழ்த்துக்கள்...//

வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :-)

M.Rishan Shareef said...

அன்பின் D.R.Ashok,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் இசை,

//கூடிருந்த மரமும் தொலைந்துவிட்டதை அறியாமலே பறந்துகொண்டிருக்கிறது அந்த ஒற்றைப்பறவை. :(//

ஆமாம்.
ஆனால் தன்னை நிரந்தரமாகக் காக்கக்கூடிய அடர்ந்த கிளையுடன் கூடிய ஒரு மரம் எங்கேனுமிருக்குமென்ற நம்பிக்கையில் அதைத் தேடிப் பறந்துகொண்டிருக்கிறது. :-)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் சிவகுமார்,

//மிகவும் அற்புதமான வரிகள்! திரும்பத் திரும்ப படிக்க வைத்தது உங்களின் வார்த்தை ஜாலங்கள்! பாராட்டுக்கள் ரிஷான்!!//

கருத்துக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் கவிநா..காயத்ரி,

//ஒற்றைப்பறவை கவலை மறக்கக் கற்ற பறவை...
ஆழ்ந்த துயரைத் தொட்டு வந்திருக்கும் அருமைக்கவிதை..

வாழ்த்துக்கள் சகோதரரே....//

கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் அனானி,

//மிகவும் அருமை, ஆழமான வரிகள்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் சக்தி சக்திதாசன் ஐயா,

//அன்பின் ரிஷான்,

//சிறகடித்து அவற்றைத் தடவிக்கொடுத்து
தான் கண்டுவந்த
இரயில்பாதையோர நாணல்களின் துயர்
இதைவிட அதிகமென
அது சொல்லும் ஆறுதல்களை
நாணல்களோடு நதியும் கேட்கும்
பின் வழமைபோலவே
சலசலத்தோடும் //

கவிதையின் கருத்தும், அவை சொல்லவந்த கருத்துக்களை பூடகமாகச் சொல்லும்
அழகும் உங்களுக்கேயுரிய பாணியில் அமைந்திருக்கின்றன.

பாராட்டுகள் நண்பரே !

அன்புடன்
சக்தி//

கருத்துக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி ஐயா !

M.Rishan Shareef said...

அன்பின் ஆதன்,
//வரும் இன்னல்களில் இருந்து தப்பித்துக் கொள்ள பறவைகளுக்கு சிறகுகள் உண்டு நாணல்களுக்கு ??

ஆற்றோடு இருக்கும் நாணல்கள் வளைந்து கொடுத்து தப்பித்துக் கொள்கின்றன, ஆனால் ரயில் பாதையில் இருக்கும் நாணல்களின் நிலைமை நசுங்குவதை தவிர ஒன்றுமில்லை.. வளைந்தாளும் வெட்டுப்படும், நிமிர்ந்தாலும் வெட்டுப்படும்..

பெருந்துயர் வரும் போது நாணலாய் இரு என்பார்கள், ஆனால் நாணலாய் இருப்பதில் கூட இடம் உண்டு, இரயில் பாதையில் நாணலாய் இருத்தல் என்ன பிரையோசனம், நசிந்துபடுதலே கதி..

பெருவெள்ளமாய் நதி பாய்ந்து வந்தாலும் அது நாணலை நசிப்பதில்லை.. இரயிலோ தன் இறும்பு பாதங்களால் அவற்றை நசித்துப் போடும், வரும் போதும் போம் போதும்..

நதியோர நாணலின் துயருக்கு ஆறுதல் அறிந்த பறவைக்கு, தன் துயர் போக்கி கொள்ள வழியறியவில்லை..

பறவை - புலம்பெயர்ந்த பறவை

இரயில் பாதையில் உள்ள நாணல்கள் - சிக்கி கொண்ட உறவுகள்..

நதியில் உள்ள நாணல்கள் - மற்ற பிரதேசத்தில்/நாட்டில் உள்ள உறவுகள்/மனிதர்கள் வாழ்வின் ஏற்படும் துன்பங்கள் குறித்து வருந்துபவர்கள்..

இப்படி பொருள் கொள்கிறே ரிஷான் அண்ணா, சரியா தெரியவில்லை..

மீண்டும் அந்த பறவை தன் கூட்டை பார்த்துவரும் என்பதன் மூலம் பறவைக்கு தன் மண்ணில் நிரந்திரமாக தங்கும் சமயம் வரவில்லை என்பது புரிகிறது..

பாராட்டுக்கள் ரிஷான் அண்ணா..//

கவிதையை மிகவும் ஆழமாகவும், மிகச் சரியாகவும் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். மனம் மகிழவும், ஆச்சரியப்படுத்தவும் செய்கிறது உங்கள் கருத்து.
கருத்துக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி அன்பு நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் பூங்குழலி,

//வளைதலும்
வளைந்து கொடுத்தலுமான
நாணல்களின் துயர்களை
நதிகள் ஒருபோதும்
கண்டுகொள்வதில்லை
வளைந்து கொடுப்பது நாணல்களின் பெருமையென பொதுவாக சொல்கையில் ...வேறு பார்வையில் நோக்கியிருக்கிறீர்கள் ரிஷான் ............

தன் காலூன்றிப் பறந்த
மலையளவு
ரசித்தேன் இதை

நாணல்களோடு நதியும் கேட்கும்
பின் வழமைபோலவே
சலசலத்தோடும்
ம்ம்ம்ம் ....மிக மிக அருமை

அப்படியே தன் கூடிருந்த மரத்தினையும் கண்டுவரக் கூடும்

உங்கள் கவிதைகள் அனைத்துமே மனதை லேசாகவேனும் கீறிப் போகின்றன//

கவிதை எழுதும்போது இருந்த மனநிலையை நீங்கள் வாசிக்கும்போது உணரச் செய்ததில் மகிழ்கிறேன் சகோதரி. :-)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி!

M.Rishan Shareef said...

அன்பின் சிவா.ஜி,

//நல்ல வரிகள் ரிஷான். உங்கள் கவிதைகளைக் குறித்து எப்போதுமிருக்கும் அதே ஆச்சர்யம் மற்றும் லேசான தடுமாற்றம்(விளங்கிக்கொள்வதில்தான்) இதிலும் இருக்கிறது.

இப்படிப்பட்ட குறியீட்டுக் கவிதைகள்...எனக்கு அதிகம் நெருக்கத்துக்கு வருவதில்லை.

ஆனாலும்...ரசிக்க முடிகிறது....ஆஹா என சிலாகிக்க முடிகிறது. வாழ்த்துக்கள் ரிஷான்.//

சில விடயங்களை வெளிப்படையாகச் சொல்ல முடிவதில்லை. அவற்றுக்கு குறியீடுகள் தேவைப்படுகின்றன. எனது கவிதைகளோடு தொடர்ந்து வரும் உங்களது கருத்து மகிழச் செய்கிறது.

கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி அன்பு நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் Jawid_Raiz,

//மனிதன் மனிதனை மதிக்க மறந்தாலும், நாணல்களினதும்... விட்டில்களினதும் துயருக்காக அழுபவன் கவிஞன் மட்டும் தான்.

அருமையான கற்பனை... அருமையான வரிகள்... வாழ்த்துக்கள் சகோதரா!//

:-)
அழகான கருத்து நண்பரே.
கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி !

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் அமரன்,

//சபாஷ் ஆதன்..

ஒரு சில விசயங்களில் நமக்குக் கீழே எத்தனைபேர் என எண்ணி ஆறுதலடைய வேணும். வேறு சிலதில் நமக்கு மேல் எத்தனை பேர் என எண்ணி உழைக்க வேணும். கவிஞர் கூட இதை அழகாக மக்கள் திலகம் ஊடாகச் சொல்லி இருப்பார். சொன்ன கவிஞருக்கு எத்தனை துயரோ..

நம்முடன் கூடவே வந்தாலும் ஒன்றாகி விடுவதில்லை நிழல். அது மாதிரித்தான் பறவையின் துயரமும்.. உனக்காவது சிறகிருக்கு.. சிறகறந்த பறவைகளுக்கு.. இப்படித்தான் சொல்ல வேண்டி இருக்குப் பறவைக்கு. இந்த மாதிரியான சங்கிலிச் சுமப்புகள், ஆறுதல் அணைப்புகளில்தான் பூவுலகு இன்றும் சுழன்றுகொண்டுள்ளது.

பாராட்டுகிறேன் ரிஷான்.//

நிச்சயமாக நண்பரே.
உங்களைப் போன்ற அன்பானவர்களின் ஆதரவுதான் சிறகொடிந்த பறவைக்குக் கூட பறப்பதற்கும் அதன் எதிர்காலத்தைக் கண்டுகொள்ளவும் தூண்டுதலாக இருக்கிறது தொடர்ந்தும்.

கருத்துக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி அன்பு நண்பரே !

பாரதி said...

வேடந்தாங்கலாய் இல்லாமல் வெறும் கூடாயினும் தன் கூடாக இருக்கட்டும் என முயற்சிக்கும் பறவையின் நம்பிக்கை மெய் பெறட்டும்.
நல்ல சொற்கட்டுடன் அமைந்த கவிதை.
பாராட்டுகிறேன் நண்பரே.

M.Rishan Shareef said...

அன்பின் பாரதி,

//வேடந்தாங்கலாய் இல்லாமல் வெறும் கூடாயினும் தன் கூடாக இருக்கட்டும் என முயற்சிக்கும் பறவையின் நம்பிக்கை மெய் பெறட்டும்.
நல்ல சொற்கட்டுடன் அமைந்த கவிதை.
பாராட்டுகிறேன் நண்பரே. //

உங்கள் வார்த்தைகள் நம்பிக்கையும் ஊக்கமும் அளிக்கிறது.
கருத்துக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே.

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர்களுக்கு,

காலச்சுவடு பதிப்பகம் வெளியிடும் எனது 'வீழ்தலின் நிழல்' கவிதைத் தொகுதியின் வெளியீட்டுவிழா எதிர்வரும் சனிக்கிழமை (ஜூலை, 03) மாலை ஆறு மணிக்கு, சென்னை, எழும்பூர், இக்சா மையத்தில் நிகழவிருக்கிறது. அதற்கான அழைப்பிதழை இத்துடன் இணைத்திருக்கிறேன்.

உங்கள் வருகையையும் ஆசிகளையும் பெரிதும் எதிர்பார்க்கிறேன்.

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்