Tuesday, April 15, 2008

காதலென்றும் தலைப்பிடலாமிதற்கு !


நெருப்பு விழுங்கும் பறவையொன்றென்
நிழலிலேயே
உட்கார்ந்திருக்கிறது !

உங்கள் கனல்களை
அதன்மேல் கொட்டலாம்,
சாபங்களை அள்ளியெறியலாம் ;
அத்தனையையும் விழுங்கியது - நிலம்
அதிர அதிரச் சிரிக்கும் !

அதன் அருகாமை
வெப்பம் பரவியென் உடலசையுமெனில்
ஒருகணம் உற்றுப்பார்க்கும்,
விழிகளிரண்டும் எரிகற்களென எச்சரிக்கும்
நொடியில் நான் பொசுங்கிப்போவேன் !

சீண்டிப்பார்க்கலாம் - அதனை
சிரிக்கவைக்கவும் முயற்சிக்கலாம்,
தலைகோதித் தடவலாம்,
செல்லமாய்ச் சிறிது தட்டக்கூடச் செய்யலாம்;
அத்தனையையும்
மெதுவாய்ப் பார்த்து வாய்திறந்து
உங்களை முழுதாக உள்வாங்கிக் கொள்ளும் !

நுனிவிரல் தீண்டி
உடல்முழுதும் பொசுங்கிக் கருகும்
வேதனையை சிரிப்பால் உதறுவீர்களாயின்...

இதுவரையில் காதலிக்காதவர் பட்டியலில்
நீங்கள் இருப்பதாக
உறுதிபட உரக்கச் சொல்வேன் !

நெருப்பு விழுங்கும் பறவையது
தொடர்ந்தும் தன் சிறகினை உதறும் !

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

12 comments:

Kavinaya said...

அற்புதம், ரிஷான்! எவ்வளவு அழகாக எழுதியிருக்கீங்க! இன்ன வரின்னு சொல்ல முடியாம அத்தனையும் அருமை. படங்களெல்லாம் இவ்வளவு பொருத்தமா எப்படித்தான் பிடிக்கிறீங்களோ!

தியாகு said...

சொல் ஆளுமை , கையாளும் எளிய மொழி , உணர்த்தும் அழமான கருத்து இவைகளால் கவிதை அற்புதமாக இருக்கிறது

M.Rishan Shareef said...

அன்பின் கவிநயா,
அழகான வரிகளால் வாழ்த்துகிறீர்கள்...!

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி தோழி :)

M.Rishan Shareef said...

அன்பின் தியாகு,

எனது கவிதைகளின் பக்கத்துக்கு முதன்முதல் வந்திருக்கிறீர்களென எண்ணுகிறேன்.

உங்கள் வருகை என்னை மகிழ்விக்கிறது.வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

Sakthy said...

மிக நன்று ரிஷான்.
ஆழமான வரிகளில் அழகான எண்ணோட்டம்

Aruna said...

//நெருப்பு விழுங்கும் பறவையொன்றென்
நிழலிலேயே
உட்கார்ந்திருக்கிறது !//

ஆனாலும் மிக அழகான பறவை....கவிதையும் கூட
அன்புடன் அருணா

வந்தியத்தேவன் said...

நல்லாயிருக்கு கவிதை.
ப‌ட‌மும் மிக‌வும் பொருத்த‌மாக‌ இருக்கின்ற‌து. உங்க‌ள் க‌விதைக‌ளை ப‌த்திரிகைக‌ளுக்கு அனுப்புங்க‌ள்.

M.Rishan Shareef said...

அன்பின் சக்தி,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி :)

M.Rishan Shareef said...

அன்பின் அருணா,

எனது வலைத்தளத்திற்கு முதல் வருகையென நினைக்கிறேன்.
உங்கள் வருகையும்,கருத்தும் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் வந்தியத்தேவன்,

உங்கள் வரவு இனிய நல்வரவாக அமையட்டும். :)

பத்திரிகைகளுக்கு அனுப்பும் எண்ணமுண்டு எனினும் நானிப்பொழுது இலங்கையில் இல்லை நண்பரே.அனுப்பி,பிரசுரிக்கப்பட காலமெடுக்கும்.அதுதான் தயக்கம்.

வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே :)

ஜாம்பஜார் ஜக்கு said...

ரிஷான் அண்ணாத்தே,

//இதுவரையில் காதலிக்காதவர் பட்டியலில்
நீங்கள் இருப்பதாக
உறுதிபட உரக்கச் சொல்வேன்//

:-))))))

போட்டோவப் பாத்து கவித எளுதிறீங்களா இல்ல கவிதைக் கேத்தெ போட்டோ தேடுவீங்களான்னு யோசிச்சுக்கினு கீறென். அவ்ளோ பொருத்தம்!


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

M.Rishan Shareef said...

வாங்க ஜாம்பஜார் ஜக்கு..!

கவிதைக்கேற்ற போட்டோதான் தேடிப் போடுகிறேன். :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !