Monday, February 6, 2012

ஆரோக்கியமேரி என்றழைக்கப்பட்ட மேரி ஃபிலோமினா

'ஓ பரமபிதாவே'
துளி நம்பிக்கையும் சிதறிப்போன அன்று
ஆச்சியின் அழுகை ஓலம்
ஆஸ்பத்திரி வளாகத்தை
அதிரச் செய்திருக்கக் கூடும்

சளி இறுகிச் சிதைத்த நெஞ்சுக் கூட்டோடு
வசதிகள் குறைந்த வவுனியா வைத்தியசாலை
பல நூறு கிலோமீற்றர்கள் தொலைவில் அவளை
கண்டிக்கு அனுப்பியிருந்தது
வானமும் அதிர்ந்த நாளதில்
உயர் மருத்துவம்
மகளை எப்படியும் காப்பாற்றிடும்
நம்பிக்கையும் ஜெபமாலையும் துணையாக
ஆச்சியும் வந்திருந்தாள்

பார்வையாள விருந்தினராக
இருவர் மட்டுமே உள்ளனுப்பப்படும்
அவர்களுக்கென்று யாரும் வராத
வாயிலையே பார்த்தபடி
எப்பொழுதும் கட்டிலருகே
மெலிந்த ஆச்சி அமர்ந்திருப்பாள்
குழாய்கள் வழியே வரும்
உயிர்க்காற்று, மருந்து, கரைசல் உணவு
எல்லாவற்றையும் ஏற்றிருக்கும் ஆரோக்கியமேரி
வற்றிய உடல் சுவாசத்துக்கு மட்டுமே அசைய
கண்களில் மீதமிருக்கும் உயிர்
யாரையோ தேடியபடி கண்மணியாயசையும்

அவர்களறியாச் சிங்கள மொழியை
தமிழுக்கு மாற்றிச் சொல்ல உதவப் போய்
அவ்விருவர் துயர் கதையறிந்தேன்

பிறப்பிடம்
யாழ்ப்பாணத்தினொரு கடற்கரைப் பிரதேசம்
தற்பொழுது முகாம் வாசம்
மேரிக்கு ஒரே மகன்
சென்ற வருடம் கடத்தப்பட்ட அவனுக்கு வயது பதினேழு
கணவனும் மற்ற உறவுகளும் போரில் இறந்திட
ஆச்சியும் அவளும் மட்டுமே மிச்சம்
ஷெல் பட்ட தொண்டையில் சத்திரசிகிச்சை
அதனோடு சேர்த்து சளி கட்டி சிக்கலாகி
வவுனியா ஆஸ்பத்திரியோடு சில மாதங்கள் வாசம்
அங்கிருந்து கண்டிக்கு வந்து
இன்றோடு பத்துநாள்

'தம்பி எங்களை வவுனியாவுக்கே
அனுப்பிவிடச் சொல்லுங்கோ
இஞ்ச மொழியும் தெரியேல்ல
கவனிக்கிறாங்களுமில்ல
பொட்டொன்றைக் கண்டால் போதும்
புலியென்று நினைப்பு இவங்களுக்கு
அங்கயெண்டாலும் அயல்கட்டிலுக்கு வாற சனம்
பார்த்துப் பேசிச் செல்லும்
மனசாரப் பேச்சை விட
மருந்தெல்லாம் எதுக்கு ராசா'

இரு வாரங்களின் பிற்பாடு
மீளப் போய்ப் பார்க்கையில்
அவர்களிருக்கவில்லை
மேரி ஃபிலோமினாவை மரணம் கூட்டிச் சென்று
ஒரு கிழமையாயிற்றென
மருத்துவத் தாதி கூறி நடந்தாள்
காப்பாற்ற வந்த உயிரைக்
காலனின் கையில் பறிகொடுத்த ஆச்சி என்னவானாள்

தெரியாத மொழி பேசும் சூனியப் பூமி
நெரிசல் மிக்க பெருநகரம் அவளை
எந்த வாய் கொண்டு விழுங்கியதோ....
எங்கே போனாளென
எவர்க்கும் தெரியாத இருளை ஊடறுத்து
தளர்ந்த பாதங்களினால்
அழுதபடி நடந்தாளோ....

