Wednesday, December 26, 2007

சுனாமியழித்த சினேகிதனுக்கு...!


எங்கிருக்கிறாய்
எனதினிய நண்ப?

கறுப்பு,வெள்ளை ஓவியங்களாய்க்
காட்சிகள் மறைய
நிலவின் சாட்சியாக
நீ வாழ்ந்த ஊருக்கு
நிவாரணப் பொருட்களோடு
நாமனைவரும்
நள்ளிரவில் வந்தடைந்தோம் !

உனது சுவடு பதித்த
கடற்கரை,
உனது சுவடு அழித்த
கடல்
அனைத்தையும் பார்த்து
விக்கித்து நின்றோம் !

என்றாவதொருநாளில்
என்னையும் - உனதூருக்கு
அழைத்துச் சென்று,
கடல் அழகு காட்டி,
நடுநிசியில் - சுடச்சுட
மீன் வறுத்த
நிலாச்சோறுண்ணும் ஆசையை
இறுதியாக என்னிடம்
சொல்லிச் சென்றிருந்தாய் !

புன்னகை தவறிய முகங்களையும்,
விரக்தி தேங்கிய கண்களையும்
பார்க்க நேரிட்டபோதெல்லாம்
உன்னையும் உயிருடன்
சந்திக்க வேண்டுமென
இதயம் - ஏங்கித் தவித்திற்று !

உனது இறுதி மூச்சை
ஏந்திய காற்று,
உனது சுவாசப்பைகளை
நிரப்பிய சமுத்திரம்,
உனது தேகத்தை
விழுங்கியிருக்கும் பூமி
அனைத்தும்,
உனது ஞாபகங்களைத் திரட்டி
என்னிடம் தந்தன !

கொடிய கனவொன்றினால்
திடுக்கிட்டெழுதல் போல
கொடியில் உலரும்
உனதாடைகளைக் காண
நேரிடும் கணங்களிலெல்லாம்
நெஞ்சு நடுங்கி,
விம்மித் தடுமாறுகின்றேன்
உனது வெறுமையுணர்ந்து
திகைத்து நிற்கின்றேன் !

உனது தொழுகைகளும்,
நோற்ற நோன்புகளும்,
வாய்மொழிந்த திக்ருகளும்
ஓதிய ஒவ்வொரு ஆயத்களும்
நீ பற்றிக்கொள்ள
பெரும் தூணாக அமைந்திருக்குமென
உறுதியாக நம்புகிறேன் !

எனது அறையில்
என்னுடன் வசித்த
என்னினிய நண்பனே;
மஹ்ஷரில்
மறுபடியும் கரம் கோர்ப்போம்,
நீண்ட நடை பயில்வோம் - அங்கே
சுனாமி வராது !

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Saturday, December 22, 2007

எனதூருக்கு வருவாயா...?


அன்புடன் சினேகிதனுக்கு ...,
பனை மரங்களையும்
பவளப் பாறைகளையும்
பார்த்திடும் ஆவலில் நீ
எனதூர் வரப்போவதாக
மூன்று வாரங்களுக்கு
முன் அனுப்பிய
அஞ்சலட்டை
இன்றென் கரம் சேர்ந்தது !

என்ன செய்ய ?
உள்நாடு தானெனினும் - அதுவும்
பல சாவடிகளில் தரித்தே
வரவேண்டியிருக்கிறது !

யுத்தம் தின்று துப்பி
எச்சிலான எனதூரில்,
சமுத்திரம் உறிஞ்சிக் குடித்து,
வாந்தியெடுத்துயிர் பிழைத்த
மக்களுடன் முகாமினில்
எனது இருப்பு !

நண்பா ,
பனை மரங்களை விட
மீஸான் கட்டைகளே
தற்போது '
எனதூரெங்கும் நடப்பட்டுள்ளன.

ஆழிப்பேரலை
தாண்டவமாடிப் போன
பவளப் பாறைகளினிடையில்
மனித எலும்புகளே -
மக்கிப் போய்க் கொண்டிருக்கின்றன !

எனதூரைத் தாண்டிச் செல்லும்
நிலவும்
தவித்து அழும்;
நட்சத்திரங்களும் நடுநடுங்கித்
திசைமாறித் துடிக்கும் !


நடுநிசி இருளில்
வெடியோசைகளோடு
அப்பாவி ஆன்மாக்களின்
அலறல் கேட்டு
ஒரு பொழுதேனும் -இதயம்
அதிர்ந்த அனுபவம்
உண்டா உன்னிடத்தில் ...?

பௌர்ணமி நிலவெரிந்து ,
உறக்கம் தொலைத்த
கறுப்பு இரவுகளில் ,
தொலைதூர சப்பாத்துக்
காலடிச் சத்தங்கள்
நெஞ்சினில் மிதித்துப் போகும்
வலியை என்றேனும்
உணர்ந்ததுண்டா நீ?


நீ பாதம் பதிக்குமிடமெல்லாம்
கண்ணிவெடி புதைக்கப்பட்டிருக்கும் ;
கவனமாக வா !
உன் மூச்சுக் காற்றோடு
விஷவாயு சங்கமிக்கும் ;
சுவாசிக்க முன் யோசி !

நீ வந்து சேர வசதியாக
எனதூரின் அடையாளம்
கேட்டிருந்தாய் ;
துப்பாக்கி சல்லடையாக்கிய
சுவர்களுடையதும் ,
நிலையுடன் சேர்த்து
கதவுகளும் , யன்னல்களும்
களவாடப்பட்டதுமான
பாழடைந்த வீடுகள் ,
இரத்தக் கறை படிந்து
கறுத்துப் போன வேலிகள்
பாதையோரத்திலிருந்து
மயானத்தை ஞாபகப்படுத்துமெனில்,
அது எனதூர் !

இன்னும் ஒரு புராதனகால
இரும்புத் தகடு
" இந்த அழகிய கிராமம்
இனிதே உங்களை வரவேற்கிறது !"
என்ற வாசகங்களுடன்
எஞ்சியிருக்கும்
ஒன்றை ஆணியில் சரிந்து தொங்கும் !


- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Monday, December 17, 2007

ஒரு கணப் பொழுதில்...!


இக்கணம்
எங்கேனும் ஒரு மூலையில்
ஏதேனுமொரு எரிநட்சத்திரம்
சமுத்திரத்தில் வீழ்ந்து
சங்கமமாகியிருக்கலாம் !

இக்கணம்
ஒரு பூ உதிர்ந்திருக்கலாம் ,
ஒரு பூ மலர்ந்திருக்கலாம் ,
எறும்பூரக் கற்குழிந்த கணம்
இதுவாகக் கூட இருக்கலாம் !

இக்கணம்
ஏதோவோர் எல்லையில்
மலையொன்று மண்மேடாகியிருக்கலாம்,
மரமொன்று வேருடன்
வீழ்ந்திருக்கலாம் !

இக்கணம்
இதழ் விரிக்கும் - எனதிந்தக்
கவிதையைப் போல
யாரேனும் ஒரு தாய்க்கு
ஒரு அழகிய இளங் கவிதை பிறந்து
'அம்மா' என்றழுதிருக்கலாம் !

இக்கணம்
எங்கேனுமொரு மூச்சு
நின்று போயிருக்கலாம் ,
எங்கேனுமொரு மூக்கு
புதுக் காற்றை சுவாசித்திருக்கலாம் !

புயலடித்து ஓய்ந்த கணம்,
பூகம்பம் வெடித்த கணம்,
முதல் தூறல் விழுந்த கணம்,
மழை நின்று போன கணமென
ஒரு கணத்தில்
எல்லாமும் நிகழ்ந்திருக்கலாம் !

அந்நியனின் ஆக்கிரமிப்பில்
வதைப்பட்டு,
வாழ்விழந்து,
அனாதையாகி , அகதியாகி,
தாயொருத்தி பிள்ளையிழந்து,
தாரமொருத்தி விதவையாகி
விம்மியழும் ஒரு சொட்டுக்
கண்ணீர்த்துளி நிலத்தில் வீழ்ந்த
கணமாகவும் இது இருக்கலாம் !

ஏழு வானங்களையும்
தடைகளெதுவுமின்றி தாண்டிப்போன
ஒரு ஷஹீதின் உயிருக்கு
வானவர்களும் அழகிய தேவதைகளும்
மணம் நிறைந்த
மரணமின்றிய வாழ்வுக்கு
கதவு திறந்த கணம்
இதுவாகக் கூட இருக்கலாம் !

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

* ஷஹீத் - யுத்த களத்தில் மரணமடையும் வீரன்.

Sunday, December 2, 2007

எனக்கு பத்து விழிகள் !எனக்குப் பத்து விழிகள் 
ஒவ்வொன்றும்
என் விரல் நுனிகளில்
இமைக்கின்றன

தொடுதல் எனது பார்வை 
தடவுதல் எனது
கண்மணிச் சுழற்சி 

எனதான உலகத்தில்,
இறந்த காலங்கள் எவையும்
காட்சிகளால் ஆனவையல்ல;
நினைவுகள் எவையும்
நிறங்களால் சூழ்ந்தவையல்ல

எனக்குரிய தேசம் - பல
வர்ணங்கள் பூசப்பட்டதல்ல.
வசந்தம் செறிந்த காலத்தில்
வாசனை பல வீசும்
பூஞ்சோலையுமல்ல - அது
இருளினால் மட்டுமேயான
தனியொரு உலகம் 

வானவில் என்ற ஒன்று
ஏழு வர்ணங்களினாலாகி
மேகத்தினிடை எட்டிப் பார்க்குமென
நீங்கள் சொன்ன கணத்தினில்
எனது வானிலுமொரு
வானவில் தோன்றியது,
இருளை மட்டும் உடுததுக் கொண்டு 

இருள் எனக்கு
அச்சமூட்டுவதில்லையெனினும்
இருண்டு, கல்லாகிப் போன
இதயததுடனுலவும்
விழிப்புலனுள்ளவர்களிடம்தான்
எனது அச்சங்களெல்லாம் 

-எம்.ரிஷான் ஷெரீப் ,
மாவனல்லை ,
இலங்கை.