Thursday, May 15, 2008

ஒரு தேவதையும் சில சாத்தான்களும்..!


எந்த ஆரூடங்களாலும்
ஊகிக்கவே முடியாத
திடுக்கிடும் துயரங்களுடனானவொரு
காலத்தை நீ கொண்டிருக்கிறாய் !

இதிகாசத்திலிருந்து நீ வாழ்ந்துவரும்
புராதனக் குடியிலிருப்பிலின்னும்
பூதங்களின் ஆட்சி தொடர்வதை - நீ
சொல்லிச் சொல்லியழுத வேளை,
எதைக் கொண்டும் அணைக்கமுடியாத
சினக் கனலொன்று என்னுள்
மூண்டு பொங்கிப் பிரவகித்திற்று !

உனது விரல்கள் வடிக்கும்
உக்கிர ஓவியங்களைப்
பார்த்து,ரசித்து - உன்னை
உச்சத்தில் வைத்திடக் காலம்
பலபேரைக் கொண்டிருக்கையில் ;

எந்தச் சத்தியங்கள்
சகதிக்குள் புதைந்தனவோ...
எந்த வீரப்பிரதாபங்கள்
வெட்டவெளியிலலைந்தனவோ...
எந்த சுபவேளை கீதங்கள்
ஒப்பாரிகளாக மாறினவோ...
எந்தப் பிசாசுகள் உன்னில்
விலங்கு பூட்டிச் சிரித்தனவோ...
அத்தனையும் இன்னுமேன்
உன் நினைவுக்குள் இடறவேண்டும் ?

உன் விழி துடைக்க - பிற
தேவ தூதர்களின் சிறகுகளிலிருந்து
ஒற்றை இறகாவது நீளும் ;
உன்னை உறங்கச் செய்யும்
மந்திர வித்தையொன்றைக்
காற்றும் ஒருநாள் ஏகும் !

நம்பு !
அன்றைய தினமதில்
பூதங்களும் அவற்றின் அடிமைகளும்
பேரதிர்ச்சியில் பார்த்துநிற்க
சவால்களனைத்தையும் விழுங்கி
உன் மேனி சிலிர்த்து
ஆதிகாலந்தொட்டு வரும்
அத்தனை காயங்களையும்
ஒரு கணத்தில் உதறுவாய் !

வீழும் வலியனைத்தும் படபடத்துச்
செத்துமடியும் - பிசாசுகளின்
எல்லை தாண்டிப் பறந்த உன்னை
நண்பர்களின் உலகம்
கைகோர்த்து வரவேற்கும்
அப்பிரகாச நாளில்
என்னை மறந்திடுவாயா சினேகிதி?

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

19 comments:

இறக்குவானை நிர்ஷன் said...

//எதைக் கொண்டும் அணைக்கமுடியாத
சினக் கனலொன்று என்னுள்
மூண்டு பொங்கிப் பிரவகித்திற்று !
//

//எந்தச் சத்தியங்கள்
சகதிக்குள் புதைந்தனவோ...
எந்த வீரப்பிரதாபங்கள்
வெட்டவெளியிலலைந்தனவோ...
எந்த சுபவேளை கீதங்கள்
ஒப்பாரிகளாக மாறினவோ...
எந்தப் பிசாசுகள் உன்னில்
விலங்கு பூட்டிச் சிரித்தனவோ...
அத்தனையும் இன்னுமேன்
உன் நினைவுக்குள் இடறவேண்டும் ?//

//வீழும் வலியனைத்தும் படபடத்துச்
செத்துமடியும் - பிசாசுகளின்
எல்லை தாண்டிப் பறந்த உன்னை
நண்பர்களின் உலகம்
கைகோர்த்து வரவேற்கும்
அப்பிரகாச நாளில்
என்னை மறந்திடுவாயா சினேகிதி?
//

வியக்கவைக்கும் கற்பனையை சிறந்த சிந்தனையோட்டத்தில் அழகான வரிகளால் சமைத்து கவிதை தந்திருக்கிறீர்கள். உண்மையில் ரசனை மிக்க வரிகள்.

Chandravathanaa said...

நன்றாயிருக்கிறது ரிஷான்.

மெளலி (மதுரையம்பதி) said...

வார்த்தையாலேயே தோரணம் கட்டி வரவேற்கிறீர்கள் ரிஷான். சூப்பர்.

Kavinaya said...

எந்த வரியென்று எடுத்துச் சொல்ல சொந்த வரியொன்றும் தோன்றவில்லை தம்பி. எனக்குத் தெரிந்த வார்த்தைகளுக்குள் இத்தனை தெரியாத அர்த்தங்களா. ஒவ்வொரு வரியாய் எடுத்து, வாழ்த்துப்பூசி முத்தமிட ஆசைதான். ஆனால் எப்படி என்றுதான் தெரியவில்லை. இருந்தாலும் பிடித்ததில் மிகப் பிடித்ததை சொல்லாமல் போக முடியுமா?