ஆரோக்கியமேரி என்றழைப்பட்ட மேரி ஃபிலோமினா
மரணித்தவேளையில்
'ஓ பரமபிதாவே'
துளி நம்பிக்கையும் சிதறுண்ட அந் நாளில்
ஆச்சியின் அழுகை ஓலம்
ஆஸ்பத்திரி வளாகத்தையே
அதிரச் செய்திருக்கும்

- எம்.ரிஷான் ஷெரீப்
20100601

நன்றி
# காலச்சுவடு இதழ் - 142, அக்டோபர் 2011
# நவீன விருட்சம்
# திண்ணை

Thursday, January 19, 2012

நான் குருடனான கதை

தேவ வனங்களின் வண்ணங்களில் தோய்த்து
மொழிகளையொன்றாக்கி வரைந்திட்ட ஓவியத்துக்குக்
கண்களற்றுப் போயிற்று
காலம் நகரும் கணங்களின் ஓசையைக் கேட்கக்
காதுகளற்றுப் போயிற்று
காணச் சகித்திடா அவலட்சணத்தை
தன்னுள் கொண்டது நவீனத்துக்குள் புதைந்தது
புதிதாக மின்னக் கூடுமென்ற நம்பிக்கையோடு

யாரும் காணாச் சித்திரத்தின் உதடுகளில்
வண்ணங்கள் முணுமுணுத்துக் கண்களைத் தேடிற்று
எங்கும் தன் விம்பங்களைப் பொருத்தியபடி
திசைகள் தோறும் ஓடியது உயிரற்ற ஓவியம்
எனது விழிகளை உருவிக்கொண்டு

- எம்.ரிஷான் ஷெரீப்
13122008

நன்றி
# வடக்குவாசல் இதழ் - நவம்பர், 2012
# திண்ணை

Wednesday, January 4, 2012

புகையாய் காற்றாய் ஏதோவொரு ஆவியாய்...


சலனமற்ற தூறலோ நிலவோ வெயிலோ
எதுவோ நகரும் இக் கணத்தில்
வரையப்பட்ட மண்டையோட்டின்
சாயலில் காண்கிறேன் என்னை
வளைந்து நெளிந்து செல்லும்
இப் பாதையொரு முடிவிலி

இரு மருங்குப் புதர்களிலிருந்தும்
வெளிப்பட்டிருக்கும்
புகையாய் காற்றாய் ஏதோவொரு ஆவியாய்
புதையுண்ட மனித உயிர்கள்
காலக் கண்ணாடியை விட்டும்
இரசம் உருள்கிறது
அதில் தென்பட்ட விம்பங்கள்தான்
புதையுண்டு போயினவோ

வேர்களில் சிக்கியிருக்கும்
உடல்களிலிருந்து எல்லாச் செவிகளையும்
உறிஞ்செடுத்த விருட்சங்கள்
எவ்விசை கேட்டு வளரும்
விதியெழுதும் பேனா
எக் கணத்தில் முறிந்திடுமோ
காத்திருக்கலாம்
இங்கு பூதம் காத்த விளக்காய் நான்

கால்களை விரித்தாடும்
எனது நிழல்களில்
ஒரு குழந்தை
ஒரு கொடூர விலங்கு
இணைந்திரண்டும்
ஒரு கணமேனும் விடாது அசைகின்றன
பார்வைக்குத் தெரியாத இழையொன்றால்
பிணைக்கப்பட்டிருக்கிறேனா
தெரியவில்லை

கடந்த காலத்தைக் காட்டிட
பறவைகளிடமில்லை
என்னிடமிருக்கின்றன
தேய்ந்தழியக் காத்திருக்கும் எனதேயான
பாதத் தடங்கள்

சுற்றிவரச் சட்டமிட்ட கூண்டுக்குள்
வளரும் தளிர் நானா
எவ்வாறாயினும் என்னில் வரையும்
எந்த வண்டிலுமில்லை
உணர்கொம்பில் ஒட்டிய தேன்
மண்டையோட்டிலுமில்லை
குருதியின் ஈரலிப்பு

பிறகும்
என் முகம் எதிலும் இல்லை
இருக்கக் கூடும்
இவ் வரிகளின் ஏதேனுமொரு மூலையில் நான்
நானாகவே

- எம். ரிஷான் ஷெரீப்
20100702

நன்றி 
# காலச்சுவடு இதழ் - 142 - அக்டோபர் 2011
# திண்ணை
வல்லினம் - கலை, இலக்கிய இதழ் - 37, ஜனவரி 2012
ஓவியம்: காச வினய்குமார்

Thursday, December 1, 2011

தோள்களில் அமர்ந்திருக்கும் மரணத்தின் தூதுவன்

தோட்டத்துக் காவல்காரன்
நித்திரையிலயர்ந்த கணமொன்றில்
தனித்துவிழும் ஒற்றை இலை
விருட்சத்தின் செய்தியொன்றை
வேருக்கு எடுத்துவரும்

மௌனத்திலும் தனிமையிலும்
மூழ்கிச் சிதைந்த உயிரின் தோள்களில்
வந்தமர்ந்து காத்திருக்கிறான்
இறப்பைக் கொண்டுவரும்
கடவுளின் கூற்றுவன்

நிலவுருகி நிலத்தில்
விழட்டுமெனச் சபித்து
விருட்சத்தை எரித்துவிடுகிறேன்

மழை நனைத்த
எல்லாச் சுவர்களின் பின்னிருந்தும்
இருளுக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கிறது
ஈரத்தில் தோய்ந்த
ஏதோவொரு அழைப்பின் குரல்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# வடக்குவாசல் - நவம்பர், 2011
# மறுபாதி - கவிதைகளுக்கான இதழ்
# விடிவெள்ளி
# தமிழ் எழுத்தாளர்கள்
# திண்ணை

Tuesday, November 8, 2011

அக்கறை/ரையை யாசிப்பவள்



அன்றைய வைகறையிலாவது
ஏதாவதொரு அதிசயம் நிகழக்கூடுமென
படிப்படியாயிறங்கி வருகிறாள்
சர்வாதிகார நிலத்து ராசாவின்
அப்பாவி இளவரசி

அதே நிலா, அதே குளம்,
அதே அன்னம், அதே பூங்காவனம்,
அதே செயற்கை வசந்தம்
அதுவாகவே அனைத்தும்

எந்த வர்ணங்களும் அழகானதாயில்லை
எந்த மெல்லிசையும் புதிதானதாயில்லை
எந்த சுதந்திரமும் மகிழ்வூட்டக் கூடியதாயில்லை

நெகிழ்ச்சி மிக்கதொரு
நேசத் தீண்டலை
அவள் எதிர்பார்த்திருந்தாள்
அலையடிக்கும் சமுத்திரத்தில்
பாதங்கள் நனைத்தபடி
வழியும் இருளைக் காணும்
விடுதலையை ஆவலுற்றிருந்தாள்
காவல்வீரர்களின் பார்வைக்குப் புலப்படா
மாய உடலையொன்றையும் வேண்டி நின்றாள்
அவள் நிதமும்

அப் புல்வெளியோடு
வானுக்குச் சென்றிடும் மாய ஏணியொன்றும்
அவளது கற்பனையிலிருந்தது

இப் பொழுதுக்கு மீண்டும் இக்கரை தீண்டா
ஒரு சிறு ஓடம் போதும்
எல்லை கடந்துசென்று
சுதந்திரமாய்ப் பறக்கும் பட்சிகள் பார்க்கவென
அச் சமுத்திரத்தின் அக்கரையில்
அவளுக்கொரு குடில் போதும்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
20100717

நன்றி
# மறுபாதி - கவிதைகளுக்கான இதழ் - 06 , வைகாசி-ஆவணி 2011
# உயிர்மை
# திண்ணை

Wednesday, October 12, 2011

மழைப்பாடல்

தாங்கவொண்ணாக் காதலின் வலி தவிர்க்க
சூழ்ந்திருந்த எல்லாவழிகளையும்
இறுக மூடித் திறப்புக்களைத் தூர வீசி
என்னை சிறையிலிட்டுக் கொண்டேன்
வெளியேற முடியா வளி
அறை முழுதும் நிரம்பி
சோக கீதம் இசைப்பதாய்க் கேட்ட பொழுதில்
மூடியிருந்த யன்னலின் கதவுகளைத் தட்டித் தட்டி
நீரின் ரேகைகளை வழியவிட்டது மழை

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
நன்றி 
# மறுபாதி இலக்கிய இதழ்-06, வைகாசி-ஆவணி 2011
# விடிவெள்ளி

Sunday, July 10, 2011

சாபங்களைச் சுமப்பவன்

நேர் பார்வைக்குக் குறுக்கீடென
ஒரு வலிய திரை
ஏமாற்றுபவனுக்கு இலகுவாயிற்று

பசப்பு வரிகளைக் கொண்ட
பாடல்களை இசைத்தபோதும்
வெறித்த பார்வையோடு தான்
துயருறுவதாகச் சொன்ன போதும்
பொய்யெனத் தோன்றவில்லை
ஏமாறியவளுக்கு
இருள் வனத்திலொரு ஒளியென
அவனைக் கண்டாள்

புகைப்படச் சட்டங்களுக்குள்ளிருந்து நீண்டன
வாழ்வு கொடுப்பதாகச் சொன்ன
அவனது கைகள்
ஒலிக் கோப்புகளிலிருந்து வழிந்தன
தூரத்திலிருந்து அவனளித்த உத்தரவாதங்கள்

அவளது கைகளைப் பிணைத்திருந்தது
அவனிட்ட மாயச் சங்கிலி
விலங்கிடப்பட்ட பறவையென
காலடியில் வீழ்ந்துகிடந்தாள்
சிறகுகளை ஒவ்வொன்றாகப் பிய்த்தெறிந்தன
கூரிய நகங்களைக் கொண்ட
அவனது விரல்கள்
பின்னர் உச்சியில் ஏற்றிவிட்டு
விரைத்த ஒரு பொம்மையென விழச் செய்தான்

நேர்கோடென நட்சத்திரமொன்று வீழ்ந்த இரவில்
இருவரையும் நனைத்தது மழை
அவளது குருதியும் வேதனையின் ஓலமும்
தடயமழிந்து போயிற்று
என்றென்றைக்குமவளது
சாபங்களைச் சுமப்பவனானான் அவன்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# வடக்குவாசல் இதழ் - ஒக்டோபர், 2010
# உயிர்மை
# நவீன விருட்சம்
# தமிழ் எழுத்தாளர்கள்
# திண்ணை
# வார்ப்பு

Wednesday, June 1, 2011

உனை ஈர்க்காவொரு மழையின் பாடல்

நான் மழை
ஈரலிப்பாக உனைச் சூழப் படர்கிறேன்
உன் பழங்கால ஞாபகங்களை
ஒரு கோழியின் நகங்களாய்க் கிளறுகிறேன்

எனை மறந்து
சிறுவயதுக் காகிதக் கப்பலும், வெள்ள வாசனையும்
குடை மறந்த கணங்களும், இழந்த காதலுமென
தொன்ம நினைவுகளில் மூழ்கிறாய்
ஆனாலும்
உன் முன்னால் உனைச் சூழச்
சடசடத்துப் பெய்தபடியே இருக்கிறேன்

உனைக் காண்பவர்க்கெலாம்
நீயெனைத்தான் சுவாரஸ்யமாய்க்
கவனித்தபடியிருக்கிறாயெனத் தோன்றும்
எனக்குள்ளிருக்கும் உன்
மழைக்கால நினைவுகளைத்தான்
நீ மீட்கிறாயென
எனை உணரவைக்கிறது
எனது தூய்மை மட்டும்

இன்னும் சில கணங்களில்
ஒலிச் சலனங்களை நிறுத்திக்
குட்டைகளாய்த் தேங்கி நிற்க
நான் நகர்வேன்

சேறடித்து நகரும் வாகனச்சக்கரத்தை நோக்கி
'அடச்சீ..நீயெல்லாம் ஒரு மனிதனா?'
எனக் கோபத்தில் நீ அதிர்வாய்

எனைத் தனியே ரசிக்கத் தெரியாத
நீ மட்டும் மனிதனா என்ன?

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# வடக்கு வாசல் இதழ், அக்டோபர் 2010
# நவீன விருட்சம்
# தமிழ் எழுத்தாளர்கள்
# திண்ணை

Friday, May 6, 2011

போர்ப் பட்டாளங்கள்

மேசையில் ஊர்வலம் போகும்
குதிரைப் பட்டாளங்களைப் பார்த்திருந்த சிறுவன்
உறங்கிப் போயிருந்தான்
சிப்பாய்களிறங்கி தப்பித்து வந்த
முற்றத்தில் யானைகளின் நடனம்

தூரத்து மேகங்களிடையிருந்து
திமிங்கிலங்கள் குதித்திட
பாய்மரக் கப்பல்களின் பயணம்
கைகொட்டிச் சிரிக்கும் குழந்தையின் காலடியில்
படை வீரர்களின் வாட் போர்
கதை சொல்லும் தங்கையின் மொழியில்
கடற்குதிரை நடை

சிங்க வேட்டை சுவர்ப்படத்தின் கீழே
சிறுவனிடம் கதை கேட்கும் கிழச் சிங்கம்
விளக்கின் நிழலில் குள்ளநரி
கூடையில் இரட்டைக் குழந்தைகள்
தாலாட்டும் அம்மாவின் புத்தகத்தில்
கதைமாந்தர்களின் உறக்கம்

செதுக்கிய மரச் சிற்பங்களிடையிருந்து
எழுந்து நிற்கும் புதுச் சிலை
அப்பாவின் கை தொட்டு
உரத்துப் பேச ஆரம்பிக்கிறது
நிலவிலிருந்து இறங்கிவரும் பாலம்
யன்னல் கதவிடையில் முடிய
கட்டிலுக்கு இறங்கி வருகின்றனர்
தேவதைகளும் சாத்தான்களும் ஒருசேர

படுக்கையில் எழுப்பிய மாளிகை உச்சிகளில்
கொடிகள் பறக்கின்றன
வழமை போலவே
கீற்றுப்படைகளோடு வந்த ஒளி
மூடியிருந்த கண்ணாடி யன்னலோடு போரிட
சிதறிய வெளிச்சம் அறை நிரப்பி
என் கனவு கலைத்திற்று

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.



நன்றி
# உயிர்நிழல் இதழ் 33
# அதீதம்
# உயிர்மை
# வீரகேசரி வார இதழ்
# தடாகம்
# நவீன விருட்சம்
# காற்றுவெளி
# திண்ணை
# தமிழ் முரசு அவுஸ்திரேலியா

Wednesday, March 2, 2011

பூக்கள் விசித்தழும் மாலை

வானை எடுத்து வாவென
காற்று வெளியெங்கும் 
பட்டத்தை அனுப்புகிறேன் பகலில்

சூரியனோ பௌர்ணமியோ எதுவோ
குளிரிரவில் நட்சத்திரங்களாலெறிந்து
என் மீதுள்ள கோபத்தைக் காட்டுகிறது

செடிகளில் விழும் எரிநட்சத்திரங்கள்
மொட்டுக்களாகிப் பூத்திடும்
விடிகாலையில்

மாலைகளாக்கப்படுபவற்றுக்கு
தெரியாது
எந்தச் சடங்குகளுக்காகக் கோர்க்கப்படுகிறோமென்று

எனினும் மாலையிலுதிரும்
பூக்கள் விசித்தழுகின்றன
மேடை நிழல்களிலிருந்தும்
பூத்த மரங்களின் கீழிருந்தும்

காலையில் பனி சொட்டிக் கிடக்கிறது

- எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

நன்றி

# அதீதம் இதழ்

# காற்றுவெளி

# தமிழ்முரசு

# வீரகேசரி வார இதழ்

# திண்ணை

# வார்ப்பு

# தமிழ் எழுத்தாளர்கள்


Tuesday, February 1, 2011

சாட்சிகளேதுமற்ற மழை

கதவு யன்னல்களிலிருந்து
வழிகின்றன முகங்கள்
கொட்டப்படும் நீர்த்தாரைகளைப் போல

கைகளில் கட்டப்பட்டிருக்கும்
நுண்ணிய கயிறுகளை அவிழ்த்துக் கொண்டு
பார்த்திருக்கும் அவற்றின் விழிகளில்
நிழலாக அசைகின்றன
பாதையோர மரங்களும்
ஈரப் பறவைகளும் மழையும்
ஒரு தெருச் சண்டையும்

புன்னகையும் சிரிப்பும் எள்ளலும்
சுழிப்பும் முணுமுணுப்பும்
அருவருப்பும் கலந்த உணர்ச்சிகள்
மழைச்சாரலிடையில்
அங்கிங்கு தாவும் தவளைகளைப் போல
அவதானித்திருக்கும் முகங்களில் மாறிட
பேய்களின் வாய்களுக்கெனவே
பிறப்பெடுத்தவை போல
வெளியெங்கும் வீச்சமேற்றுகின்றன
பிணங்களின் வாடையுடனான
அழுக்கு மொழிகள்

இடி வீழ்ந்து
இலைகள் கிளைகள் எரிய
மொட்டையாகிப்போன மரமொன்றென
நடுத்தெருவில் நின்று ஓலமிட்டழுதாள்
மேலாடையுரிக்கப்பட்ட குடிகாரனின் மனைவி
புதைக்கப்பட்ட விரல்களில்
புழுக்களூர்வதைப் போல
நேச உணர்வேதுமற்றவன்
தன் தாக்குதலைத் தொடர்ந்தான்

நத்தைகள் ஆமைகளைப் போல
தங்களை உள்ளிழுத்து
கதவுகளைப் பூட்டிக்கொண்டன
தெருவில் நிகழ்ந்த
கொலையைக் கண்டமுகங்கள்
எதையும் காணவில்லையென்ற
பொய்யை அணியக்கூடும்
இனி அவர்தம் நாவுகள்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
21022010


நன்றி
# கலைமுகம் இதழ் - 50, ஒக்டோபர் 2010
# திண்ணை
# நவீன விருட்சம்
# தமிழ்முரசு அவுஸ்திரேலியா
# வார்ப்பு
# தமிழ் எழுத்தாளர்கள்

Sunday, January 2, 2011

எனதாக நீயானாய்


ஏழு வானங்களும் நிரம்பி வழியும்படியான
நேசத்தைப் பூத்திருக்கின்றன உனது விழிகள்
சுகந்தம் வீசிப் பரவுமதன் பூரிப்பில்தான்
செழிக்கிறேன் நானும்

காலங்காலமாக மென்மையில்
ஊறிக்கிடக்கும் மனமதில்
எக் கணத்தில் குடியேறினேனோ
இசைத்த கீதங்களின் ஒலியிலெனது
இடர்கள் தீர்ந்தன
உற்சாகத்தின் வீரியமிக்க விதைகள்
உன் நம்பிக்கையின் கரங்களால்
ஊன்றப்பட்ட நாளதில்தான்
தூய சுவனத்தின் மழையென்னை
முழுதும் நனைக்கப் பெய்ததையுணர்ந்தேன்

கலக்கின்றதுயிரில்
செவிகளுக்குள் நுழைந்த
உனதெழில் பாடல்களினூடு
ஆளுமைமிகு தொனி

இரைத்திரைத்து ஊற்றியும்
வரண்டிடா அன்பையெல்லாம்
எங்கு வைத்திருக்கிறாய் உயிர் சகா
காணும்போதெல்லாம் எழுமுன் புன்னகையின்
கீற்றில்தான் உதிக்கிறது எனதுலகு

மஞ்சள் பறவையொன்றும் சில அணில்குஞ்சுகளும்
வாடி உதிர்ந்திடா மலர்கள் நிறைந்த
சோலையில் விளையாடும்
வசந்தகாலத்தின் காலையொன்றில்
நானினி வாழ்வேன்
ஒலிக்கும் இன்னிசையின் பிண்ணனியில்
நீயிருப்பாய் என்றென்றுமினி

 - எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி
# வல்லினம் இலக்கிய இதழ் - ஜனவரி, 2011
# காற்றுவெளி இலக்கிய இதழ் - ஜனவரி, 2011
# வார்ப்பு
# திண்ணை

Wednesday, November 17, 2010

கல்லா(ய்) நீ


எனதென்று சொல்ல
அத்தாட்சிகளேதுமற்ற வெளியொன்றில்
பயணிக்கிறதுனது பாதங்கள்
ஒரு வழிகாட்டியாகவோ
ஒரு யாசகனாகவோ
நானெதிர்க்கத் தலைப்படவில்லை

எனைச் சூழ
ஒரு பெரும் மௌனத்தைப் பரத்தியிருக்கிறேன்
அதன் சிறு பூக்கள் அடிச்சுவடுகளில் நசியுற
ஆகாயம் கிழிக்கும் மின்னலாய்
பார்வையை அலைய விட்டபடியிருக்கிறாய்

காலத்தின் தேவதைகள்
தம் விலாக்களில் இறகு போர்த்தி
காதலின் பாடலொன்றை
மெல்லிய குரலில் இசைத்தபடி
சோலைகளைச் சுற்றிப் பறந்தபடி இருக்கிறார்கள்

நீ தேவதைகளின் முகம் பார்க்கிறாய்
உனக்கவை கோரமாய்த் தெரிந்திட
இறகு நோக்கிக்  கூரம்பெறிந்து
அவற்றையும் முடக்கிட முனைகிறாய்

உன் துர்புத்தி அறிந்து
தேவதைகளின் காவலன்
உனைக் கல்லாய் மாறிடச் சபிப்பானாயின்
இப்பொழுது எனை விலங்கிட்டு
வசந்தங்களுக்கு மீளவிடாமல்
ஆக்கிரமித்திருப்பதைப் போல
அப்பொழுதும் என் கல்லறை அடைத்து
நடுகல்லாய்க் கிடப்பாயோ ?

20092008

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# அம்ருதா இதழ் 51, அக்டோபர் 2010
# உயிரெழுத்து - ஞாயிறு வீரகேசரி இதழ்  24.10.2010
# காற்றுவெளி இதழ், நவம்பர் 2010
# உயிர்மை
# திண்ணை
# தமிழ் எழுத்தாளர்கள்

Monday, November 1, 2010

ஏமாற்றங்களின் அத்திவாரம்

ஏமாற்றங்களின் அத்திவாரம்
மிகப் பலம் வாய்ந்தது

வாழ்நாள் முழுவதற்குமான
ஏமாற்றச்சுமையைத் தாங்கிக் கொள்ளும்படியாக
சிறுவயது முதலே இடப்படுமது
ஒரு விதையைப் போல நடப்படுவது

காலங்களை உறிஞ்சி வளரும்
அத்திவார மரம் எப்பொழுதும்
ஏமாற்றத்தின் பூக்கள் கொண்டே சிரிக்கிறது
எனினும்
நிழலில் அமர்ந்தே ஏமாற்றுபவர்களின்
தலையில் விழும்படியான காய்களெதையும்
இறப்புவரையிலும் தராதபடியால்
ஏமாற்றத்தின் வேர்கள் உறுதியாக ஊடுருவுகின்றன
ஒட்டுண்ணித் தாவரம் போல

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
20091216

நன்றி
# கலைமுகம் இதழ் 50 - ஒக்டோபர் 2010
# உயிர்மை
# திண்ணை
# தமிழ் எழுத்தாளர்கள்

