Saturday, May 1, 2010

மின்னல்களில் கைவிடப்பட்டவர்கள்

இருப்புக்கருகே
மூர்க்கத்தனத்தோடு
பெரும் நதி நகரும்
ஓசையைக் கொண்டுவருகிறது
கூரையோடுகளில் பெய்யும்
ஒவ்வோர் அடர்மழையும்

வீரியமிக்க
மின்னலடிக்கும்போதெல்லாம்
திரள்முகில் வானில்
இராநிலாத் தேடி யன்னலின்
இரும்புக் கம்பிகளைப் பற்றியிருக்கும்
பிஞ்சு விரல்களை அழுது கதற
விடுவித்துக் கொண்டோடுகிறாள்
குழந்தையின் தாய்

தொடர்ந்து விழும் இடி
ஏதோ ஒரு
நெடிய மரத்தை எரித்து அணைய
நீயோ
இடி மின்னலை விடவும் கொடிய
காதலைப்  பற்றியிருந்தாய்
துயருற்றவரைக் காப்பாற்றக் கூடும்
கருணை மிகுந்த ஓர் கரம்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# சொல்வனம் இதழ் - 19
# உயிர்மை
# நவீன விருட்சம்
# தமிழ் எழுத்தாளர்கள் 
# திண்ணை

21 comments:

சிவா.ஜி said...

முதலிரண்டு பத்திகள் தனிக்கவிதையாகவும், மூன்றாவது பத்தி மற்றொரு தனிக்கவிதையாகவும் தெரிகிறது.

உங்கள் கவிதைகளின் பலமே....சிறப்பான சொல்லாடல்கள்தான். மிக வித்தியாசமாய் வார்த்தைகளைப் பொருத்தி...சாதாரணத்தை அசாதாரணமாக்கிவிடுகிறீர்கள் ரிஷான்.

அழகான கவிதை....ஆனால்....முழுதும் ஒரே கவிதை என நினைக்கத் தோன்றவில்லை.

வாழ்த்துக்கள் ரிஷான்.

D.R.Ashok said...

சிவா.ஜி யை கண்ணபின்னான்னு வழிமொழிகிறேன்...

மொத்தமே அருமையென்றாலும்... எனக்கு மிக பிடித்தது.. முதல் பத்தி.. வாழ்த்துகள் ரிஷான் :)

மதுரை சரவணன் said...

//நீயோ
இடி மின்னலை விடவும் கொடிய
காதலைப் பற்றியிருந்தாய்
துயருற்றவரைக் காப்பாற்றக் கூடும்
கருணை மிகுந்த ஓர் கரம்//
arputham. vaalththukal.

பாரதி said...

நேசத்தை இழந்தவர்கள் குறித்த கவிதையா..?

இரண்டாவது பத்தியின் இறுதி கவிதையோடு முழுமையாகப் பொருந்துவதாக எனக்குத் தோன்றவில்லை.

சொல்லாடல் அழகு. பாராட்டு நண்பரே.

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் சிவா.ஜி,

//முதலிரண்டு பத்திகள் தனிக்கவிதையாகவும், மூன்றாவது பத்தி மற்றொரு தனிக்கவிதையாகவும் தெரிகிறது.

உங்கள் கவிதைகளின் பலமே....சிறப்பான சொல்லாடல்கள்தான். மிக வித்தியாசமாய் வார்த்தைகளைப் பொருத்தி...சாதாரணத்தை அசாதாரணமாக்கிவிடுகிறீர்கள் ரிஷான்.

அழகான கவிதை....ஆனால்....முழுதும் ஒரே கவிதை என நினைக்கத் தோன்றவில்லை.

வாழ்த்துக்கள் ரிஷான்.//

நிச்சயமாக நண்பரே.. இக் கவிதையில் முதலிரண்டு பத்திகளும் நிகழ்காலத்தையும் மூன்றாவது பத்தி இறந்தகால நிகழ்வொன்றையும் குறிப்பிடுகின்றன.

பொதுவாக நாம் குழந்தையாக இருக்கும் போது, ஒரு ஆபத்து நேருமிடத்து உடனே காக்க தாய் இருக்கிறாள். ஆனால் இக் கவிதையில் சம்பந்தப்பட்ட நாயகனுக்கு/ நாயகிக்கு அவர் தவறான காதலில் விழுந்தபோது அவ்வாறு அறிவுரை கூறி காத்திட யாருமிருக்கவில்லை.

//நீயோ
இடி மின்னலை விடவும் கொடிய
காதலைப் பற்றியிருந்தாய்//

ஆனாலும்,

//துயருற்றவரைக் காப்பாற்றக் கூடும்
கருணை மிகுந்த ஓர் கரம்//

காதலில் துயருற்றவரைக் காப்பாற்ற பிற்காலத்தில் அன்பானவர் யாரேனும் வரக் கூடும் அல்லவா? :-)

கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் D.R. Ashok,

//சிவா.ஜி யை கண்ணபின்னான்னு வழிமொழிகிறேன்...

மொத்தமே அருமையென்றாலும்... எனக்கு மிக பிடித்தது.. முதல் பத்தி.. வாழ்த்துகள் ரிஷான் :)//

:-)

வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :-)

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் மதுரை சரவணன்,

////நீயோ
இடி மின்னலை விடவும் கொடிய
காதலைப் பற்றியிருந்தாய்
துயருற்றவரைக் காப்பாற்றக் கூடும்
கருணை மிகுந்த ஓர் கரம்//
arputham. vaalththukal.//

வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :-)

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் பாரதி,

//நேசத்தை இழந்தவர்கள் குறித்த கவிதையா..?

இரண்டாவது பத்தியின் இறுதி கவிதையோடு முழுமையாகப் பொருந்துவதாக எனக்குத் தோன்றவில்லை.

சொல்லாடல் அழகு. பாராட்டு நண்பரே.//

நண்பர் சிவா.ஜி க்கு அளித்த பதிலில் கவிதை குறித்த விபரம், உங்கள் கருத்தினை தெளிவாக்கியிருக்குமென நம்புகிறேன்.

கருத்துக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே :-)

அக்னி said...

விளக்கியமைக்கு நன்றி ரிஷான் ஷெரீப்... (இல்லாவிட்டால், நாம எங்க புரிஞ்சுக்கிறது...)

வீரியமிக்க இடியும் மின்னலும்
காதலருக்குப் பிடித்தமான பயம்...

ஸ்பரிசம், தொடல் என்ற
என்ற படிநிலைகளை
ஒரேயடியாகத் தாண்டித்
தழுவிக்கொள்ள
அவர்கள் கொள்ளும் காரணம்...

காதல் கைவிட்டால்
மின்னல் அவஸ்தைதான்...
இனியொரு மின்னல்
இனியொரு காதலைக்
கூட்டிவரும்வரைக்கும்...

தலைப்புக்கள் தான் உங்கள் கவிதைகளின் மணிமகுடம்...
கவிதை முழுவதும் அழகுச்சொல்லாடல்கள் நண்பர்கள் சொன்னதைப்போல என்றால்,
உங்கள் தலைப்புக்களோ புதுமைச் சொற்கோர்வைகள்...

பாராட்டு... பாராட்டு... பாராட்டு...

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் நண்பர் அக்னி,

//விளக்கியமைக்கு நன்றி ரிஷான் ஷெரீப்... (இல்லாவிட்டால், நாம எங்க புரிஞ்சுக்கிறது...)

வீரியமிக்க இடியும் மின்னலும்
காதலருக்குப் பிடித்தமான பயம்...

ஸ்பரிசம், தொடல் என்ற
என்ற படிநிலைகளை
ஒரேயடியாகத் தாண்டித்
தழுவிக்கொள்ள
அவர்கள் கொள்ளும் காரணம்...

காதல் கைவிட்டால்
மின்னல் அவஸ்தைதான்...
இனியொரு மின்னல்
இனியொரு காதலைக்
கூட்டிவரும்வரைக்கும்...//

மிகச் சரியான கூற்று.
உங்கள் கருத்தினை வெகுவாக ரசித்தேன் நண்பரே.

//தலைப்புக்கள் தான் உங்கள் கவிதைகளின் மணிமகுடம்...
கவிதை முழுவதும் அழகுச்சொல்லாடல்கள் நண்பர்கள் சொன்னதைப்போல என்றால்,
உங்கள் தலைப்புக்களோ புதுமைச் சொற்கோர்வைகள்...