//உன் விழி துடைக்க - பிற
தேவ தூதர்களின் சிறகுகளிலிருந்து
ஒற்றை இறகாவது நீளும் ;
உன்னை உறங்கச் செய்யும்
மந்திர வித்தையொன்றைக்
காற்றும் ஒருநாள் ஏகும் ! //

சமீபத்தில் பஹீமா அவர்களின் கவிதை ஒன்று படித்தேன். அதற்கு பதில் போலத் தோன்றுகிறது இந்தக் கவிதை.

ஃபஹீமாஜஹான் said...

"சமீபத்தில் பஹீமா அவர்களின் கவிதை ஒன்று படித்தேன். அதற்கு பதில் போலத் தோன்றுகிறது இந்தக் கவிதை."

ஆஹா ஆஹா கவிநயா

பா.மோசே செல்வகுமார் said...

எல்லா இரவுகளும் விடிகின்றன ....நமக்கும் விடியல் வுண்டு...

Sakthy said...

ஒவ்வொரு வரிக்குள்ளும் இத்தனை அர்த்தங்களா?
மிக அருமை ரிஷான்..

M.Rishan Shareef said...

அன்பின் நிர்ஷன்,

//வியக்கவைக்கும் கற்பனையை சிறந்த சிந்தனையோட்டத்தில் அழகான வரிகளால் சமைத்து கவிதை தந்திருக்கிறீர்கள். உண்மையில் ரசனை மிக்க வரிகள்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)

M.Rishan Shareef said...

அன்பின் சந்திரவதனா,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் !!!

M.Rishan Shareef said...

அன்பின் மதுரையம்பதி,

//வார்த்தையாலேயே தோரணம் கட்டி வரவேற்கிறீர்கள் ரிஷான். சூப்பர்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் கவிநயா,

//எந்த வரியென்று எடுத்துச் சொல்ல சொந்த வரியொன்றும் தோன்றவில்லை தம்பி. எனக்குத் தெரிந்த வார்த்தைகளுக்குள் இத்தனை தெரியாத அர்த்தங்களா. ஒவ்வொரு வரியாய் எடுத்து, வாழ்த்துப்பூசி முத்தமிட ஆசைதான். ஆனால் எப்படி என்றுதான் தெரியவில்லை. இருந்தாலும் பிடித்ததில் மிகப் பிடித்ததை சொல்லாமல் போக முடியுமா?//

உங்கள் கருத்து மகிழ்வினைத் தருகிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் சகோதரி பஹீமாஜஹான்,

//ஆஹா ஆஹா கவிநயா//

சகோதரி கவிநயாவின் கேள்வியிலிருந்து தப்பிக்கப்பார்ப்பது போலத் தெரிகிறது? :P

M.Rishan Shareef said...

அன்பின் பா.மோசே செல்வகுமார்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் சக்தி,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சினேகிதி :)

Natchathraa said...

ரிஷி

இந்த கவிதை எனக்கே எனக்காக எழுதியதுப்போல் இருக்கு....
உன் கவிதை வரிகள் ஒவ்வொன்றும் துவண்டு கிடந்த என்னுள்ளத்துக்கு அருமருந்து....என் சந்தோஷ நாட்களில் நிச்சயம் நான் நினைக்கும் இரண்டாவது நபர் (முதல் நபர் இறைவன்) நீயாகத்தான் இருப்பாய் என் தம்பியான தோழா....

அன்புடன்

நட்சத்திரா....

M.Rishan Shareef said...

அன்பின் நட்சத்திரா,

//இந்த கவிதை எனக்கே எனக்காக எழுதியதுப்போல் இருக்கு....
உன் கவிதை வரிகள் ஒவ்வொன்றும் துவண்டு கிடந்த என்னுள்ளத்துக்கு அருமருந்து....என் சந்தோஷ நாட்களில் நிச்சயம் நான் நினைக்கும் இரண்டாவது நபர் (முதல் நபர் இறைவன்) நீயாகத்தான் இருப்பாய் என் தம்பியான தோழா....//

உங்கள் சந்தோஷ நாட்கள் உங்களுடனேயே இனித் தொடர்ந்து வரும்..அப்படியே நானும்.. :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

MSK / Saravana said...

எனக்கு மிகவும் பிடித்துவிட்ட கவிதையிது..

:)
:)

M.Rishan Shareef said...

அன்பின் சரவணகுமார்,

உங்கள் கருத்து என்னை மகிழ்விக்கிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

Anonymous said...

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team