Tuesday, October 12, 2010

விலகிப் போனவன்

பூக்களை ஏந்திக் கொண்டவன்
வாழ்வின் இனிய நாதத்தைக் கற்றுத்தந்தவன்
தனித்த பசிக்குச் சுய சமையலையும்
விரக்தி நிரம்பிய ஏகாந்தப் பொழுதுகளில்
மனதோடு இசைக்கப் பாடல்களையும்
அருகிலிருந்து சொல்லித் தந்தவன்

சொல்லியோ சொல்லாமலோ
அன்பின் பிடியிலிருந்து
யாரோவாகி அவன் நகர்ந்தவேளை
தெரியாமலே போயிற்று

இறுதியில் தெரிந்தது
ஆழ்கிணறுகளின் பழுப்பு தோய்ந்த
சிதிலங்களுக்கிடையில் துளிர்க்கும்
பசுந்தளிர், சிறு மலர்களைப் போன்று
பார்த்துப் பார்த்து மகிழும்படியான
வாழ்வினை அவன் விட்டுச் செல்லாதது

சிலவேளை வெயிலும்
சிலவேளை மழை இருட்டுமாக
இப்பொழுதெல்லாம் காலம்
வாழ்வியலைக் கற்றுத்தருகிறது
சிலவேளை பனியைத் தூவியும்
சிலவேளை
பழைய நினைவுகளைச் சுட்டி இம்சித்தும்

-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
26032009



நன்றி
# அம்ருதா இதழ் - 51, அக்டோபர் 2010
# தமிழ் எழுத்தாளர்கள்
# திண்ணை
# உயிர்மை

Wednesday, September 15, 2010

வனச்சிறுவனின் அந்தகன்

சூழ்ந்த நீருக்குள் மீனென அறியப்பட்டதை
செவிட்டூமை அந்தகனுக்குணர்த்திடும் படி
மிகக்கடின பணியொன்று
வனச்சிறுவனுக்கிடப்பட்டது

எந்தக் கொம்பிலும்
ஏறித் தேனெடுப்பவன்
கொடிய விலங்கினையும் தனியே வேட்டையாடி
ராசாவுக்குத் தோல்/ள் கொடுப்பவன்
வனாந்தரத்தின் அத்தனை மூலைகளுக்கும்
அமாவாசை நிசியிலும்
அச்சமின்றிப் போய்வருபவன்
முதன்முதலில் அயர்ந்து நின்றான்
கட்டளையை மறுக்க வழியற்றும்
மேற்கொண்டு ஏதும் செய்யும் நிலையற்றும்
விதிர்த்து நின்றான்

செய்வதறியாச் சிறுவன்
நடுங்குமந்தகனின் விரல்கள் பிடித்து
வனத்தின் மத்திக்கு வழிகூட்டிப் போனான்
அல்லிப் பெருங்குளத்தினுள்ளவன்
கரங்களை நுழையச் செய்திவன் 'தண்ணீர்' என்றான்
காலங்காலமாய்க் கடந்துவந்த வாழ்வின் சோர்வு தீரவெனவோ
வற்றாத் தேகத்தின் எல்லாத்தாகங்களுந் தீரவெனவோ
கரங்களைக் குழிவாக்கி உள்ளங்கையில் நீரேந்தி
அள்ளியள்ளிக் குடித்தான் அந்தகன்
சிறுவனின் பார்வைக்கு மட்டுமென
நீரின் எல்லாச் சுழிகளிலும் நழுவி நீந்தின
வண்ண வண்ண மீன்கள்

கற்றுக் கொடுக்கவேண்டிய
கால எல்லை முடிந்ததெனச் சொல்லி
அரச பரிவாரங்கள் சேதியனுப்பிய நாளில்
விடியலின் கீற்றுக்கள்
மலைகளின் கீழால் புதையுண்டு போக
விருட்ச இலைகள் நீரைச் சிதறிட
மழை தூவிற்று

வீற்றிருந்த அரசனை முன்னிருத்தி
செவிட்டூமைக் குருடனை
மீன்கள் பற்றிக் கேள்விகள் கேட்டான் மந்திரி
தாமரைக்குளத்துத் தண்ணீரில் எண்ணங்கள்
மிதக்குமவனது மொழிபெயர்ப்பாளனாகி
எல்லாக் கேள்விகளுக்கும்
மிகச் சரியாய்ப் பதில் சொன்னான் வனச்சிறுவன்

-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.