பாராட்டு... பாராட்டு... பாராட்டு... //

பாராட்டுக்கள் ஊக்கம் தருகின்றன.
கருத்துக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே.

pujanaki said...

நல்ல பதிவு
---------------
good one

எஸ்.எம். சுனைத் ஹஸனீ said...

வழக்கமாக உங்கள் கவிதைகளை இரண்டு தடவை படித்தபின்புதான் இலேசாக புரிய ஆரம்பிக்கும். ஆனால் இந்த கவிதை சற்று கூடவே நேரம் பிடித்துக்கொண்டது. அருமையான கவிதை. பாராட்டுக்கள்.

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் ஜானகி,

//நல்ல பதிவு
---------------
good one//

கருத்துக்கு நன்றி சகோதரி :-)

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் சுனைத் ஹசனீ,

//வழக்கமாக உங்கள் கவிதைகளை இரண்டு தடவை படித்தபின்புதான் இலேசாக புரிய ஆரம்பிக்கும். ஆனால் இந்த கவிதை சற்று கூடவே நேரம் பிடித்துக்கொண்டது. அருமையான கவிதை. பாராட்டுக்கள்.//

உங்கள் கருத்திலும் பாராட்டுக்களிலும் மகிழ்கிறேன். மிகவும் நன்றி நண்பரே :-)

இளசு said...

கண்ணைப் பறிக்கும் மின்னல் வெளிச்சக் கவர்ச்சி..
திண்ணை மாட மாவிளக்கிடம் இல்லை..

அழகும் அதிகம்..
ஆபத்தும் அதிகம்..

பிள்ளை மனங்கள் ஈர்க்கப்படுவதில் வியப்பில்லை!


பால வயதில் கட்டுப்படுத்துதல், கட்டுப்படுதல் - சுலபம்.
பருவயதில் இரண்டுமே கடினம்..


பாராட்டுகள் ரிஷான்.

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் இளசு,

அழகான, நிதர்சனமான கருத்து.கருத்துக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே !

Arumpu said...

கொடியது, அப்படி அல்லாதது என்றெல்லாம் காதலில் ஒன்றுமில்லை. கருணைக்கு காத்திருப்பதைவிட* பற்றற்று இருக்கலாம் இல்லை காதலை பற்றாமல் இருக்கலாம். நான் சொல்வது நடைமுறைக்கு ஒவ்வாதது எனவே நீங்கள் சொலதுதான் சரியென்று தோன்றுகிறது. கவிதையில் குழந்தையின் உவமை அழகோ அழகு.

shammi's blog said...

arumaiyana oppu nokku....very nice

shammi's blog said...

arumaiyana oppu nokku....very nice

பாலன் said...

கொடியது, அப்படி அல்லாதது என்றெல்லாம் காதலில் ஒன்றுமில்லை. கருணைக்கு காத்திருப்பதைவிட* பற்றற்று இருக்கலாம் இல்லை காதலை பற்றாமல் இருக்கலாம். நான் சொல்வது நடைமுறைக்கு ஒவ்வாதது எனவே நீங்கள் சொலதுதான் சரியென்று தோன்றுகிறது. கவிதையில் குழந்தையின் உவமை அழகோ அழகு.

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் பாலன்,

//கொடியது, அப்படி அல்லாதது என்றெல்லாம் காதலில் ஒன்றுமில்லை. கருணைக்கு காத்திருப்பதைவிட* பற்றற்று இருக்கலாம் இல்லை காதலை பற்றாமல் இருக்கலாம். நான் சொல்வது நடைமுறைக்கு ஒவ்வாதது எனவே நீங்கள் சொலதுதான் சரியென்று தோன்றுகிறது. கவிதையில் குழந்தையின் உவமை அழகோ அழகு.//

காதல் குறித்து நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் எல்லாக் காதல்களும் அப்படியிருப்பதில்லை அல்லவா? அதனால்தான் நேசங்களை எதிர்பார்த்து துயரங்கள் தொடர்ந்துவருகின்றன.

கருத்துக்கு நன்றி நண்பரே :-)