நன்றி

# உயிர்நிழல் - ஏப்ரல், ஜூன் இதழ் - 2010
# காற்றுவெளி - செப்டம்பர், 2010
# நவீன விருட்சம்
# உயிர்மை
# வார்ப்பு
# திண்ணை
# தமிழ் முரசு அவுஸ்திரேலியா

Wednesday, September 1, 2010

தூறல் மழைக் காலம்

குளிர் காற்றினூடான வானம்
இளநீலம்

மெல்லிய நீர்த்துளிகள்
இசை சேர்த்து வந்து
மேனி முழுதும் தெளிக்கின்றன
நீண்ட காலங்களாக
சேகரித்து வைத்த அன்பை

அமானுஷ்ய ஈரத்தோடு
தளிர் விட்டிருக்கும் அகத்தி
பெண் நெற்றிப் பொட்டு வடிவ
பச்சை நீளிலை மரத்தில்
ஊதாப்பூக் காய்கள் கொத்தியுண்ணும்
ஏழெட்டுக் கிளிகள்
செந்நிறச் சொண்டுகளுடன்
மாதுளம்பூக்கள்

தனிமையை அணைத்தபடி
அடுத்த பாடலை
நான் ஆரம்பிக்கலாம்
அதன் பிண்ணனியில்
மழையும்
நதியின் ஈரலிப்பும்
குளிரின் வாசனையும்
இதே பசுமையும் என்றுமிருக்கும்

நீயும்
என்னுடன் இருந்திருக்கலாம்

-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

09012010

நன்றி
# வீரகேசரி வார இதழ் 22.08.2010
# உயிர்மை
# நவீன விருட்சம்
# திண்ணை

Sunday, August 15, 2010

பெண்


பறவைகளின் பாதையில் குறுக்கிடும்
கரங்களைப் பெற்றிருந்தவனின் தலையில்
மரங்கள் முளைத்திருந்தன
கிளைகளையடைந்து கூடுகட்டுவதை
அஞ்சிய பட்சிகளெல்லாம்
பறப்பதையும் மறந்தன
கூடு கட்டுதலையும் மறந்தன
பின்னர் அப்படியே தம் இருப்பையும் மறந்து
அந்தரத்தில் இறந்து வீழ்ந்தழிந்தன

-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை



நன்றி
# காற்றுவெளி
# உயிர்மை
# திண்ணை
# தமிழ் முரசு அவுஸ்திரேலியா

Sunday, August 1, 2010

சூறாவளியின் பாடல்

பலம் பொருந்திய
பாடலொன்றைச் சுமந்த காற்று
அங்குமிங்குமாக அலைகிறது

இறக்கி வைக்கச் சாத்தியமான
எதையும் காணவியலாமல்
மலைகளின் முதுகுகளிலும்
மேகங்களினிடையிலும்
வனங்களின் கூரைகளிலும்
நின்று நின்று தேடுகிறது

சமுத்திரவெளிகளிலும்
சந்தைத் தெருக்களிலும்
சுற்றித்திரிய நேரிடும்போது
இரைச்சல்கள் எதுவும் தாக்கிடாமல்
பொத்திக்கொள்கிறது பாடலை

பறவைகள் தாண்டிப் பறக்கையிலும்
காத்துக்கொள்ளப்படும்
இசை செறிந்த பாடல்
சலித்துக் கொள்கிறது
ஓய்வின்றிய அலைச்சலின்
எல்லை எதுவென்றறியாது

தனிமைப்பட்டதை
இறுதியிலுணர்ந்தது
தெளிந்த நீர் சலசலக்கும்
ஓரெழில் ஆற்றங்கரை
மரமொன்றின் துளைகளுக்குள்ளிருந்து
வெளிக்கசிந்து பிறந்த நாதம்

இருளுக்குள் விசித்தழும்
பாடலின் கண்கள் துடைக்கும் காற்று
அதைச் சில கணங்கள்
அந்தரத்தில் நின்று
பத்திரமாகப் பார்த்திருக்கச் சொல்லி
ஆவேசத்தோடு கீழிறங்கும்

பின்னர் பாடலை அழ வைத்த
காரணம் வினவி
தான் காணும்
வெளி, தெரு, சமுத்திரம், நதி, வனமென
அத்தனையிலும் தன் சினத்தினைக் காட்டி
அடித்துச் சாய்க்கும்

இயலாமையோடு எல்லாம்
பார்த்திருக்கும் பாடல்
இறுதியில் கீழிறங்கி
எஞ்சிய உயிர்களின்
உதடுகளில் ஒப்பாரியாகி
கோபக் காற்றெதிரில் செத்துப்போகும்

காலம்
இன்னுமோர் பாடலை
காற்றுக்குக் கொடுக்கக் கூடும்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# காலச்சுவடு இதழ் 123, மார்ச் - 2010
# உயிர்மை
# விகடன்
# திண்ணை
# தமிழ் முரசு அவுஸ்திரேலியா